இன்று ஜம்போ மிளகாய் பயன்படுத்தி இத்தாலிய உணவான பாஸ்டா தயாரித்தேன். ஜம்போ மிளகாய் கொஞ்சம் காரம் தான். ஆனால் நாம் அன்றாடம் உபயோகிக்கும் பச்சை மிளகாய் காரத்தை விட சற்று குறைவான காரம்.
இந்த வகை பாஸ்டா தயாரிக்க உங்களுக்கு 30 நிமிடங்கள் போதும்.
2 பேருக்கு தயாரிக்கும் அளவு:
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
பாஸ்டா - 2 பேருக்கு சமைக்க 350 கி பாஸ்டா. இதில் குறிப்பாக மக்கரொனி, ஸ்பெகட்டி போன்று இல்லாமல் சிறிதாக இருக்கும் எந்த வகை பாஸ்டாவையும் இந்த ரெஸிப்பிக்கு பயன்படுத்தலாம்.
இந்தப் படத்தை பாருங்கள்.
இதில் உள்ள சிறிய வகைகள் பல தமிழகத்திலும் கிடைக்கின்றன. குறிப்பாக பென்ன, ஸ்பிராலி வகைகள் பயன்படுத்தலாம். நான் இன்று பயன்படுத்தியது பென்ன வகை பாஸ்டா.
மற்ற தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 1 (பெரியது)
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
ப்ரொகோலி - 50கிராம்.
குடை மிளகாய் - (சிவப்பு, மஞ்சள், பச்சை - மூன்றையும் பயன்படுத்தலாம்)
கேரட் - 1
ஆலிவ் எண்ணெய்
பெஸ்டோ - அரைத்த விழுது (4 கரண்டி) (இது சூப்பர் மார்க்கெட்டில் இத்தாலிய உணவு வகை பகுதியில் கிடைக்கும். இது அடிப்படையில் இத்தாலிய துளசி + மல்லி + பூண்டு அறைத்து ஆலிவ் எண்ணெயில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் விழுது)
உப்பு - தேவையான அளவு
ஆலிவ் எண்ணெய் - 2 கரண்டி
காய்கறிகளை உங்களுக்கு பிடித்த வகையில் வெட்டிக் கொள்ளுங்கள்.
என் தோட்டத்தில் காய்த்த மிளகாய் இன்றைய சமையலில்..! ஜம்போ மிளகாய் பக்கத்தில் டொஸ்கானா மிளகாய்.
ஒரு பாத்திரத்தில் நிறைய தண்ணீர் விட்டு அது கொதித்ததும் அதில் உப்பு 2 சிறிய கரண்டி சேர்த்து ஆலிவ் எண்ணெய் ஒரு கரண்டி சேர்த்து 350 கி பாஸ்டாவையும் அதில் போட்டு கொதிக்க விடுங்கள். 10 நிமிடங்கள் நன்கு வெந்து மெண்மையானதும் நீரை வடிகட்டி விடுங்கள்.
பாஸ்டா வெந்து கொண்டிருக்கும் நேரத்திலேயே ஒரு நோன்-ஸ்டிக் பேனில் ஆலிவ் எண்ணெய் விட்டு அதிகம் சூடாகும் முன் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் பச்சை மிளகாய் சேர்த்து கொஞ்சம் வதக்கிய பின்னர் குடை மிளகாய், காரட்களை சேர்த்து வதக்கவும். இப்போது பெஸ்டோ விழுதை சேர்த்து கொஞ்சம் உப்பும் சேர்த்து கிளறவும். 2 நிமிடங்களுக்குப் பின்னர் ப்ரோக்கோலி சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் ப்ரோக்கோலி வதங்கியதும் அதில் இப்போது வடித்து வைத்திருக்கும் பாஸ்டாவை சேர்த்து கிளரவும். உப்பு மேலும் தேவையென்றால் சேர்த்துக் கொள்ளவும்.
காரம் மேலும் தேவையென்றால் கொஞ்சம் கருப்பு மிளகு தூளாக்கி சேர்க்கவும்.
5 நிமிடங்கள் பாஸ்டா நன்றாக காய்கறிகளுடன் கலந்தவுடன் சுடாகப் பரிமாறவும்.
அன்புடன்
சுபா
No comments:
Post a Comment