என் சரித்திரம் நூலை வாசிக்கையில், அதில் உ.வே.சா அவர்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்த பலரையும் நூல் வழியாக நான் சந்திக்கின்ற வேளைகளில் அவர்களின் குணங்களைக் கண்டு மனம் லயித்துப் போய் நின்று விடுகின்றேன். இவர் உலகத்தில் கல்வி.. அதிலும் தமிழ்க் கல்வியே உயர்ந்த ஸ்தானத்தைப் பெற்றிருந்தது. அந்த உலகத்தில் உ.வே.சாவோடு நெருக்கமாக உலவி வந்தவர்களைப் பற்றி நினைக்கும் போது அவர்களின் சிந்தனை, வாழ்க்கை முறை ஆகியவை என்னை பல முறை அவர்களைப் பற்றி சிந்திக்க வைத்தது என்றே சொல்வேன்.
அன்பை வகைப்படுத்தும் போது தாயின் அன்பை உயர்த்திப் பிடிக்கின்றோம். தந்தையின் அன்பும் மனதை கலங்க வைக்கக் கூடியது என்பதை என் சரித்திரம் நிரூபிக்கின்றது. மகனின் நலனிற்காக தன் வாழ்க்கையையே அமைத்துக் கொண்ட ஒரு தந்தை வேங்கட சுப்பையர்.
குன்னத்தில் சிதம்பரம் பிள்ளையவர்கள் உ.வே.சா குடும்பத்தை ஆதரித்து வந்த போது அங்கே ஒரு கல்யாண விஷேஷத்திற்காக வந்திருந்த கஸ்தூரி ஐயங்காரைப் பற்றியும் அவர் தம் தமிழ் புலமை அறிந்து அவரிடம் பாடம் கேட்க தாம் ஏங்கியிருந்த வேளையில் அவரை சந்திக்கும் வாய்ப்பமைந்து தன்னிடம் பாடம் கேட்க வரலாம் என அவர் சம்மதம் தெரிவித்துச் செல்லும் பகுதியில் உ.வே.சா தன் தந்தையைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகின்றார்.
"கஸ்தூரி ஐயங்கார் சென்ற திக்கையே நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் தூரத்தில் மறைய மறைய என் மனத்துள் கார்குடியைப் போன்ற தோற்றம் ஒன்று உண்டாயிற்று. என் தமிழ்க் கல்வியின் பொருட்டு எந்த இடத்துக்குச் செல்வதற்கும் என் தந்தையார் சித்தமாக இருந்தார்."
இப்படிப்பட்ட அர்ப்பணிப்பையும் மகனின் கல்வி வளர்ச்சிக்காக எங்கு செல்லவும் தயாராக இருந்த நிலையையும் காணும் போது இறையருள் கருணை அவரது தந்தையார் ரூபத்தில் இருந்தமை நன்கு புலப்படுகின்றது. உ.வே.சாவின் மிக இளமை காலத்தில் மட்டுமல்லாது பின்னர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்க அழைத்துச் சென்ற காலத்திலும் உ.வே.சா திருவாவடுதுறை ஆதீனத்தில் இணைந்த காலங்களிலும் மகனது கல்வி மேண்மைக்காக வேங்கட சுப்பையர் மேற்கொண்ட முயற்சிகள் தந்தையின் அன்பிற்குச் சான்று கூறி நிற்கின்றன.
தொடரும்...
அன்புடன்
சுபா
No comments:
Post a Comment