Monday, July 2, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 7


கல்லூரி ஆசிரியர்களும் முனைவர் பட்டத்தைப் பெற்ற தமிழ் பேராசிரியர் பலரும் கூட தங்கள் வகுப்பு போதனைக்கு மட்டுமே தேவைப்படும் நூல்களை மட்டும் கற்கும் நிலையைத்தான் பெரும்பாலும் இப்போதெல்லாம் காண்கின்றோம். முனைவர் பட்ட ஆராய்ச்சிக்குக் கூட தேர்ந்தெடுத்த ஒரு சில நூல்களில் மட்டும் கவனம் செலுத்தி அது முடிந்து பட்டம் கிடைத்த பிறகு புதிய நூல்களைத் தேடி எடுத்து தொட்டுப் பார்க்கும் ஆர்வம் குறைந்தவர்கள் பலர் இருப்பதும் நம் அனுபவத்தில் சந்திக்கின்ற நிகழ்வுகளுள் அடங்குகின்றது. இது சமூகத்தில் ஏற்பட்டுள்ள ஒரு நோயாகத்தான் என் மனதிற்குப் படுகின்றது.

கல்வி.. கல்வியை நோக்கிய தேடல்.. என்பவை ஆத்மார்த்தமானவை என்ற எண்ணம் மறைந்து வேலைக்கும் ஊதியத்துக்கும் மட்டும் தேவைப்படும் கருவியாக மட்டும் நினைக்குமொரு நிலையைப் பொதுவாகவேப் காண்கின்றோம். எத்தனை இல்லங்களில் புத்தக அலமாரி இருக்கின்றது? அதில் எத்தனை நூல்கள் இருக்கின்றன? அவற்றில் எத்தனை தரமான சிந்தனையை வளர்க்கும் நூல்கள் இருக்கின்றன, குடும்பத்தில் எத்தனை பேர் அந்தப் புத்தகங்களை எடுத்து வாசிக்கின்றனர் என்று கேள்வி கேட்க ஆரம்பித்தால் ஒரு சிலரே புத்தகங்களை விரும்பும் மனிதர்களாக இருப்பதை தெரிந்து கொள்ள முடிகின்றது.

இப்போதெல்லாம் கணினி, இணையமயம்..என்ற வசதிகள் வந்து விட்ட நிலையில் இணையத்திலேயே நிறைய வாசிக்கலாம்... மின்னூல்கள், மின்னிதழ்கள் பல வந்து விட்டன என்ற போதிலும் கணினிக்குச் சென்றாலும் அங்கும் நம் தமிழ் மக்களின் சிந்தனையைப் பெரிதும் ஆக்கிரமித்திருப்பதாக இருப்பது சினிமாவும் அது சம்பந்தமான விஷயங்களுமாகத்தான் அமைகின்றன என்னும் கூற்றை புறக்கணிக்க முடியாது. இந்த சிந்தனையோடு என் சரித்திரத்தை நோக்கும் போது, அதில் உ.வே.சா அவர்கள், அவர் வாழ்க்கையில் சந்தித்த சில மனிதர்களைப் பற்றி குறிப்பிடும் போது அவர்களின் செயல்கள் நம் மனதைத் தொட்டுச் சென்று, வாசித்து பல மணி நேரங்களுக்குப் பின்னும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவே அமைந்து விடுகின்றன. அந்த வகையில் சடகோபையங்காரின் குணங்கள் நம் மனதில் அசைவினை ஏற்படுத்துவதால் அவரைப் பற்றியும் ஒரு பதிவில் குறிப்பிட வேண்டும் என்று கருதியதால் இந்தப் பதிவு அவரை விளக்குவதாக அமைகின்றது.

சடகோபையங்கார் வித்துவான்கள் பரம்பரையில் பிறந்தவர். வழிவழியாக கல்வி என்பது ஆழப்பதிந்த சூழலில் வளர்ந்தவர். அவரது பரம்பரையினர் அனைவரும் சண்பக மன்னார் என்ற குடிப்பெயரைத் தாங்கியவர்கள். இந்தக் குடிப்பெயர் இன்றும் வழக்கில் இருக்கின்றதா என்பது தெரியவில்லை.அவர் பரம்பரையில் சிலர் பாலஸரஸ்வதி, பாலகவி என்ற பட்டங்களையும் பெற்று சிறப்புடன் வாழ்ந்தவர்கள்.

சடகோபையங்கார் தமிழும் சங்கீதமும் ஒரே தரத்தில் வாய்க்கப் பெற்றவர். ஒவ்வொரு நாளும் காலை ஐந்து மணிக்கே எழுந்து தனது காலைக்கடன்களை முடித்து பின்னர் தன் வீட்டின் திண்ணையின் மேல் கோடியில் புத்தகங்களோடு சென்று அமர்ந்து கொள்வாராம். எந்த நூலையாவது படித்து மகிழ்ந்தவாறே இருப்பாராம். சாலையில் செல்பவர்கள் அவர் திண்ணையில் அமர்ந்திருப்பதைப் பார்த்து அவருக்கு வணக்கம் சொல்லிச் செல்வார்களாம். சிலர் அவரோடு வந்து அமர்ந்து கொள்வார்களாம். உடனே சடகோபையங்கார் அவர்களுக்கு ஏதாகினும் ஒரு தமிழ்ப்பாடலைச் சொல்ல ஆரம்பித்து விடுவாராம். பாடம் சொல்வது என்பதில் அவருக்கு அவ்வளவு பிரியமாம். பாடலைச் சொல்லி அதற்கு நயமாகப் பொருளையும் சொல்லி, வந்தவர்களை மகிழ்ச்சிப் படுத்துவாராம்.

இவரிடம் பாடம் கேட்கவென்றே பலர் இவரை வந்து பார்த்து கேட்டு இன்புற்றுச் செல்வார்களாம். செவ்வைச் சூடுவார் பாகவதத்திலும் அத்வைத சாஸ்திரத்திலும் கம்பராமாயணத்திலும் அவருக்கு ஆராய்ச்சியும் ஞானமும் அதிகம் என்று உ.வே.சா அவர்கள் குறிப்பிடுகின்றார். அந்த நூல்களிலுள்ள செய்யுட்களைச் சொல்லி மணிக்கணக்காக வியாக்கியாணம் சொல்லிக் கொண்டேயிருப்பாராம். இவரது பாடங்களைக் கேட்பவர்கள் நேரம் போகாமல் ஏதோ இனிய சங்கீத கச்சேரியைக் கேட்பது போல மயங்கி கேட்டு இன்புற்றிருப்பார்களாம்.

அவ்வப்போது வந்து பாடம் கேட்டுச் செல்வது மட்டுமல்லாலம் ஒரு சில மாணவர்களுக்கு முறையாகவும் சடகோபையங்கார் பாடம் சொல்லிக் கொண்டிருந்தாராம். அவரைப் பற்றிச் சொல்கையில் உ.வே.சா அவர்கள் இப்படிக் குறிப்பிடுகின்றார்.."தவறாமல் திண்ணையில் உட்கார்ந்து வந்தவர்களுக்குப் பாடஞ் சொல்வதில் அவருக்கு சலிப்பே உண்டாவதில்லை. "கம்பத்தை வைத்துக் கொண்டாவது பாடஞ் சொல்ல வேண்டும். கேட்பவனை மாத்திரம் உத்தேசித்துச் சொல்லக்கூடாது. பாடஞ் சொல்வதனால் உண்டாகும் முதல் லாபம் நம்முடையது. பாடம் சொல்லச் சொல்ல நம் அறிவு உரம்பெறும்" என்பார்.

ஒரு நாள் அவர் தம் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து யாருக்கோ நெடு நேரம் பாடஞ் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது நாங்கள் குடியிருந்தது எதிர் வீடு. வழக்கமான குரலில் அவர் பாடஞ் சொல்லாமல் சற்று இரைந்து சொல்லிக் கொண்டிருந்தார். இடையே சிறிதும் தடையில்லாமல் அவர் சொல்லி வந்த போது எங்கள் வீட்டுக்குள் இருந்த எனக்கு ஒரு சந்தேகம் உண்டாயிற்று. இவர் யாருக்குப் பாடஞ் சொல்கின்றார்? கேட்பவர் நடுவில் சந்தேகம் ஒன்றும் கேட்கமாட்டாரா? என்று எண்ணி எட்டிப் பார்த்தேன். எனக்குப் பெரிய ஆச்சரியம் உண்டாயிற்று. கோபாலசாமி ஐயங்காரென்ற ஒருவர் சடகோபையங்காருக்கு முன் உட்கார்ந்திருந்தார். உட்கார்ந்திருந்தாரென்று மட்டும் சொல்லலாமேயன்றிப் பாடங் கேட்டாரென்று சொல்ல இயலாது. அவர் முழுச் செவிடர். சடகோபையங்காருக்கும் அந்த விஷயம் தெரியும். அப்போது "கம்பத்தை வைத்துக் கொண்டாவது பாடஞ் சொல்ல வேண்டும்" என்று அவர் சொன்னது எனக்கு ஞாபகம் வந்தது. கம்பமாயிருந்தாலென்ன? செவிடராயிருந்தாலென்ன?"

பிறர் தெரிந்து கொள்ள பாடம் சொல்கின்றோம் என்பதில் சொல்கின்ற நாமும் தெரிந்து கொள்கின்றோம் என்ற உண்மையை உணர்ந்து அதனை செயல்படுத்தி பாடம் சொல்லி இன்பங் கண்டவர் சடகோபையங்கார். எழுதும் போது பல விஷயங்களைச் சிந்திக்கின்றோம். வாசிக்கின்றோம் என்பதால் வாசிக்கின்றவர்கள் மட்டும் பலன் அடைகின்றார்கள் என்றில்லாது சொல்லும் அல்லது எழுதும் நாமும் கற்கின்றோம் என்பதில் பலனடைந்தவர்களாக நாமும் ஆகின்றோம் என்பதும் மகிழ்ச்சியான ஒரு விஷயமல்லவா?

குறிப்பு: இத்தகவல்களை 14ம் அத்தியாயத்தில் காணலாம்.


தொடரும்..

அன்புடன்
சுபா

No comments:

Post a Comment