ஞாயிற்றுக் கிழமை ஸ்பெஷல்.. இதோ.
இதுவும் ஒரு வசந்த கால மலர்ச்செடி வகை.
இந்தப் பூச்செடியின் பெயர் டோய்ச் மொழியில் Tränendes Herz. கண்ணீருடன் உள்ள இதயம் என்று மொழி பெயர்க்கலாம். இச்செடி வகையின் பூர்வீகம் சீனா என செடிகளுக்கான ப்ரத்தியேகமான விக்கி குறிப்பிடுகின்றது.
நீர் சொட்டுவது போலவும் இதயம் போன்ற அமைப்பிலும் இப்பூ உள்ளதைப் பாருங்கள்.
சரமாக இளம் சிவப்பில் இருதயம் போன்ற வடிவில் மலர்கள் இருக்கும். இந்தச் செடி குளிர் காலம் முடிந்ததும் ஏப்ரல் மாத ஆரம்பத்தில் மண்ணுக்குள்ளிருந்து முளைத்து வரும். மே மாதம் பூக்கத்தொடங்கி இம்மலர்கள் ஜூன் ஜூலை மாத ஆரம்பம் வரை பூத்துக் கொண்டிருக்கும். ஒரு சரம் ஏறக்குறைய இரண்டு மாதங்களும் அப்படியே காய்ந்து விழாமல் இருக்கும்.
இந்தச் செடி ஜூலை மாத ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மலர்களை உதிர்த்து பின்னர் பழுப்பு நிற இலைகளுக்கு மாறும். ஜூலை மாதக் கடைசியில் முழுதும் வாடி விழுந்து விடும் பின்னர் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை இந்தச் செடி இருப்பதே தெரியாது. வசந்த கால பூ வகைகளில் இது வித்தியாசமான வடிவில் அமைந்த ஒன்று.
என்னிடம் உள்ள இந்தச் செடி கடந்த 5 ஆண்டுகளாக இருக்கின்றது. மீண்டும் வந்து மலர்ந்து இனிமை சேர்த்து மறைந்து கொள்ளும் செடி இது.
விக்கிபீடியாவில் http://en.wikipedia.org/wiki/Lamprocapnos_spectabilis பகுதியில் மேலும் இத்தாவர வகை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
அன்புடன்
சுபா
No comments:
Post a Comment