மானவர்மனுக்கும் தமிழகத்தை ஆண்ட பல்லவ மன்னன் நரசிம்மனுக்கும் நல்ல நட்புறவு இருந்தது என்று முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். முதலாம் நரசிம்மவர்மன் முதலாம் மகேந்திரவர்மனின் மகன். இவனது ஆட்சிக்காலம் கிபி.630லிருந்து 668 வரையாகும். தனது தந்தை மகேந்திரவர்மப் பல்லவன் போலவே சிறப்புமிக்க கோயில்களைத் தமிழகத்தில் அமைத்தவன் என்பதோடு வாதாபியை ஆட்சி செய்துகொண்டிருந்த சாளுக்கியரோடு போரிட்டு வென்றவன் என்ற சிறப்பும் பெற்றவன் பல்லவ மன்னன் முதலாம் நரசிம்மன்.
இந்த மானவர்மன் என்பவன் முன்னர் நான் குறிப்பிட்ட இலங்கை மன்னன்காசியப்பனின் மகன். அடைக்கலம் வேண்டி இந்தியாவிற்குத் தப்பி ஓடிவந்த மானவர்மன், பல்லவமன்னன் நரசிம்மனிடம் தஞ்சம் புகுந்தான். பல்லவ மன்னன் நரசிம்மன் மானவர்மனைத் தனது படை பிரிவுகளில் ஒன்றின் தளபதியாக நியமித்திருந்தான். மானவர்மன் திருமணம் முடித்து அவனுக்கு நான்கு புதல்வர்களும் இருந்தார்கள். பல்லவ மன்னன் நரசிம்மன் மானவர்மனுடன் மிகுந் த நட்புறவில் இருந்தான். நரசிம்மனின் படையில் தலைமையேற்று ஒரு போரில் மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தான் மானவர்மன். வெற்றியை மானவர்மன் ஈட்டித் தந்ததமைக்குப் பரிசாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த நரசிம்மன், ஒரு படையினை இலங்கைக்கு அனுப்பி வைத்தான். மானவர்மனும் உடன் சென்றான். கடுமையான போர் நடந்தது. ஆனால் வெற்றி பெற முடியாது தப்பியோடி மீண்டும் தமிழகம் வந்து சேர்ந்தான் மானவர்மன். நீண்ட காலம் கழித்து மீண்டும் பல்லவன் நரசிம்மன் மற்றொரு படையை ஏற்பாடு செய்து மானவர்மனை உடன் அனுப்பி இலங்கையைக் கைப்பற்ற முயற்சி செய்தான். பல்லவ மன்னனின் கப்பற்படை இலங்கை நோக்கி சென்றது. மானவர்மனும் அப்படையி ல் இணைந்து சென்றான். பயங்கரமான போர் நடைபெற்றது. அதன் இறுதியில் மானவர்மனின் படை வெற்றி கண்டது. மானவர்மன் அனுராதபுரத்தின் மணிமுடியை அணிந்து கொண்டான். அதன் பின்னர் ஏறக்குறைய 35 ஆண்டுகள் மானவர்மன் தொடர்ந்து இலங்கை மன்னனாக ஆட்சி செய்தான். அவன் ஆட்சி காலத்தில் இலங்கையின் பல பௌத்த விகாரைகளைத் திருத்தி அமைத்ததோடு விவசாயத்திற்கு நீர்பாசன குளங்களையும் ஏரிகளையும் வெட்டி விவசாயத்தை வளர்ச்சியுறச் செய்தான்.
மானவர்மனின் மறைவிற்குப் பிறகு அவனுடைய மகன் காசியப்பன், அவனுக்குப் பிறகு மகிந்தன் ஆகியோர் ஆட்சி செய்ததை சூளவம்சம் குறிப்பிடுகிறது.
மகிந்தன் மரணமடைந்தபோது அவனது மகன் ஆட்சிப் பொறுப்பை எடுத்துக் கொண்டான். அடுத்த சில ஆண்டுகளில் மீண்டும் மாறி மாறி பல மன்னர்கள் தொடர்ச்சியாக இலங்கையின் ஆட்சி பீடத்தில் இருந்தார்கள். சேனன், உதயன், மகிந்தன், அக்கபோதி என தொடர்ச்சியாக வெவ்வேறு அரசர்களின் ஆட்சிக்கு உட்பட்டது இலங்கை.
அடுத்து சேனன் என்ற மன்னன் ஆட்சி செய்து கொண்டிருந்த போது தமிழகத்தை ஆண்ட பாண்டிய மன்னன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் (கி.பி. 815-862) பெரும்படையுடன் இலங்கையைக் கைப்பற்றும் நோக்கத்துடன் வந்தான். இலங்கையின் வடபகுதி அனைத்தையும் வெற்றி கண்டு தன் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்தான் பாண்டிய மன்னன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன். இலங்கையின் வடபகுதியில் மகாதாலிதகமத்தில் பாசறை அமைத்தான். தமிழ் மக்கள் பலர் அவனது ஆட்சியின் கீழ் அரசியலில் இடம் பெற்றனர். அதனால் பாண்டிய மன்னனின் படை பலம் பொருந்தியதாக ஆகியது. அதே வேளை இலங்கையின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் இலங்கை மன்னர்களின் ஆட்சி தொடர்ந்தது. சேனன் அப்போது நடந்த போரில் தோல்வி கண்டு மலையகத்திற்குத் தப்பி ஓடினான்.
பாண்டிய மன்னனின் படை படிப்படியாக அனுராதபுரத்தைக் கைப்பற்றிக் கொண்டது. பாண்டிய மன்னனின் படை அரண்மனையில் இருந்த எல்லா செல்வங்களையும் சூறையாடியதோடு, விகாரைகளில் இருந்த தங்கத்தினாலான புத்தரின் சிலைகளையும், செல்வங்களையும் சூ றையாடி எடுத்துக்கொண்டது. தங்க நகைகள், வைரங்கள் தூபராமசேத்தியத்தின் பொன் கூரை, பௌத்த சமய சின்னங்கள் என அனைத்தையும் எடுத்துக் கொண்டு தமிழகம் திரும்பியது பாண்டியனின் படைகள். இதனால் மனம் வருந்திய சேனன், தான் பாண்டிய மன்னனுக்குக் கீழ் திறைதரும் மன்னனாக இருக்க சம்மதித்து, இரண்டு யானை அம்பாரிகளில் பல பரிசுப் பொருட்களை அனுப்பி வைத்தான். பாண்டிய மன்னனும் இதனை ஏற்றுக்கொண்டு சேனனை இலங்கையின் திறை செலுத்தும் மன்னனாக இருக்கச் சம்மதித்து, ஆட்சியையும் கொடுக்கச் சம்மதித்தான். சேனனின் ஆட்சி இலங்கையில் தொடர்ந்தது.
சேனன் மரணமடைந்ததும் அடுத்ததாக, சேனன் என்ற மற்றொருவன் கிபி 853 லிருந்து 887 வரை இலங்கை மன்னனாக ஆட்சி செய்தான். அவன் காலத்தில் பாண்டிய மன்னர்களை பழி வாங்குவதற்காக திட்டமிட்டான். அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் பாண்டியனுக்கு எதிராக செயல்பட்ட அவனது மகனான வரகுணபாண்டியன் தந்தைக்கு எதிராக கலகம் செய்து புகலிடம் தேடி இலங்கைக்கு சேனனிடம் வந்து அடைக்கலம் புகுந்தான். அதுவே நல்ல சமயம் என திட்டமிட்ட சேனன், தனது சேனாதிபதியை அழைத்து பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்று பாண்டிய மன்னனைக் கொன்று வரகுணனை சிம்மாசனத்தில் அமர்த்துமாறு தனது படையினருக்குக் கட்டளையிட்டான்.
கடும் யுத்தம் நடந்தது. பாண்டியமன்னன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் போரில் கொல்லப்பட்டான். வரகுணனை பாண்டி ய மன்னனாக முடிசூட்டி விட்டு இலங்கைக்கு படை திரும்பியது. ஆனாலும் படையைச் சார்ந்த தளபதிகள் சிலர் தமிழகத்தின் ராமநாதபுரம் பகுதிகளில் தொடர்ந்து தங்கியிருந்தார்கள் என்றும் தெரிகிறது. பாண்டியர்கள் இலங்கையிலிருந்து சூறையாடிச் சென்ற தங்க புத்தர் சிலைகளை மீண்டும் தமிழகத்தில் இருந்து கொண்டு வந்து ஆலயங்களில் நிறுவினான் மன்னன் சேனன். இவன் தொடர்ந்து மன்னனாக இலங்கையில் ஆட்சியில் இருந்தான். அதன் பின்னர் உதயன் என்பவன், காசியப்பன் என்பவன் என இலங்கை ஆட்சி தொடர்ந்தது.
அடுத்து தப்புலன் அரசனாக முடிசூட்டிக் கொண்டான். இவனது காலம் கிபி 924 லிருந்து 935 வரை. அதே சமயத்தில் தமிழகத்தில் பாண்டிய மன்னன் இரண்டாம் இராஜசிங்கன் சோழர்களால் விரட்டப்பட்டு இலங்கைக்கு வந்து சரண் அடைந்தான். தப்புலன் பாண்டியனுக்கு உதவி செய்ய நினைத்தாலும் அவனது அரசின் அதிகாரிகள் இதற்கு இணங்கவில்லை. ஆகையால் பாண்டிய மன்னன் தனது சிம்மாசனம் மற்றும் சில அரச முத்திரை சின்னங்களையும் மன்னனிடம் பாதுகாப்பாக ஒப்படைத்துவிட்டு சேர நாட்டிற்குச் சென்று தஞ்சமடைந்தான்.
சேனனுக்குப் பிறகு உதயன் என்பவன் மன்னனானான். அவனுக்குப் பின் மேலும் சேனன் என்னும் மற்றொருவன் மன்னனானான். இவனது காலம் கிபி 956 லிருந்து 972 வரை. இவன் கலிங்கத்து இளவரசி ஒருத்தியை திருமணம் செய்து கொண்டான்.
சூளவம்சம் குறிப்பிடும் செய்திகளைக் காணும், போது பாண்டிய மன்னர்களின் அரச சின்னங்கள் குறிப்பிட்ட சில ஆண்டுகள் இலங்கையில் இருந்ததை உறுதி செய்வதாகவே அமைகின்றது. அதுமட்டுமின்றி, சோ ழ மன்னர்கள் தமிழகத்தில் பலம் பெற்ற போது அதன் தாக்கம் இலங்கையிலும் எதிரொலிக்கத் தொடங்கியது. இதனைப் பற்றி அடுத்து காண்போம்.!
தொடரும்.
-சுபா
No comments:
Post a Comment