Saturday, September 13, 2003

Malaysian Tamil literature - 1

மலேசியாவில் 300க்கும் மேற்பட்ட தமிழ் எழுத்தாளர்கள் இருக்கின்றனர். ஆனாலும் இவர்களது படைப்புக்கள் மற்றும் இவர்களைப் பற்றிய தகவல்கள் எந்த அளவுக்கு உலகத் தமிழர்களுக்குத் தெரிந்திருக்கின்றது என்பது கேள்விக்குறி! புத்தகங்களைப் பதிப்பிக்கும் பழைய முறையை மட்டுமே நம்பிக் கொண்டிருந்தால் எப்போது இவர்களது எழுத்துக்கள் உலக மக்களுக்கு அறிமுகமாக முடியும்?

மலேசிய தமிழ் எழுத்தாளர்களில் ஏறக்குறைய அனைவருமே கணினியின் பக்கமே தலைகாட்டாதவர்களாகவே இருக்கின்றனர். கனினி வழி தங்கள் எழுத்துக்களை அச்சுப்பதிப்பாக்கம் செய்தல் என்ற விஷயத்தை அறியாதவர்களாகவே இவர்கள் இருப்பது வேதனைக்குறிய ஒரு விஷயம்.

மலேசிய நாட்டிற்கென ஒரு தனி கலாச்சாரம் உண்டு; ஒரு தனித்துவம் உண்டு, ஒரு பாரம்பரியம் உண்டு. ரப்பர் மற்றும் செம்பனைத் தோட்டங்களில் வசிக்கும் மக்களின் பிரச்சனைகளும் இவர்களது வாழ்க்கை முறைகளும் மலேசிய எழுத்தாளர்களின் வழி தானே உலக மக்களுக்கு அறிமுகமாக வேண்டும். எத்தனை நாட்கள் இன்னமும் இந்த முயற்சியை இவர்கள் தள்ளி வைப்பது?

31 ஆகஸ்டு (மலேசிய சுதந்திர தினம்) அன்று மலேசியாவில் இருக்க நேர்ந்ததால் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் சிறப்புறையாற்றும் வாய்ப்பு கிடைத்த போது இந்த தகவலைக் கூறினேன். வலைப்பதிவு, உயிர்ப்பூ போன்ற பல வசதிகள் இணையத்தில் வந்து விட்ட பின்னர் அதனைப் பயன்படுத்தி மலேசிய எழுத்துக்களை மின்பதிப்பாக்கம் செய்ய வேண்டும்; மற்றும் மதுரைத் திட்டத்தில் இந்த நூல்கள் சேர்க்கப்பட வேண்டும் என்ற கருத்துக்களைக் கூறிய போது ஆர்வம் துளிர்வதைக் காண முடிந்தது. கணினி பயிற்சி பெற்ற சிலர் நமது தமிழ் எழுத்தாளர்களுக்கு உதவ வேண்டும். இந்த வகையில் படிப்படியாக தமிழ் எழுத்தாளர்களுக்கு இருக்கும் கணினியைப் பற்றிய அச்ச உணர்வுகள் தொலைந்து ஆர்வம் பிறக்க வழி உண்டு.

1 comment:

  1. அக்கா, பாரதி சொன்ன பிறநாட்டுத் நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழில் பெயர்த்தல் வேண்டும் என்பதோடு, பிற நாட்டின் தமிழறிஞர் நூட்களைத் தமிழகத் தமிழர் அறிதல் வேண்டும். அப்போதுதான் தமிழகத்தைத் உலகத் தமிழர்களின் அரணாகவும், தாய்வீடாகவும், மேடையாகவும் மாற்றிடமுடியும். அப்போதுதான் தமிழும் தமிழரும் உலகம் முழுவதும் சிறப்போடு இருக்க முடியும். உங்களது இந்த வலைப்பூவின் முதல் பதிப்பிலிருந்து படிக்க ஆரம்பித்திருக்கிறேன். உங்கள் முயற்ச்சிகளும், உழைப்பும் தமிழின் வரலாற்றில் உயர்ந்த இடங்களை அடைய என் வாழ்த்துகள்.

    ReplyDelete