23 அல்லது 24 ஆண்டுகளுக்கு முன்னர்..
அவ்வப்போது தஞ்சாவூரிலிருந்து மலேசியாவிற்கு தனது அக்காவை, அதாவது என் அம்மாவைப் பார்க்க வரும் எனது மாமா சம்பத் கையோடு சில புத்தகங்களும் கொண்டு வருவார். கவிதை நூல்களும் இருக்கும், சித்தர் நூல்களும் இருக்கும். கதை, நாவல்களும் இவற்றுள் இருக்கும். பொதுவான வாசிப்பு நூல்களும் சில இருக்கும். ஒரு முறை இப்படி கொண்டு வந்த நூல்கட்டில் கந்தபுராணம், திருப்புகழ், என் சரித்திரம் மூன்றும் சேர்ந்திருந்தன. இவை மூன்றையும் அப்போதே விடாது படித்து முடித்ததால் இந்த நிகழ்ச்சி இன்னமும் ஞாபகம் இருக்கின்றது. அதிலும் கந்தபுராணம் நூலின் அட்டைப்படத்தில் மயிலின் மேல் இளம் முருகன் வேலுடன் அமர்ந்தவாறு இருக்கும் காட்சி கூட இன்னமும் மனதில் நிழலாடுகின்றது. ஆக, அப்போது முதன் முதலாக என் சரித்திரம் நூலை முழுதாகப் படித்து முடித்தேன். நூலிலிருந்த ஒரு சில செய்திகள் மட்டும் தான் ஓரளவு ஞாபகத்தில் இருந்தன.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை சென்றிருந்தபோது நான் புத்தகக்கடையில் தேடி என் சரித்திரம் நூலை வாங்கிக் கொண்டேன். வாசிக்கலாம் என நினைத்தால் அதற்கும் தகுந்த வேளை வரவேண்டும் போல.. இந்த முயற்சி தள்ளிக் கொண்டே போய்விட்டது. இந்த முறை விடுமுறையில் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோது இதனையும் எடுத்து வைத்துக் கொண்டேன்.
முன்னர் வாசித்ததற்கும் இப்போது வாசிப்பதற்கும் மிகப் பெரிய வித்தியாசத்தை எனது புரிதலில் உணர முடிந்தது.
நல்ல விஷயங்களை அதிலும் தமிழ் மொழி, தமிழ் நூல்கள் பாதுகாப்பு, ஆவணப்பாதுகாப்பு, கலை பண்பாட்டுச் சிறப்புக்கள் மின்னாக்கம் என ஈடுபட்டு வரும் நம் குழுவினருடன் என் சரித்திரத்தை மீண்டும் பகிர்ந்து கொள்வது வாசிப்போருக்கும் நன்மை பயக்கும் என்பதால் இதனை ஒரு இழையாகத் தொடங்க வேண்டும் என்று நூலை வாசிக்கும் போதே மனதில் தோன்றியது. அதன் அடிப்படையில் அமைவதே இந்த இழை.
என்னிடம் தற்சமயம் உள்ளது 2008ம் ஆண்டில் வெளிவந்த 7ம் பதிப்பு. மொத்தம் 776 பக்கங்கள் அடங்கியது.
என் சரித்திரம் உருவான விதத்தையும் தெரிந்து கொள்வது நமக்கு பயனளிக்கும் அல்லவா? 1935ம் ஆண்டு மார்ச்சு 6ம் தேதி உ.வே.சா அவர்களின் 80ம் ஆண்டு பூர்த்தி சதாபிஷேகத்தின் போது கலந்து கொண்ட நண்பர்களின் எண்ணத்தில் இந்தக் கருத்து உதித்திருக்கின்றது. உ.வே.சா அவர்கள் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் சுயசரிதத்தை எழுதி வெளியிட்டிருந்தார்கள். பிள்ளையவர்களின் சரித்திரமே இவ்வளவு அருமையாக வந்திருக்கின்றதே. அவரது சுய சரித்திரதையும் உ.வே.சா அவர்கள் எழுத வேண்டும் என்ற நண்பர்களின் நோக்கத்தை உ.வே.சா அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். நண்பர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டாலும் குருந்தொகை பதிப்பிப்பதில் தனது கவனத்தைச் செலுத்தியதால் இந்த முயற்சி தொடங்கப்படாமலேயே இருந்தது. ஆனாலும் அவ்வப்போது நண்பர்கள் பலர் இவருக்கு ஞாபகம் ஊட்டத் தவரவில்லை.
ஒரு நூலாக அமைத்து வெளியிட நீண்ட காலமாகும் என்பதால் ஒரு பத்திரிக்கையில் வாராவாரம் வரும் வகையில் பதியலாமே என்ற எண்ணம் நண்பர்களுக்கும் இவருக்கும் தோன்றியிருக்கின்றது. அப்போது ஆனந்த விகடன் பத்திரிக்கை பிரதம ஆசிரியராக இருந்த ஸ்ரீ ரா.கிருஷ்ணமூர்த்தி ஐயரவர்கள் ஸ்ரீ எஸ்.எஸ்.வாசன் அவர்களுடன் வந்து உ.வே.சா அவர்களுடன் பேசி வாரந்தோறும் ஒவ்வொரு அத்தியாயம் வரும் வகையில் ஏற்பாடு செய்திருக்கின்றனர். அதன் அடிப்படையில் 1940 ஜனவரி முதல் சுயசரிதை எழுதும் பணி இவரது 85ஆவது அகவையில் தொடங்கியது. முதல் அத்தியாயம் 6.1.1940 அன்று ஆனந்த விகடனில் வெளிவந்தது.
இந்தத் தொடர் வாரந்தோறும் ஒரு அத்தியாயம் என்ற வகையில் 1942ம் ஆண்டு மே மாதம் வரையில் சுயசரிதம் என்ற தலைப்பில் வெளிவந்தது. 28.4.1942 அன்று உ.வே.சா அவர்கள் மறைந்தார்கள். உ.வே.சா அவர்கள் முன்னரே குறிப்புக்கள் எடுத்து வைத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளவராதலால் அவரது எழுத்தில் இறுதியாக வந்த அத்தியாயம் மே மாதத்துடன் முற்றுப்பெறாமலேயே நிறைவடைந்தது. ஆக 122 அத்தியாயங்களுடன் என் சரித்திரம் முற்றுப் பெறாத சரித்திரமாகவே நம் கையில் தவழ்கின்றது. 1942க்குப் பின்னர் பல தடங்கல்களைத் தாண்டி 1950ம் ஆண்டு உ.வே.சா அவர்களின் திருக்குமாரன் திரு.சா.கலியாணசுந்தர ஐயர் அவர்களால் நூலாக வெளியிடப்பட்டது.
உ.வே.சா அவர்கள் தனது வாழ்க்கை நிகழ்வுகளை அவ்வப்போது குறித்து வைத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளவராகவே இருந்திருக்கின்றார். 1898க்குப் பின்னர் தனது தந்தையார் வாழ்க்கையில் நடந்த விஷயங்களைத் தொகுத்து நூலாக வெளியிடும் எண்ணத்தை இவரது திருமகனார் திரு.சா.கலியாணசுந்தர ஐயர் அவர்கள் கொண்டிருந்ததாகவும் இந்த முயற்சி நடைபெறுவதற்கு முன்னரே அவர் மறைந்ததையும் சுட்டிக் காட்டி "நாம் செய்த தவக்குறைவால் அவரும் மறைந்தார்" என்று தனது பதிப்புரையில் குறிப்பிடுகின்றார் திரு.ம.வே.பசுபதி. இது முற்றிலும் உண்மை! நமது தவக்குறைவால் மேலும் பல தகவல் பதிவாவதை நாம் இழந்திருக்கின்றோம் என்பதில் எனக்கும் ஐயமில்லை.
உ.வே.சா எனவும் தமிழ்த்தாத்தா எனவும் அழைக்கப்படும் திரு.உத்தமதானபுரம் வேங்கடசுப்பையரின் திருக்குமாரன் சாமிநாதன் அவர்களின் வாழ்க்கையை மூன்று முக்கிய பகுதிகளாகப் பிரிக்கலாம். முதலில் அவரது குழந்தைப் பருவம்- தந்தையைச் சார்ந்திருந்து குடும்ப பொருளாதார சூழலுக்கேற்ப அமைந்த வாழ்க்கை, அவரது தமிழ்க்கல்வி மீதான காதல், இசைப்பயிற்சி போன்றவற்றை மையமாகக் கொண்டது. இரண்டாவது பகுதி மகாவித்துவான் திரு.மீனாட்சி சுந்தரம் பிள்ளயவர்களின் மாணவராகச் சேர்ந்தது, கல்வி வாழ்க்கை, ஆசிரியருக்கும் இவருக்குமிடையிலான பேரன்பு, தமிழ்க் கல்வி, திருவாவடுதுறை ஆதினத்துடனான பழக்கமும் ஈடுபாடும் என்பதைக் கொண்டது. மூன்றாவதாக அமைவது திருவாவடுதுறை ஆதீனத்தில் முக்கியப் பணிகளையும் பொறுப்புக்களையும் ஏற்றுக் கொண்டதோடு கும்பகோணம் கல்லூரியில் பணி பின்னர் சிந்தாமணிப் பதிப்பு, சங்க இலக்கியங்கள், மணிமேகலை பதிப்பு என்பதாக அமைகின்றது.
இவர் கடந்து வந்த வாழ்க்கை படிகள் இன்றைக்கு ஏறக்குறைய 180 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பதால் அக்கால வழக்கங்கள், தமிழ்க்கல்வியின் நிலை, தரம், சைவ ஆதீனங்களின் தமிழ்ப் பணி, தமிழ் நூல் அச்சு பதிப்பாக்க முயற்சிகள் போன்றவை பற்றி பல விஷயங்களை இந்த நூலின் வழியாக அறிந்து கொள்ள முடிகின்றது.
ஒவ்வொரு பகுதியையும் படிக்கும் போது எளிய தமிழில் அவை அமைந்துள்ளமையால் வாசகங்களோடு ஒன்றித்து போய் உ.வே.சாவின் உணர்வுகளையும் அறிந்து பயணிக்கும் நிலையை ஒவ்வொரு அத்தியாயங்களை வாசிக்கும் போதும் உணர்ந்தேன். இந்த நூல் ஒரு அரிய பொக்கிஷம். கல்லூரிகளில் எல்லா நிலை மாணவர்களுக்கும் கட்டாய பாடம் என்று ஒன்று வைத்து படிக்க வேண்டிய சில முக்கிய நூல்கள் என பட்டியலிட்டால் இதனை கட்டாயம் அதில் இணைக்க வேண்டும் என்று நான் முன் மொழிவேன். இந்த நூல் முழுமையிலும் ஒரு மாணவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை தனது அனுபவத்தாலேயே உணர்த்துகின்றார் உ.வே.சா.
தொடரும்...
அன்புடன்
சுபா
No comments:
Post a Comment