Tuesday, January 14, 2014

குடியரசில் பெரியார் உடன்....!

2010ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நம் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல் சேகரத்தில் பெரியாரின் எழுத்தும் பேச்சும்என்ற தலைப்பிலான 24 மின்னூல்கள் வெளியிடப்பட்டன (THF Announcement: ebooks update - 14/06/2010). 

பெரியார் திராவிடர் கழகத்தைச் சார்ந்த திரு.தமிழ்நாடன், கொளத்தூர் மணி, திரு.அரசு எழிலன்  போன்றோர் எனக்கு மின்னஞ்சலில் இந்த நூல்களை அனுப்பி வைத்து இதனை நம் சேகரத்தில் இலவசமாக இணைத்து மக்கள் வாசிப்பிற்காக வழங்கக் கொடுத்து உதவினர். மூன்று ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும் இவற்றை வாசிக்க அவகாசம் எனக்கு அமையவில்லை. ஆயினும் அண்மைய எனது விடுமுறையில் இந்த மின்னூல்களில் சிலவற்றை வாசித்து மகிழ்ந்தேன் என்பதை விட பிரமித்தேன் என்று சொல்வது சரியாக இருக்கும்.

மலேசிய சூழலில் பிறந்து வளர்ந்த எனக்கு தமிழக சூழலின் அரசியல் பின்னனி, கடந்த நூற்றாண்டில், அதிலும் ஆங்கிலேய காலணித்துவ ஆட்சியின் இறுதி காலகட்டங்கள் பற்றிய அடிப்படை விஷயங்கள் போன்றவை எப்போதுமே தூரமான விஷயங்களாக அமைந்து விட்டன. அவற்றை அறிந்து கொள்ள மிகுந்த ஆர்வம் எனக்கிருந்த போதிலும் கிடைக்கின்ற நேரத்தில் செய்ய வேண்டிய அவசர காரியங்களின் பட்டியல் நீளமாக என் கண் முன்னே தோன்றிக் கொண்டிருப்பதால் படிக்க வேண்டும் என நினைத்திருந்த இந்த நூல்களை வாசிக்க அவகாசமே தோன்றாத நிலையில்,  பல நேரங்களில் இப்போது படிப்போம்.. அப்போது படிப்போம் என நினைத்தாலும் தள்ளிக் கொண்டே செல்வது குறைபாடாகவே எனக்கு இருந்தது. அந்தக் குறை தீர இந்த முழு தொகுப்பில் முதல் மூன்று வெளியீடுகளில் சில கட்டுரைகளை அண்மையில் வாசிக்க முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி.

இக்கட்டுரைகளை வாசித்த போது நான் அறியாத அரசியல் முக்கியஸ்தர்களின் பெயர்களை அறிந்து கொள்ள முடிந்தது. நான் அறிந்த, கேள்விப்பட்ட சிலரது பெயர்களை இப்பதிவுகளில் மீண்டும் காண முடிந்தது. 

பெரியாரின் காலத்தில் எதற்காக இப்படி ஒரு பத்திரிக்கைக்கு அவசியம் ஏற்பட்டது? எத்தகைய முயற்சிகளாக அவை இருந்தன? திரு.ஈ.வே ரா அவர்களின் சிந்தனைப் போக்கு... அவரது எழுத்து நடை... அவர் சில விஷயங்களை அணுகும் முறை என்பன அவரது சொல்லிலும் எழுத்திலும்.. என நேரடி அறிமுகமாக இந்த குடியரசு பத்திரிக்கையின் வழி நமக்குக் கிடைக்கின்றது. 

இந்தத் தொகுப்பை பற்றி ஓரளவு அறிமுகம் தருவதும் அவசியமே. 

இந்த நூல்களின் தொகுப்பு 1925 முதல் 1938 வரை வெளிவந்த பெரியாரின் குடியரசு நாளிதல் மற்றும் அவரது பேச்சுக்களை உள்ளடக்கிய தொகுப்பு. இந்த தொகுப்பின் அறிமுகப் பகுதியை நாம் வாசிக்கும் போது பெரியார் திராவிடர் கழகத்தின் உறுப்பினர்கள் சிலரது முயற்சிகளை அறிந்து மிக வியந்தேன். ஏறக்குறைய 10 ஆண்டு விடா முயற்சிகளின் கடின உழைப்பினால் இந்தத் தொகுப்பு வெளிவந்திருக்கின்றது.

அறிமுகப் பகுதியில் பெரியார் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஏனைய சில அமைப்புக்களின் வழியாக இந்த முயற்சிக்கு எழுந்த பிரச்சனைகளைப் பற்றியும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. அந்தச் சிரமங்களையெல்லாம் எதிர்கொண்டு இந்த முழு தொகுப்பையும் வெளியிட்டிருக்கும் இந்த அபாரச் செயலை பாராட்டுதல் மிகத்தகும். 

பழம் நூல்கள் வெளியீடுகள் என்பதை மையமாகக் கொண்டு இயங்கும் நமது தமிழ் மரபு அறக்கட்டளையின் முயற்சிகளை அனுபவப் பூர்வமாக உணர்ந்திருக்கும் எனக்கு இது எத்தகைய சிரமமான பணி என்பது நன்கு அறிந்து கொள்ள முடிகின்றது. குடியரசு நாளிதளின் பல முழுமையாகக் கிடைக்காத சூழ்நிலையில் பலரையும் நாடி நாளிதழ்களைப் பெற்றிருக்கின்றனர். அந்த வகையில் இந்த முயற்சிக்கு தனது சேகரிப்பிலிருந்து ஆவணங்களை வழங்கி உதவிய திரு.சாலமன் பாப்பையா, நாடார் குல மித்திரன் ஆசிரியர் முத்து நாடார் அவர்களின் மகன் திரு.முத்து முருகன், திரு.மேட்டுப்பாளையம் ராமச்சந்திரன், ஆத்தூர்  திரு.மவுலானா சாகிப்ஜீ, திரு.ஞாலன் சுப்பிரமணியம்  இன்னும் தங்கள் பெயர்ரை வெளியிட விரும்பாத பலரும் முக்கியமானவர்கள்.

உடைந்தும் கிழிந்தும் முழுமையாக இல்லாமலும் போன ஆவணங்களையும் சரிபார்த்து அவற்றை தொகுத்து அவற்றை கணினி வழி வாசிக்கும் வகையில் தட்டச்சும் செய்து மின்னூலாக்கித் தந்திருக்கின்றனர் இந்தக் குழுவினர். எத்தனை பெரிய உழைப்பு இதன் பின்னனியில்! இந்த மின்னூல்கள் நமக்கு இலவசமாக இன்று கிடைக்கின்றன என்பது நல்லதொரு செய்தி அல்லவா?

இந்தக் குடியரசு தொகுப்பில் வெளிவந்த பெரியாரின் சில கட்டுரைகளில் என் கவனத்தை ஈர்த்த சில விஷயங்களையும் அதன் அடிப்படையிலான எனது கருத்துக்களையும் இந்தத் தொடரில் பகிர்ந்து கொள்வதே எண்ணம். இத்தொடருக்கு, இங்கு பெரியார் மற்றும் தமிழக அரசியல் ஞானம் உள்ள அனைவருமே இணைந்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் தரமான வரலாற்று விஷயங்களை இதன் வழி நம்மால் பதிய முடியும். இது இக்கால இளைய தலைமுறைக்கும் பயன்தரும் ஒரு வாசிப்பாக அமையும். 

முதல் பகுதியான பெரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி 1 அறிமுக பகுதியில் குடியரசு நாளிதழ் தொடங்கப்படும் காரணத்தையும் யார் யார் இதில் ஈடுபட்டனர் என்பதையும்  காண முடிகின்றது. பல நாட்கள் இத்தகைய ஒரு பத்திரிக்கை தேவை என கலந்தாலோசித்து தானும் ஸ்ரீமான் தங்கபெருமாள் (வழக்கறிஞர்) அவர்களும் முடிவுக்கு வந்து குடியரசு பத்திரிக்கையை நடத்த துணிவு கொண்டதாகக் குறிப்பிடுகின்றார் ஈ.வே.ரா அவர்கள்.. 

இந்தப் பத்திரிக்கை நடத்த துணிந்ததன் நோக்கம் என்ன என்பதை பெரியாரே இப்படிக் குறிப்பிடுகின்றார்.

இப்பத்திரிக்கை ஆரம்பிக்கும் நோக்கம் :
தேசாபிமானம், பாஷாபிமானம், சமயாபிமானம் இன்னும் மற்ற விஷயங்களையும் ஜனங்களிடையுணர்த்துவதற்கேயாம். ஏனைய பத்திரிக்கைகள் பலவிருந்து, அவைகள் தங்களது மனசாட்சிக்குத் தோன்றிய உண்மையான அபிப்ராயங்களை வெளியிட அஞ்சுகின்றன. அவைகளைப் போலல்லாமல் பொது ஜனங்களுக்கு விஷயங்களை உள்ளவற்றை உள்ளபடி தைரியமாகத் தெரிவிக்க வேண்டுமென்பது என் நோக்கம். இப்பத்திரிக்காலயத்தைத் திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீ சுவாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும். இறைவன் அருளாலும், சுவாமிகளது அருளாலும் பத்திரிகை என்றும் நிலைபெற்று மற்றப் பத்திரிகைகளிடமுள்ள குறை யாதுமின்றிச் செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசீர்வதிக்கும்படி சுவாமிகளை வேண்டுகிறேன். 
குடி அரசு - சொற்பொழிவு  - 02.05.1925

நூலைக் காணவும் வாசிக்கவும்: தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல் சேகரம்
நூல் எண் 222.

தொடரும்..

அன்புடன்
சுபா

No comments:

Post a Comment