Thursday, June 14, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 5


பகுதி 5

சாமி மலையில் இருக்கின்ற கடவுள் நாமிநாதன். அந்த மூர்த்தியின் பெயரை நினைத்து இடப்பட்ட பெயரே உ-வே.சா அவர்களுக்கு வாய்த்தது, இவரை அனைவரும் சாமா என்றே பெயரைச் சுருக்கி அழைப்பார்களாம். ஐந்து வயதான போது உ.வே.சா அவர்களுக்கு வித்தியாப்பியாசம் செய்து வைத்தனர் இவர் குடும்பத்தினர். இவரது பாட்டனார் அரிச்சுவடி சொல்லி கல்வியைத் தொடக்கி வைத்தார். இப்படித்தான் இவரது கல்வி முதலில் தொடங்கியது.

இன்று நாம் காண்கின்ற பள்ளிக்கூடம் என்பதற்கும் இன்றைக்கு ஏறக்குறைய 180 வருஷங்களுக்கு முன்னர் தமிழகத்தில் நிலவிய கிராமத்துப் பள்ளிக்கூடம் என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு அல்லவா? அந்த வேறுபாட்டினை உ.வே.சா அவர்களின் பதிவுகளின் வழியாகவே தெரிந்து கொள்வதும் சுவையான ஒரு அனுபவமாக எனக்குத் தெரிகின்றது.

என் சரித்திரம் நூலில் 10ம் அத்தியாயத்தில் திண்ணைப் பள்ளிக்கூடம் என்பதைப் பற்றி கொஞ்சம் விளக்கம் கிடைக்கின்றது. காகிதப் பயன்பாடு புழக்கத்திற்கு வராத காலமது. பிற்காலத்திலாவது சிலேட் பயன்படுத்தி மாணவர்கள் எழுத்துப் பயிற்சி செய்வது வழக்கில் இருந்தது. ஆனால் உ.வே.சாவின் இளமைக் கால்த்தில் எழுத்துப் பயிற்சி என்பது மணலில் எழுதி பயிற்சி செய்வது தான். பிறகு மாணவர்கள் எழுத்தாணி பிடிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்டு ஓலைகளில் எழுத வேண்டும். அதிலும் ஓலைச்சுவடியில் பயிற்சி என்பது மாணவர்களின் சுய முயற்சியைப் பொறுத்தது.

திண்ணைப் பள்ளிக் கூடத்தில் உ.வே.சா முதலில் நாராயணையர் என்பரிடம் தான் கல்வி கற்றிருக்கின்றார். பள்ளிக்கூடத்தில் படிக்கும் பாடங்கள் எண்சுவடி, அரிச்சுவடி ஆகியவையே. இந்தப் பள்ளிக்கூடத்தில் அப்போது அக்கிரகாரத்துப் பிள்ளைகளும் குடியானத் தெருப் பிள்ளைகளும் படித்திருக்கின்றனர்.

இந்த நாரயணையர் பற்றி இன்னூலில் வரும் விளக்கம் இந்த ஆசிரியரை நேரில் மணக்கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றது. ஏறக்குறைய முப்பத்தைந்து வயது உடைய அழகான வடிவம் உடையவர். ஆனாலும் உ.வே.சாவிற்கும் மற்ற பிள்ளைகளுக்கும் இவரைக் கண்டாலே பயம் உண்டாகுமாம். எல்லாம் நாராயணையரின் பிரம்பு செய்யும் மாயம் தான். உ.வே.சா சொல்கின்றார், “பிரம்பை அதிகமாக அவர் உபயோகிப்பார். அவரை நினைக்கும் போதெல்லாம் அவருடைய பிரம்படிதான் ஞாபகம் வருகிறது”. அடித்தால் மாணவர்கள் பணிவார்கள். பயம் கல்வியை வளர்க்கும் என்ற கருத்து மேலோங்கியிருந்த காலம் அது!.

நாராயணையரின் அடியைப் பற்றி விளக்கும் போது ஒரு சம்பவத்தை உ.வே.சா நினைவு கூர்கின்றார். பிச்சுவைய்யர் என்ற பணக்கார வீட்டுப் பையன் ஒருவன்.. அதிகம் குரும்பு செய்பவன். பணக்காரர் என்பதால் கொஞ்சம் கூடுதல் அகங்காரமும் கர்வமும் உள்ளவன். அவனை அடக்கி ஆள்வது நாராயணையருக்கு முடியாத ஒன்றாகிப் போனது.அவருடைய பிரம்பு அவனிடம் எவ்வளவு வேலை செய்தும் பலன் கிடைக்கவில்லை.அதிக கடுமையான தண்டனைகளை விதித்திருக்கின்றார். ஆனால் பிச்சு அடங்கவில்லை.பின்னர் வாத்தியார் பிச்சுவை பள்ளிக்கூடத்தை விட்டே நீக்கிவிட்டாராம்.

இதனை உ.வே.சா அவர்கள் குறிப்பிடும் போது " அவன் பெற்ற விடுதலை நமக்கும் கிடைக்காதா? என்று விரும்பிய பிள்ளைகளும் உண்டு. பள்ளிக்கூடத் தொல்லையிலிருந்து நீங்கிய பிச்சு பிறகு படிப்பதைப் பற்றி நினைப்பதே இல்லை. பிற்காலத்தில் கையெழுத்துப் போடுவதைத் தவிர வேறு ஒன்றும் எழுதவோ படிக்கவோ இயலாதவனாக இருந்தான். பணக்காரப் பிச்சுவையருக்குப் படிப்பிருந்தால் என்னா? இராவிட்டால் என்ன?" என்று நயமாகக் கூறுகின்றார்.

இந்தத் திண்ணை பள்ளிக்கூடத்தில் சட்டாம் பிள்ளையாக நியமனமாக ஒரு மாணவர் கெட்டிக்காரராகவும் பலசாலியாகவும் இருக்க வேண்டியது முக்கியம். புத்திசாலியாக இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை.ஆனால் பலசாலியாக இருக்க வேண்டியது அவசியம்.  வாத்தியார் இல்லாத நேரத்தில் அவருக்குப் பிரதினிதியாக இருந்து மாணவர்களை அடக்கி ஆள்வது, பாடம் ஒப்புவிக்கச் சொல்லி கேட்பது போன்றவை இந்த சட்டாம்பிள்ளையின் வேலைகளில் அடங்கும். வாத்தியாரைக் கண்டு அடங்கி ஒடுங்கி நடந்து கொள்வது போலவே இந்த சட்டாம்பிள்ளைகளுக்கும் பிற மாணவர்கள் அடங்கி பயந்து நடந்து கொள்வது அவசியம்.

உ.வே.சா இந்தச் சட்டாம்பிள்ளைகளைப் பற்றி குறிப்பிடும் போது இப்படிச் சொல்கின்றார். " சில பிள்ளைகள் அவனுக்கு வேண்டிய திண்பண்டங்களைக் கொடுத்துத் தம் வசப்படுத்தி உபாத்தியாயருடைய பிரியத்தையும் அவன் மூலமாகச் சம்பாதிப்பார்கள். சில சமயங்களில் உபாத்தியாயரது கடுமையைக் காட்டிலும் சட்டாம் பிள்ளையின் கடுமை அதிகமாக இருக்கும்." அந்தக் காலத்திலும் கூட இப்படியெல்லாம் இருந்திருக்கின்றதே என நினைக்கும் போது வியப்பு மேலிடுகின்றது!

இந்தத் திண்ணைப் பள்ளிக்கூடங்களில் அனுபவம் பெற்ற மாணவர்கள் புதிய இளம் மாணவர்களுக்குப் போதிப்பதும் வழக்கமாக இருந்திருக்கின்றது.

அப்போதெல்லாம் பள்ளிக்கூடம் காலை ஐந்து மணிக்கே தொடங்கி விடுமாம். நேரம் தாமதித்து வருபவருக்குப் பிரம்படி நிச்சயம். ஆக ஒவ்வொரு மாணவரும் வெகு சீக்கிரமே எழுந்து தம்மை தயார் படுத்திக் கொண்டு ஐந்து மணிக்கு முன்னரே வந்துவிடுவராம். எப்படி இருந்தாலும் பிரம்படி நிச்சயம். தாமதமாக வருபவருக்கு தாமதத்தை பொறுத்து பிர்ம்படியின் அழுத்தம் அமையுமாம். கொஞ்சம் தாமதம் என்றால் லேசான பிரம்பு தொட்டு விட்டுச் செல்வது போலத் தடவிச் செல்லும்.. தாமதம் என்றால் நல்ல அடி கையில் சுளீர் என்று கிடைக்குமாம். அதனால் முதல் நாள் பலத்த அடி வாங்கியவர்கள் மறு நாள் வெகு சீக்கிரமே வந்து விட பிரயத்தனம் எடுப்பார்களாம். முதலில் வந்து நிற்கும் மாணவானை வேத்தான் என்று பெயரிட்டு அழைப்பார்களாம். வேற்றான் என்பதன் மருவல் இச்சொல்.

உ.வே.சா இதனை விளக்கும் போது இப்படிச் சுவை பட சொல்கின்றார். " உபாத்தியாயரது கைக் கோலின் அடியைப் பெறாமல் தடவுதலை மாத்திரம் பெறுவது ஒரு தனிப் பெருமை அல்லவா? சில சமயங்களில் நாமே இன்று முதலில் வந்து விட்டோம் என்ற பெருமிதத்தோடு ஒரு பிள்ளை தன் துணைக்கு வந்த பாட்டியோடு பள்ளிக்கூடத்தில் நுழைவான். ஆனால் இவனுக்கு முன்பே ஒருவன் அங்கே இருப்பான். இருட்டில் அவன் இருப்பது இவனுக்குத் தெரியாது. ஆனாலும் தான் முன் வந்ததாக எண்ணி இவன் சந்தோஷப்படக்கூடாதென்னும் நினைவினால் அங்கிருப்பவன் இவன் புகுந்தவுடன் சிறிது கனைப்பான். அப்போது இவனுடைய மகிழ்ச்சி எங்கோ பறந்து போய்விடும். "
இதனை வாசித்த போது உ.வே.சா அவர்கள் தனது இளமை ப்ராயத்து சம்பவங்களை மிக மிக அனுபவித்து தனது எண்ணங்களை மீண்டும் கோர்வையாக்கி அதனை நாமும் ரசிக்கும்படி எழுதியிருக்கின்றார் என்பதை வரிக்கு வரி உணர்ந்தேன்.

திண்ணைப் பள்ளிக்கூடங்கள் என்பவை, இப்போது இருக்கும் பள்ளிகள் போல திங்கள் தொடங்கி வெள்ளி வரை நடைபெறும் வழக்கமெல்லாம் அக்கால வழக்கில் இல்லை. பௌர்ணமி, அமாவாசை பிரதமை அஷ்டமி ஆகிய தினங்களில் பள்ளிக்கூடம் இருக்காது. இந்த விடுமுறை நாட்களை வாவு என்று குறிப்பிடுகின்றார் உ.வே.சா.

வாத்தியாருக்கு ஒவ்வொரு மாணவனும் மாதம் கால் ரூபாய் சம்பளம் தருவார்களாம். அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் தினம் தினம் ஆசிரியருக்கு ஏதாவது கொண்டு வந்து தருவார்களாம். அது ஒரு பொருளாக அதாவது விறகு, வறட்டி, காய் பழம் என ஏதாவது ஒன்றாக இருக்குமாம். பணக்காரர்கள் வீட்டுக் குழந்தைகள் வீட்டிலிருந்து வருஷத்திற்கான நெல்லும் வாத்தியாருக்கு சம்பளமாகக் கிடைக்குமாம். ந்வராத்திரி நேரத்தில் வாத்தியாருக்கு நல்ல வருமானமும் அமையும். இந்த பிரத்தியேக வருமானமானது மானம்பூ எனப்படும் (மகானோன்பு என்பது). அக்காலத்திலே வாத்தியாருக்கு கணக்காயர் என்ற ஒரு பெயரும் வழக்கில் இருந்துள்ளது.

ஆசிரியர் என்பவர் சமூகத்தில் மிக உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து ஆராதிக்கப்பட்டிருக்கின்றார் என்பதை என் சரித்திரம் பல உதாரணங்களுடன் நன்கு விளக்குகின்றது!

தொடரும்..


அன்புடன்
சுபா

No comments:

Post a Comment