இன்று மேலும் தொடரலாமா என நினைத்து என் சரித்திரம் நூலில் அத்தியாயம் 40க்குப் பின்னர் நடக்கும் நிகழ்வுகளை மீண்டும் வாசிக்கலானேன். மெதுவாக இந்தப் பதிவு செல்கின்றதோ ? சில பகுதிகளை விடுத்து அடுத்தப் பகுதிகளுக்குச் செல்லாலாமா? என யோசித்தால் ஆங்காங்கே சுவாரசியமான விபரங்கள் நிறைந்திருக்கின்றன. இவற்றை விட்டு விட்டு செல்ல மனம் வராததால் இன்று அத்தியாயம் 41ஐ ஒட்டிய என் சிந்தனைகள்.
மனிதர்களில் பல்வேறு வகையினர். ஒருவரை இன்னொருவரின் செயல் பாதிக்காத வரை ஒருவரால் மற்றொருவருக்குத் துன்பமில்லை. ஒரு சிலர் பிறரைக் குறை கூறியே இன்பம் காண்பவர்களாக இயல்பாக இருக்கின்றனர். தம்மை நல்லவர்களாக, தம் சிந்தனைகள் நல்லெண்ணங்களாக மனதில் ஆழமாக பதிய வைத்து தாம் செய்யும் அனைத்துக் காரியங்களுக்கும் காரணம் இருப்பதாகவும் மற்றவர்கள் செய்யும் காரியங்கள் திருத்தப்பட வேண்டியவை என்ற எண்ணமும் கொண்டவர்களாக இருக்கின்றனர். அதிலும் பொருளாதார பலமும் இந்தச் சிந்தனையோடு சேர்ந்து விட்டால் கேட்கவேவேண்டியதில்லை. தம்மை விட உலக நடப்பும் நல்லதும் கெட்டதும் அறிந்தார் உலகில் வேறொருவரும் இல்லை என்று ஆழப்பதிந்த சிந்தனையோடு உலா வருபவர்களாக இருக்கின்றனர்.
பட்டீச்சுர வாசத்தில் பிள்ளையவர்கள் மாணாக்கர் சகிதம் தங்கியிருந்த கண்வான் ஆறுமுகத்தா பிள்ளையென்பவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பால் ஆழமான அன்பும் மரியாதையும் கொண்டவர். அவரை இன்முகத்துடன் வரவேற்று பல வாரங்கள் உபசரித்தவர். ஆனால் அவர் ஏனைய மாணவர்களிடத்து அவர்களைக் குறை கண்டு கடுஞ்சொற்களால் புண்படுத்தி மகிழ்வராக இருந்தவர். உ.வே.சாவுக்கு இந்த அனுபவம் மிகுந்த வேதனையைக் கொடுத்த விஷயத்தை இந்த அத்தியாயத்தில் பதிகின்றார்.
சிலர் உபகாரம் செய்கின்றோம் என நினக்கும் போது அதற்காக உபகாரம் பெறுபவர்கள் தம்மை விட அறிவாளிகளாக இருந்து விட முடியாது என நினைத்து விடுகின்றனர். ஆறுமுகத்தா பிள்ளை இதற்கு எடுத்துக் காட்டாக நடந்து கொண்டமையை இங்கே பார்க்கின்றோம்.
பிள்ளையவர்களின் திருநாகைக் காரோணப் புராணம் முடித்து மாயூரப் புராணத்தை ஆரம்பித்த வேளையில் கசப்பான ஒரு சம்பவம் நிகழ்கின்றது. ஒரு முறை முதல் நாள் வைத்த பாடச் சுவடியை மறு நாள் வந்து பார்க்கும் போது உ.வே.சாவிற்கு அது காணக் கிடைக்கவில்லை. அது மாயமாய் போய் மறு நாள் கிடைப்பது ஒரு நாடகம். ஏற்கனவே சில முறை ஆறுமுகத்தா பிள்ளை உ.வே.சா மீது சில காரணங்களுக்காக சினத்துடன் இருக்கும் சமயம் அது. அந்தச் சினத்தைக் காட்ட தருணம் காத்துக் கோண்டிருக்கின்றார். அது இந்தச் சுவடியின் வடிவில் வந்து அமைய இதனையும் ஒரு காரணமாக வைத்துக் கொண்டு ஏளனம் செய்து இலக்கியத்திலும் சோதிக்கின்றார். சோதித்து குறை கூறி மேலும் உ.வேசா மன வருத்தம் அடைவதை பார்த்து மகிழ அவருக்கு விருப்பம்.
இப்போதும் கூட பார்க்கின்றோமே. இயல்பான வாழ்க்கையிலும் சரி, இணைய உலகத்திலும் சரி. ஏதாவது ஒரு காரணத்திற்காக யாராவது ஒருவர் மேல் ஒருவருக்கு ஒருவித அபிப்ராயம் ஏற்பட்டு விட்டால் அவர்கள் நின்றாலும் குற்றம்; நடந்தாலும் குற்றம்.
குற்றம் எங்கே இருக்கின்றது? பார்ப்பவர் மனத்திலல்லவா இருக்கின்றது அது..! நல்லதையே நினைப்பவர்களுக்கு பார்ப்பனவற்றில் நன்மையே தெரியும். பிரச்சனையும், மனக்குறையும், இயலாமையும் பார்ப்பவர்களுக்கு இவை தானே தெரியும்.
இப்படித்தான் ஆறுமுகத்தா பிள்ளை.
"நன்றாக இவர்கள் எல்லாம் எங்கே படிக்கின்றார்கள்? எங்கே நான் வருவதற்குள் ஒரு செய்யுள் தயாரித்து வைக்கவும்" என்று உ.வே.சாவுக்குக் கட்டளையிட்டு அவர் செய்யுள் உருவாக்குகின்றாரா என கண்காணிக்க ஒருவரையும் விட்டுச் செல்கின்றார். ஆனால் பிள்ளையவர்களோ அந்தக் கண்காணிப்பாளரை ஒரு வழியாக அனுப்பிவிட்டு உ.வே.சாவுக்கு ஆறுமுகத்தா பிள்ளையின் மனதை இலேசாக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு செய்யுளை கற்றுத் தந்து அதனை தனது செய்யுளாக அவர் வரும் போது சொல்லச் சொல்கின்றார். இருதலைக் கொள்ளி எரும்பு நிலை என்றாலும் மாணவர் மனம் வருந்தி அது புண்பட்டு விடக்கூடாதே என்று நினைத்து அவர் இடத்தில் தன்னை வைத்துப் பார்த்து தன் மாணாக்கரைக் காப்பாற்ற தனது செய்யுளை உ.வே.சாவின் செய்யுளாகச் சொல்லச் செய்து அவரைக் காப்பாற்றி மகிழவைக்கும் பிள்ளையவர்களின் பண்பினை எப்படிப் போற்றுவது?
“ஆறுமுக பூபால வன்பிலார் போலென்பால்
மாறுமுகங் கொண்டால் மதிப்பவரார்-கூறுதமிழ்
வாசிக்க வந்தவென்மேல் வன்மமென்ன யாவருமே
நேசிக்கு மாதயை செய் நீ”
என்ற அந்த இளம் வயதில் தாம் மனனம் செய்த அந்தச் செய்யுளை மறக்காது என் சரித்திரம் நூலில் பதிகின்றார் உ.வே.சா. இந்த செய்யுள் ஆறுமுகத்தா பிள்ளையின் மனதை கொஞ்சம் கரைய வைத்ததோடு அடுத்த சில நாட்கள் பட்டிச்சுரத்தில் உ.வே.சாவும் பிற மாணவர்களும் தொடர்ந்து மனக்கிலேசம் இல்லாமல் இருக்கவும் உதவியது.
இந்த ஆறுமுகத்தா பிள்ளையிடம் ஒரு பழக்கம் இருந்ததாம். அதாவது காலையில் தனது மகன் முகத்தில் தான் எழுந்ததும் கண் விழிப்பாராம். இப்படி செய்வது அன்றைய நாளை மகிழ்ச்சியோடு வைத்திருக்கும் என்பது அவர் நம்பிக்கை. இதனை ஏளனமாக உ.வே.சா இப்படிக் குறிப்பிடுகின்றார்.
....
"தம் குமாரன் முகத்தில் விழிப்பதால் நாள் முழுவதும் சந்தோஷமாகச் செல்லும் என்பது அவர் எண்ணம். மனிதனுடைய வாழ் நாளில் சந்தோஷம் இவ்வளவு சுலபமாகக் கிடைப்பதாக இருந்தால் உலகத்தில் எல்லோரும் இம்மார்க்கத்தைக் கைக்கொள்ளலாமே! "
வாசித்து முடித்தபோது மனம் இந்த மனிதரின் குணத்தை நினைத்து வருந்தியது. இப்படிப்பட்ட சிலர் அப்போது மட்டுமா இருந்தனர்? இப்போதும்தான்!
தொடரும்..
சுபா
No comments:
Post a Comment