Sunday, August 26, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 17



உ.வே.சாவின் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தி அவரது வாழ்க்கைப் பாதையை அமைத்ததாக நான் கருதுவது அவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களைச் சென்றடைந்த அந்த நிகழ்வையேயாகும். இன்று உ.வே.சா அவர்கள் தன் குருநாதர் மேல் கொண்ட ஆரா பற்றினால் எழுதிய நூலின் முதல் பகுதியைத் தமிழ் மரபு அறக்கட்டள சேகரித்தில் இணைத்து வெளியிட்டிருக்கின்றோம். இந்த நன்னாளில் உ.வே.சா அவர்களுக்கு  மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் அறிமுகமான விஷயத்தைப் பற்றி ஆரம்பிப்பதுவும் சாலத் தகும் எனக் கருதுகிறேன்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் அறிமுகமாகும் அத்தியாயத்திற்கு உ.வே.சா ஏக்கமும் நம்பிக்கையும் என பெயரிட்டிருக்கின்றார்.

தமிழில் பல நூல்களைப் பலரிடம் கற்றிருந்தாலும், பலரிடம் பாடங்கேட்டு வந்தாலும் கூட மன நிறைவினை அடைய முடியாத நிலையிலேயே உ.வே.சா அவர்களின் மன அமைப்பு இருந்தது. அவரது தமிழ்க் கல்வி மேலான அளவு கடந்த ஏக்கத்திற்கு நிறைவளிக்கும் வகையில் ஆசிரியர் அமையாத நிலையிலேயே இனி என்ன செய்யப் போகின்றோம் என்ற கவலை அவரை வாட்ட ஆரம்பித்து விட்டதை இவ்வத்தியாயத்தில்  றிப்பிடுகின்றார்.திருமணம் ஆகி சில நாட்கள் கடந்த நிலை.  அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலரிடம் பாடம் கேட்பதுவும் தந்தையாருடன் இணைந்து ராமாயணப் ப்ரசங்கத்தில் ஈடுபடுவது எனவும் இவரது நாட்கள் கழிந்து கொண்டிருந்தன. அச்சமயத்தில் இறையருள் கருணையின் வெளிப்பாடாக  மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பற்றி அறியும் வாய்ப்பு இவருக்கு கிட்டுகின்றது. அந்த நிகழ்வை இப்படி விவரிக்கின்றார்.

"படித்த பழம் புஸ்தகங்களைத் திருப்பித் திருப்பிப் படித்து வந்தேன். ஆனாலும் திருப்தி பிறக்கவில்லை. புதிய முயற்சி செய்வதற்கும் வழியில்லை.இப்படியிருக்கையில் ஒரு நாள் பெரும்புலியூரைச் சார்ந்த அரும்பாவூரிலிருந்த நாட்டாராகிய பெருஞ் செல்வரொருவர் அரியிலூருக்குப் போகும் வழியில் குன்னத்தில் எங்கள் ஜாகையில் தங்கினர். அவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களுடைய நண்பர். தமிழ்ப் பயிற்சி உடையவர். அவர் என்னோடு பேசிவருகையில் எனக்கிருந்த தமிழாசையை உணர்ந்தார் பிள்ளையவர்களுடைய பெருமையை அவர் பலபடியாக விரித்து உரைத்தார். என் தந்தையாரைப் பார்த்து, “தமிழில் இவ்வளவு ஆசையுள்ள உங்கள் குமாரரை வீணாக இச்சிறிய ஊரில் ஏன் வைத்திருக்கிறீர்கள்?
பிள்ளையவர்களிடத்தில் கொண்டு போய் விட்டுவிட்டால் இவர் நன்றாகப் படித்து விருத்திக்கு வருவாரே இப்படியே இவர் இருந்தால் ஏங்கிப் போய் ஒன்றுக்கும் உதவாதவராகி விடுவாரே. இப்படி வைத்திருப்பது எனக்குத் திருப்தியாக இல்லை” என்றார்."

அச்செல்வந்தர் இப்படிக் கூறினாலும் உடனே மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் உ.வே.சாவை மாணவராக ஏற்றுக் கொள்ள சம்மதிப்பாரா என்ற ஐயம்  இவரின் தந்தைக்கு ஏற்படாமலில்லை. அக்காலத்தில் ஒருவரிடம் மாணவராகச் சேர்வது என்பது சுலபமான காரியமல்ல.அதிலும் மிகப் புகழ்பெற்ற ஞானமிக்க வித்துவான்களிடம் மாணாக்கர்களாகச் சேர்வது என்பது மிகச் சிரமமான விஷயம். பல  நூல்களைப் பிழையறக் கற்றிருக்க வேண்டியதும் செய்யுட்களுக்குப் பொருந்தும் வகையில் பொருள் கூறும் திறமை பெற்றிருப்பதும் மிக மிக அவசியமான தகுதிகளாகக் கருதப்பட்டது.

ஆனாலும் அச்செல்வந்தர் மிகுந்த நம்பிக்கையளிக்கும் வார்த்தைகளைச் செல்லி மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களைச் சென்று பார்த்து வரச் சொல்லி தைரியமும் ஊக்கமும் வழங்கியமையால் உ.வே.சாவிற்கும் அவர் தந்தையாருக்கும் நன்மையே நடக்கும் என்ற நம்பிக்கை மனதில் பதிய ஆரம்பித்தது.

வாழ்க்கையில் சில நேரங்களில் நாம் எதிர்பார்க்காத வேளைகளில் சில நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அவ்வகை நிகழ்வுகளில் சில நமது வாழ்க்கைப் பாதையை மாற்றி அமைக்கும் திறம் கொண்டவையாக அமைந்தும் விடுகின்றன. அவ்வகை நிகழ்வில் ஒன்றாக உ.வே.சா வாழ்க்கையில் திருப்பத்தை அமைத்த அந்த தருணத்திற்காக ஏக்கத்துடன் காத்திருக்கலானார் உ.வே.சா.

"இங்ஙனமே வேறு சிலரும் பிள்ளையவர்களுடைய நற்குணத்தையும் புலமைச் சிறப்பையும் எங்களிடம் கூறி வந்தனர். அதனால் எனக்கு அப்புலவர் பிரானைப் பற்றிய தியானமே பெரிதாகி விட்டது, கடவுள் திருவருள் கை கூட்டுமோ என்று ஏங்கலானேன்."



தொடரும்..
சுபா

No comments:

Post a Comment