Sunday, December 8, 2013

Robert Langdon is back..! - Battle of Marciano 13

இன்று இன்ஃபெர்னோவில் குறிப்பிடப்படும் மேலும் ஒரு ஓவியத்தைப் பற்றி விவரிக்கலாம் என நினைக்கின்றேன்.

Battle of Marciano

ப்ளோரன்ஸில் பாலாஸியோ வெச்சியோவில் உள்ள The Hall of Five Hundred  பகுதிக்குள்ளே ஒளிந்து கொண்டே தடையங்களைத் தேடிக் கொண்டிருக்கும் ரோபெர்ட், சியென்னா இருவரும் இந்த ஓவியத்தைப் பார்ப்பது போல ஒரு பகுதி அமைத்து இந்த மார்சியானோ போர் பற்றிய தகவல்களை இணைத்திருக்கின்றார் ப்ரவுன்.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் அனைத்து ஓவியங்களுமே வஸாரியினுடையது. அதில் தனித்துவம் வாய்ந்த ஒன்றாக குறிப்பிட்டு தான் தேடிக் கொண்டு வந்த தகவல் ஒரு குறிப்பிட்ட ஓவியத்தில் இருப்பதாகச் சொல்லி சியன்னாவிடம் இந்த ஓவியத்தைக் காட்டுகின்றார். 35வது அத்தியாயத்தில் இது தொடர்பாக வாசிக்கலாம்.


courtesy: http://en.wikipedia.org/wiki/File:Scannagallo_Vasari.jpg

இத்தாலியின் டஸ்கனியில் 1554ல் நடைபெற்ற ஒரு போர்.  இப்போரில் சியென்னா அரசு ப்ளோரன்ஸ் அரசிடம் தோற்றது. இப்போரின் முடிவாக சியன்னா டஸ்கனியின் ஒரு பகுதியாகவே ஆனது. இன்று வரை அது தொடர்கின்றது.

கோஸிமோ மெடிஸி அப்போதைய பேரரசர் 5ம் சார்ல்ஸின் உதவியை நாடி இந்தப் போரில் ப்ளோரன்ஸ் அரசுக்குச் சாதகமாக உதவச் செய்து சியென்னாவை போரில் முறியடித்தார்.

இந்த ஓவியத்தில் குறிப்பாக ரோபெர்ட் தேடிக்கண்டுபிடிப்பது அந்த ஓவியத்தின் மேல் எழுதப்பட்டிருக்கும் லத்தின் எழுத்துக்கள் - Cerca Trova  என்பதே அது.

சியென்னா போர் வீரர்களின் கொடி பச்சை நிறமானது. அதில் இந்த லத்தீன் சொற்கள் பொறிக்கப்பட்டிருக்கும் வகையில் வஸாரி ஓவியத்தை உருவாக்கியிருக்கின்றார். Cerca Trova  என்ற சொல் டாண்டேயின் டிவைன் கோமிடியில் வருகின்ற ஒரு பயன்பாடு. இது மிஅக் நுணுக்கமாக சிறிய எழுத்தில் பொறிக்கப்பட்டிருக்கின்றது இவ்வோவியத்தில்.

சியென்னா படைகள்  தமது சுதந்திரத்திற்காகப் போராடுவதை வெளிப்படுத்தும் வண்ணமாக இது அமைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் போரிலோ நடந்தது வேறு. சுதந்திரத்தைத் தேடுவதாகக் கொடியேந்தி போறிட்ட சியென்னா வீரர்கள் போரிலே தோல்வியைத் தழுவினர்.

கோஸிமோ மெடிஸி, தனது வெற்றியை வெளிப்படுத்தும் வகையில் வஸாரியைக் கொண்டு இந்த ஓவியத்தை உருவாக்கும் பணியை அளித்தார். அதில் தோற்றுப்போன சியென்னா படைகள் சுதந்திரம் வேண்டும் என ஏந்திய கொடிகளோடு உலவுவதைப் போல செய்வித்து அதனை கேலிக்குறியதாக ஆக்கும் வகையிலான நோக்கத்திலேயே செய்வித்தார்.

டான் ப்ரவுன் Cerca Trova வை நூலில் பயன்படுத்தியிருக்கும் வகை சுவாரஸியமானது. தோற்றுப்போனால் இறப்புதான் முடிவு. கதாநாயகன் ரோபெர்ட்டிற்கு இது தான் தோர்றுப்போனால் நடக்கும் என்னும் விஷயத்தை மறைமுகமாகச் சொல்லும் ஒரு சித்திரமாகவே இது நாவலில் காட்டப்பட்டிருக்கின்றது.

ஓவியப் பார்வை தொடரும்..

சுபா

No comments:

Post a Comment