Sunday, July 29, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 11


பதிவு 11

ஒரு இயற்கை விரும்பியாக, தாவரங்கள் மரங்கள், பயிர்கள் மேல் அதிக நாட்டம் கொண்டவராக உ.வே.சா இருந்தமை பற்றி பலரும் அறிந்திருக்க மாட்டோம். உ.வே.சா என்றால் ஓலைச்சுவடி என்று மட்டுமே அறிந்த நிலையில் அவரது குணங்களின் பல்வேறு பரிணாமங்களையும், வாழ்க்கையில் கடந்து வந்த அனுபவங்களையும் பதிவாக்கிக் காட்டும் வரலாற்று ஆவணமாகத் திகழ்வது என் சரித்திரம். அந்த வகையில் என் சரித்திரம் நூலில் இயற்கையின் பால், செடி, கொடி, மரம், தாவரங்கள் பால் இவருக்கிருந்த நேசத்தையும் விவரிப்பதாக உள்ளது இந்த நூல்.

பிற்காலத்தில் பிள்ளையவர்களிடம் மாணவராகச் சேர்ந்த போது பிள்ளையவர்களின் தாவரங்களின் பாலான அலாதி ப்ரியத்தை அறிந்து கொண்டு பிள்ளையவர்களின் கவனத்தைப் பெற உ.வே.சா செய்த சில விஷயங்கள் ரசிக்கத்தக்கவை. ஆனால் அவை செயற்கையானவை அல்ல என்பதும் இவருக்கும் தாவரங்களின் பால் நேசம் இருந்தமையும் நூலில் வாசித்து தெரிந்து கொள்ள முடிகின்றது. உதாரணமாக 17ம் அத்தியாயத்தில் இயற்கை தந்த இன்பம் என்னும் பகுதியில் இப்படிச் சொல்கின்றார்.


"பயிர்கள் வகை வகையாகக் கொல்லைகளில் விளைந்து கதிர் விட்டிருப்பதும், அங்கங்கே புன்செய் நிலங்களில் இடையிடையே மொச்சை, துவரை முதலியவை வளர்ந்திருப்பதும் என் கண்களைக் கவரும். எவருடைய பாதுகாப்பையும் வேண்டாமல் இயற்கையாகப் படர்ந்திருக்கும் முல்லைக் கொடிகளும் துளசியும், நன்றாகச் செழித்து வளர்ந்திருக்கும் வில்வம், வன்னி முதலிய மரங்களும், மலர்ந்திருக்கும் அலரியும் பிறவும் இயற்கைத் தேவியின் எழிலைப் புலப்படுத்திக் கொண்டு விளங்கும். கம்பு விளையும் நிலத்தருகே கரைகளில் துளசி படர்ந்திருக்கும். கணக்குப்பிள்ளை கம்புப் பயிரை மாத்திரம் கண்டு மகிழ்வார்; அதனால் உண்டாகும் வருவாய்க் கணக்கில் அவர் கருத்துச் செல்லும். நான் அவரோடு பழகியும் அத்தகைய கணக்கிலே என் மனம் செல்வதில்லை. கம்பங் கதிர் தலை வளைந்து நிற்கும் கோலத்திலும் அழகைக் கண்டேன்; துளசி கொத்துக் கொத்தாகப் பூத்துக் கதிர்விட்டிருக்கும் கோலத்திலும் அழகைக் கண்டேன். “கம்பிலே தான் காசு வரும்; துளசியிலே என்னவரும்?” என்ற வியவகார புத்தி எனக்கு இல்லை. இரண்டும் என் கண்களுக்குக் குளிர்ச்சியான காட்சியை அளித்தன. வில்வமரமும் வன்னி மரமும் எனக்கு இயற்கைத் தாயின் எழில் வடிவத்தின் ஒரு பகுதியாகவே தோற்றின. மனிதன் வேண்டுமென்று வளர்க்காமல் தாமே எழுந்த அவற்றில் இயற்கையின் அழகு அதிகமாகவே விளங்கியது."

என் சரித்திரம் நூல் பல புதிய விஷயங்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது என்றே சொல்வேன். அதில் ஒன்று அருணாசலகவி ராமாயணம் பற்றியது. என் சரித்திரம் நூலில் உள்ள  17ம் அத்தியாயம் வாசிக்கும் வரை நான் அருணாசலகவி ராமாயணம் என்னும் நூல் பற்றி அறிந்ததில்லை.

உ.வே.சா அவர்களின் தந்தையார் அருணாசலகவி ராமாயணப் பிரசங்கம் செய்பவர் என்பதோடு தந்தையோடு இணைந்து பிரசங்கத்தில் ஈடுபட்ட விஷயங்களையும் நூலில் குறிப்பிடுகின்றார். உ.வே.சாவுக்கு இசைப் பயிற்சியும் ஓரளவிற்கு நன்கு அமைந்திருந்தமையால் பிரசங்கம் செய்வதில் தந்தையோடு சேர்ந்து பாடி  ஊர்மக்களின் அன்பை பெற்றிருக்கின்றார் இவர்.

குன்னத்தில் குடும்பத்தோடு குடிபெயர்ந்து சென்று இருந்த போது நாட்டாண்மைக்காரர்களும் இவர்கள் குடும்பத்தை ஆதரித்து வந்த சிதம்பரம் பிள்ளையும் சேர்ந்து யோசித்து இவரது தந்தையாரைக் கொண்டு அருணாசலகவி ராமாயணத்தைப் சிதம்பரம் பிள்ள்ளையவர்களின் வீட்டுத் திண்ணையில் பிரசங்கம் செய்வித்து மகிழ்ந்திருக்கின்றனர். ஒவ்வொரு நாள் இரவும் என இப்பிரசங்கம் நிகழ்ந்திருக்கின்றது. இந்தப் பிரசங்கம் ஆத்மசந்தோஷத்தைக் கொடுத்தது என்பதை விட இவர்கள் குடும்பத்திற்கு நல்ல பொருளாதார வருவாயையும் ஈட்டித் தந்தது என்று சொல்லி நினைவு கூறுகின்றார் உ.வே.சா. இரண்டு மாத காலங்கள் இந்தப் பிரசங்கம் தொடர்ந்து இரவு வேளையில் நடந்திருக்கின்றது. இப்படி நிகழ்வுகளை  ஏற்பாடு செய்து கற்றவர்களை ஆதரித்து மக்களுக்கும் கேட்போர் செவிக்கும் மனதிற்கும் இன்பம் தர வைத்த புண்ணிய ஆத்மாக்களையும் நாம் போற்றாமல் மறக்கலாமா?

தொடரும்...
சுபா

No comments:

Post a Comment