Tuesday, October 2, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 24


பதிவு 24

என் சரித்திரம் நூலில் ஒரு சில பதிவுகளை வாசிக்கும் போது நான் என்னை மறந்து விடுவதுண்டு. ஒரு நூலை வாசிக்கின்றேன் என்பதை விட அந்த நூலில் உள்ள கதாபாத்திரமாக நானே மாறி அந்த உணர்வுகளை உ.வே.சாவின் மன நிலை போலவே உணர்ந்து அந்த நிலையில் அது துக்கமோ, கவலையோ, மகிழ்ச்சியோ, அதிர்ச்சியோ, அல்லது நடுக்கமோ.. எல்லா வித உணர்வுகளையும் லயித்து உணார்ந்து போகின்றேன். என்னைப் போலத்தான் வாசித்த பிறருக்கும் கூட அனுபவம் அமைந்திருக்கலாம். இது உ.வே.சாவின் எழுத்து நடைக்கு அமைந்துள்ள தனிப் பெரும் சிறப்பு என்று மட்டுமே சொல்லத் தோன்றுகின்றது.

இன்னூலில் சில குறிப்பிட்ட பதிவுகள் அவற்றை வாசித்த பின்னர் அடுத்த சில நிமிடங்கள் என்னை அடுத்த பக்கங்களை வாசிக்க விடாமல் அவ்விவரணையின் பின்புலமாக அமைந்திருக்கின்ற நிகழ்வுகளிலேயே அழுந்திப் போய்   இருக்கச் செய்திருக்கின்றன. அத்தியாயம் 27ல் அத்தகைய ஒரு அனுபவம் அமைந்தது எனக்கு.

நாம் நெடுநாள் காத்திருந்து காத்திருந்து அவரைப் பார்போமா, பார்க்க வாய்ப்பு அமையுமா, அம்மனிதருடன் நமக்குள்ள உறவு தொடருமா, அவரை நெருங்கி அவரது ஆதரவில் இருக்கும் நிலை அமையப் பெருவோமா, அவரது கவனம் நம் மேல் விழுமா, அவருக்கு அன்னியோன்னியமானவர்களில் ஒருவராக நான் ஆவோமா என பல சந்தேகங்களும் தீவிர ஆர்வமும் சிந்தனையை முற்றும் முழுதுமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் வேளையில் அம்மனிதரை நாம் சந்திக்க நேர்ந்தால்.. அது ஒருவர் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு பொன்னான நாளாகத்தானே அமையும்? இப்படி ஒரு சந்தர்ப்பம் நம்மில் பலருக்கும் நமது வாழ்க்கையில் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன.

வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் சேர்ந்து பாடம் கேட்டால் மட்டுமே தனக்கு தமிழ்க்கல்வியில் தான் தேடிக் கொண்டிருக்கும் நிலையை அடைய முடியும் என்பதை மனதில் மிக மிக ஆழமாக பதிந்து கொண்டு விட்டார் உ.வே.சா என்பதனை முந்தைய பதிவுகளில் விவரித்திருந்தேன். அவரைப் பார்க்கச் சென்ற அந்த நாள் அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒரு நாள் தான் என்பதை அத்தியாயம் 27 அழகாகக் காட்டுகின்றது. அந்த ஒவ்வொரு கணமும் அதன் இயல்புகளும், காத்திருந்த வேளையில் உள்ள மன நிலையும், இவர் தானா அவர் என வேறொருவரை நினைத்து மயங்கிய நிலை, பின்னர் அவரைப் பார்த்ததும் அவரை கண்களால் முழுதாகப் பார்த்து அவரை மனதிற்குள் பதிந்து வைத்து கொண்ட தருணங்கள் அனைத்துமே மிகச் சுவையான பகுதிகள். இவற்றை ஒரு முறைக்கு இரண்டு முறை வாசித்து நானும் மகிழ்ந்தேன்.

முதற்காட்சி என்று தலைப்பிட்டு இப்பகுதியை விவரிக்கின்றார் உ.வே.சா. அவரது அத்தருணத்து உணர்வின் வெளிப்பாடாக அமைந்த எழுத்தாக்கத்தை நான் விளக்குவதை விட அவர் எழுத்திலேயே வாசிப்பது தானே தகும்.

"அப்புலவர் பெருமான் வரும்போதே அவருடைய தோற்றம் என் கண்ணைக் கவர்ந்தது. ஒரு யானை மெல்ல அசைந்து நடந்து வருவதைப்போல் அவர் வந்தார். நல்ல வளர்ச்சி யடைந்த தோற்றமும், இளந் தொந்தியும், முழங்கால் வரையில் நீண்ட கைகளும், பரந்த நெற்றியும், பின் புறத்துள்ள சிறிய குடுமியும், இடையில் உடுத்திருந்த தூய வெள்ளை ஆடையும் அவரை ஒரு பரம்பரைச் செல்வரென்று தோற்றச் செய்தன. ஆயினும் அவர் முகத்திலே செல்வர்களுக்குள்ள பூரிப்பு இல்லை; ஆழ்ந்து பரந்த சமுத்திரம் அலையடங்கி நிற்பது போன்ற அமைதியே தோற்றியது. கண்களில் எதையும் ஊடுருவிப் பார்க்கும் பார்வை இல்லை; அலக்ஷியமான பார்வை இல்லை; தம் முன்னே உள்ள பொருள்களில் மெல்லமெல்லக் குளிர்ச்சியோடு செல்லும் பார்வைதான் இருந்தது.

அவருடைய நடையில் ஓர் அமைதியும், வாழ்க்கையில் புண்பட்டுப் பண்பட்ட தளர்ச்சியும் இருந்தன. அவருடைய தோற்றத்தில் உத்ஸாகம் இல்லை; சோம்பலும் இல்லை. படபடப்பில்லை; சோர்வும் இல்லை. அவர் மார்பிலே ருத்திராட்ச கண்டி விளங்கியது.

பல காலமாகத் தவம் புரிந்து ஒரு தெய்வ தரிசனத்திற்குக் காத்திருக்கும் உபாஸகனைப்போல நான் இருந்தேன்; அவனுக்குக் காட்சியளிக்கும் அத் தெய்வம்போல அவர் வந்தார். என் கண்கள் அவரிடத்தே சென்றன. என் மனத்தில் உத்ஸாகம் பொங்கி அலை எறிந்தது. அதன் விளைவாக ஆனந்தக் கண்ணீர் துளித்தது அத்துளி இடையிடையே அப்புலவர் பிரானுடைய தோற்றத்தை மறைத்தது. சுற்றிலுமுள்ள எல்லாவற்றையும் விலக்கி விட்டு அவரது திருமேனியில் உலவிய என் கண்கள் அவர் முகத்திலே பதிந்து விட்டன."

தொடரும்...
சுபா

No comments:

Post a Comment