*பகுதி 5 - தொடர்கின்றது.*
சிற்றரசனான மானவர்மனுக்கு மகனாக பராக்கிரமபாகு பிறந்தான். தனக்கு மகன் பிறந்த செய்தியை இலங்கை மன்னன் விக்கிரமபாகுவிற்குத் தூதுவர் மூலம் அறிவித்தான் மானவர்மன். விக்கிரமபாகுவின் தங்கைதான் மானவர்மனின் மனைவி. தன் தங்கையைப் போல நல்ல குணங்களுடன் பராக்கிரமபாகு வளரவேண்டும் என்று எண்ணி விக்ரமபாகு, தன் மருமகனைத் தன்னிடம் கொடுத்து வளர்க்க அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டான். ஆனால் மானவர்மன் அதற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை. பராக்கிரமபாகு ஒரு அரசனுக்குத் தேவையான எல்லா கலைகளையும் கற்று வளர்ந்து வந்தான்.
சூளவம்சத்தின் இந்தப் பகுதியில் ஒரு உரையாடலின் போது "கலிங்க மரபில் வந்த விஜய மன்னன் இத்தீவில் வசித்த இயக்கர்களை அழைத்து இத்தீவை மக்கள் வாழ உகந்ததாக ஆக்கினான். அன்றிலிருந்து கலிங்க மரபு மன்னர் வழி வருகின்றது" என்று ஒரு அரசி கூறும் ஒரு செய்தியும் இடம் பெறுகின்றது. இதனை நோக்கும்போது சூளவம்சம் கூறும் செய்திகளின் அடிப்படையில், இலங் கை மன்னர்கள் பரம்பரை என்பது கலிங்க நாட்டு மன்னர் பரம்பரையினரின் தொடர்ச்சி என்பதாகவே அறியக்கூடியதாக இருக்கின்றது.
பராக்கிரமபாகு ஏனைய அரசர்களை விட மாறுபட்ட வகையில் சிந்திக்கும் திறன் உடையவனாக இருந்தான். தானே பல ஊர்களுக்குப் பயணம் செய்து கிராமங்களை நேரில் கண்டு சில இடங்களில் போரிட்டு, அங்கு தனது வீரத்தைவெளிப்படுத்தி, தனது புகழை வளர்த்துக் கொண்டு வந்தான். அவனுக்கு இலங்கையில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு மனிதர்கள் தனித்தனியாக ஆட்சி செய்வது மனதிற்கு ஒவ்வாததாக இருந்தது. இலங்கையின் முழு பகுதியையும் ஒரு ஆட்சியின் கீழ் கொண்டு வர வேண்டும். அந்த ஆட்சிக்கு தானே தலைமை தாங்க வேண்டும், என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தான். அது மட்டுமல்ல. இலங்கைத்தீவு சிறியதான ஒரு தீவாக இருந்தாலும் கூட, பௌத்த நெறிக்கு மிக முக்கியமான ஒரு நாடாக இருப்பதை அவன் மிக முக்கிய காரணமாகக் கருதினான். "புத்தரி ன் கேசம், தோள் எலும்பு, கழுத்து எலும்பு, பல், பிச்சைப்பாத்தி ரம், பாத அடையாளம், போதி மரத்தின் கிளை ஆகியவை இலங்கையில் தான் இருக்கின்றது" என்று அவன் கூறுவதாக ஒரு வாக்கியம் சூளவம்சத்தில் இடம்பெறுகின்றது.
இளவரசனாக சுகங்களை மட்டும் அனுபவித்து கொண்டிராமல் இலங்கையின் எல்லாப் பகுதிகளுக்கும் பயணம் செய்து, சீர்குலைந்து கிடந்த கிராமங்களை தனது ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்து எல்லா பகுதிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டான். சில ஆண்டுகளில் தக்ஷிணதேசத்தில் அரசனாக அரியணை ஏறினான் பராக்கிரமபாகு. அது மட்டும் போதாது. இலங்கை முழுவதையும் தனது ஆளுமைக்குள் கொண்டு வர வேண்டும் என்று திட்டமிட்டான். "பொழியும் மழை நீரில் ஒரு துளி கூட சமுத்திரத்தில் கலக்கக்கூடாது. அவை அனைத்தும் விவசாயத்திற்குப் பயன்படவேண்டு ம்" என்று நீர்ப்பாசனத் திட்டங்களை இலங்கை முழுவதும் திட்டமிட்டான், செயல்படுத்தினா ன். நெல் வயல்களின் பரப்பினை அதிகரித்தான். நாட்டை நெற்களஞ்சியமாக்கினான். முந்தைய அரசர்கள் தங்கள் பெரும்பகுதி நேரத்தை யுத்தங்களில் செலவிட்டு நாட்டை பாழ்படுத்தினர். யுத்தத் தை விட்டு நாட்டினையும் சமயத்தையும் அவர்கள் வளர்ச்சிக்குப் பயன்படுத்தவில் லை. ஆகவே பௌத்த தர்மத்தை முன்னெடுக்கவும், இளைஞர்கள் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு போர் பயிற்சி பெறவும், எல்லா மாவட்டங்களிலும் சிறந்த நிர்வாகம் செயல்படவும், நாடு முழுவதும் திட்டங்களை வகுத்து செயல்படத் தொடங்கினான் பராக்கிரமபாகு.
இவனது ஆட்சியின் கீழ் தமிழ்ப்படை ஒன்று இருந்தமையும், அதற்குத் தளபதியாக மலைராஜா என்ற ஒருவனை நியமித்தமையும் சூளவம்சம் குறிப்பிடுகிறது. பலம் பொருந்திய படையினை உருவாக்கி இலங்கை முழுவதும் இருந்த அனைத்து சிற்றரசர்களையும் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தான் பராக்கிரமபாகு.
இலங்கை முழுமைக்கும் மன்னனாக முடிசூட்டிக் கொண்டான். மகா பராக்கிரமபாகு என்று அழைக்கப்பட்டான். முந்தைய ஆட்சியாளர்கள் விதித்திருந்த வரிச் சுமைகளை குறைத்தான். பௌத்தத்தில் இருந்த மூன்று மதப் பிரிவுகளையும் சேர்ந்த பிக்குகளை அழைத்து அவர்களிடம் சமரசத்தை உருவாக்க முயற்சித்தான். பௌத்த பிக்குகளுக்கு நிறைய சலுகைகளை வழங்கினான். வழிப்போக்கர்களுக் கும் பிச்சைக்காரர்களுக்கும் அன்னசத்திரங்கள் அமைத்தான். தானியங்கள் சேகரித்து வைக்க களஞ்சியங்களை அமைப்பித்தான். நோயாளிகளுக்கு வைத்தியசாலைகளை நிறுவினான். திறன் வாய்ந்த வைத்தியர்களை ஒருங்கிணைத்து சிறந்த வைத்தியசாலைகளை உருவாக்கினான். மாதத்தில் நான்கு நாட்களை பௌத்த உபதேச நாட்களாக அறிவித்தான். பிராமணர்கள் தமது சடங்கு, கிரியைகள் ஆகியவற்றைச் செய்வதற்கு ஒரு தங்கமாளிகை உருவாக்கித் தந்தான். பிராமணர்கள் மந்திரச் சடங்குகள் ஆற்றுவதற்கு விஷ்ணுவுக்கு ஒரு கோயில் அமைத்தான். புனித நூல்கள் வழங்குவதற்குரிய மாளிகைகளையும் அமைத்தான்.
பராக்கிரமபாகுவின் பட்டத்து ராணியாக ரூபவதி என்பவள் இருந்தாள். அவளைத் தவிர நூற்றுக்கணக்கான மகளிர் அரண்மனையில் இருந்தார்கள். ரூபவதி பௌத்த மத நம்பிக்கை கொண்டவள். அவள் பௌத்த சமயத் தொண்டினைத் தொடர்ந்து ஆற்றி வந்தாள். பராக்கிரமபாகு மூன்று தேவாலயங்களைக் கட்டுவித்தான் என்ற செய்தியையும் சூளவம்சம் குறிப்பிடுகிறது.
மகா பராக்கிரமபாகு சோழர்களால் சேதமாக்கப்பட்ட புராதன அரச நகரான அனுராதபுரத்தைப் புனரமைக்கவும், போதி மரத்தையும், புனித சின்னங்களையும் பாதுகாக்கவும் நடவடிக்கைகள் எடுத்தான். இவன் காலத்திலேயே பௌத்தப் புனித சின்னங்கள் மீட்கப்பட்டன. அவை பொலநருவ நகருக்குக் கொண்டுவரப்பட்டன. மகா பராக்கிரமபாகுஅந்தப் புனித சின்னங்களைத் தனது தலையில் தாங்கி ஊர்வலம் வந்து விழா எடுத்துக் கொண்டாடி ஆலயத்தில் வைத்தான்.
சூளவம்சத்தில் மற்றொரு செய்தியும் இடம் பெறுகிறது. அதாவது, பராக்கிரமபாகு கம்போஜ மன்னனுக் கு நட்புறவு நிமித்தமாக இலங்கை இளவரசி ஒருத்தியைத் திருமணம் செய்விக்க அனுப்பியதாகவும், அவள் சென்ற அந்தக் கப்பலை பர்மிய மன்னன் இடையில் தாக்கி கைப்பற்றி அவளை கொண்டு சென்றதாகவும், இதனால் கோபமடைந்த மகா பராக்கிரமபாகு தமிழ்த் தளபதி ஒருவரை அழைத்து பர்மா மீது போர் தொடுக்க கட்டளையிட்டான் என்றும், பர்மா வந்து இறங்கிய தமிழ் தளபதி ஆதித்தன் அவர்களுடன் சண்டையிட்டு பர்மிய மன்னனைச் சிறைபிடித்து இளவரசியை மீட்டான் என்றும் இச்செய்தி குறிப்பிடுகிறது. அதோடு மட்டுமன்றி, பர்மாவின் மன்னன் இலங்கைக்குத் திறை செலுத்தும் மன்னனாக இருப்பதற்கு ஒப்புக்கொண்டு திறை செலுத்தினா ன் என்ற செய்தியும் கிடைக்கின்றது.
அந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த பாண்டிய மன்னன் பராக்கிரமனைத் தாக்கி மற்றொரு இளவரசனான குலசேகரன் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். குலசேகர பாண்டியனைத் தாக்கி தனது ஆட்சியை மீட்டுக் கொடுக்கும்படி பராக்கிரம பாண்டியன், மகா பராக்கிரமபாகுவின் உதவி கேட்டு தூது அனுப்பினான். தனது படைத் தளபதியை அழைத்து குலசேகரனைத் தாக்கி கைப்பற்றி மீண்டும் பராக்கிரம பாண்டியனுக்கே அரசை ஒப்படைக்கும்படி கட்டளையிட்டான் மகா பராக்கிரமபாகு. தளபதி தண்டநாயக்கன் முதலில் ராமேஸ்வரத்தைக் கைப்பற்றிக் கொண்டான். அப்பகுதியில் ஆட்சி செய்த சிற்றரசர்களைத் தாக்கிச் சிறைப்பிடித்துஇலங்கைக்கு அனுப்பினான். அவர்களைக் கொண்டு முன்னர் இலங்கையில் தமிழ் படைகள் ஏற்படுத்திய சேதங்களைத் திருத்தவும், பழுதடை ந்த கோவில்களைப் புதுப்பிக்கும் பணிக்கும் அவர்களை அனுப்பினான். இந்த தண்டநாயக்கன் தென்னிந்தியாவில் குண்டுக்கல் என்ற இடத்தில் தனக்கு ஒரு கோட்டை நிறுவி அதற்கு பராக்கிரமபுரம் என்றும் பெயரிட்டான் என்று சூளவம்சம் குறிப்பிடுகிறது. குலசேகரனுக்கு ம் பாண்டியன் பராக்கிரமனுக்கும் நடைபெற்ற சண்டையின்போது பராக்கிரம பாண்டியன் கொல்லப்பட்டான். ஆயி னும் தண்டநாயக்கனின் படைகள் பராக்கிரம பாண்டியனின் குடும்பத்தாருக்கு உதவும் பொருட்டு தொடர்ச்சியாகப் போர் செய்து வந்தது. தமிழகத்தின் பொன்னமராவதியில் நடந்த புரட்சியை முற்றுமாக அடக்கி, அங்கிருந்த பாண்டியனின் மூன்று அடுக்கு மாளிகையைத் தீக்கிரையாக்கியது இலங்கை படை. பாண்டியன் பராக்கிரமன் மகனான் வீரபாண்டியனுக்கு முடிசூடி விட்டு பின்னர் நாடு திரும்பியது இலங்கை படை. இலங்கை படையோடு போர் தொடுக்கும் வகையில் குலசேகரன் சோழமன்னர்களின் உதவியை நாடினான். தமிழகத்தில் பெரும் போர் நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். குலசேகரன் அனைத்தையும் இழந்து ஓடினான். இலங்கை மன்னனின் தளபதி நாட்டை வீரபாண்டியனிடம் ஒப்படைத்துவிட் டு, "இந்த ராஜ்ஜியத்தில் பராக்கிரமபாகுவின் தலைச் சின்னம் பொறித்த காசு பணம் பயன்படுத்தப்பட வேண்டும்" என்று கட்டளை பிறப்பித்து, பாண்டிய சோழ கைதிகளோடு இலங்கைக்குக் திரும்பினான். இந் த வெற்றியைக் கொண்டாடி பராக்கிரமபாகு இலங்கையில் "பாண்டி விஜயம்" என்ற பெயரில் ஒரு கிராமத்தை உருவாக்கினான். அக்கிராமத்தில் பிராமணர்கள் வளமாக வாழ நிலங்களை நன்கொடையாக வழங்கினான் மகா பராக்கிரமபாகு என்று சொல்கிறது சூளவம்சம்.
மகா பராக்கிரமபாகுவின் ஆட்சி 33 ஆண்டுகள் நீடித்தன. இவனது ஆட்சி இலங்கை வரலாற்றில் இலங்கைக்குப் பெரும் வளத்தையும் புகழையும் தேடித் தந்த ஆட்சி என்று ஐயமின்றி குறிப்பிடலாம். பராக்கிரமபாகுவின் மறைவிற்கு பிறகு அவனது சகோதரியின் மகனான விஜயபாகு என்பவன் அரியணை ஏறினான். அவன் கவிஞன் - அதோடு மனுநீதியை உயர்வாகக் கருதி அவன் மக்களை மனு நீதியின் கட்டளைப்படி நான்கு ஒழுக்கங்களை பின்பற்றி நடக்குமாறு பணித்தான் என்றும், அவன் ஆட்சி ஒரு ஆண்டு காலம் மட்டுமே நீடித்தது என்றும், அவனுக்குப் பின் மகிந்தன் என்பவன் ஆட்சியை எடுத்துக்கொண்டான் என்றும் சூளவம்சம் குறிப்பிடுகிறது.
மீண்டும் பல குழப்பங்கள் இலங்கை அரச குடும்பத்தில் ஏற்பட்டன. மகா பராக்கிரமபாகுவின் மனைவியருள் ஒருத்தியான லீலாவதியை இடைக்காலத்தில் அரியணையில் ஏற்றினார்கள். அந்த காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து பராக்கிரம பாண்டியன் என்பவன் பெரும்படையுடன் வந்து லீலாவதியையும் அவள் தளபதியையும் கொன்று இலங்கையைக் கைப்பற்றிக் கொண்டான். இதனைக் குறிப்பிடும் போது சூளவம்சம் இக்காலகட்டத்தில் மனு நீதி தவறிய ஆட்சி மூன்று ஆண்டுகள் புலத்தி நகரில் நிலவியது, அதாவது பொலநறுவ நகரில் நிலவியது என்று குறிப்பிடுகிறது.
சூளவம்சத்தின் அடிப்படையில் மனுநீதியே உயர்ந்த தர்மமாக கொள்ளப்பட்டது என்பதை அறிகின்றோம். ஆக, பௌத்த சமயத்தை அரச சமயமாக ஏற்ற இலங்கை சிங்கள மன்னர்கள், பௌத்த தத்துவங்களின் அடிப்படைகளுக்கு நேர்மாறான மனு நீதியை எவ்வாறு ஏற்றுக் கொண்டனர் என்பதுவும், மனு நீதி சிங்கள ஆட்சியில் எப்போது உட்புகுந்தது என்பதும், அது எவ்வாறு ஆட்சியில் உள்ளோருக்கு துணை புரிந்தது என்பதும், அதனால் ஏற்பட்ட பின்விளைவுகள் யாவை என்பதுவும் ஆய்வுக்குட்படுத்தப் பட வேண்டியவையே!
தொடரும்..
சுபா
படிக்கப் படிக்க ஆவலைத் தூண்டும் இலங்கை வரலாறு,. சிறப்பு வாழ்த்துக்கள்
ReplyDelete