Friday, July 21, 2023

மணிப்பூர் வன்கொடுமை

 மணிப்பூர் வன்கொடுமை மனதை ஆக்கிரமித்து வருத்துகின்றது.

என்ன மனிதர்கள் இவர்கள்.. என்ன நடக்கின்றது என திகைத்துப் போயிருக்கின்றேன். இப்படியெல்லாம் கூட நடக்க முடியுமா என அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றேன்.
பாலியல் வன்கொடுமை நடந்து இவ்வளவு நாட்களுக்குப் பிறகு இச்செய்தி வெளியே வருகின்றது என்பது இன்னும் அச்சமூட்டுகின்றது. CNN, BBC, The New York Times, Sky News என பல அயல் நாட்டுப் பத்திரிக்கைகளில் இச்செய்தியை இன்று முக்கியச் செய்தியாக வெளியிட்டிருக்கின்றன.
தலைகுனிவு என்பதா? வெட்கப்படுவதா.. எழுதுவதற்கே வார்த்தைகள் வராதபடி கோபமும், வெறுப்பும், ஏற்படுகின்றது. பாதிக்கப்பட்ட அப்பெண்களை நினைக்கும் போது என் மனம் அழுகின்றது.
ஆண்கள் அப்பெண்களை கொடுமைபடுத்திக் கோண்டே இழுத்துச் செல்லும் போது கூடவே வயதில் மூத்தோரும் வருகின்றனர். அவர்களுக்குக் கூட இது மனிதாபிமானமற்ற ஒரு செயல் எனப் புரியவில்லையா? தடுத்து நிறுத்த வேண்டாமா?
காலம் காலமாக எதிர்தாக்குதல் செய்வது என்றாலே பெண்களை உடல் ரீதியாகத் துன்புறுத்தி மகிழ்ச்சி காணும் வெறித்தனமான செயல் இன்றும் இப்படி மிகக் கொடூரமாகத் தொடர்கின்றது. இப்படி இன்னும் எத்தனை கொடுமைகளைப் பார்ப்பது?
ஆண்கள் இப்பெண்களைக் கொடுமை படுத்தி நிர்வாணமாக்கி அழைத்து வருவதை அதே ஆண்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் கூட எதிர்க்கவில்லையே.. தடுக்கவில்லையே ஏன் ? அவர்களுக்கு தனது சக சகோதரி ஒருவர் துன்பப்படுகின்றாளே.. அவளைக் காப்பாற்றுவோம்.. கொடூர மனம் படைத்த தங்கள் குடும்பத்தவர்களிடமிருந்து அப்பெண்ணை பாதுகாப்போம் என்ற எண்ணம் எழவில்லையே ஏன்?
அவர்கள் தங்களைத் தாக்கி விடுவார்கள் என்ற அச்சமா?
இல்லை இது அந்த வேற்று இனத்து பெண்ணுக்கு நடக்கட்டும் என அவர்களும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்களா..?
பெண்களின் மனமும் கொடூரமாகிவிட்டதா?
நாகரிகம் அடைந்துவிட்டதாக பேசிக் கொண்டிருக்கின்றோம்.. ஆனால்.. காட்டு வாசிகளுக்குள் இருக்கும் ஒழுக்கம் கூட தொலைந்து போன வகையில் தான் இந்த நிகழ்வு இருக்கின்றது.
இதில் ஈடுபட்ட அத்தனை பேரும் பிடிக்கப்பட்டு சட்டப்படி அதிகபட்ச தண்டனை கிடைத்தால் தான் நம் மனம் ஆறும்.
-சுபா

No comments:

Post a Comment