தமிழ் சமூகத்தில் திருமணம் என்ற பேச்சு எழும் போது பெண்கள் பல வேளைகளின் பரிதாபத்திற்குரிய நிலையில் இருப்பது இக்கால நிலை. வரதட்சனை என்பது வற்புறுத்தியோ அல்லது விரும்பியோ பெண் வீட்டார் கொடுக்கும் நிலை தற்கால நிதர்சனம். குடும்ப கௌரவம், அந்தஸ்து என்பதற்காக வரதட்சனை கொடுப்பது என்பது ஒரு காரணமாகக் கொள்ளப்படுகின்றது. இதில் தமிழகத்தில் வரதட்சனை என்பது சட்டத்திற்குப் புறம்பான ஒன்றாக இருக்கின்ற இக்கால நிலையில் சட்டத்திற்கு வெளியே இவை எழுதப்படாத சட்டங்களாக நடப்பில் இருக்கின்றன.
இன்றைக்கு 180 வருடத்திற்குப் பின்னோக்கிப் பார்த்தோமேயானால் அங்கே நிலை வேறாக இருப்பதைக் காணமுடிகின்றது. இதற்குச் சான்றாக அமைவது என்.சரித்திரம். உ.வே.சாவின் எழுத்திலிருந்தே வாசிப்போம்.
"எனக்குப் பதின்மூன்றாம் பிராயம் நடந்தபோதே என் தந்தையாருக்கு என் விவாகத்தைப்பற்றிய கவலை உண்டாகி விட்டது. அக்காலத்தில் பெண்ணுக்காகப் பிள்ளையைத் தேடும் முயற்சி பெரும்பாலும் இல்லை; பிள்ளைக்காகப் பெண்ணைத் தேடும் முயற்சியே இருந்தது. “பெண்ணுக்கு வயசாகி விட்டதே” என்ற கவலை பெற்றோர்களுக்கு இருப்பதில்லை; “எங்கே இருந்தாவது ஒருவன் வந்து கல்யாணம் பண்ணிக்கொண்டு போவான்” என்ற தைரியம் இருந்தது. பிள்ளையைப் பெற்றவர்களோ தங்கள் பிள்ளைகளுக்குத் தக்க பருவம் வருவதற்கு முன்பே நல்ல இடத்தில் பெண் தேடி விவாகம் செய்விக்கவேண்டுமென்ற கவலையுடன் இருப்பார்கள்.
கல்யாணத்தில் பிள்ளை வீட்டினருக்கே செலவு அதிகம். குன்னத்தில் பெற்ற ஆதரவினால் ஊக்கமடைந்த என்
தந்தையாருக்கு முன்பெல்லாம் குடும்பக்கடனை அடைக்க வேண்டுமென்ற நோக்கம் இருந்து வந்தது. நாளடைவில் அந்த நோக்கம் மாறி, “நிலத்தையேனும் விற்றுக் கடனை அடைத்து விடலாம்; இவனுக்கு
எப்படியாவது கல்யாணத்தைப் பண்ணி வைத்துவிட வேண்டும். வரும் பணத்தை அதற்காகச் சேர்க்க வேண்டும்” என்ற எண்ணமே வலியுற்றது. ஒருபால் பெண்ணைத் தேடும் முயற்சியும், ஒருபால் என் கல்யாணத்துக்குரிய பொருளைத் தேடும் முயற்சியும் நடைபெற்று வந்தன. இந்த முயற்சிகளில்
தந்தையாரோடு என் சிறிய தந்தையாரும் சேர்ந்துகொண்டனர்."
இதே நிலை உ.வே.சாவின் தந்தையாருக்குத் திருமணம் செய்விக்க நிகழ்ந்த போதும் இருந்தது என்பதனை முந்தைய பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருக்கின்றேன். இந்த 200 வருட இடைவெளியில் எப்படி இப்படியானதொரு மாற்றம் சமூகத்தில் நிகழ்ந்தது என்பது யோசிக்க வைக்கின்றது. காலம் காலமாக பெண் வீட்டார் வரதட்சனை தந்தே ஒரு பெண்ணுக்குத் திருமணம் செய்விக்க முடியும் என்ற ஒரு சிந்தனையை இப்போது மக்கள் கொண்டிருக்கின்றனர். இதில் உண்மையில்லை என்பதுவும், சற்று, அதாவது 200 ஆண்டுகளுக்கு முன் வரை கூட இன்னிலையில்லாது ஆண் சமூகம் திருமணச் செலவு அனைத்தும் செய்து ஒரு திருமணம் நடைபெற்றது எனபதனையும் இவ்வகைப் பதிவுகளின் வழி காண முடிகின்றது.
ஒரு திருமணத்திற்கானச் செலவு, அதில் வரதட்சணை போன்றவை காலத்திற்கு காலம் மாறுபட்டு சமூகம் எப்படி மாற்றி அமைத்துக் கொள்கின்றதோ அதற்கு தக்க வகையில் மாற்றம் அடைகின்றது என்று தான் புரிந்து கொள்ள முடிகின்றது. அந்த வகையில் பார்க்கும் போது ஆணும் பெண்ணும் இருவரும் கல்வி கற்று, தத்தமக்கென தொழிலைத் தேர்ந்தெடுத்து அவர்கள் வாழ்க்கைக்கான வருமானத்தைத் தேடிக் கொள்ளும் தகுதி படைத்தவர்களாக ஆகியிருக்கின்ற இக்கால நிலையில் வரதட்சணை என்ற சொல்லே திருமணம் என்னும் விஷயத்திலிருந்து நீக்கி விடவேண்டிய ஒரு சொல் என்பது என் கருத்து.
திருமணம் என்பது இருவர் இணைந்து புதிதாக தங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கும் ஒரு சடங்கு. இதில் ஆயிரம் பேர் வந்து வாழ்த்து சொன்னாலும் ஐந்து பேர் வந்து வாழ்த்து பரிமாறிக் கொண்டாலும் திருமண பந்தத்தை ஏற்றுக் கொண்டு குடும்பத்தை அமைத்து அக்குடும்பத்தை இயன்ற அளவு முறையாக வழி நடத்திச் செல்ல வேண்டியவர்கள் அத்திருமணம் புரிந்து கொள்ளும் ஆணும் பெண்ணுமே என்ற நிலையில் சமூகத்தின் மதிப்பிற்காகவும் போலி ஆடம்பரத்திற்காகவும் லட்சக் கணக்கில் செலவு செய்து பின்னர் கடனில் மூழ்கி இனிமையாக ஆரம்பிக்க வேண்டிய வாழ்க்கையில், வாழ்க்கையின் ஆரம்ப காலம் அனைத்தையும் கடன் தரும் சோகத்தில் கடத்துவதில் என்ன பயன்?
உ.வே.சா. மேலும் குறிப்பிடுகின்றார்.
"விவாகம் பண்ணிக்கொண்டு கிருகஸ்தன் என்று பெயர் வாங்கிக் கொள்வதில் அக்காலத்தில் ஒரு பெரிய கௌரவம் இருந்தது, பதினாறு வயசுடைய ஒருவன் விவாகமாகாமல் பிரமசாரியாக இருந்தால் ஏதோ பெரிய குறையுடையவனைப் போல அக்காலத்தவர் எண்ணினார்கள்."
இந்த நிலையில் இன்று ஓரளவிற்கு மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஆணோ அல்லது பெண்ணோ, ஒருவர் பிரமச்சாரியாக இருந்தால் ஒன்று அவர் சாமியாராக இருக்க வேண்டும் அல்லது ஏதாவது ஒரு பிரச்சனை அந்த மனிதருக்கு உள்ளது என்ற சிந்தனை பொதுவாக மக்கள் மத்தியில் உள்ளது. மற்ற சமூகங்களை விட ஆசிய நாடுகளில் மக்களின் சிந்தனையில் இவ்வகை எண்ணம் ஆழமாக உள்ளது என்பது என் அனுபவத்தில் நான் அறிந்து கொண்ட ஒரு விஷயம். ஒரு திருமணமாக ஆணையோ பெண்ணையோ நமது சமூகம் வருத்தத்துடன் தான் காண்கின்றது. எப்படியாவது ஒரு திருமணத்தைத் செய்து வைத்து விட்டால் அம்மனிதரின் வாழ்க்கையில் முழுமை அடைந்து விட முடியும் என்ற சிந்தனையை அடிப்படையாகக் கொண்டே இந்த நிலை அமைந்திருக்கின்றது. இதற்கு மாற்றாக, ஐரோப்பிய சூழலில் அதிலும் ஜெர்மனியிலும் ப்ரான்ஸிலும் உள்ள சமூகத்தில் பலர் பொதுவாக பல ஆண்டுகள் திருமணம் செய்து கொள்ளாமல் 40க்கும் மேல் 50க்கும் மேல் 60க்கும் மேல் என சிலர் திருமணம் செய்து கொள்கின்றனர். சிலர் திருமணமே செய்து கொள்ளாமல் தங்கள் வாழ்க்கையை ஏதோ ஒரு விஷயத்தில் ஈடுபடுத்திக் கொண்டு வாழ்கின்றனர். இதில் இது தவறு என்றோ இது சரி என்றோ கூறுவது என் நோக்கமன்று. நிலை இப்படி இருக்கின்றது. அந்த வேறு பாட்டினைக் காண்கின்றோம்.
சரி.. இனி உ.வே.சாவின் திருமணத்தை பார்ப்போம்.
பல முயற்சிகளுக்குப் பிறகு உ.வே.சாவிற்கு வரன் அமைந்தது. மாளாபுரத்தில் உள்ள கணபதி ஐயரென்பவரின் மகள் மதுராம்பிகையின் ஜாதகம் பொறுந்தவே பேசி சம்மதம் தெரிவித்து திருமணத்தை ஏற்பாடு செய்தனர் இரு வீட்டாரும். இதில் உ.வே.சா தமிழ் படிக்கின்றார் என்பது ஒரு கூடுதல் சிறப்பாக இருந்தது என்பதும் ஒரு செய்தி.
"நான் தமிழ் படித்து வருகிறேனென்றறிந்து, “எப்படியாவது பையன் பிழைத்துக் கொள்வான்” என்று நம்பிப் பெண்ணைக் கொடுக்கச் சம்மதித்தார்கள். “அந்தப் பிள்ளை பார்க்க லக்ஷணமாயிருக்கிறான்; தலை நிறையக் குடுமி இருக்கிறது; நன்றாகப் பாடுகிறான்” என்று அந்த வீட்டிலிருந்த முதிய பெண்பாலார் திருப்தியடைந்தனர்."
திருமணச் செலவுக்காக கதாகாலட்சேபத்தின் வழி சேர்த்த தொகையொடு சிதம்பரம் உடையார் திருமணக் கொடையாகக் கொடுத்த நூற்றைம்பது ரூபாயும் சேர்த்து திருமண ஏற்பாட்டை செய்தனர்.
தொடரும்..
சுபா
No comments:
Post a Comment