Sunday, June 14, 2020

ஐரோப்பாவில் கொள்ளை நோய் சிறப்புத் தொடர்-6

இன்றைய நிலையில் ஐரோப்பிய நாடுகளின் மொத்த கவனமும் கடும் வீழ்ச்சிகண்ட பொருளாதாரத்தை விரைவாக கட்டி எழுப்ப வேண்டும் என்பதில் இருக்கின்றது என்பதைத்தான் அண்மைய கடந்த சில நாட்களின் செய்திகள் வலியுறுத்துகின்றன.  கொரோனா கொள்ளை நோய்த் தொற்று பரவல் என்பது கட்டுப்பாட்டிற்குள் வந்து, குறைந்து வருவதை கடந்த சில தினங்களின்  அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. பெரும் உயிரிழப்பை ஏப்ரல் மாதம் அனுபவித்த ஸ்பெயினில் இப்போது தினசரி இறப்பு எண்ணிக்கை பூஜ்ஜியமாகி இருக்கிறது. ஜெர்மனியில் நூற்றுக்கு மேற்பட்டோர் ஒரு நாளில் இறந்தனர் என்ற நிலை மாறி கடந்த சில நாட்களாக எண்ணிக்கை சராசரி ஆறு என்ற வகையில் இருக்கின்றது. இதனைக் கருத்தில் கொண்டு சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் ஐரோப்பிய நாடுகள் திட்டங்களை வெளியிட ஆரம்பித்துள்ளன.

ஜூன் 3ம் தேதி இத்தாலி சுற்றுலாத்துறையை ஆதரிக்கும் வகையில் விமானப் போக்குவரத்துச் சேவைக்கு விதித்திருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. இங்கிலாந்தும் இதே போல நடவடிக்கை மேற்கொண்டது என்றாலும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் யாராக இருந்தாலும் 14 நாட்கள் வீட்டுப் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதித்தது. இதனை ரெயின் ஏர், ஈசிஜெட், பிரிட்டிஷ் ஏர் ஆகிய விமானச் சேவை நிறுவனங்கள் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கின்றன. இவ்வகை கட்டுப்பாடுகள் எவ்வகையிலும் தங்களின் சேவைக்கு உதவாது என்றும் இங்கிலாந்து அரசு இந்தக் கட்டுப்பாட்டை உடன் நீக்க வேண்டும் என்றும் இவை வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஜூலை 1ம் தேதி  முதல் உலக நாடுகளுக்கானப் போக்கு வரத்து எல்லையை ஐரோப்பிய ஒன்றியம் திறக்க முடிவெடுத்துள்ளது. இது படிப்படியான நடவடிக்கையாகவே இருக்கும் என்றும், கொரொனா தொற்று பரவல் நிலையைப் பார்த்து ஒவ்வொரு ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளும் இந்த நடவடிக்கையை முடிவெடுக்கும் என்றும் தெரிகிறது.

இந்தச் சூழ்நிலையில்  மே மாதம் 25ம் தேதி அமெரிக்காவின் மினியாப்போலிஸ் மாநிலத்தில் காவல்துறை அதிகாரி ஒருவரின் கொடுஞ்செயலினால் கொலை செய்யப்பட்ட ஜோர்ஜ் ப்ளோயிட் (George Perry Floyd Jr.) இன்று உலகம் முழுவதும் இனவாத சிந்தனைக்கு எதிரான குரல் ஓங்கி ஒலிப்பதற்குக் காரணமாகியிருக்கின்றார். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர்  ஜோர்ஜ் ப்ளோயிட்.  மினியாப்போலிஸ் நகரில் கறுப்பர் என்ற இனவாத அடிப்படையில் அவரது கொலைக்கு ஒரு காவல்துறை அதிகாரி காரணமாகியிருப்பது அமெரிக்கா முழுவதும் காவல்துறையின் செயல்பாடுகளை அவசரமாக அரசு மீளாய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மிக அழுத்தமாக முன்வைக்கக் காரணமாகியிருக்கின்றது.

உலகின் வேறொரு பகுதியில் அநீதி இழைக்கப் பட்டாலும் அதற்குக் குரல் கொடுப்போம் என்று ஜெர்மனியிலும் மக்கள் இனவாதத்திற்கு எதிரான தங்கள் குரல்களைக் கடந்த சில நாட்களாக மிகப்பெரும் அளவில் உள்நாட்டில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஜெர்மனியின் பெரு நகரங்களான பெர்லின், ஸ்டுட்கார்ட், மியூனிக், ஹாம்பர்க், லைப்சிக் போன்ற பல்வேறு நகரங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு  எனக் கடந்த மூன்று நாட்களும் மிகப்பெரிய அளவில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடிய அளவில் இனவாதத்திற்கு எதிரான பொதுமக்கள் பேரணி நடைபெற்றது.

கொரோனா பேரிடர் கால முடக்கம் இருக்கின்ற சூழலிலும் இந்தப் பேரணி  இனவாத சிந்தனைகளுக்கு  எதிரா மக்களின் சிந்தனையில் எழுந்துள்ள கடும் கோபத்தை வெளிப்படுத்துவது என்ற நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டது.

ஜார்ஜ் ப்ளோய்டின் மரணம் ஏற்படுத்தியிருக்கும் சலனம் ஐரோப்பாவில், குறிப்பாக, ஜெர்மனியிலும் இனவாத சிந்தனை தெரிந்தும் தெரியாமலும் பல்வேறு வகையில் ஊடுருவி இருப்பதை மக்கள் வெளிப்படையாக இப்போது பேச வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்துள்ளது. இந்தப் பேரணிகள் ஒட்டுமொத்த  ஐரோப்பாவிலும் வெள்ளையரது நிற அடிப்படையிலான சிந்தனைப் போக்கு பற்றிய கருத்துக்களுக்கு மீளாய்வு செய்ய ஒரு வழி அமைத்துக் கொடுத்திருக்கிறது.

ஜோர்ஜ் ப்ளோய்டின் மரணம் ஐரோப்பிய நாடுகளில் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இனவாதத்திற்கு எதிரான குரலின் தொடர்ச்சியாக பெல்ஜியம் நாட்டில் கி.பி. 19ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னர் இரண்டாம் லியோபர்ட்டின் ( King Leopold II) சிலையைப் பொது மக்கள் அவமானப் படுத்தி நீக்கியுள்ளனர். பெல்ஜியம் வரலாற்றில் நீண்ட காலம், அதாவது 1865லிருந்து 1909 வரை ஆட்சி செய்த மாமன்னர் இவர். அண்ட்வெர்ப் நகரிலும் கெண்ட் நகரிலும் உள்ள இவரது பிரமாண்டமான சிலைகளைப் பொது மக்கள் அவமானப்படுத்தி தகர்த்து நீக்கியுள்ளனர்.

இது எனில்..?

தனது ஆட்சி காலத்தில் ஆப்பிரிக்காவின் கோங்கோ நாட்டைக் கைப்பற்றி அதன் முழு வளத்தையும் சுரண்டியதோடு கோங்கோ மக்களை அடிமைகளாக்கிக் கசக்கிப்பிழிந்து துன்புறுத்திய ஒருவன் என்று `புகழ்பெற்றவர்` இந்த மாமன்னர். இத்தனைக்கும் இந்த மன்னன் கோங்கோ நாட்டிற்கு ஒருமுறையும் நேரில் சென்றதில்லை. பெல்ஜியம் அரண்மனையில் அமர்ந்து சொகுசு வாழ்க்கையை ரசித்துக் கொண்டே ஆப்பிரிக்க நாட்டின் மக்களை வாட்டி வேலை வாங்கி அதில் பெற்ற செல்வத்தை ஐரோப்பாவிற்குக் கொண்டு வந்து தன் நாட்டை வளமாக்கிய மன்னர் இவர்.

பெல்ஜியம் நாட்டு மக்கள் இனவாதத்துக்கு எதிராக கோங்கோவில் அடக்குமுறையை வெற்றிகரபப்படுத்திய நிகழ்வுகளின் குறியீடான மன்னர்  இரண்டாம்  லியோபர்ட்டின் சிலையைத் தகர்த்ததன் வழி தங்கள் கோபத்தை வெளிப்படுத்திக்கொள்கின்ற அதே வேளை உலகிற்குத் தங்கள் இனவாத சிந்தனைக்கு எதிரான கருத்தியலைப் பதிய வைத்துள்ளனர். இதனைச் செய்தவர்கள் கோங்கோ நாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல. மாறாகா பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பொதுமக்களே தான்.
இதே போல இங்கிலாந்தின் ப்ரிஸ்டல் நகரில் அந்த நகருக்கு கடந்த சில தினங்கள் வரை முக்கியஸ்தராகக் கருதப்பட்ட (Edward Colston) சிலை தகர்த்தெரிந்து ஆற்றில் வீசப்பட்டது.

யார் இவர்?

1680ல் Royal African Company (RAC) என்ற நிறுவனத்தை உறுவாக்கி ஆப்பிரிக்காவிலிருந்து மக்களை வேற்று நாடுகளுக்குக் கொண்டு செல்லும் அடிமைத்தொழிலை மிகத் தீவிரமாகச் செய்தவர். ஏறக்குறைய 100,000 மேற்கு ஆப்பிரிக்க மக்கள் இவரால் கரீபியத் தீவுகளுக்கும் அமெரிக்காவிற்கும் அடிமைகளாக விற்கப்பட்டனர். அடிமை வாழ்க்கையின் கொடூரம் வார்த்தைகளால் எழுத முடியாதது. இன்று இந்த மனிதரின் உருவச் சிலை ப்ரிஸ்டல் நகருக்கு பெருமையல்ல என பொதுமக்களே நினைத்து உடைத்து எரிந்து விட்டார்கள். உடைத்ததும், வீசியதும் சரியா தவறா என்பது இன்று ஒரு முக்கியக் கேள்வியல்ல. மாறாக மக்கள் மனதிலிருந்து அடிமைத்தனத்தை வித்திட்டவர்கள் அகற்றப்படுவார்கள் என்பது இனவாதம் பேசுபவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்பதையே இச்செயல் வெளிப்படுத்துகிறது.   
கொரோனா கொள்ளை நோய் பரவலின் தாக்கம் ஐரோப்பாவில் குறைந்து வரும் வேளையில் தங்கள் நலனையும் ஒதுக்கி வைத்து ஒட்டுமொத்த உலக மக்களின் நீதிக்காக, இனவாதம் ஒழியவேண்டும் என்ற ஒற்றைச் சிந்தனையுடன் ஐரோப்பாவில் கடந்த சில நாட்களாக எழுந்துள்ள இந்த எழுச்சி வியக்க வைக்கின்றது!

Racial profiling என்ற சொல் இப்போது ஐரோப்பிய ஊடகங்களில் அதிகம் ஒலிக்கத்தொடங்கியிருக்கின்றது. இன ரீதியாக மக்களை அடையாளப்படுத்தி `இந்த இனத்தவர்கள் இப்படிப்பட்ட குற்றம் செய்வார்கள்` என்ற சிந்தனையைப் பற்றி இன்று கேள்விகள் எழத் தொடங்கியிருக்கின்றன.

இந்திய மற்றும் தமிழ்ச்சிந்தனையுடன் சாதி உயர்வு தாழ்வு பார்த்து இனவாதம் செய்யும் நபர்கள் இதனை தங்களுக்கான ஒரு எச்சரிக்கையாகக் காணவேண்டியது அவசியம் .இந்தியச்சிந்தனையில் சாதியை வைத்து 'இந்த சாதிக்காரர்கள் இப்படித்தான் செய்வார்கள்` என்ற பொதுவார்த்தைப் பயன்பாடு இருப்பதைப் பரவலாக நாம் எல்லோருமே அறிவோம். புலம் பெயர்ந்த தமிழர்கள் சூழலிலும் கூட இந்த வார்த்தைப் பிரயோகம் வழக்கில் ஒட்டிக் கொண்டு வருவதை நான் என் நேரடி அனுபவத்தில் இங்கு ஜெர்மனியிலும் நிகழ்வதை அறிவேன். இப்படிப்பட்ட சிந்தனையைத் தான் Racial profiling என்று இன்று கூறி கண்டிக்கும் வகையில் சமூக நீதியைக் காக்க முனைபவர்களும் இனவாதத்தைக் கண்டிக்க விரும்புபவர்களும் முன்னெடுத்திருக்கின்றார்கள்.

ஜோர்ஜ் ப்ளோய்டின் (Georg Floyd ) மரணம் ஐரோப்பிய நாடுகளில் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இனவாதத்திற்கு எதிரான குரலின் தொடர்ச்சியாக பெல்ஜியத்தில் மாமன்னர் இரண்டாம் லியோபர்டு அவர்களது சிலை எங்கெங்கு உள்ளதோ அவை அனைத்தையும் எவ்வளவு விரைவில் நீக்க முடியுமோ அவ்வளவு விரைவாக நீக்க வேண்டும் என்று இனவாத சிந்தனையை எதிர்க்கும் போராளிகள் இயங்கத் தொடங்கியிருக்கின்றனர். கடந்த   ஞாயிற்றுக்கிழமை பெல்ஜியத்தின் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் நகரில் ஏறக்குறைய 10,000 போராளிகள் இனவாதத்திற்கு எதிரான தங்கள் கருத்துக்களை முன்வைத்து பேரணியை நிகழ்த்தினர்.

பொதுமக்களில்   65,000 பேர் பெல்ஜியம் முழுதும் உள்ள மாமன்னர் இரண்டாம் லியோபர்ட்டின் சிலை நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் கையெழுத்திட்டு இருக்கின்றனர். மன்னர் இரண்டாம் லியோபர்ட்டின் சிலை மட்டுமன்றி அவரது பெயரில் அமைந்திருக்கின்ற சாலைகளின் பெயர்களை மாற்ற வேண்டுமென்றும் கோரிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளன.

காலனித்துவ பழமையில் (Colonial Legacy) அடிமைத்தனத்தைக் கொடூரமாக நிலைநாட்டிய வரலாற்றுச்சின்னங்களைப் பெருமைக்குரிய சின்னங்களாகப் பார்க்கக் கூடாது என்றும், இனவாதத்தை ஆதரிக்கின்ற இவ்வகையான சின்னங்கள் நீக்கப்பட வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.

பெல்ஜியத்தில் எழுந்துள்ள எழுச்சி போலவே இங்கிலாந்திலும் வெவ்வேறு பகுதிகளில் இனவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் போராட்டங்கள் என்பன நடைபெறுகின்றன. விக்டோரியா மகாராணி காலத்து நினைவுச் சின்னங்கள் சில இத்தகைய வகையில் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு இருக்கலாம். லண்டனில் அடிமைத்தனத்தை வெளிப்படுத்தும் வகையிலான `அடிமைகள் அருங்காட்சியகம்` (Slavery Museum) ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் இப்போது ஒரு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கின்றது. அதுமட்டுமின்றி லண்டன் நகரில் இனவாதத்தினால் கொல்லப்பட்ட பொதுமக்களுக்குச் சிலைகளும் வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

ஒடுக்கப்பட்ட மற்றும் அடிமைகளாக்கப்பட்டவர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையிலும், இனி வருங்காலங்களில் இத்தகைய மனிதாபிமானமற்ற செயல்கள் நடைபெறாமல் இருக்கவும் இத்தகைய மனமாற்றமும் எதிர்ப்புக் குரல்களும் காலத்தின் தேவையே!

ஐரோப்பாவில் இனவாத சிந்தனைக்கு எதிராக எழுந்திருக்கும் இந்த எழுச்சி நிச்சயமாக காலனித்துவ ஆட்சி செய்த இங்கிலாந்து, பெல்ஜியம், பிரான்சு, போர்த்துகல் போன்ற நாடுகள் மட்டுமன்றி, ஏனைய மேற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் எதிரொலிக்கும்.   இந்த நூற்றாண்டில் கொரோனா கொள்ளை நோய் ஏற்படுத்தியிருக்கும் வாழ்வியல் மாற்றத்தைப் போன்றதொரு சிந்தனை மாற்றத்திற்கு இது வழிவகுக்கும்!






தொடரும்..

No comments:

Post a Comment