Sunday, July 1, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 6


உ.வே.சா அவர்களின் வாழ்க்கையின் இளமைப் பருவத்தில் சங்கீதமும் தமிழும் சேர்ந்தே அமைந்திருந்தன. பிற்காலத்தில் தமிழ் அவரை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்ட போதிலும் ஆரம்ப கால வாழ்க்கையில் தமிழையும் சங்கீதத்தையும் இரண்டு முக்கிய அங்கங்களாகவே உ.வே.சா அவர்களின் வாழ்க்கையில் அமைந்திருந்தன. ஆகினும் தமிழையும் சங்கீதத்தையும் ஒரே நிலையில் வைப்பது என்பதை விட ஒன்று மற்றொன்றிற்குத் துணை செய்வதாக அமைந்தது என்று குறிப்பிடுவதே சாலப் பொருந்தும்

தமிழும் சங்கீதமும் கற்று மகன் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற மாபெரும் சிந்தனையுடனேயே இவரது அப்பா பல ஆசிரியர்களிடம் இவரை அழைத்துச் சென்று கல்வி அமைத்துத் தந்தார் என்பதை என் சரித்திரத்திரம் நூலின் முதற் பகுதிகள் அனைத்திலும் காண முடிகின்றது. அளப்பறிய முயற்சி அது. அந்த முயற்சிகளில் ஒன்றே சடகோபையங்காரிடம் இவரை அழைத்துச் சென்றதும் அவரது மாணவராக இவரைச் சேர்ப்பித்ததும் ஆகும். இதனை ஒட்டி உ.வே.சா அவர்கள் தனது இளமை பருவத்து சிந்தனையை நூலின் 13ம் அத்தியாயத்தில் குறிப்பிடுகின்றார்.

"என் பிதா சடகோபையங்காரிடம் என்னை ஒப்பித்ததற்கு முக்கியமான காரணம் சங்கீதத்தில் எனக்கு நல்ல பழக்கம் உண்டாக வேண்டுமென்றும், அதற்கு உதவியாகத் தமிழறிவு பயன்படுமென்றும் எண்ணியதே. ஆனால் என் விஷயத்தில் அந்த முறை மாறி நின்றது. தமிழில் அதிகப் பழக்கமும் அதற்கு உபகாரப்படும் வகையில் சங்கீதமும் இருப்பதையே நான் விரும்பினேன். சடகோபையங்காரிடம் என்று நான் மாணாக்கனாகப் புகுந்தேனோ அன்றே தமிழ்த் தாயின் அருட்பரப்பிற் புகுந்தவனானேன். எனக்குத் தமிழில் சுவை உண்டாகும் வண்ணம் கற்பித்த முதற் குரு சடகோபையங்காரே. பொம்மை (பாவை)களைக் காட்டிக் குழந்தைகளைக் கவர்வது போலத் தமிழ்ச் செய்யுட்களின் நயத்தை எடுத்துக் காட்டி என் உள்ளத்துக்குள் அந்த இளம்பருவத்தில் தமிழ் விதையை விதைத்தவர் அவரே. "

தற்கால கல்வி முறையைப் பற்றிய பல்வேறு கருத்துக்கள் நம்மிடையே உலவுகின்றன. கல்வி முறை என்பது எப்படிப்பட்டதாகினும் படிக்கின்ற மாணாக்கர் உள்ளத்திலே முதலில் கல்வியின் பால் தீராத காதல் வரவேண்டும். இந்த அதிதீவிர பற்றும் மோகமும் மாணாக்கரை மேலும் மேலும் ஆய்வுப் பாதையில் சென்று அவர்களை அறிவினைத் தேடிச் சென்று அதன் வழி கல்வியைப் பெற்றவர்களாக உருவாக்கும். தற்கால சூழலில் பெற்றோரும் சமூகமும் ஒன்றாக இணைந்து பரீட்சையில் தேர்ச்சி பெறுதல் ஒன்றை மட்டுமே அடிப்படையாக வைத்து மனனம் செய்து ஒப்புவிக்கும் கருவிகளைப் படைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதைப் பரவலாக காண்கின்றோம். உண்மையிலேயே அது மாணவரின் கல்வித் தேடலுக்குப் பாதையை அமைத்துத் தருகின்றதா என்றால் இல்லை என்பதே என் கருத்தாக அமைகின்றது.

உ.வே.சா ஒரு நல்ல மாணவர். மற்ற மாணவர்கள் உதாரணமாக எற்றுக் கொண்டு கல்வியில் முன்னேற இவர் ஒரு நல்லதொரு வழிகாட்டி.

கல்வி.. கல்வி.. தமிழ்க் கல்வி என்று தேடியவர். ஆன்மாவின் தேடலாக அது அவருக்கு அமைந்தது. சடகோபயைங்கார் உ.வே.சா.அவர்களின் உள்ளத்தில் தமிழ் விதையை விதைத்தார். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களோ அத்தேடலை செம்மைப் படுத்தி உ.வே.சாவின் தமிழ்கல்வியின் அடிப்படையை அமைத்துக் கொடுத்தார்.

தொடரும்...
சுபா

No comments:

Post a Comment