Sunday, August 26, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 16


உ.வே.சாவின் திருமணம், அதனையொட்டி நடைபெற்ற நிகழ்வுகள், அந்த நேரத்தில் அவர் சந்தித்த மாந்தர்கள், காலச்சூழல் போன்றவற்றை விளக்குவதாக அமைகின்றது என் சரித்திரம் நூலில் உள்ள அத்தியாயம் 22.

திருமண ஏற்பாடுகளில் ஊருக்கு ஊர், சமூகத்துக்குச் சமூகம் பல வேற்றுமைகளைக் காண்கின்றோம். இன்றைக்கு நமது வழக்கத்தில் இருக்கின்ற திருமண முறைகளிலிருந்து சில குறிப்பிட்ட விஷயங்களில் வேறுபட்டு இருந்தமையை என் சரித்திரம் நூலில் அறிந்து கொள்ள முடிகின்றது. திருமண ஏற்பாடு, வந்து செல்லும் உறவினர், ஊர்க்காரர்கள், சுற்றத்தார் போக்கு, உணவு உபசார முறைகள், உடைகள், திருமணம் ஆகும் பெண் ஆண் ஆகியோரின் வயது என குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இன்றைக்கு ஏறக்குறைய 180 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தமை இக்குறிப்புக்களால் அறியக் கிடைக்கின்றன.

உ.வே.சா அவர்களுக்குத் திருமணம் நடைபெற்ற சமயம் அவருக்கு வயது 14. மணமகள் மதுராம்பிகைக்கு அகவை எட்டு. இக்காலத்தில் இப்படி ஒரு திருமண வயதை நினைத்துப் பார்க்க முடியுமா?

திருமணம் அல்லது குடும்ப விழாக்கள் என்றாலே உறவினர்களாலும் சுற்றத்தாரினாலும்  ஏற்படும் நன்மையும் தீமையும் கலந்தே தான் வருகின்றன. என்னை விட தமிழக சூழலில் உள்ளவர்கள் நன்கு அனுபவித்து அறிந்த விஷயம் இது.  திருமணத்திற்கு வருவோர் மனம் வருந்தாமல் உபசாரம் செய்து அவர்களது மனம் நிறைய வைத்து அனுப்ப வேண்டும் என்பதில் மணமக்களின் பெற்றோர் முழு கவனம் வைத்து செயல்படுகின்றனர் இக்காலத்தில். ஒவ்வொருவரின் எதிர்பார்ப்புக்கள் மாறுபடுகின்ற  காரணத்தினால் மணமக்களின் பெற்றோர்களுக்குப் பெரும்பாலும் விருந்தினர்களை உபசரித்து அனுப்புவதிலேயே பல சங்கடங்கள் மனக்கஷ்டங்கள் வந்து விடுவதற்கும் வாய்ப்புக்கள் அமைந்து விடுகின்றன.  அதோடு திருமண ஏற்பாடுகளைக் கவனிக்க தனித்தனியாக வேலைக்கு ஆட்களை நியமித்து திருமணமும் அதனை ஒட்டி நிகழும் ஏனைய அனைத்து நிகழ்வுகளும் சிறப்பு குறையாமல் நடைபெற ஏராளமான பணத்தை செலவு செய்ய வேண்டிய நிர்பந்தமும் மணமக்களின் பெற்றோருக்கு அமைந்து விடுகின்றது. இது தமிழக சூழலில் பெற்றோருக்கு ஒதுக்கப்பட முடியாத ஒரு கடமையாகவே அமைந்து விடுகின்றது என்பதில் மறுப்பில்லை.

உ.வெ.சா திருமணம் நடைபெற்ற காலகட்டத்தில் உள்ள நிலமையை இப்படி விளக்குகின்றார்.

"அக்காலத்தில் ஒரு குடும்பத்தில் கல்யாணம் நடப்பதாயிருந்தால் ஒரு மாதத்துக்கு முன்பே சில பந்துக்கள் வந்து விடுவார்கள். ஒரு வாரத்துக்கு முன்பு பலர் வருவார்கள். வந்தவர்கள் தாங்கள் உபசாரம் பெறுவதில் கருத்துடையவர்களாக இருக்கமாட்டார்கள். தங்கள் தங்களால் இயன்ற உதவிகளை வலிந்து செய்வார்கள். பந்தற்கால் நடுவது, பந்தல் போடுவது, பந்தலை அலங்கரிப்பது முதல் கல்யாணம் ஆன பிறகு பந்தல் பிரிக்கும்
வரையில் நடக்கும் காரியங்களில் ஊரினரும் கல்யாணத்திற்காக வந்தவர்களும் கலந்து உதவி புரிவார்கள். கல்யாண வீட்டின் அகலத்திற்குத் தெருவை யடைத்துப் பந்தல் போடுவார்கள். பெண்மணிகள் சமையல் செய்தல், பரிமாறுதல், ஒருவரை யொருவர் அலங்கரித்தல் முதலிய உதவிகளைச் செய்வார்கள். ஆதலின் வேலைகளைச் செய்வதற்காக வேறு மனிதர்களைத் தேடி அலைய வேண்டிய சிரமம் இராது. எல்லோரும் சேர்ந்து ஈடுபடுவதனால் எவரும், “எனக்கு உபசாரம் செய்யவில்லை” என்ற குறை கூற இடமிராது. ஆயினும் சம்பந்திகளுக்கிடையே மனஸ்தாபம் நேர்வது எங்கும் இருந்தது. "

திருமண நிகழ்வின் பணச் செலவு என்று வரும் போது இரு வீட்டாரும் செலவை பிரித்து பங்கிட்டு செய்து கொள்வதைப் பற்றியும் சில விஷயங்களுக்கு மணமகனின் வீட்டாருக்கே பொருட்செலவு அதிகம் என்பது பற்றியும் மேலும் இப்படி குறிப்பிடுகின்றார்.

"அக்காலத்தில் சிலவகையான செலவுகள் குறைந்திருந்தன. முதல்நாள் நிச்சயதாம்பூலம் வழங்கப்பெறும். முதல்நாள் இரவு கல்யாணம் சொல்வதும். மாப்பிள்ளையை அழைப்பதும் அவை காரணமாக நேரும் செலவுகளும் பெரும்பாலும் இல்லை. கல்யாணத்திலும் பந்தற் செலவு, பூரி, தக்ஷணை, மேளம் முதலிய செலவுகளில் பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் பாதிப்பாதி ஏற்றுக்கொள்வார்கள். நான்காம் நாள் நடைபெறும் கிராமப் பிரதக்ஷணச் செலவு முழுவதும் பிள்ளை வீட்டாருடையது. "

திருமண நிகழ்வை விட திருமணத்தில் வழங்கப்படும் உணவை ப்ரதாணமாக வைத்துப் பார்ப்பதுவும் இன்று ஒரு விஷயமாக ஆகிவிட்டது. திருமணத்தில் மணமக்கள் சாப்பிட்டார்களா என்பதை விட வந்திருந்தவர்கள் மனம் வருந்தாமல் குற்றம் குறை சொல்லாத வகையில் விருந்து உபசாரம் இருந்ததா என்பதைக் கவனத்துடன் கவனிக்க வேண்டிய பெறும் பொறுப்பும் தற்காலத்தில் மணமக்களின் பெற்றோர்களுக்குத் தவிர்க்க முடியாத டென்ஷனை ஏற்படுத்துகின்ற விஷயமாக அமைந்து விடுவதை மறுக்க முடியாது.

அக்காலத்தில் விருந்துபசாரம் எப்படி இருந்தது என்பதை உ.வே.சொல்வது வாசித்து அறிந்து கொள்ளும் நமக்கு வித்தியாசமாக இருக்கின்றது.

"காலையில் காப்பி என்பது அக்காலத்தினர் அறியாதது. துவரம் பருப்புப் பொங்கலும் பரங்கிக்காய்க் குழம்புமே காலை ஆகாரம்; கருவடாம், அப்பளம்,  வற்றல்கள் இவை அந்த ஆகாரத்துக்குரிய வியஞ்சனங்கள். சிலர் பழையதும் உண்பதுண்டு. ஆண்டில் இளைய பெண்மணிகளும் அவற்றை உண்பார்கள். பிற்பகலில் இடைவேளைச் சிற்றுண்டி உண்ணும் வழக்கமும் அக்காலத்தில் இல்லை. குழந்தைகள் பசித்தால் அன்னம் உண்பார்கள். மத்தியான விருந்துக்குப் பின் இராத்திரிப் போஜனந்தான். பன்னிரண்டு மணிக்குப் பிறகே
பகற் போஜனம் நடைபெறும். பெரியவர்கள் தாங்கள் செய்ய வேண்டிய பூஜை முதலியவற்றை நிறைவேற்றிய பின்பே இலை போடுவார்கள். எல்லோரும் ஒருங்கே உண்பார்கள். இக்காலத்தைப்போல வந்தவர்கள் தங்கள் தங்கள் மனம் போனபடி எந்த நேரத்திலும் வருவதும் உள்ளே சென்று இலை போடச் செய்து அதிகாரம் பண்ணுவதும் இல்லை. அப்பளம், ஆமவடை, போளி என்பவைகளே அக் காலத்துப் பக்ஷியங்கள். "

உ.வே.சாவின் பிற்காலத்திலேயே திருமணச் சடங்குகளில் பல மாற்றங்கள் நிகழ ஆரம்பித்து விட்டன. இக்காலத்திலோ பணம் இல்லையென்றால் திருமணம் இல்லை எனும் அள்விற்கு நிலமை ஆகிவிட்டது. உதவும் உறவினர்களும் குறைவு. தத்தம் வாழ்க்கையைக் கவனித்துக் கொண்டு இவ்வகை குடும்ப திருமண வைபவங்களுக்கு விருந்தாளிகள் போல வந்து சென்று, தனக்கு கிடைக்க வேண்டிய மரியாதையில் ஒரு சிறிதும் பெற்றுச் செல்ல வேண்டும் என்று நினைக்கும் உறவினர்களின் எண்ணிக்கையே அதிகரித்து விட்டது.  எல்லா சிரமத்திலும் மிக மிக சிரமமான ஒரு சிரமம் ஒன்றுண்டென்றால் அது உறவினர்களின் மனதை திருப்தி செய்வித்து எந்த மனக்கசப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதுதான்.  ஆனால் பல்வேறு புதிய பிரச்சனைகள் திருமணங்களிலேயே முளைக்க ஆரம்பிக்கின்றன. யாரையும் திருப்தி படுத்த முடியாது என்பது உண்மையாக இருக்கின்ற வேளையில் எதற்காக பணத்தைக் கடன் வாங்கி கொட்டி செலவழித்து வாழ்நாளில் பெரும் பகுதியை கடன் சுமையில் கழிக்க வேண்டும் என்னும் கேள்வியே என் மனதில் எழுகின்றது.


தொடரும்...

சுபா

2 comments:

  1. சுட்டிக்கு நன்றி சுபா, இவற்றிலிருந்து குறிப்புகள் எடுத்துக் கொண்டேன். :))) ஏற்கெனவே படிச்சிருந்தாலும் மறந்து விட்டது. :)

    ReplyDelete