உ.வே.சா அவர்களுக்கு நன்னூல் அறிமுகமானது பற்றி இப்பதிவில் சொல்லலாம் என நினைக்கின்றேன்.
குன்னத்திலிருந்து மீண்டும் குடும்பத்துடன் புறப்பட்டு கார்குடிக்கு வந்து சேர்ந்தனர் உ.வே.சா குடும்பத்தினர். இங்கே இவரகள் ஸ்ரீநிவாசயங்கார் என்ற ஒரு செல்வந்தர் வீட்டில் தங்கிக் கொண்டனர். கார்குடிக்கு வந்த இப்புதியவர்களை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி அவர்களை ஆதரித்தனர் அக்கிரகாரத்து மக்கள்.
இப்போதெல்லாம் இப்படி நடக்குமா என நினைத்துப் பார்க்க முடியவில்லை. புதிதாக ஊருக்கு வருபவர்கள் தடுமாறி நிற்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் பொருளாதாரத்தைக் கணக்கில் கொள்ளாமல் தங்களுக்கு இருப்பதைப் பகிர்ந்து கொண்டு வாழ்ந்த மக்கள், சுயநலமற்ற மக்கள் தமிழகத்தில் இன்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கின்றார்கள் என்பதே ஒரு விஷயம். தற்கால சூழ்நிலையும், மக்களின் அவசர வாழ்க்கை முறையும் இவ்வகை நிலமைகளை உருவாக்க வழி வகுப்பதில்லை என்றே தோன்றுகின்றது.
நன்னூல் மட்டுமன்றி பல பல நூல்களைத் கற்றுத் தேர்ந்தவராகவும் பல நூல்களை தானே சுவடியில் முழுதும் எழுதி வைத்து அவற்றை பிறருக்குப் பாடம் சொல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தவராகவும் கஸ்தூரி ஐயங்கார் திகழ்ந்திருக்கின்றார். கார்குடிக்குச் சென்று கஸ்தூரி ஐயங்காரிடம் பாடம் கேட்கச் சென்றிருந்த சமயத்தில் இவ்வாறு அவர் கைப்பட சுவடிகளில் எழுதி வைத்த இராமாயணம், பாரதம், பாகவதம் போன்ற நூல்களைத் தாம் பார்த்ததைப் பற்றி என் சரித்திரத்தில் உ.வே.சா அவர்கள் குறிப்பிடுகின்றார். குன்னத்தில் இருந்த போது வேறொரு ஆசிரியரிடம் முதலில் மகாலிங்கையர் இலக்கணத்தைப் பாடம் கேட்டதாகக் குறிப்பிடுகின்றார். இந்த மகாலிங்கையர் இலக்கணம் என்பதை நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை. கூகளில் தேடினால் மழவை மகாலிங்கையர் என்ற குறிப்பு கிடைக்கின்றது. இதே தமிழறிஞறின் இலக்கண நூலைத்தான் உ.வே.சா. அவர்கள் குறிப்பிடுகின்றாரோ என்ற ஐயம் தோன்றுகின்றது.
"குன்னத்திலிருந்த போது தஞ்சையிலிருந்து வந்த ஸ்ரீநிவாஸையங்காரென்பவரிடம் மகாலிங்கையர் இலக்கணத்தைப் பாடம் கேட்டேன். நன்னூல் முதலிய இலக்கணங்களைத் தொடர்ந்து கேட்க வேண்டுமென்ற விருப்பம் எனக்கு இருந்து வந்தது. அதனால் முதல் முதல் அவரிடம் நன்னூல் பாடங் கேட்கலானேன். விசாகப் பெருமாளையர் இயற்றிய காண்டிகையுரையை ஒருவாறு பாடம் சொல்லி அதன் கருத்துரை, விசேஷ உரை முதலியவற்றை எனக்குப் பாடம் பண்ணி வைத்துவிட்டார். தினந்தோறும் நன்னூல் முழுவதையும் ஒருமுறை நான் பாராமற் சொல்லி வந்தேன். நிலவில் பொருள்கள் காணப்படுவது போல் நன்னூலிலுள்ள இலக்கணங்கள் எனக்குத் தோற்றின; அந்நூலைச் சிக்கறத் தெளிந்து கொள்ளவில்லை. படித்தவர் யாரேனும் வந்தால் கஸ்தூரி ஐயங்கார் எனக்குப் பாடம் சொல்லிய நன்னூல் சூத்திரங்களையும் உரையையும் என்னைச் சொல்லும்படி செய்வார். அவற்றை நான் ஒப்பிப்பேன். இப்பழக்கத்தால் அவை என் மனத்திற் பின்னும் நன்றாகப் பதிந்தன."
நன்னூலைப் படித்தவர்களை அதுவும் தெளிவுடன் கற்றுத்தேர்ந்தவர்களையே அக்காலத்தில் நல்ல தமிழ் புலவரென்று ஏற்றுக் கொள்ளும் வழக்கம் இருந்துள்ளது. தற்காலத்தில் நன்னூல் என்றால் என்ன என்று கேட்கும் தமிழாசிரியர்கள் நம்மை அதிசயிக்க வைக்கின்றனர்.
பொதுவாகவே இலக்கணத்தை விட இலக்கியம் எப்போதுமே பலரைக் கவர்வதாகவே உள்ளது. மலேசியாவில் இருந்த சமயத்தில் தமிழ் பயிற்சி மேற்கொள்ள நினைத்து நான் மேற்கொண்ட முயற்சியில் எனக்கு இலக்கணத்தை ஓரளவு அறிமுகப் படுத்தி வைத்தவர் வேங்கடம்மாள் என்ற ஒரு ஆசிரியை. காலங்கள் பல கடந்து விட்டாலும் அவரது பெயர் மனதில் நிலைத்து நிறகின்றது. தமிழ் இலக்கணத்தை எனக்கும் ஏனைய சில மாணவர்களுக்கும் சுவைபட விளக்குவார். அவரது தூண்டுதாலால் தான் ஆ.கி.பரந்தாமனாரின் நல்ல தமிழ் எழுத வேண்டுமா நூலை வாங்கிக் கொண்டேன். இந்த நூல் இன்றளவும் என்னிடம் இருக்கின்றது. தமிழ் இலக்கணத்திற்குள் சென்று மேலும் மேலும் அலசுவதற்கு எனக்கு தொழில் முறையில் வாய்ப்பு அமையாது போய்விட்டது என்ற போதிலும் அவ்வப்போது இலக்கணம் தொடர்பான் சில விஷயங்களை வாசித்துத் தெரிந்து கொள்வதில் இன்றளவும் எனக்கு ஆர்வம் இருக்கத்தான் செய்கின்றது.
நன்னூல் அதன் பொருட்டு உ.வே.சா. அவர்கள் மேலும் இப்படி குறிப்பிடுகின்றார்.
"இலக்கியப் பயிற்சியிலேயே பெரும்பாலோருக்குக் கவனம் சென்றதேயன்றி இலக்கணப்பயிற்சியிற் செல்லவில்லை. இந்த நிலையில் நான் நன்னூற் சூத்திரங்களையும் உரையையும் மனனம் பண்ணித் தமிழில் ‘இலக்கண வித்துவான்’ ஆகக்கூடுமென்ற எண்ணம் என்னைக் கண்டோருக்கு உண்டாக்கினேன். அத்துறையில் நான் பின்னும் எவ்வளவோ தெரிந்துகொள்ள வேண்டியதுண்டென்பதை நான் மறக்கவில்லை."
குறிப்பு: இப்பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் 19ம் அத்தியாயத்தில் இடம்பெறுகின்றன.
தொடரும்...
சுபா
No comments:
Post a Comment