Sunday, July 30, 2023

ஓப்பன்ஹைமர்



 இரண்டாம் உலகப்போர் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றிய செய்திகள் நான் மலேசியாவில் பினாங்கில் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே ஜப்பானிய ராணுவத்தார் ஏற்படுத்திய பேரழிவுகள்.. குறிப்பாக அன்றைய மலாயா, தாய்லாந்து போன்ற பகுதிகளில் ஜப்பானிய ராணுவம் ஏற்படுத்திய கொடூரமான வரலாற்று பின்னணி பற்றிய செய்திகள் பாடங்களின் வழியாக எங்களுக்கு அறிமுகமாகி இருந்தது. மிக நீண்ட காலமாக ஜப்பானியர்களைப் பார்த்தாலே பேசுவதற்கும் பிடிக்காத ஒரு மனநிலை எனக்கு மட்டுமல்ல.. மலேசியாவில் பிறந்து வளர்ந்த பலருக்கும் வரலாற்று பின்னணியின் அடிப்படையில் இருக்கின்ற ஒரு இயல்பான ஒரு மனநிலை தான்.

ஜெர்மனிக்குப் புலம்பெயர்ந்து விட்ட கடந்த ஏறக்குறைய 20 ஆண்டுகள் காலகட்டத்தில் ஹிட்லர் தலைமையிலான நாசி குழுக்கள் ஏற்படுத்திய மனித குலத்துக்கு எதிரான நடவடிக்கைகள் பற்றியும் இத்தாலியில் முசோலினி செயல்படுத்திய பாசிச அரசியல், அதன் பின் விளைவுகள் பற்றியும் என்னால் நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது.
அண்மைய காலமாக ரஷ்ய உக்கிரேன் இரு நாடுகளுக்குமான போர், இன்று ஐரோப்பிய நிலப்பகுதியில் மாபெரும் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் காலகட்டம் இது.
போர்கள் என்றைக்குமே நன்மையை செய்ததில்லை. போர்களினால் ஏற்படுவது அழிவு மட்டுமே. மனிதர்களுக்கு ஏற்படுகின்ற உயிர்ச்சேதம் என்பதும் உடல் ரீதியான பாதிப்புகள் என்பது ஒரு புறம் இருக்க, அழகிய இந்த பூமி போர்களினால் சுற்றுச்சூழல் சிதைக்கப்பட்டு அழிவை சந்தித்துக் கொண்டே இருக்கின்றது.
அந்த அழிவுகளில் உச்சகட்ட அறிவாக மனிதன் உருவாக்கி வைத்திருப்பது அணு ஆயுதங்கள்.
ஓப்பன்ஹைமர் திரைப்படம் பார்ப்பதற்கு நேற்று ரம்யா-அருள் குடும்பத்தாருடன் சென்றிருந்தோம். இங்கு லியோன்பெர்க் கிராமத்தின் ஒரு பகுதியில் தான் உலகின் மிகப்பெரிய ஐமேக்ஸ் (IMAX) திரையரங்கு இருக்கிறது. ஐமேக்ஸ் திரைக்கு என்றே பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட ஓப்பன்ஹைமர் திரைப்படத்தை நேற்று அதன் தொழில்நுட்ப பிரம்மாண்டத்துடன் பார்த்தேன்.
அணு ஆயுத தந்தை என அழைக்கப்படுகின்ற ஓப்பன்ஹைமரின் முழு வரலாற்றையும் மூன்று மணி நேர திரைப்படத்திற்குள் அடக்கி விட முடியாது என்றாலும் கூட அவர் வாழ்வின் முக்கிய தருணங்களைத் திரைப்படம் வெற்றிகரமாகப் பதிவாக்கி இருக்கிறது.
ஜெர்மனியில் இருந்து வெளியேறி அமெரிக்காவிற்குத் தஞ்சம் புகுந்த ஒரு யூத குடும்பத்தில் பிறந்த ஓப்பன்ஹைமர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்று பிறகு தனது முனைவர் பட்ட ஆராய்ச்சிக்காக ஜெர்மனிக்கு கியூட்டிங்கன் பல்கலைக்கழகத்திற்கு வருகின்றார். கல்வி பயின்று பிறகு மீண்டும் அமெரிக்கா திரும்பி அங்கு பெர்க்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியைத் தொடங்குகின்றார்.
இடதுசாரி சிந்தனையில் அவருக்கு ஈர்ப்பு அதிகமாக இருந்தாலும் தன்னை சுற்றியுள்ள சூழ்நிலையை உணர்ந்து கொண்டு தனது கவனத்தை அணு ஆய்வில் செலுத்துகின்றார். யுரேனியம் ஏற்படுத்தக்கூடிய பின்விளைவுகள் பற்றி அறிந்திருந்தாலும் அணு ஆயுத தயாரிப்பு இரண்டாம் உலகப்போரை நிறுத்தும் என்ற நம்பிக்கையில் இவர்களது ஆய்வு குழு செயல்படுகிறது.
ப்ராஜெக்ட் மேன்ஹேட்டன் என்ற திட்டத்தை வகுக்கின்றார்கள். நியூ மெக்சிகோ மாநிலத்தில் ஒரு புதிய நகரை உருவாக்கி அங்கு விஞ்ஞானிகள் குடியேறி ரகசியமாக இந்த திட்டத்தை வடிவமைக்கின்றார்கள். சோதனைத் திட்டத்திற்கு ட்ரினிட்டி என்ற பெயரை வழங்குகின்றார்.
ஓப்பன்ஹைமரின் ஆய்வுக் குழு தயாரித்த அணுகுண்டுகள் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி ஜப்பானின் ஹிரோஷிமா நகரிலும் 9ஆம் தேதி நாகசாகி நகரிலும் போடப்படுகின்றன. அது மாபெரும் மனித குல அழிவை ஏற்படுத்துகின்றது. ஏறக்குறைய இரண்டரை லட்சம் மக்கள் இறந்து போகின்றார்கள். யுரேனியம் கதிர்வீச்சுகளின் தாக்கம் இப்பகுதிகளில் மிக நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து அதன் தாக்கத்தை வழங்கிக் கொண்டே இருந்தது.
ஓப்பன்ஹைமர் வாழ்க்கை இதற்குப் பின் மாறுகின்றது. தான் செய்தது மனித குலத்திற்கும் இந்த உலகத்திற்கும் மிகப்பெரிய கேடு என்று நினைத்து உளவியல் ரீதியாக தன்னை குற்றவாளியாக நினைத்து வருத்திக் கொள்கின்றார். அதன் பின்னர் அவர் மீது அவரது இடதுசாரி சிந்தனை ஈர்ப்பு தொடர்பான பின்னப்பட்ட கதைகள்.. அவர் அமெரிக்காவிற்கு எதிராக ரகசியங்களை ரஷ்யாவிற்கு வழங்கியிருக்கலாம் என்ற வகையான பொய்யான குற்றச்சாட்டுகளை அவர் மீது சுமத்தப்பட்டு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு அதில் அலைக்கழிக்கப்படுகின்றார். இறுதியில் அவர் நாட்டிற்கு துரோகம் செய்யவில்லை என்ற முடிவு வந்தாலும் அவருக்கான செக்யூரிட்டி கிளியரன்ஸ் தருவதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளிக்கவில்லை. இதனை திரைப்படம் மிகுந்த கவனம் செலுத்தி இப்பகுதியை விரிவாக காட்டுகின்றது.
திரைப்படம் முடிந்து வந்த பின்னரும் கூட ஓப்பன்ஹைமர் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் மனதை விட்டு அகலவில்லை. ஜப்பான் ஜெர்மனி ஆகிய இரண்டு நாடுகளுமே இரண்டாம் உலகப் போரின் காலத்தில் ஏற்படுத்திய அழிவுகள் இன்னும் கூட முழுமையாக உலகிற்கு வெளிவந்திருக்கின்றதா என்பது கேள்விதான். ஏனென்றால் அவ்வப்போது பல செய்திகள் புதிது புதிதாக இன்னும் கூட வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஜப்பானிய ராணுவ வீரர்கள் சீனாவில் இருந்த சீனப் பெண்களுக்கும் மலாயாவில் இருந்த சீனப் பெண்களுக்கும் பாலியல் ரீதியாக ஏற்படுத்திய கொடுமைகள் வார்த்தைகளால் விவரிக்கப்பட முடியாத கொடுமைகள். ஜப்பானிய அரசு கடந்த நூற்றாண்டின் இறுதியில் இதற்காக சீனப் பெண்களிடம் மன்னிப்பு கேட்ட நிகழ்வும் வரலாற்றில் நிகழ்ந்தது.
அணு ஆயுத நாடுகளாக இன்று அமெரிக்கா மட்டுமின்றி ரஷ்யா இந்தியா உட்பட மற்றும் பல நாடுகள் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளாக மாறி இருக்கின்றன. யுரேனியம் ஏற்படுத்தக்கூடிய தாக்குதல் என்பது எத்தகைய அழிவை ஏற்படுத்தக்கூடும் என்பது தெரிந்தும் கூட அதற்கும் பன்மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஹைட்ரஜன் அணு குண்டுகளை தயாரிக்கின்ற மனநிலைக்கு மனித குலம் சென்று விட்டது.
இந்த் திரைப்படத்தில் பல காட்சிகள் நம் மனதில் ஆழமாக பதிகின்றன. குறிப்பாக ஓப்பன்ஹைமர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் இருவரும் சந்திக்கும் தருணங்கள்.. காதலியின் மறைவுக்குப் பின்னர் தன்னை வருத்திக் கொள்ளும் காட்சிகள்.. ஜப்பான் சரணடைந்துவிட்ட பின்னர் ஓப்பன்ஹைமர் வழங்கும் உரை - மனதில் தன்னை வருத்திக்கொண்டு வெளியே தனது அறிவியல் கருத்துக்களை உயர்த்திப் பேசும் காட்சிகள்.. விசாரணை கமிஷனின் போது ஒவ்வொரு தருணத்திலும் அவர் அனுபவிக்கின்ற மன உளைச்சல் என திரைப்படத்தின் பல பகுதிகள் மனதை உருக்கும் காட்சிகளாக அமைகின்றன.
ஒரு நல்ல திரைப்படம் அது பார்த்து முடிந்த பின்னர் நம்மை பல தேடுதல்களுக்கு ஆட்படுத்த வேண்டும். அந்த திரைப்படத்தை ஒட்டிய பல தகவல்களைத் தேடி கண்டுபிடித்து அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை வளர்க்க வேண்டும் என்று நான் பொதுவாகவே விரும்புவேன். அந்த வகையில் இந்தத் திரைப்படம் அக்காலகட்டத்தின் அமெரிக்க அரசியல் நுணுக்கங்களை பற்றி அறிந்து கொள்ள பெரும் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றது.
-சுபா






No comments:

Post a Comment