*பகுதி 2 - தொடர்கின்றது.*
சூளவம்சம் - நூல் வாசிப்பு
நூலாசிரியர் - முனைவர்.க.குணராசா
பதிப்பு - கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்
சூளவம்சம் கூறும் மன்னர்கள் பரம்பரை பற்றிய செய்தியில் மீண்டும் மீண்டும் சில பெயர்கள் வருவதைக் காணலாம். உதாரணமாக, கா சியப்பன் அக்கபோதி, சேனன் போன்ற பெயர்கள் மீண்டும் மீண்டும் இடம்பெறுகின்றன. அதேபோல பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என்ற பெயர்களும் ஒரு முறைக்கு மேல் இடம்பெறுகின்றன. இப்பெயர்களைக் கவனிக்கும் போது இவை சிங்கள பெயர்களா அல்லது தமிழ் பெயர்களா என்ற மயக்கம் ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை. ஆயினும் சூளவம்சம் பொதுவாகவே சிங்கள மன்னர்களை மட்டுமே இலங்கை மன்னர்களாக எடுத்துக்கொண்டு இந்த நூலில் கையாள்கிறது. எப்போதெல்லாம் தமிழர்கள்இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்றி னாலும் அல்லது சிங்கள படையில் பதவி வகித்தாலும், அல்லது தமிழகம் போன்ற நாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்தாலும் அதனை தெளிவாக குறிப்பிட்டுச் சொல்கிறது. ஆக சூளவம்சம் முதன்மைப்படுத்துவது இலங்கை சிங்கள மன்னர் பரம்பரையையே என்பது உறுதிப்படுகிறது.
மகாவம்சத்தில் இறுதியாக இடம் பெறும் மகாசேனனின் 27 ஆண்டு ஆட்சி, அதாவது கி.பி 361ல் அவன் ஆட்சி முடிய, அவனது மகன் ஸ்ரீ மேகவண்ணன் ஆட்சியைக் கையில் எடுக்கின்றான் . அவன் முடிசூடிக்கொண்ட செய்தியிலிருந்து சூளவம்சத்தின் முதல் அத்தியாயம் தொடங்குகிறது. அந்த காலகட்டத்தில் அனுராதபுரம் இலங்கை அரசின் தலைநகராக விளங்கியது. அப்போது தேரவாத பௌத்த சிந்தனைகளைக் கடைப்பிடிக்கும் மகாவிகாரை பிக்குகளும், மகாயான பௌத்த சிந்தனைகளைத் தொடரும் அபயகிரி விகாரை பிக்குகளும் இக்காலகட்டத்தில் சமநிலையில் இருந்திருக்கின்றன. பௌத்தத்தின் இந்த இரண்டு உட்பிரிவுகளும் பெருத்த வேறுபாடுகளுடனே அப்போது கடைப்பிடிக்கப்பட்ட நிலையும் தெரியவருகின்றது. இதில் மகாசேனன் மகாயான தத்துவத்தைக் கடைபிடித்தவன்.
மகாசேனுக்குப் பிறகு அவரது மகன் ஸ்ரீ மேகவண்ணன் மன்னனாக முடிசூட்டிக் கொண்டான். அவன் தனது தந்தை புறக்கணித்த தேரவாத பௌத்தத்தை முன்னெடுத்தான். அவனுக்கு அடுத்து ஜெட்டதீசன் கிபி 331 லிருந்து 339 வரை ஆட்சியில் இருந்தான். அவன் ஸ்ரீ மேகவண்ணனின் சகோதரனின் கடைசி மகன். ஒன்பது ஆண்டுகள் ஆட்சிக்குப் பிறகு தனது மகன் புத்ததாசனிடம் ஆட்சியை ஒப்படைத்து அவன் மரணமடைந்தான். அவனுக்குப் பின்னர் அவனது மகன் உபதேசன் ஆட்சியை எடுத்துக் கொண்டான். நல்ல குணங்கள் கொண்ட மன்னனாக இவன் விவரிக்கப்படுகின்றான்.
புத்ததாசனுக்குப் பின்னர் அவன் மகன் உபதேசன் அரியனை ஏறினான். உபதேசனின் மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த அவனது தம்பி மகாநாமன் மன்னனைக் கொன்றுவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். இவனுக்கு இரண்டு மனைவியர்- ஒருவர் சிங்களப் பெண். மற்றொருவர் தமிழ் பெண். தமிழ் பெண்ணுக்குப் பிறந்த சொத்திசேனன் என்பவன் மகாநாமனின் இறப்புக்குப் பின்னர் ஆட்சியைக் கையில் எடுத்துக் கொண்டான். ஆனால் அன்று இரவே தனது தந்தையின் முதல் மனைவிக்குப் பிறந்த சிங்கள வம்சாவளிப் பெண் சம்ஹாவின் காதலனால் கொல்லப்பட் டான். அவளது காதலன் அரசனானான். பின் அவனும் இறந்து போனான். பின் தாதுசேனன் என்பவன் ஆட்சிபீடத்தை ஏற்றான்.
அந்த சமயத்தில் தமிழகத்திலிருந்து படையுடன் வந்த பாண்டு என்ற தமிழ் மன்னன் இலங்கையில் போர் தொடுத்து அனுராதபுரத்தை கைப்பற்றிக்கொண்டான். ஐந்து ஆண் டுகள் இந்த தமிழ் மன்னன் பாண்டுவின் கீழ் இலங்கை ஆட்சி இருந்தது. பாண்டு என்பது ஒரு பாண்டிய சிற்றரசனாக இருக்க வேண்டும். அவன் ஐந்தாண்டுகளில் மரணமடைய அவனது மகன் பாரிந்தன் முடிசூடிக் கொண்டான். மூன்றாண்டுகளில் அவனும் மரணமடைந்தான். இந்தக் காலகட்டத்தில் தாதுசேனன் பாண்டிய ஆட்சிக்கு எதிராக படை திரட்டிக் கொண்டு வந்து தாக்கினான். அதில் வெற்றியும் பெற்றான். இலங்கை முழுவதையும் கைப்பற்றி கொண்டு கிபி 459 லிருந்து 477 வரை மன்னனாக ஆட்சி செய்தான். இக்காலகட்டத்தில் நீர்ப்பாசன வசதிகளைச் செய்து இலங்கையில் விவசாயத்தைச் செழிக் க வைத்தான்.
அவனுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். முதலில் மகன் மொகல்லானன் பட்டத்துக்கு வந்தான். குடும்ப சண்டையினால் அவன் தப்பி ஓடவே இரண்டாவது மகன் காசியப்பன் மன்னனாக அரியணை ஏறினான். காசியப்பன் கி.பி 477 இலிருந்து கி.பி 495 வரை ஆட்சி செய்தான்.
முன்னர் தப்பி ஓடிய மொகல்லானன் பதினெட்டு வருடம் கழித்து இந்தியாவில் இருந்து ஒரு படையையும் சேர்த்துக் கொண்டு இலங்கை திரும்பினான். போர் நடைபெற்றது. அதில் காசியப்பன் கொல்லப்பட்டு மொகல்லானன் அரி யணை ஏறினான். அவனுக்குப் பின்னர் அவனது மகன் குமாரதத்துசேனன் என்பவன் மன்னனானான். அதன் பிறகு அவனது மகன் கீர்த்திசேனன் அரியணை அமர்ந்தான். அவன் ஒன்பது மாதத்தில் அவனது மாமன் சிவா என்பவனால் கொலை செய்யப்பட்டான். சிவாவின் ஆட்சியும் குறுகிய காலமே இருந்தது. இப்படியே செல்கிறது இலங்கை மன்னர்களின் அடுத்த இருநூறு ஆண்டு கால வரலாறு.
ஹத்ததாடன் என்பவன் கி.பி 659 இலிருந்து 667 வரை அரசனாக இருந்தான். அதன் பின்னர் மீண்டும் சில ஆண்டுகளில் கலவரம் ஏற்படவே, அதன் பின்னர் ஸ்ரீ சங்கபோதி கி.பி.667 லிருந்து 683 வரை ஆட்சி செய்தான். அப்போது இலங்கை முழுவதும் பௌத்த சமயம் பரவியிருந்தது. தமிழ் சேனாதிபதி ஒருவன் பௌத்த விகாரைக்கு மண்டபங்களை அமைத்து கொடுத்தமையையும் சூளவம்சம் குறிப்பிடுகிறது. ஸ்ரீ சங்கபோதி ஆட்சிக்காலத்தில் புலத்தி (பொலநறுவை) தலைநகரமாக விளங்கியது. ஸ்ரீ சங்கபோதியின் மறைவுக்குப் பிறகு பிரதம அமைச்சராக இருந்த பொத்தகுட்டன் என்ற தமிழ் அதிகாரி ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். பின் அவனும் கொல்லப்பட்டான். அதன் பின்னர் மானவர்மன் அரியணை ஏறினான். மானவர்மன் சமகாலத்தில் தமிழகத்தை ஆட்சி செய்த நரசிம்ம பல்லவ மன்னனுடன் நெருக்கமான உறவு கொண்டவன். அது தொடர்பான செய்திகளை அடுத்த பதிவில் சொல்கிறேன்.
தொடரும்...
No comments:
Post a Comment