இலக்கியம் படைக்க விரும்பும் இளைஞர்கள் பலர் தங்களை ஈர்த்த அறிஞர்களின் பாணியைப் பின்பற்றுவது என்பது பெரும்பாலும் சகஜம். வாசிக்கின்ற நூல்கள், அந்த நூல்களில் உள்ள சொற்கள், எழுத்து நடை, சிந்தனையோட்டம், பார்வை போன்றவற்றால் கவரப்பட்டு அதே பாணியில் எழுதுவது ஆரம்ப காலங்களில் பலருக்கும் ஏற்படும் ஒரு நிலைதான். எனது அனுபவத்திலும் இது நடந்ததுண்டு. மீண்டும் மீண்டும் தீவிரமாக மனதை ஆழமாக வைத்து வாசிக்கும் நூல்கள், அதிலுள்ள சொற்பயன்பாடு ஆகியவை எனது எழுத்துக்களிலும் பிரதிபலிப்பதை நான் கவனித்ததுண்டு.
புதுமையை படைக்க விரும்பும் போது இந்த நூல்களையெல்லாம் விட்டு கடந்து நமது சிந்தனையை அதில் செலுத்தி அதில் வெளிப்படும் கருத்தாங்களைச் சொல்லில் கொண்டுவருவது புதுமை படைப்பதாக அமையும். ஒரு நூலில் சொல்லியவற்றையே மீண்டும் வேறு சொற்களில் புகுத்தி அதனைமீண்டும் நூலாக கொண்டுவருவதால் என்ன பயன்?
உ.வே.சா அவர்களும்இளம் பிராயத்தில் இலக்கியம் படைக்க முயன்று இவ்வகை முயற்சிகளைச் செய்தவர்தாம் என்பதை என் சரித்திரம் காட்டுகின்றது. தாம் பாடம் கேட்ட ஆசிரியர்கள் வடித்த செய்யுட்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு அவரும் செய்யுள் இயற்ற ஆரம்பித்திருக்கின்றார்.
"யாப்பிலக்கண விதிகளோ எனக்குத் தெரியா. சதகப் பாட்டுக்களைப் போன்ற விருத்தங்களைப் பாடலானேன். குன்னத்திலுள்ள ஆதிகும்பேசுவரர் விஷயமாகவும், மங்களாம்பிகை விஷயமாகவும், ஆயிரவல்லி என்னும்
துர்க்கையின் விஷயமாகவும் சில பாடல்களை இயற்றினேன். தாயுமானவர் பாடல், பட்டினத்துப்பிள்ளையார் பாடல் முதலியவற்றிலே கண்ட கருத்துக்களை அவற்றில் அமைத்தேன். “நான் பெண்களின் அழகிலே ஈடுபட்டுக் காலத்தைக் கடத்தி விட்டேன். அவர்கள் மயக்கத்திற்பட்டு வாழ்க்கையை வீணாக்கினேன்” என்றும், “செல்வரைப் புகழ்ந்து பாடி அலைந்து துன்புற்றேன்” என்றும் கருத்துக்களை அமைத்துச் செய்யுட்களை இயற்றினேன். பழம்பாடல்களின் ஓசையை மாதிரியாக வைத்துக்கொண்டதைப்போலவே அவற்றின் கருத்துக்களையும் அப்படியே அமைத்துக் கொள்வதை ஒரு பெருமையாக நான் கருதினேன்."
ஆர்வத்துடன் தான் இயற்றிய செய்யுட்களை தனது தந்தையாரிடம் காட்டி அவரது பாராட்டுதலைப் பெற வேண்டும் என்ற ஆர்வம் உ.வே.சாவுக்கு இருந்திருக்கின்றது. இதனால் ஒரு நாள் அவரது தந்தையிடம் தான் இயற்றிய செய்யுட்களை வாசித்துக் காட்டியிருக்கின்றார். தந்தையார் இவரைப் பாராட்டி உற்சாகம் கொடுத்து மீண்டும் மீண்டும் இவ்வகைச் செய்யுட்களை அவர் இயற்ற வேண்டும் என்று சொல்லுவார் என்று நினைத்திருக்கின்றார். ஆனால் நடந்ததோ வேறு.
உ.வே.சா அந்த நிகழ்வைச் சொல்கின்றார்.
" “அட பைத்தியமே! இப்படியெல்லாம் பாடாதே” என்றார். “அவர்களெல்லாம் பாடியிருக்கிறார்களே; நான் பாடுவதில் என்ன தவறு?” என்று நான் கேட்டேன்.
“நீ சிறு பையன்; அவர்கள் உலக அனுபவத்தில் கஷ்டப்பட்டவர்கள். அவர்கள் சொன்னவற்றையெல்லாம் நீயும் சொல்வது பொருத்தமன்று, பெண்மயலிற் சிக்கி வருத்தப்பட்டேனென்று அவர்கள் சொல்லலாம்; நீ சொல்லலாமா?” என்றார்."
தக்க நேரங்களில் தக்க ஆலோசனைகள் கிடைப்பதும் கூட இறைவன் கருணைதான். எழுதும் பழக்கத்தையும், சிந்தனையை கருத்தாக வடிக்கும் முறையையும் செம்மை படுத்த தக்க ஆலோசனைகள் உதவுபவை.
உ.வே.சா மேலும் கூறுகின்றார்.
"அவர் சொன்ன தடை அப்போது எனக்கு நன்றாக விளங்கவில்லை. என் பாட்டில் என் அனுபவந்தான் இருக்க வேண்டுமென்பதை நான் தெரிந்துகொள்ளவில்லை. பெண் மயலிற் சிக்குவதற்குரிய பிராயமே வராத நான் அதிற் சிக்கி உழன்று வைராக்கியம் பிறந்தவனைப்போலே பாடுவது பேதமையென்பதை நன்றாக உணரவில்லை. அவர்கள் பாடினார்கள்; நானும் பாடினேன். அவர்கள் பாட்டை அடிக்கடி சொல்லுவது, அதன் ஓசையை ஒட்டி நானும் பாடுவது, அவர்கள் பாட்டிலுள்ள கருத்தைச் சிறிது மாற்றி வைப்பதுஎன்னும் இந்த முயற்சிகளைத் தவிர, என் மனத்தில் யோசித்துக் கற்பனை செய்து ஒரு கருத்தை அமைக்க நான் முயலவில்லை: நான் இயற்றிய செய்யுட்களைப் பல முறை சொல்லிச் சொல்லி இன்புறுவேன்; அவற்றைச் சொல்லும்போது ஒரு வகையான பெருமிதத்தை அடைவேன்."
தனது குறைபாடுகளை நோக்கி எவ்வகையில் தனது படைப்புக்களை அமைத்துக் கொள்ள வேண்டும் என சிந்தித்து தமது படைப்புக்களையும் எழுத்து முயற்சிகளையும் செம்மைப் படுத்திக் கொண்டவர் உ.வே.சா.
தொடரும்..
சுபா
No comments:
Post a Comment