Saturday, July 21, 2012

தம்பிரான் வணக்கம் - தமிழ் மொழியின் முதல் அச்சு புத்தகம்

நூல் விமர்சனம்

முனைவர்.க சுபாஷிணி 





தமிழர் நாகரிகம், தமிழர் வரலாறு, ஆவணப் பாதுகாப்பு போன்ற விஷயங்களில் அத்துறையில் தொழில் ரீதியாக ஈடுபடாதவர்களும் கூட ஆர்வம் காட்டிவரும் நிலை சற்றே பெறுகி வருவதை தற்சமயம் காண முடிகின்றது. இவ்வகை ஆர்வத்தின் வழி தோன்றுகின்ற ஆய்வுகளின் வெளிப்பாடுகளாக புதிய கோணங்களில் வரலாற்று விஷயங்களைத் தருகின்ற நூல்களை வாசகர்கள் வாசிக்கும் வாய்ப்பும் பெறுகி வருகின்ற நிலை ஆரோக்கியமான இலக்கியப் போக்காகவே அமைகின்றது.

இந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் பல அரிய நூல்களுடன் புதிய வெளியீடுகளையும் வாங்கிக் கொள்ளும் நல்ல வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அதில் ஒன்று  மோ. நேவிஸ் விக்டோரியா எழுதி பாவை அச்சகத்தின் வெளியீடாக வந்திருக்கும் "தம்பிரான் வணக்கம் - தமிழ் மொழியின் முதல் அச்சு புத்தகம்" என்ற நூல்.

இந்திய மொழிகளிலேயே முதன் முதலில் ஒரு நூல் அச்சு வடிவம் பெற்ற பெருமையை தமிழ் மொழியே பெறுகின்றது. இப்பெருமைக்கு ஆதாரமாக விளங்கும் தம்பிரான் வணக்கம் (Doctrina Christam) 1578ம் ஆண்டில் கொல்லத்தில் வார்க்கப்பட்ட திருத்தமான தமிழ் அச்செழுத்துக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. 14 X 10 செ.மீ  அளவு  காகிதத்தில் பதினாறே பக்கங்கள் கொண்ட சிறிய நூல் இது. சீனாவிலிருந்து அச்சமயம் இறக்குமதி செய்யப்பட்ட காகிதத்தில் ஒரு பக்கம் சிவப்பு வர்ணத்திலும் மறு பக்கம் வர்ணமில்லாமலும் உருவாக்கப்பட்ட கத்தோலிக்க மறை நூல் இது. நூலின் மேல் புறமும்  கீழ்புறமும் ஐரோப்பிய வெள்ளை நிறக் காகிதங்கள் வைத்து தைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நூலின் ஒரு பிரதி மட்டுமே இதுவரை ஆய்வாளர்களின் குறிப்புக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1951 முதல் இந்த நூலின் தற்போது கிடைக்கக்கூடிய ஒரே பிரதி அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழக நூலகத்தின் தொன்மையான நூல் வகையைச் சார்ந்த கிளை நூலகமான ஹௌடன் நூலகத்தில் (Houghton Library) பாதுகாக்கப்பட்டு வருகின்றது.


மோ. நேவிஸ் விக்டோரியாவின் "தம்பிரான் வணக்கம் - தமிழ் மொழியின் முதல் அச்சு புத்தகம்" நூல் 125 பக்கங்களைக் கொண்டது. எளிமையான முகப்புடன் தம்பிரான் வணக்கம் எனும் நூலின் முதல் பக்கத்தையே அட்டைப் படமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது இந்த நூல். "தமிழ் அச்சுத் தந்தை அண்ட்ரிக் அடிகளார்" என்ற நூலை எழுதிய பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் முன்னுரையோடு இன்னூல் வந்திருக்கின்றது என்பதும் கூடுதல் சிறப்பாக அமைகின்றது.

ஓலைச் சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியங்களையும், ஆவணங்களையும், பல்வேறு செய்திகளையும் தேடியெடுத்து அவற்றை பதிப்பிக்கும் தமிழ்ப்பணியில் பல தமிழறிஞர்கள் பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் ஈடுபட்டு பல அரும் பெரும் இலக்கியங்களைச் சாதாரண மக்களும் வாசித்து புரிந்து கொள்ளும் வகை செய்தனர். இப்பணி முற்றுப் பெற்றிடவில்லை என்பதை நாம் அறிவோம். நூல் பதிப்பாக்கத்திற்குப் பல்வேறு தொழில்நுட்ப வாய்ப்புக்கள் அமைந்துள்ள இந்த 21ம் நூற்றாண்டில் தனியார் பலரும், பல்கலைக் கழகங்களும் ஆய்வு நிறுவனங்களும் ஓலைச் சுடி பதிப்புக்களை அச்சுப் பதிப்பாகவும், புதிய தொழில் நுட்பத்தின் துணை கொண்டு நீண்ட காலம் பாதுகாக்கும் வகையினில் பல முயற்சிகளில் ஈடுபட்டும் பதிப்பித்தும் வருகின்றன. ஆரம்பத்தில் ஓலைச் சுவடி பதிப்பாக இருந்த நூல்கள், அச்சுப் பதிப்பாக எளிய வகையில் கையாள்வதற்கு ஏதுவாக வந்த பிறகு இவ்விலக்கியங்கள் பரவலாக வெளியீடு செய்வதற்கு வாய்ப்பாக அமைந்தன.  தமிழறிஞர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் உயர் மட்ட சமூகத்தினருக்கும் மட்டுமே கல்வி என்ற நிலையை மாற்றி எளியோரும் சாதாரண மக்களும் கூட தமிழ் நூல்களை வாசிக்கவும் அவற்றின் பொருள் புரிந்து கொள்ளவும் முடியும் என்ற கல்விப் புரட்சி ஏற்பட அடிப்படைக் காரணமாக அமைந்தது அச்சுப் பதிப்பாக்க முயற்சிகள் என்பது மறுக்க முடியாத கருத்து.

அச்சுக்கலை தமிழகத்தில் எப்போது தோன்றியது? அதற்கான வரவேற்பு எப்படி இருந்தது? யார் இவ்வகை முயற்சிகளில் ஈடுபட்டோர்? எவ்வகை நூல்கள் தமிழ் மொழியில் முதன் முதலாக அச்சு பாதிப்பாக்கம் கண்டன போன்ற கேள்விகளுக்கான விடைகள் தமிழ் கற்ற பலருக்கும் தெரிந்திருக்குமா என்பது ஐயமே! இக்கேள்விகளுக்குப் பதிலளிக்கும் ஒரு நூலாக "தம்பிரான் வணக்கம் - தமிழ் மொழியின் முதல் அச்சு புத்தகம்"  நூல் அமைகின்றது.

வணிகத்தைக் காரணமாகக் கொண்டு அத்துடன் கிறிஸ்துவ சமயம் பரப்பும் மதபோதகர்களாக தமிழகம் வந்த போர்த்துக்கீஸிய கத்தோலிக்க மத குருமார்களும், ஜெர்மனியிலிருந்து டேனீஷ் அரசரின் ஆதரவுடனும், பொருளாதர பலத்துடனும் தமிழகம் வந்த ப்ரோட்டெஸ்டண்ட் மத குருமார்களும் பல குறிப்பிடத்தக்க தமிழ்ப்பணிகளை ஆற்றியுள்ளனர் என்பதை நமக்குக் கிடைக்கின்ற பல்வேறு சரித்திர ஆவணங்கள், நூல்கள், குறிப்புக்களில் காண்கின்றோம். இம்மத குருமார்களின் அப்பணிகளிலேயே சிகரம் வைத்தது போல அமைந்தது அச்சுக் கலையை தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்தி வைத்தமையே எனலாம்.

கத்தோலிக்க, ப்ரோட்டெஸ்டண்ட் கிறிஸ்துவ சமயத்தைத் தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் பரப்புவதையே முக்கியக் குறிக்கோளாகக் கொண்டிருந்த இம்மத குருமார்களுக்கு மொழி எனும் அடிப்படைச் சாதனம் இருந்தால் ஒழிய இப்பணியை எவ்வகையிலும் செய்வது சாத்தியப்படாது என்பதை அறிந்ததன் விளைவாக தமிழ் மொழியைத் தாமே முதலில் கற்றல், பின்னர் அம்மொழியில் மக்களுடன் மக்களாகக் கலந்து உரையாடி, அவர்களுக்கு இப்புதிய மதமான கிறிஸ்துவ மறையில் ஈடுபடுத்துதல் என்ற வகையில் தங்கள் பணிகளைச் செய்தனர். அதில் அச்சுப் பதிப்பாக்கம் முக்கியப் பங்கு வகித்தது என்பது மறுக்க முடியாத ஒன்று. கிறிஸ்துவ மத போதனையைப் பறப்ப வந்த இந்த ஐரோப்பிய மதபோதகர்கள் உள்நாட்டில் தமிழ் சன்றோர்களின் வழக்கத்தில் இருந்த சுவடி படித்தலைக் கறுக் கொண்டதோடு எழுத்தாணி பிடித்து எழுதும் ஆற்றலையும் பழக்கிக் கொண்டனர் என்னும் செய்திகள் தீவிரத்துடனும் ஆர்வத்துடனும் அவர்கள் புதிய இடத்தில் தங்கள் பணிகளைச் செய்யத் தங்களைத் தயார் படுத்திக் கொண்டமையை நன்கு உணர்த்தும்.

தமிழ் மொழியின் முதல் நூலை பற்றி விளக்கும் சில கட்டுரைகளும் முன்னரே வெளிவந்திருக்கின்றன. 2001ம் ஆண்டு செட்டியார் பதிப்பகத்தின் வெளியீடாக வந்த சேலம் தமிழ்நாடனின் "தமிழ் மொழியின் முதல் அச்சுப் புத்தகம்" இவ்வகையிலான ஒரு குறிப்பிடத்தக்க நூல் என்பதில் ஐயமில்லை. அச்சுக்கலை, அச்சுப் பதிப்பு முறைகள், காகிதத்தின்  வரலாறு, காகிதப் பயன்பாடு ஐரோப்பாவிற்கு அறிமுகமான தகவல்கள், அச்சுக்கட்டைகள் உருவாக்கம் எனப் பல விஷயங்களை விளக்கும் ஒரு கருவூலம் இந்தச் சிறிய நூல். இதில் தமிழ் மொழியின் முதல் எழுத்துப் பெயர்ப்பு வடிவ அச்சு நூல் கார்டிலா, தமிழ் மொழியில் வெளிவந்த முதல் அச்சுப் பதிப்பான தம்பிரான் வணக்கம், தமிழ் மொழியில் வெளிவந்த இரண்டாவது அச்சுப் பதிப்பான கிரிசித்யானி வணக்கம், தமிழ் மொழியில் வெளிவந்த மூன்றாவது அச்சுப் பதிப்பான கன்பெசனரியோ பற்றிய விளக்கங்களும் அறிமுக உரைகளும் உள்ளன. முதல் தமிழ் அச்சுப் புத்தகத்துக்கு மூலகாரணமாக இருந்த அன்டிறிக்கி அடிகளாரின் (Hendriq Henriquez) வரலாறும் மேலும் பல தகவல்களும் கூட இடம்பெறுகின்றன. அத்துடன் தம்பிரான் வணக்கம் நூல் முழுதாக இந்த நூலில் இணைக்கப்பட்டுள்ளதோடு அதன் தமிழாக்கமும் வழங்கப்பட்டுள்ளது. இவை மட்டுமல்லாது கிரிசித்தியானி வணக்கம், கன்பெசனரியோ ஆகிய நூல்களின் பக்கங்களும் இணைக்கப் பட்டுள்ளன. அவ்வகையில் இதே கருத்தினை மையமாகக் கொண்டு வெளி வந்திருக்கும் மற்றுமொரு நூலாக மோ. நேவிஸ் விக்டோரியாவின் "தம்பிரான் வணக்கம்-தமிழ் மொழியின் முதல் அச்சு புத்தகம்" விளங்குகின்றது.

சரி நூலைப் பற்றி இனி காண்போம்.

இந்திய நாட்டில் ஐரோப்பியர் வருகையை விளக்கும் தகவல்களைக் கொண்டு இந்த நூல் தொடங்குகின்றது. நூல் ஆசிரியர் 16ம் நூற்றாண்டு ஐரோப்பியர் வருகையை மட்டும் கருத்தில் கொள்ளாமல் 2000ம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த  கிரேக்க இந்திய வர்த்தக தொடர்புகள் தொடர்பான விஷயங்களிலிருந்து தனது பார்வையை செலுத்துகின்றார். இது நீண்ட கால தமிழர்-ஐரோப்பியர் வணிக தொடர்பினைச் சற்று விளக்கும் வகையில் அமைந்து விலக்க வரும் மையக் கருத்துக்குத் தேவையான  அறிமுகமாக விளங்குகின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கிரேக்க-இந்திய வாணிகத் தொடர்புகளுக்குப் பின்னர் 15ம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் கிறிஸ்டபர் கொலம்பஸ், வாஸ்கோடகாமா போன்றோரின் கடல்வழிப் பயணங்கள், அதன் மையைக் குறிக்கோளாக அமைந்திருந்த இந்தியாவைக் கண்டுபிடிக்கும் நோக்கம் போன்றவை வரலாற்றுக் குறிப்புக்களுடன் இம்முதற் பகுதியில் விளக்கப்படுகின்றது.

இதன் தொடர்ச்சியாக வரும் பகுதியில் தமிழ் அச்சுப் புத்தகம் தோன்றிய வரலாறு விளக்கப்படுகின்றது. தூத்துக்குடி கடற்கரை வாழ்  பரதவர்கள் 30,000 பேர் ஒரே சமயத்தில் கிறிஸ்துவ சமயத்தைத் தழுவிய வரலாற்றுச் செய்தியும் அக்கால போர்த்துக்கீஸிய கத்தோலிக்க சமயத்தின் நிலைப்பாடு பற்றிய செய்திகளும் இங்கு சற்றே குறிப்பிடப்படுகின்றன.

தமிழகத்தில் கத்தோலிக்க கிறிஸ்துவ சமயம் வேறூன்ற முக்கிய காரணமாக அமைந்த முத்துக்குளித்துறை பரதவர்கள் சமூகத்தில் அக்கால கட்டத்தில் நிகழ்ந்த சில விஷயங்களை இன்னூலின் மூன்றாவது பகுதியில் நூலாசிரியர் விரிவாக விளக்குகின்றார். கடற்கரை பட்டினமாகிய தூத்துக்குடியில் அராபிய மூர் இன வணிகர்களின் வருகை, வணிக ஆக்கிரமிப்பு, இதனால் பரதவ மக்களிடையே ஏற்பட்ட சங்கடங்கள் இப்பகுதியில் குறிப்பிடப்படுகின்றன. குறிப்பாக ஆசிரியர் இக்கருத்து கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

"கி.பி.1535ம் ஆண்டு, ஒரு நாள் தூத்துக்குடி கடற்கரையில் மாவுப்பணியாரம் விற்றுக் கொண்டிருந்த பரதவப் பெண்ணை மூர் அராபியன் அவமானப்படுத்தி விட்டான். இதனைக் கேள்வியுற்ற அவளது கணவன், அவனோடு சண்டையிட்டான். இந்தச் சண்டையின் போது அந்தப் பரதவன் காதில் அணிந்திருந்த தொங்கட்டான் என்று சொல்லப்படுகின்ற காதணியை அவனது காதோடு மூர் அராபியன் வெட்டி எறிந்து விட்டான்.  இந்தக் கொடுஞ்செயல் தங்கள் சமுதாயத்திற்கு ஏற்பட்ட பெரிய அவமானமாகக் கருதிய பரதவர்கள், அராபிய  மூர்களோடு சண்டயிட்டு, பலரைக் கொன்றனர். இதனால் ஆத்திரமடைந்த மூர்கள் கீழக்கரையிலிருந்தும், காயல்பட்டினத்திலிருந்தும் ஏராளமான ஆயுதங்களுடன் திரண்டுவந்து, பரதர்களோடு போரிட்டு நிறையபேரைக் கொன்றனர். வெட்டி எடுத்துக் கொண்டு வரப்படும் ஒவ்வொரு பரதவனின் தலைக்கும் ஐந்து சிறிய பொற்காசுகள் தருவதாக மூர்கள் வாக்களித்தனர். அவ்வளவுதான்! ஏராளமான பரதவர்களின் தலைகள் வெட்டி எறியப்பட்டன. ஒரு தலைக்கு ஐந்து பொற்காசுகள் என்பது, ஒரு தலைக்கு ஒரு பொற்காசு என்று மலிவாகும் அளவிற்கு ஏராளமான தலைகள் உருண்டோடின".

மூர் அராபியர்களுடன் ஏற்பட்ட இப்பிரச்சனையிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள உதவி நாட வேண்டிய அவசியம் பரதவ மக்களுக்கு ஏற்பட்டமையை இன்னிலையில் கான்கின்றோம். இது மதமாற்றத்திற்கு நல்லதோர் காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்க விஷயம். கேரளாவில் இருந்த டாம் ஜோகுருஸ் என்ற போர்த்துக்கீஸிய குதிரை வியாபாரி பரதவக் குலத் தலைவர்களான பட்டங்கட்டிகளிடம் பேசி அவர்களுக்குப் போர்த்துக்கீஸிய படைகளின் ஆதரவைப் பெற்றுத் தருவதாகக் கூறி அதற்கு பரதவர்கள் கிறிஸ்துவ மறையைத் தழுவ வேண்டும் என்று ஆலோசனை வழங்க கி.பி.1535ம் ஆண்டின் இறுதியில் பட்டங்கட்டிகள் கொச்சின் சென்று அங்கே முதன்மை கத்தோலிக்க குரு மிக்கேல் வாஸ் அடிகளாரிடம் திருமுழுக்கு பெற்று மதம் மாறுகின்றனர்.  வாக்களித்தபடி தூத்துக்குடியின் கடற்கரைப் பகுதிக்கு  ஒரு பெறும் கப்பற்படையை போர்த்துக்கீஸிய படைத் தளபதி அனுப்பிவைத்து மூர் அராபியர்களுடன் போரிட்டு அவர்களை அடக்கி படிப்படியாக அப்பகுதி முழுமையையும் தம் வசமாக்கிக் கொண்டமையை இப்பகுதியில் நூலாசிரியர் நன்கு விளக்குகின்றார். அதே ஆண்டிலும் 1536ம் ஆண்டிலும் தூத்துக்குடியின் கடற்கரைப் பகுதி இந்து சமய பரதவர்கள் 30,000 பேர் கிறிஸ்துவ சமயத்தைத் தழுவினர் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாக அமைகின்றது.

இத்தகவல்களோடு பரதவ மக்கள் கிறிஸ்துவ மதத்தினைத்  தழுவிய போது அவர்களுக்கு வழங்கப்பட்ட பெயர் மாற்றங்களைப் பற்றிய குறிப்புக்களையும் இப்பகுதியில் நூலாசிரியர் சில சான்றுகளோடு விளக்குகின்றார். இவை வாசகர்களுக்கு இச்சான்றுகளைக் காணவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுவதாக அமைந்துள்ளது.


அண்டிரிக்கி அடிகளாரைப் பற்றி விரிவான குறிப்புக்களுடன் ஒரு பகுதியை நூலாசிரியர் அமைத்திருக்கின்றார்.. தம்பிரான் வணக்கம் என்ற நூலை 1578ம் ஆண்டில் அச்சிட்டு வெளியிட்ட இவரைப் பற்றிய குறிப்புக்கள் இவரது சமய ஈடுபாடு, மத குருவாக போர்த்துக்கீஸிய கொம்பெய்ரோ நகரில் நிலைப்படுத்தப்பட்ட தகவல்கள், இவரது தமிழக வருகை, முதன்மைக்குருவாக தூத்துக்குடி முத்துக்குளித்துறையில் தேர்ந்தெடுக்கப்பட்டமை ஆகிய விஷயங்களை இப்பகுதியில் காண முடிகின்றது. முதலில் தமிழகம் வந்தபோது இரண்டு வார்த்தைகளுக்கு மேல் அறியாதிருந்த அண்டிரிக்கி  அடிகளார் பின்னர் தமிழ் இலக்கணத்தை தீவிரத்துடன் கற்று மிகக்குறுகிய காலத்தில் தமிழ் பேசவும் எழுதவும் கற்றுக் கொண்ட விதம் பற்றி ஆசிரியர் குறிப்பிடுகின்றார். இப்பகுதியில் மிக விரிவாக தமிழ் அச்சுப் புத்தகம் தயாரிக்க ஏற்பட்ட தேவைகள், அச்சு எழுத்து தயாரிப்புப் பணிகள் பற்றிய விஷயங்களும் விளக்கப்படுகின்றன.

இதனை அடுத்து தம்பிரான் வணக்கம் நூல் உருவாக்கம், அதன் வடிவமைப்பு, அதனை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட எழுத்துக்கள், காகிதங்கள், பற்றியும் நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். இந்த நூலின் பிரதி ரோமில் உள்ள இயேசு சபைக்கு அனுப்பப்பட்ட விஷயமும் பின்னர் ஒவ்வொரு இடமாக மாறி இப்போது கிடைக்கும் ஒரே ஒரு பிரதி பற்றியும் இப்பகுதியில் விரிவாக, வாசிப்போர் புரிந்து கொள்ளும் வகையில் நூலாசிரியர் விபரங்களைத் தருகின்றார். இதன் தொடர்ச்சியாக தம்பிரான் வணக்கம் முழு நூலும் இந்த நூலில் இணைக்கப்படிருப்பதும் ஒரு சிறப்பு. முதல் பக்கத்தை அலங்கரிக்கும் கொல்லம் தமிழ் எழுத்து அச்சுப் பதிப்புடன் கீழ்க்காணும் வாசகம் முதல் பக்கத்தில் இடம்பெறுகின்றது.
"இயேசு சபையைச் சேர்ந்த அண்டிரிக்கி பாதிரியார் தமிழ்லே பிரித்தெழுதின தம்பிரான் வணக்கம்."

தம்பிரான் வணக்கம் நூலில் உள்ள தமிழ் எழுத்துக்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்படுவதை தவிர்க்க முடியாவிட்டாலும் கூட, கூர்மையாக கவனித்து வாசிக்க முயற்சிக்கும் போது பல சொற்களை  வாசித்து புரிந்து கொள்ள முடிகின்றது. முழு நூலையும் மெத்த பிரயத்தனத்துடன் வாசகர்கள் புரிந்து கொள்ள முயற்சி எடுக்க தேவையிராதவாறு நூலாசிரியர் இப்பதினாறு பக்கங்களுக்கும் அதனை இக்காலத் தமிழில் வழங்கியுள்ளார். இது நூலை பிழையின்றி வாசித்து தெரிந்து கொள்ள பெரிதும் உதவுவதாக அமைந்துள்ளது எனலாம்.

இதே நூலில்,  தம்பிரான் வணக்கம் நூல், அதன் தற்கால தமிழ் வடிவம் ஆகிய பகுதிகளுக்குப் பிறகு அடுத்ததாக அமைவது தமிழின் முதல் ஒலி வடிவ நூல் என அழைக்கப்படும் கார்டிலா.

திரு.மோ.நேவிஸ் விக்டோரியா கார்டிலா நூலைப் பற்றிய விளக்கத்தையும் அதன் முழு பிரதியையும் இதே நூலில் வழங்கியுள்ளார். கி.பி. 1554ல் வெளிவந்த இந்த நூல் 40 பக்கங்கள் கொண்டது. தமிழ் எழுத்துக்கள் இல்லாமல், தமிழ் மொழி ரோமன்லிபியில் அச்சிடப்பட்ட வகையில் அமைந்த நூல் கார்டிலா.  கர்டிலாவின் ஒவ்வொரு வரியும் மூன்று முறை வருகின்றன. நடுவரியானது சற்று தடிமனான கருப்பு நிறத்திலிருக்கின்றது. இது தமிழ் வார்த்தைகள் ரோமன் லிபியில் வழக்கப்பட்டிருக்கும் பகுதி.  இந்த தடிமனான வரிக்கு மேலே உள்ள சிவப்பு நிறத்திலான முதல் வரி அதன் அர்த்தத்தை ரோமன் லிபியில் விளக்குகின்றது. மூன்றாவதாக கீழே உள்ள சிறிய கருப்பு  நிறத்தில் அமைந்த வரி போர்த்துக்கீசிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டுள்ளது. நூலின் முழு வடிவத்தையும் பார்க்கும் போது வாசிப்போரை வியக்க வைப்பதாக இவ்வமைப்பு உள்ளன.  இதன் தொடர்ச்சியாக கார்டிலாவின் முமு மொழி பெயர்ப்பையும் நூலாசிரியர் வழங்கியிருக்கின்றார். இது நூலை தமிழில் புரிந்து கொள்ள விழைவோருக்கு உதவுவதாக அமைந்துள்ளது.

தமிழ் மொழியின் முதல் அச்சுப் புத்தகமான தம்பிரான் வணக்கத்தையும், தமிழ் மொழி ஒலி வடிவத்தில் ரோமன் லிபியில் உருவாக்கப்பட்ட கார்டிலாவையும் சேர்த்து இந்த நூலில் ஆசிரியர் வழங்கியிருக்கின்றார். வெறும் நூல் அறிமுகம் என்றில்லாமல் இன்னூல்கள் உருவாக்கத்திற்கான அடிப்படைக் காரணங்கள், அதற்கான தேவை,  இதனை உருவாக்க நடைபெற்ற முயற்சிகள் அதில் அண்டிரிக்கி  அடிகளாரின் பங்கு, போர்த்துக்கீஸிய இயேசு சபையினரின் தமிழ் மற்றும் சமய நடவடிக்கைகள், தூத்துக்குடி முத்துக்குளித்துறை பரதவ மக்களின் 15ம் 16ம் நூற்றாண்டு வரலாற்றுச் செய்திகள் என  பலவகையில் விளக்கம் தருவதாக இந்த நூல் அமைந்திருக்கின்றது. நூலாசிரியர் இன்னூலில் கையாண்டுள்ள மொழி நடை மிக எளிதாக நூலின் சாரத்தைப் புரிந்து கொள்ள வைக்கின்றது. தமிழ் அச்சுப்பதிப்புகளில் ஆர்வம் உள்ளோர் மட்டுமன்றி கல்லூரி மாணவர்களும் வாங்கிப் படித்து பயன்பெற வேண்டிய ஒரு நூல் இது எனத் தயங்காமல் கூறலாம்.

குறிப்பு: இக்கட்டுரை ஜூன் 2012 கணையாழி இதழில் பிரசுரமானது.

வெளியீடு: பாவை அச்சகம்
முதற் பதிப்பு: நவம்பர் 2011
விலை ரூ:80.00

No comments:

Post a Comment