covid-19 உலகம் முழுதும் ஏற்படுத்தியிருக்கும் பல்வேறு வகையான அதிர்வுகளில் மிக முக்கியமான ஒன்றாக இருப்பது பொருளாதாரம் மற்றும் அது சார்ந்த எல்லாமும். ஐரோப்பாவைப் பொறுத்தவரை ஏறக்குறைய எல்லா நாடுகளும் பாதிப்பிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொண்டு ஓரளவு இயல்பு நிலைக்கு வரத் தொடங்கிவிட்டன. இங்கிலாந்து, ரஷ்யா, துருக்கி ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே இப்பொழுது மிகத்தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றன, கொரோனா பாதிப்பு எண்ணிக்கையின் அடிபப்டையில்.
இன்று உலகம் முழுவதும் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குப் பயணம் செய்வது என்பது கட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக மாறியிருப்பதை நம்மால் நினைத்துப் பார்க்க முடியவில்லை தான். தனிப்பட்ட வகையில் இந்த நான்கு மாதங்களுக்குள் ஏறக்குறைய 10 விமான பயணங்களாவது நான் சென்றிருப்பேன், அலுவலக பயணம் அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக. அவை எதுவுமே சாத்தியப்படவில்லை என்பது வியப்பாக இருக்கிறது. கண்களை மூடி நான் அறிந்த வானத்தைக் கற்பனை செய்து பார்த்தால் நீலவானில் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பறந்து செல்லும் விமானங்கள் போட்ட வெள்ளைக் கோடுகள் நிறைந்திருக்கும் வானத்தில் இன்று மேகங்கள் மட்டுமே தெரிகின்றன; பறவைகள் மட்டுமே பறக்கின்றன. விமானங்கள் இல்லாத வானத்தைப் பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் நமது காலத்திலேயே நமக்கு அமைந்திருக்கின்றது என்று நான் வியந்து தான் பார்க்கிறேன். அந்த அளவிற்கு நமக்கு மிகப் பழகிப்போன வாழ்க்கை முறையிலிருந்து மாறுபட்ட வாழ்க்கை முறையை இந்த கொரோனா கொள்ளைநோய் காலம் நமக்கு வழங்கி இருக்கின்றது.
ஐரோப்பாவில் ஒவ்வொரு நாடுகளும் விமானச் சேவையை ஆரம்பிக்கத் தொடங்கிவிட்டன. மூன்று மாத காலம் செயல் இழந்து கிடந்தன விமானச் சேவைகள். இந்தக் காலகட்டத்தில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நஷ்டத்தை ஈடு கட்டுவது என்பது விமான சேவை நிறுவனங்கள் ஒவ்வொன்றுக்கும் இருக்கின்ற மிகப்பெரிய சவால் தான்.
ஐரோப்பாவில் மிகக் குறைந்த விலையில் விமான சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் பட்டியலில் முதலிடம் பிடிப்பது ரைன் ஏர் (Ryanair) விமான சேவையகம். அயர்லாந்தின் டப்ளினைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இது Lauda, Buzz, Malta Air என்ற மேலும் 3 துணை நிறுவனங்களையும் இணைத்துக்கொண்ட வகையில் இயக்கும் மலிவு விமானச் சேவை நிறுவனம். ஐரோப்பாவின் பல நகரங்களுக்கு இந்த விமான சேவைகள் வழங்கப்படுகின்றன.
இந்த விமானச் சேவை நிறுவனத்தில் சேவை அதிகாரிகளாகப் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாதச் சம்பளமாக 1200 லிருந்து 2200 யூரோ அமைகிறது. பயண முடக்கம் ஏற்பட்ட பின்னர் எந்த பயணங்களும் அனுமதிக்கப்படாத நிலையில் மூன்று மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் இருக்கின்ற இந்த ஊழியர்களுக்குக் ’குறைந்த நேரப் பணி’ என்ற அடிப்படையில் மாதச்சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. 500 லிருந்து 750 யூரோ மாதச் சம்பளம், அத்துடன் கூடுதலாக 250 யூரோ சலுகை என்ற வகையில் இந்த நேரத்தில் ஊழியர்களைச் சமாளிக்கிறது இந்த நிறுவனம். சம்பளம் குறைக்கப்படுவது நிகழ்ந்தாலும் வேலை பறிபோய் விடுமோ என்ற அச்சமும் இந்த ஊழியர்களுக்கு இருப்பது அண்மையில் இது தொடர்பில் நிகழ்த்தப்பட்ட ஒரு கள ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுமக்கள் அதிகமாக வெளியே செல்வது அல்லது அதனால் ஏற்படும் செலவுகள் என்பது குறைந்து போன நிலையில், ’குறைவான சம்பளமாக இருந்தாலும் கூட பரவாயில்லை.. வேலை பறி போய் விடக் கூடாது’ என்ற சிந்தனையே பெரும்பாலான மக்களின் முடிவாகவும் அமைகின்றது.
ஜெர்மனியைப் பொறுத்தவரை சுற்றுலா என்பது ஒவ்வொரு தனி மனிதரின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு நடவடிக்கையாக அமைந்துவிட்டது. பொதுவாகவே மார்ச் மாதம் தொடங்கி மக்கள் பல்வேறு பகுதிகளுக்கு ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் அல்லது நீண்ட விடுமுறை என்ற வகையில் செல்வது மிக இயல்பு. இதற்காக ஜெர்மானியர்கள் முன்னதாகவே பயண ஏற்பாடுகளைச் செய்து ஐரோப்பாவில் இயங்கிக் கொண்டிருக்கின்ற பல்வேறு சுற்றுலா நிறுவனங்களின் விமான சேவைகளை முன்பதிவு செய்து வைத்திருப்பார்கள். இப்படிப் பட்டோர் எந்த வகையில் தாங்கள் முன்பதிவு செய்து செலுத்திய கட்டணத்தை மீண்டும் பெறுவது என்று விமான சேவை நிறுவனங்களை அணுகுகின்றனர். சில விமான சேவை நிறுவனங்கள் பயணிகள் கட்டிய பணத்தை திரும்பப் பெறுவதில் பொதுமக்களுக்கு உதவும் நோக்குடன் செயல்பட்டாலும் முழுமையான தொகையை அவர்களால் தர முடியாது போவதையே விமானச் சேவை நிறுவனங்கள் வழங்குகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன. சில சேவை நிறுவனங்கள் ஏற்கனவே பயணங்களைப் பதிந்து கொண்டு ஆனால் பயணம் தடைபட்ட நிலையில் பயணிகளுக்கு வவுச்சர் வழங்குகின்றார்கள். இதன்வழி அவர்கள் மற்றுமொரு புதிய பதிவு செய்துகொண்டு தங்கள் பயணத்தை கொரோனா கொள்ளைநோய் பாதிப்புகள் முழுமையாகத் தீர்ந்த பின்னர் பயணம் மேற்கொள்ள உதவும் வகையில் அமைய ஒரு வாய்ப்பாக அமையும்.
ஐரோப்பா மட்டுமன்றி உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு விமானச் சேவை வழங்கி இயங்கிவரும் நிறுவனங்களுள் ஒன்று லுப்தான்சா. ஜெர்மனியின் தேசிய விமான சேவை நிறுவனமான லுப்தான்சாவை பொருளாதார நெருக்கடியிலிருந்து காப்பாற்றும் வகையில் 9 பில்லியன் யூரோ உதவித்தொகையை சான்சலர் ஏஞ்சலா மெர்கல் அவர்கள் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளதை அவர் மே மாதமே அறிவித்திருந்தார். உள்நாட்டிலிருந்து உதவித்தொகை வழங்கப்படும் என்பதோடு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தும் ஒரு குறிப்பிட்ட பொருளாதார உதவி இந்தச் சேவை நிறுவனத்திற்குக் கிடைக்கும் வகையில் ஜெர்மனி அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது.
ஜெர்மனியைப் பொறுத்தவரை தற்சமயம் விமான நிலையத்திலிருந்து உள்ளூரில் விமான சேவையும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றுக்குமான விமான சேவையும் தொடங்கப்பட்டு விட்டன. ஸ்டுட்கார்ட் விமான நிலையத்திலிருந்து துருக்கி, நெதர்லாந்து, கிரேக்கம் போன்ற நாடுகளில் சில விமான நிலையங்களுக்கு ஜெர்மனியிலிருந்து விமானங்கள் பறக்கத் தொடங்கிவிட்டன.
எப்போதும் கூட்டமும், நெரிசலும் நீண்ட வரிசையம் மட்டுமே இயல்பு என நமது மனதில் பதிந்த காட்சிகளைக் கூட பொய்யாக்கி விட்டன கொரோனா கால நிகழ்வுகள். ஒவ்வொரு வாரமும் ஸ்டுட்கார்ட் விமான நிலையத்திலிருந்து அலுவலகப் பணிகளுக்காகப் பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகள் காத்திருக்கும் இடங்கள் இன்றோ வெறிச்சோடிப் போய்க் கிடக்கின்றன. யாருமே நினைத்துப் பார்த்திருக்க முடியாத ஒரு காட்சி இது.
தன் உயிரைப் பற்றிய அச்ச உணர்வு தான் ஒரு மனிதருக்கு இருக்கின்ற உணர்விலேயே மிகவும் வலிமையானது. உயிரை முதலில் காப்பாற்றிக் கொள்வோம்.. வேலையோ அல்லது அது தொடர்பான பயணமோ எதுவானாலும் சரி எல்லாம் இரண்டாம்பட்சம்தான்.. அல்லது அவை முக்கியமல்ல என்ற சிந்தனையை மனிதருக்கு இந்த கொரோனா காலம் மிக அழுத்தமாக தெளிவுபடுத்தி இருக்கிறது.
பொருளாதாரத் தேடலிலும், உலகம் நம்மை இழுத்துக்கொண்டு சென்ற பாதையிலும் நம்மை மறந்து ஓடிக்கொண்டிருந்த நாம் ஒவ்வொருவரும் நின்று நிதானித்து இன்று நம்மைப் பற்றி சிந்திக்கின்றோம்; நமது தேவைகள் பற்றி யோசிக்கிறோம்; நம் உடல்நலனில் அக்கறையும் கவனமும் வைக்கின்றோம். எல்லாவற்றிற்கும் மேலாக வீட்டில் இருப்பதையே ஒரு அனாகரிக செயலாக நினைத்துக் கொண்டு வெளியில் ஓடிக்கொண்டிருந்த நம்மில் பலர் என்று வீட்டுக்குள் இருந்தே உலகத்தைப் பார்க்கும் வித்தையைக் கற்றுக் கொண்டிருக்கின்றோம். இந்த சூழ்நிலையிலும் புதியபுதிய கற்றல்கள் நமக்கு நடந்துகொண்டுதான் இருக்கின்றன. வெளியில் ஓடி ஓடிச் சென்று அனுபவத்தை தேடிக்கொண்டிருந்த நாம் என்று வீட்டுக்குள் இருந்தவாரே கணினி வழியாகவும் இணையச் சேவையின் வழியாகவும் உலக நடப்புக்களை அறிந்து கொள்கின்றோம்.
வீட்டிற்குள் முடங்கிக் கிடப்பது சுய வளர்ச்சியை முடக்கி விடாது. இந்த ஊரடங்கு காலத்திலும் இணைய தொழில்நுட்பம் வழங்கி இருக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு புதிய புதிய இணையவழி சேவை நிறுவனங்கள் இப்போது காளான்கள் போல முளைத்துவிட்டன. தடைகளையும் வரமாக நினைத்து செயல்படுபவர்கள் இந்தக் காலகட்டத்தில் தங்கள் அறிவுத்திறனைப் பயன்படுத்தி புதிய தொழில் முயற்சிகளைத் தொடங்கிவிட்டார்கள். Zoom, WebEx, GoogleMeeting, GotoMeeting, StreamYard போன்ற மென்பொருட்கள் இன்று பாமர மக்களையும் சென்றடையத் தொடங்கிவிட்டன.
2020 ஒட்டு மொத்த மனித குல செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு ஆண்டாக அமைந்து விட்டது. இந்த மாற்றங்களை ஆரோக்கியமாக ஏற்றுக்கொண்டு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை செயல்படுத்துவதே சிறப்பு.
தொடரும்...
No comments:
Post a Comment