இந்த ஆண்டு பெப்ரவரி மாத இறுதியில் நான் மேற்கொண்டிருந்த தமிழகப் பயணத்தின் போது வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் தொடர்பான ஆவணப் பதிவுகளில் நான் ஈடுபட்டிருந்தேன். தக்க ஏற்பாடுகளை முன்னரே செய்திருந்தாலும் கூட இறையருள் இவ்வகைப் பணிகளுக்குத் துணையிருக்கும் என்ற ஆழமான எண்ணம் இருப்பதனால் காரியங்கள் நலமே வெற்றிகரமாக அமைந்ததில் எனக்கு ஆழ்ந்த திருப்தி ஏற்பட்டது.
திருவாவடுதுறை மடத்தில் இரண்டு நாட்கள் செலவிடும் வாய்ப்பு அமைந்தது. முதல் நாள் காலையிலும் மறு நாள் மதியத்திலும் என நான் திருமடத்தின் புலவர்களுடனும் நிர்வாகத்தினருடனும், நூலகத்தினருடனும் கழித்தேன். நான் சென்றிருந்த சமயத்தில் புதிதாக ஆதீனகர்த்தராக நியமணம் பெற்ற சுவாமிகள் கன்னியாகுமரி பகுதிக்குப் பயணம் மேற்கொண்டிருந்தமையால் அவரை தரிசிக்க இயலவில்லை. எனினும் மீனாட்சி சுந்தரம் பிள்ளயவர்கள் நூல்கள் மின்னாக்கம் தொடர்பாகவும் அவரைப் பற்றிய மடத்தின் தொடர்புடைய விஷயங்களைப் பதிவாக்கவும் நான் வந்திருக்கும் விஷயத்தை சுவாமிகளுக்கு நிர்வாகத்தினர் தெரிவித்து அனுமதி பெற்றிருந்தனர். என்னைத் திருவாவடுதுறை மடத்தின் கோயில், நந்தவனம், திருமூலர் சன்னிதி, தியான மண்டபம், திருமடத்தின் அலுவலகப் பகுதி, பொதுமக்கள் சந்நிதி இருக்கும் பகுதி, நூலகம், கல்லூரி, பள்ளி என எல்லா பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று தகவல்களை விளக்கமாக வழங்கியதோடு நூலகத்தில் நான் தேடிய தலபுராணங்களைச் சிரமத்திற்கிடையே தேடியும் அளித்தனர்.மடத்தின் நூலகத்தின் பின் புறத்தில் அமர்ந்து அவற்றை உடன் வந்திருந்த நண்பர்களோடு மின்னாக்கம் செய்தேன்
இந்தத் திருமடத்தில் தான் உ.வே.சா அவர்கள் செய்யுள் வாசித்து ஆதீன கர்த்தர் சுப்ரமணிய தேசிகர் அவர்களின் பாராட்டுதல்களைப் பெற்றார் என நினைத்த போது சுப்ரமணிய தேசிகரின் நிழல் படத்தைக் காண வேண்டும் என்ற ஆவல் எனக்கு ஏற்பட அதுபற்றி நான் வினவியபோது முதல் குரு முதல் சில மாதங்களுக்கு முன்னர் சிவபதம் பெற்ற ஆதீன கர்த்தர் வரை உள்ள ஓவியங்கள், நிழல்படங்கள் உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்று எனக்கு அவற்றைக் ஆதீனப் புலவர்கள் காட்டினர் . இவர்களின் நிழற்படங்களையும் த.ம.அ சேகரத்திற்காக என் கேமராவில் பதிவு செய்து கொண்டேன்.
இந்தப் பயணத்தின் போது, என் சரித்திரம் நூலைப் படித்த போது உ.வே.சா முக்கியமாகக் குறிப்பிடும் பட்டீச்சுரம் சென்று வர வேண்டும் என்ற ஆவல் எனக்கு மிகுந்திருந்தது. சோழர் கால ஆலயங்கள் சிலவற்றைப் பதிவாக்கவும் என எனது பயணம் அமைந்திருந்ததால் 1.3.2013 அன்று மதியம் திருவாவடுதுறை மடத்தில் மின்னாக்கப் பணிகளை முடித்துக் கொண்டு கோனேரி ராஜபுரம் கோயிலுக்குச் சென்று அதன் பின்னர் பட்டீச்சுரம் கோயிலுக்கும் சென்று வந்தேன்.
உ.வே.சா அவர்கள் அத்தியாயம் 40க்குப் "பட்டிச்சுரத்தில் கேட்ட பாடம்" என்ப் பெயரிட்டிருக்கின்றார். அதில் விலகிய நந்தி என தலைப்பிட்ட பகுதியில் உள்ள ஒரு விஷயம் எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தமையால் பட்டீச்சுரம் சென்று இக்கோயில் தரிசனம் செய்து வர உறுதியாக நினைத்திருந்தேன். அங்கு சென்று ஆலய தரிசனம் முடித்து வந்த போது மீண்டும் இந்தப்பகுதி நினைவில் வந்தது.
...
"பட்டீச்சுரம் சென்ற முதல் நாள் மாலையில் பிள்ளையவர்கள் வெளியே உலாத்திவரப் புறப்பட்டார். நான் உடன் சென்றேன். அவ்வூருக்கு அருகிலுள்ள திருமலைராயனாற்றிற்கு அழைத்துச் சென்றார். போகும்போது பட்டீச்சுர ஆலயத்தின் வழியே சென்றோம். அவ்வாலயத்தில் நந்திதேவர் சந்நிதியைவிட்டு மிக விலகியிருப்பதைக் கண்டேன். நந்தனார் சரித்திரத்தைப் படித்து ஊறிய எனக்கு அவர் சிவபெருமானைத் தரிசிக்கும் பொருட்டுத் திருப்புன்கூரில் நந்தி விலகினாரென்ற செய்தி நினைவுக்கு வந்தது. “இங்கே எந்த அன்பருக்காக விலகினாரோ!” என்று எண்ணியபோது என் சந்தேகத்தை என் முகக் குறிப்பினால் உணர்ந்த ஆசிரியர்’ “திருச்சத்தி முற்றத்திலிருந்து திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் சிவபெருமான் அருளிய முத்துப் பந்தரின் கீழே இவ்வழியாகத் தரிசனத்துக்கு எழுந்தருளினார். அவர் முத்துப் பந்தரின் கீழே வரும் கோலத்தைத் தாம் பார்த்து மகிழ்வதற்காக இக்கோயிலில் எழுந்தருளியுள்ள தேனுபுரீசுவரர் நந்தியை விலகும்படி கட்டளையிட்டனராம். அதனால்தான் விலகியிருக்கிறார்” என்றார்."
இந்தப் பட்டீச்சுரத்தில் திரு.ஆறுமுகத்தாபிள்ளை என்ற ஒரு கணவான் வீட்டில் தான் பிள்ளையவர்களும் மாணவர்கள் சிலரும் உ.வே.சா அவர்களும் இப்பயணத்தின் போது தங்கியிருந்தார்கள். இங்கு தாம் திருநாகைக் காரோணப் புராணம் படித்ததாகக் குறுப்பிடுகின்றார் உ.வே.சா. இதுவே பிள்ளையவர்கள் எழுதிய புராணங்களில் உ.வே.சா கற்ற முதல் தலபுராணம் என்ற செய்தியும் இந்த அத்தியாயத்தில் காணக் கிடைக்கின்றது. இந்தத் தலபுராண நூலை நான் திருவாவடுதுறை மடத்து நூலகத்திலிருந்து பெற்று மின்னாக்கம் செய்துள்ளேன். 400 பக்கங்களுக்கு மேல் கொண்ட ஒரு பெரிய நூல் இது.
தொடரும்..
அன்புடன்
சுபா
No comments:
Post a Comment