சீத்தாம்மா திட்டமிட்டு செயலாற்றக் கூடியவர் என்பது நாம் அறிந்ததே.. திடீரென்று இன்ப அதிர்ச்சியும் இவர் ஏற்படுத்துவார் என்பதை நேரில் தான் நான் உணர்ந்தேன்.
பெப் மாதம் 28ம் தேதி காலை. நாங்கள் திரு. இராமச்சந்திரனையும் திரு.கணேச நாடாரையும் சந்திக்கும் திட்டம் பட்டியலில். காலையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்தித்து அங்கிருந்து கிளம்பிச் செல்வதாக ஏற்பாடு.
புதிதாக இந்தத் திட்டத்தில் மேலும் ஒரு விஷயமும் சேர்ந்து கொண்டது. ஜெயகாந்தனைச் சந்திக்கப் போகிறோம்.
தமிழ் இலக்கிய எழுத்துலகில் எல்லோரும் அறிந்திருக்கும் திரு.ஜெயகாந்தனுக்கு நான் அறிமுகம் தரத் தேவையில்லை அல்லவா?
நினைவுச் சின்னங்களும் பரிசுகளும்
அவர் குடியிருக்கும் இடத்திற்கே சென்றது எங்கள் வாகனம். முன் அறிவிப்பு கூட இல்லாமல் நேராகச் சென்று வாசலில் நின்றோம். எங்களை வரவேற்றவர் திருமதி. கௌசல்யா. பச்சை நிறச் சேலையில் பளிச்சென அன்பு பொலியும் ஒரு முகம்!
சீத்தாம்மாவும் கௌசல்யாவும் மிக நெறுங்கிய நண்பர்கள் என்பதை அதே நிமிடத்தில் புரிந்து கொள்ள முடிந்தது. வாசலில் திரு.ஜெயகாந்தன் அமர்ந்திருந்து பத்திரிக்கை வாசித்துக் கொண்டிருந்தார்.
என்னுடன் எழுத்தாளர் மதுமிதாவும் வந்திருந்தார்கள். எங்களை அறிமுகம் செய்து வைத்து விட்டு சீத்தாம்மா தனது நண்பர் ஜெயகாந்தனுடன் பேச ஆரம்பித்து விட்டார்
இவர்களின் உரையாடல் கடந்த கால நிகழ்வுகளை அசை போடுவதாக இருந்தன. பல வேளைகளில் ஜெயகாந்தன் மௌனமாகச் சிரித்துக் கொள்வதை மட்டுமே பார்க்க முடிந்தது. இருவருக்கும் உள்ள மிக நெருக்கமான நட்பையும் அன்பையும் இவர்கள் கலந்துரையாடலின் வழி தெரிந்து கொள்ள முடிந்தது.
நல்ல காபி உபசரனையும் எங்களுக்குக் கிடைத்தது. காலையில் வந்து தொல்லை கொடுத்து விட்டோமோ என நினைத்து சங்கோஜப்பட்டுக் கொண்டிருந்த என்னையும் அன்பான வார்த்தைகள் பேசி கௌசல்யா சகஜ நிலைக்கு கொண்டு வந்து விட்டார். கௌசல்யோவுடனே நீண்ட நேரம் பேசிக் கொண்டிருக்கலாம் போலவும் மனதில் தோன்றியது. அவர் ஒரு கலைப் பொக்கிஷம் என்பதை அந்த குறுகிய நேரத்தில் என்னால் எடை போட முடிந்தது.
ஏறக்குறை 16 அல்லது 17 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் நடைபெற்ற என் தாயாரின் ஒரு புத்தக வெளியீட்டு விழா (அது ஒரு சிறுகதை தொகுப்பு நூல் என நினைக்கின்றேன்)விற்கு திரு.ஜெயகாந்தன் தான் தலைமை தாங்கி இருந்தார் என்பதை நான் அறிவேன். நான் அந்த நிகழ்வில் நேரில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அந்தப் புகைப்படங்கள் என் சகோதரியிடம் இருக்கின்றன. சென்ற முறை மலேசியா சென்ற போது அந்தப் புகைப்படத்தை பார்த்த ஞாபகத்தில் இதனைப் பற்றி குறிப்பிட்டேன். அவருக்கு அந்த நிகழ்வே மறந்து விட்டிருந்தது. ஆனால் தான் மலேசியாவிற்கு வந்த கலந்து கொண்ட சில நிகழ்வுகள் பற்றி தெரிவித்தார். மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வுகளுக்காக ஜெயகாந்தன் மலேசியா வந்திருந்தார் என்ற தகவல் எனக்கு மிக நன்றாகத் தெரியும். என் தாயார் எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராக இருந்ததால் மட்டுமன்றி மேலும் சில மலேசிய எழுத்தாளர்களும் எனக்கு தொடர்பில் இருந்ததால் இந்த செய்திகளை நான் அறிந்திருந்தேன். இதனையும் அவருடன் பகிர்ந்து கொண்டேன்.
சீத்தாம்மா ஜெயகாந்தன் பற்றி எழுதிய பகுதிகள் மரபு விக்கியில் இணைக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கட்டுரையை இப்பதிவை வாசிப்பவர்கள் இதுவரை வாசித்திராவிட்டால் கட்டாயம் மீண்டும் வாசிக்க வேண்டும். தான் அறிந்த ஜெயகாந்தனை தனது பார்வையில் விமர்சனம் செய்திருக்கின்றார். நட்பையும் சம்கால சூழலையும் இவர்களின் செயல்பாடுகளையும் விளக்கும் இலக்கியம் அது. இங்கே சென்று வாசித்துப் பாருங்கள்.
இடையில் சீத்தாம்மாவை அடையாளம் கண்டு கொண்டு அவரை வந்து கட்டிக் கொண்டார் ஜெயகாந்தனின் முதல் மனைவியார். இருவரும் முகம் மலர பேசிக் கொண்டனர்.
நாங்கள் பேசிவிட்டு விடைபெறும் போது எனக்கு திரு.ஜெயகாந்தன் கையெழுத்திட்டு ஒரு நூலை வழங்கினார். நூலின் தலைப்பு ஒரு இலக்கியவாதியின் ஆன்மீக அனுபவங்கள். மனம் பூரித்து நின்றேன். மகிழ்ச்சியான ஒரு தருணம் இது.
அன்பான அந்த சூழலிலிருந்து விடை பெற யாருக்கும் மனம் வரவில்லை.
சீத்தாம்மா திரு.ஜெயகாந்தனைப் பார்த்து "மீண்டும் எப்போது நாம் சந்திக்கப்போகிறோமோ?" என்று சொன்ன போது அவர் கண்களிலிருந்து நீர் கசிவதைக் கண்டேன். கண்களைத் துடைத்துக் கொண்டே சீத்தாம்மா பேசிக் கொண்டிருந்தார். நட்பின் ஆழம்.. அதிலும் காலம் செல்லச் செல்ல மேலும் உறுதி படும் அன்பு. .எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் பார்க்கும் அந்த ஒரு கணத்தில் மீண்டும் துளிர்த்து மலரும் அந்த பாசம் .. அனைத்தையும் நேரில் கண்டு இக்காட்சியை ரசித்துக் கொண்டிருந்தேன்.
"ஏன் கவலைப் படுகிறீகள்? இரண்டு வருடம் கழித்து வாருங்கள். நாம் சந்திப்போம்" என்று அவர் நிதானமாக புன்னகைத்தவாறு கூறி ஆறுதல் வழங்கியது அவரது நம்பிக்கையையும் அதே நேரம் மீண்டும் தாம் சீத்தாம்மாவை சந்திப்போம் என்ற உறுதியையும் வலுப்படுத்தியது.
புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.
மனமில்லாமல் அந்த இடத்திலிருந்து விடைபெற்றுக் கொண்டோம்.
படங்களை மீண்டும் பார்க்கும் போது மனம் அந்த தருணத்திற்கு என்னை மீண்டும் அழைத்துச் சென்று விட்டது. இந்த இனிய நண்பர்களின் நட்பு வாழ்க!
மதுமிதாவும் இணைந்து கொள்கின்றார்
கௌசல்யா, சீத்தாம்மா, சுபா, ஜெயகாந்தன்
No comments:
Post a Comment