தொடர்ச்சி 8
இங்கிலாந்து ஜெர்மனி, போலந்து, எகிப்து, க்ரீஸ், ரஷ்யா, இத்தாலி ஆகிய நாடுகளுக்குத் தனது சுற்றுப்பயணத்தை முடித்து வந்த பின்னர் தாம் பார்த்து கேட்டு சந்திக்க நேர்ந்த விஷயங்களைப் பற்றி திரு.ஈ.வே.ரா குறிப்பிடும் வகையில் குடி அரசு இதழில் சில பதிவுகள் இடம் பெறுகின்றன. அதில் ஒன்று லண்டனில் விசியம் கிளப்பில் பம்பாய் சர்வகலாசாலைப் பெண்கள் சங்கத்தின் ஆண்டுவிழாவில், சென்னை கிறிஸ்துவ பெண்கள் கலாசாலையின் தலைவர் திருமதி மெக்டாக்கல் பேசிய சொற்பொழிவின் அடிப்படையிலானது. இக்கூட்டத்தில் தாம் கலந்து கொள்ள நேர்ந்த போது அச்சொற்பொழிவினைச் சார்ந்ததாக ஒரு கட்டுரை பெண்கள் அடிமை நீங்குமா? என்ற தலைப்பில் எழுதுகின்றார்.
அந்த உரையில் அப்பெண்மணி இப்படி குறிப்பிடுகின்றார்.
பெண்மக்கள் உயர்தரக் கல்வி கற்பதனால் குற்றமற்ற பயன் உண்டாகும் என்று சொல்ல முடியாது. இந்தியப் பெண்கள் பக்தியிலும் மனோவுறுதியிலும் சிறந்தவர்கள். அவர்களுக்குக் குடும்பத்தில் மிகவும் சம்பந்தமும், பற்றுதலும் உண்டு. அவர்கள் குடும்பத்திலுள்ள பற்றுதலிலிருந்து நீங்குவார்களானால் இந்திய சமூக வாழ்க்கைக்கு மிகுந்த பாதகம் ஏற்பட்டு விடும். ஆகையால் அவர்களுக்கு போதிக்கும் உயர்தரக் கல்வியுடன் கிறிஸ்துவ மதத்தின் உயர்ந்த தத்துவங்களையும் சேர்த்துப் போதிக்க வேண்டும். இன்றேல் உயர்தரக் கல்வியால் பெண்களுக்கு மிகுந்த ஆபத்தே உண்டாகும்.
இதற்கு திரு. ஈ.வே.ரா இப்படி தனது கருத்தை எழுதுகின்றார்.
திருமதி.மெக்டாகல் அவர்கள் நாகரீகம் பெற்ற மேல் நாட்டுப் பெண்மணியாயிருந்தும் இவ்வாறு பேசியிருப்பதைக் கண்டு உண்மையில் நாம் வருந்தாமலிருக்க முடியவில்லை. ஆனால் இந்தியப் பெண்களின் சமுதாய வாழ்க்கையைப் பற்றி இந்த அம்மாளுக்கு இவ்வளவுக் கவலை தோன்றியிருப்பதைப் பற்றி ஆராயும் போது நிச்சயமாக அதில் ஒரு சூழ்ச்சியிருக்க வேண்டுமென்ற முடிவுக்கே வரலாம். அச்சூழ்ச்சியும் அந்த அம்மாளின் சொற்களிலேயே காணப்படுகின்றது. அச்சூழ்ச்சி உயர்தரக் கல்வியுடன் கிறிஸ்துவ மதத்தின் உயர்ந்த தத்துவங்களையும் சேர்த்துப் போதிக்க வேண்டும் என்பதேயாகும். ஆகவே இது கிறிஸ்துவ மதத்தை இந்தியாவில் பரவ வைப்பதற்குச் செய்யப்படும் பிரசாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை என்றுதான் நாம் கூறுவோம்.
- குடி அரசு துணை தலையங்கம்
திரு.ஈ.வே.ரா சுட்டிக் காட்டும் இப்பெண்மணியின் பேச்சு பெண்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவதாக என்பதை விடுத்து மத போதனைகளைக் கடைபிடிக்கும் வழியிலிருந்து பெண்கள் விலகாமலிருப்பதே அவர்களுக்குச் சிறந்தது என்ற வகையில் அமைந்திருப்பதாகவே தெரிகிறது.
மேல் குறிப்பிடப்பட்ட பகுதியில் திருமதி மெக்டாக்கல் கூறும் 2 விஷயங்கள் கேள்விக்குறியாகின்றன.
1. இந்தியப் பெண்கள் பக்தியிலும் மனோ உறுதியிலும் சிறந்தவர்கள் - இது வந்திருந்த பார்வையாளர்கள் இந்திய தேசத்தினர் என்பதனால் அவர்களை இம்ப்ரஸ் செய்ய சொல்லப்பட்டதேயன்றி வேறேதாக இருக்க முடியும்? இந்திய தேசத்தைக் கடந்து ஏனைய நாடுகளில் உள்ள பெண்கள் அவர்கள் பக்தியிலும் மனோ உறுதியிலும் சளைத்தவர்களா? இது ஏற்றுக் கொள்ளும் வகையில் இருக்கின்றதா? இப்படி புகழுரைக் கேட்டதும் இந்தியப் பெண்மணிகள் மயங்கி அவர் சொல்லும் ஆலோசனைகளைக் கேட்டு மகிழ்வர், என எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த வகை புகழுரை என்று தான் நினைக்க தோன்றுகிறது.
2. பெண்மக்கள் உயர்தரக் கல்வி கற்பதனால் குற்றமற்ற பயன் உண்டாகும் என்று சொல்ல முடியாது - உயர்கல்வி பெண்மக்களுக்கு குற்றமற்ற பயனைத் தாராது என்பதை மறைமுகமாக குறிப்பிடுவதன் வழி பெண்களின் கல்விக்கே தடையை முன்வைக்கும் வகையில் இக்கூற்று அமைகின்றது. உயர் கல்வி கிடைப்பதனால் குடும்பத்தில் உள்ள பாசம் நீங்கும் என இவர் குறிப்பிடுவது அதனை விட மோசமான கருத்தாகவே படுகின்றது.
இந்தியப் பெண்கள் கல்வி முன்னேற்றத்தில் இப்படிக்கூட தடைகளை ஏற்படுத்தும் சிந்தனைகளும் அக்காலத்தில் தோன்றியிருக்கின்றன. இவற்றை நாம் அறிந்து கொள்வதும், எத்தனை தடைகளைத் தாண்டி பெண்களுக்கு கல்வி என்பது சமூகத்தில் படிப்படியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது என்பதை அறிந்து கொள்ள அவசியமாகின்றது.
சுபா
வணக்கம்...
ReplyDeleteவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : ரூபக் ராம் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கனவு மெய்ப்பட
வலைச்சர தள இணைப்பு : பனியைத் தேடி - சிம்லா ஸ்பெஷல் - குப்ரி
நன்றி :-)
ReplyDelete