Saturday, March 8, 2014

மகளிர் தினத்தில்.. ஆஹா.. என்ன ஆளுமை?

Inline image 2
ஆஹா....

என்ன ஆளுமை..? 

      என நம்மை வியக்க வைக்கும் சிலரை நாம் வாழ்வில் எப்போதாவதோ சந்தித்திருப்போம். அல்லது அவர் பற்றி கேள்விப்பட்டிருப்போம். அல்லது அவருடன் நெருங்கிப் பழகியிருப்போம்; அல்லது நமது நெருக்கமான உறவாகவே அவர்கள் அமைந்திரும் நிலை இருக்கலாம்.

அப்படி என்னை/நான் வியக்க வைத்தவர்களில்/வியப்பவர்களில்  அதிலும் குறிப்பாக பெண்களில் ஒரு சிலரை நினைத்துப் பார்க்க முனையும் போது உடனே என் மனதில் தோன்றும் சில நபர்களைப் பற்றிய ரு சிறு குறிப்புத் தான் இந்தப் பதிவு.


1. திருமதி மரியபுஷ்பம் வேலு - எனது பள்ளி ஆசிரியர்களில் ஒருவர். எனது 2ம், 3ம்வகுப்பு ஆரம்பப்பள்ளி வகுப்பு ஆசிரியை. ஆனால் அந்தப் பள்ளியில் படித்த வரை நானும் அவரது செல்ல மாணவர்களில் ஒருவர். என்னைப் போல ஏனைய மாணவ மாணவியரும் கூட அவரைச் சூழ்ந்திருப்போம். முன்னர் சிறு பெண்ணாக இருந்த சமயத்தில் மிக ஒல்லியாக இருப்பேன். அதற்காக என் பெற்றோர் என் ஆசிரியரிடம் வந்து என்னைப் பற்றி நான் ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை எனச் சொல்லி கோள்மூட்டி விட்டு சென்றிருப்பர். அவர் என்னை பள்ளி உணவு இடைவேளையில் அவர் முன்னே அமர வைத்து நான் கொண்டு வந்திருக்கும் உணவை சாப்பிட்டு முடிக்கும் வரை பார்த்துக் கொண்டிருப்பார். ஏதோ வேலையில் இருக்கின்றார் என நினைத்து உணவு டப்பாவை பாதியிலேயே மூடினால் ஒரு மிரட்டல் பார்வை பார்ப்பார். பயந்து சாப்பிட்டு முடித்து விடுவேன். சாப்பிட்டு முடித்ததுமே என்னை அணைத்து கட்டிக் கொள்வார். அது பயமா.. அன்பா என்றால்.. அன்பே  எனக்கு அவர் மேல் அதிகம் என்பதை சந்தேகமில்லாமல் என் மனம் சொல்லும். ஆரம்பப்பள்ளி காலம் முடிந்தும் பல ஆண்டுகள் அவருடன் தொடர்பில் இருந்தேன். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு மறக்காமல் பலகாரங்கள் கொண்டு சென்று கொடுத்து வந்தேன் அவர் இறக்கும் வரை. அவர் முகம் மனதில் பசுமை குறையாமல் இருக்கின்றது. மாணவர்கள் மேல் இருந்த இவரது அன்பின் ஆளுமையை நினைத்து மலைத்துப் போகிறேன்.

2. ஜெர்மனியின் சான்ஸலர் - சென்ற ஆண்டு இறுதியில் மீண்டும் ஒரு முறை மூன்றாவது தவணையாக தந்தையர் நாடாகிய (ஜெர்மனியை தாய் நாடு எனச் சொல்லமாட்டார்கள். Vaterland - தந்தையர் நாடு என்றே குறிப்பிடப்படுவது) ஜெர்மனியின் சான்ஸலராக பதவி எடுத்துக் கொண்ட அரசியல் தலைவர் இவர். உலக நாடுகளின்  பெருந்தலைவர்களில் தனியிடம் பெறுபவர். இவரது பணிக்காலத்தில் அரசியல், தனி வாழ்க்கை, என எண்ணிக்கையில்ல விமர்சனங்களை எதிர்கொண்டவர். பேச்சு சுதந்திரம் கருத்து சுதந்திரமும் முழு அளவில் கடைபிடிக்கப்படும் ஜெர்மனியின் ஊடகங்களில் அவரை கேலி செய்யாத, குறை கூறாத, கிண்டலடிக்காத ஊடகங்களே  இல்லை எனலாம். ஆனால் அதே வேளை அந்த அனைத்து ஊடகங்களும் அவரது நிர்வாகத்திறமையை மெச்சத் தவறுவதில்லை. இவரை பார்க்கும் போதும், நாளிதழ்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் செய்திகளில் காணும் போதும் இவர் தொடர்பான செய்திகளை அறியும் போதும் இவரது ஆளுமையை நினைத்து மலைத்துப் போகிறேன். 

3. என் தாயார் ஜனகா - 18 வயதில் தஞ்சையில் திருமணம் முடித்த அடுத்த 8ம் நாளே பெற்றோர் உற்றார் அனைவரையும் விட்டு மலேசியாவிற்குக் கப்பலில் என் தந்தையுடன் பயணித்தவர். புதிதாக வந்த ஊரில் யாரையும் அறியாத நிலையிலும், மலாய் மொழி அறியாத நிலையிலும் அவர் சோர்ந்து விடவில்லை. தன் கல்வியை உயர்த்திக் கொண்டார்; தனது வாழ்க்கையை குடும்பம் என்ற வரையறைக்குள் வைத்துக் கொள்ளாமல் பல சமூகப்பணிகளில் ஈடுபட்டார்; தனது இலக்கிய ஆர்வம் காரணமாக பல சிறுகதைகள், கட்டுரைகள், நெடுங்கதைகள் ஆகியவற்றோடு 7 நூல்களுக்கும் ஆசிரியர் என்ற புகழ் பெற்றவர். மலேசிய இந்தியர் காங்கிரஸ்,  மலேசிய இந்து சங்கம், பயணீட்டாளர் சங்கம், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் என தனது ஈடுபாடுகளையும் செயல்பாடுகளையும் விரிவாக்கினார். இசை, நாட்டியம், மருத்துவம், இலக்கியம் என்பதோடு பத்திரிக்கை ஆசிரியராகவும் நிருபராகவும் சில காலங்கள் பரிமளித்தார்.  அவர் மறைந்து ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அவரது இனிய முகத்தின் புகைப்படத்தை பார்க்கும் போது அவர் திறமையை நினைத்து என்னால் வியக்காமல் இருக்க முடிவதில்லை.  

4. செம்பியன் மாதேவி - அரச குலத்துப் பெண்கள் பலரைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். அவர்களில் சோழ குலத்தின் பெருமைக்கு பெருமை சேர்க்க வந்தவர்களின் தனிச்சிறப்பிடம் பெறுபவர் செம்பியன் மாதேவி. நீண்ட காலம் வாழ்ந்த இந்த மாதரசியார் இளம் பிராயத்திலேயே தனது  கணவர் கண்டராதித்தர் வடக்கி நோக்கி சென்று விட்ட நிலை ஏற்பட்டமையால் தனித்து வாழும் நிலைக்கு வாழ்நாளின் பெரும்பகுதி அமைந்தது. தனக்கு அமைந்த இந்த நிலையை சோழர் ராஜ்ஜியத்தின் பக்தி சிந்தனை மக்கள் மத்தியில் பெருகும் வகையில் சோழர்கள் ஊர்களில் இருந்த ஏறக்குறைய எல்லா செங்கற்றளி கோயில்களையும் கற்றளி கோயில்களாக மாற்றிய பெருமை இந்த மங்கையைச் சேரும். இது மட்டுமன்றி புதுக் கோயில்களையும் கட்டுவிக்கச் செய்தவர். கோனேரி ராஜபுரம் கோயில் இவர் பெயர் சொல்லி நிற்கும் கலைக்கூடத்தில் தனிச் சிறப்பு பெற்று விளங்கும் ஒன்று. நேரில் சோழ நாடு சென்று வந்த போதும்,  கோனேரி ராஜபுரம் கோயில் சென்று அதனை நேரில் பார்த்த போதும் இந்த அம்மையாரின் ஈடுபாட்டையும் செயல் திறத்தையும், ஆளுமையௌயும் கண்டு வியந்து நின்றேன்.

5. சந்தனமேரி -  இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஒரு பத்திரிக்கைச் செய்தியின் வழியாக இவரைப் பற்றி அறிந்து கொண்டேன்.  http://kalvi.vikatan.com/index.php?aid=1410 தமிழகத்தில் தான் வாழும் பகுதியில் சாதிக் கொடுமையை எதிர்த்து தனது வாழ்நாளின் பெரும்பகுதியை சமூக அநீதியை எதிர்க்க குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாது இந்த தனது முற்சிகளினால் தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் பல இழப்புக்களையும் சந்தித்த பெண்மனி. அவை அனைத்தையும் கண்டு அஞ்சாது தனது சேவைகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் ஒரு சாதனையாளர் இந்தப் பெண்மணி. தாழ்த்தப்பட்டோர் என சமூகத்தாரால் பெயரிடப்பட்டு சாதி கொடுமைகளுக்கு உள்ளாகும் கல்வி வாய்ப்புக்களை இழக்கும் குழந்தைகளுக்கு ஒரு கல்விச் சாலையை நடத்தி வருகின்றார். இவரைப் பற்றி அறிந்த போது நான் இவரது தைரியத்தையும், கொண்ட கொள்கையில் இவருக்கு இருக்கும் உறுதியையும் பார்த்து மலைத்து நின்றேன். இது வியப்பையும் தாண்டிய ஒரு அனுபவம்.


இவர்கள் மட்டுமல்ல.. மேலும் பலர் என்னுள்ளே அவர்களின் செயல்களின் வழி ஏற்படுத்தியவர்களாக இருக்கின்றார்கள். 

மகளிர் அனைவருக்கும் என் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!

சுபா

3 comments:

  1. உங்களைக்கவர்ந்த பெண் ஆளுமைகளின் நினைவலைகள் என்னையும் சூழ்ந்து கொண்டன. உங்கள் ஆசிரியையும், உங்கள் அம்மாவும் ரொம்பவும் கவர்ந்து விட்டனர். இப்படிப்பட்டவர்களைத் தெரிந்து கொண்டது மிகவும் சந்தோஷமளிக்கிறது. தங்களுக்கு வாய்த்த சூழ்நிலையில் ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் தங்களையும் மேன்மைபடுத்திக் கொண்டு சுற்றிலும் இருந்தவர்களையும் உயர்த்தி இருக்கிறார்கள் என்பதை நினைக்க நினைக்க வியப்பு மேலிடுகிறது.

    ஜெர்மனியின் சான்சலர் என்று சொல்லியிருக்கிறீர்களே, அது நம் ஊர் பிரதமர் போன்ற பதவியா? அரசியல் தலைவர் என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள், அதனால் கேட்கிறேன். அவரது பெயரைக் குறிப்பிடவில்லையே?

    செம்பியன் மாதேவி பற்றி கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் படித்தது நினைவுக்கு வருகிறது. அவரைப்பற்றி ஒரு விழியப் பதிவு ஒன்றும் போட்டிருந்தீர்கள், இல்லையா?

    சந்தனமேரி மிகவும் போற்றப்பட வேண்டிய பெண்.
    இவர்களை அறிமுகம் செய்து வைத்ததற்கு உங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது.

    ReplyDelete
  2. மகழ்ச்சி திருமதி ரஞ்சனி.
    சான்ஸலர் என்பது ஏறக்குறையபிரதமர் போலத்தான். அவர் பெயர் அங்கேலா மெர்க்கல்.
    செம்பியன் மாதேவி விழியம் போட்டிருந்தேன். பார்த்துவிட்டீர்களா?
    வாசித்து கருத்து சொன்ன உங்களுக்கும் என் நன்றி

    ReplyDelete
  3. இன்று வலைச்சரத்தில் திருமதி ரஞ்சனி நாராயணன் தங்களை அறிமுகப்படுத்தியறிந்து மகிழ்ச்சி. தங்களுடைய பன்முகப் பார்வையும், எழுத்தார்வமும், சமூக நோக்கும் பாராட்டத்தக்கது. தங்களது முயற்சி பல்லாற்றானும் சிறப்புற அமைய வாழ்த்துக்கள்.
    http://drbjambulingam.blogspot.com/2015/02/blog-post.html
    http://ponnibuddha.blogspot.com/2015/02/blog-post.html

    ReplyDelete