Saturday, February 1, 2014

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 63

பதிவு 63

திருவிடைமருதூர் கட்டளை மடத்தில் தங்கியிருந்த மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்கு வைத்தியம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. ஆனால் பெரிதாகப் பலன் ஏதும் தெரியவில்லை. மாணவர்கள் ஒரு நாள் விட்டு பாடம் கேட்க வந்து சென்று கொண்டிருந்தார்கள். அச்சமயத்தில் பிள்ளையவர்களும் ஸ்ரீ சிவஞான யோகிகள் வரலாற்றை எழுதும் பணியில் இறங்கியிருந்தார்கள்.  அந்தச் சரித்திரத்தை பெரிய காவியம் போல படைக்க எண்ணியிருந்தாராம். அதற்காக வரலாற்று விஷயங்களை மூல நூலிலிருந்து விரிவாக்கிச் சொல்ல, நாடு நகரச் சிறப்பையெல்லாம் எடுத்துக் காட்டி நூலை எழுதத் தொடங்கியிருந்தார் பிள்ளையவர்கள்.

பாடம் கேட்க உ.வே.சா வும் ஏனைய மாணவர்களும் செல்லும் போது இரவிலும் சில நாட்கள் அங்கு தங்கியிருந்து பேசி வருவார்களாம். சங்கீத ஞானம் பெற்றிருந்த உ.வே.சா சில நேரங்களில் ஆசிரியர் மனம் குளிர கீர்த்தனைகளைப் பாடுவாராம். அதிலும் குறிப்பாக நந்தனார் கீர்த்தனைகளை இசையொடு பாடுவாராம். இதனைப் பாடும் போது பிள்ளையவர்கள தன்னை மறந்து ரசிப்பாராம்.  தனக்கு இசை ஞானம் இல்லாதபோதிலும் இசையுடன் வரும் அந்த கீர்த்தனைகள் சொல்லும் பக்தி நிலையை நினைத்து தன்னை இழந்திருப்பார் போலும். உ.வே.சாவின் குறிப்புக்களில் அத்தியாயம் 62லிருந்து இப்படி அறிகிறோம்.

சங்கீதத்தில் சிறிதும் பயிற்சியில்லாத ஆசிரியர் எல்லாம் தளர்ந்திருந்த அந்த நிலையில் அக்கீர்த்தனங்களில் மனம் ஒன்றித் தம் நோயை மறந்தார். அவரை அறியாமலே சங்கீதமும் கீர்த்தனங்களின் எளிய நடையும் அவர் உள்ளத்தைக் கவர்ந்தன. முக்கியமாக நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளைக் கேட்கும்போது அவர் அடைந்த ஆறுதல் மிகுதியாக இருந்தது.

கட்டளை மடத்தில் இருந்து வைத்தியம் பார்த்தும் பிள்ளையவர்களின் உடல் நிலையில் மாற்றம் காணாததால் ஆதீனகர்த்தர் பிள்ளையவர்களை மீண்டும் தாம் இருக்கும் திருவாவடுதுறை மடத்திற்கே வந்து விடும் படி சொலி அழைத்துக் கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஆதீனகர்த்தர்-ஆதீனப் புலவர் என்பதோடு ஆரம்ப காலம் முதல் ஆழ்ந்த அன்பும் இருந்தது என்பதை அறிகின்றோம். ஆக தன் பார்வையில் பிள்ளையவர்கள் எப்போதும் இருப்பதை ஆதீனகர்த்தர் விரும்பினார் என்பது தெரிகின்றது. 

அடுத்த சில நாட்களிலேயே தீபாவளி நெருங்க பிள்ளையவர்களின் குமாரன் சிதம்பரம் பிள்ளை தன் குடும்பத்தோடு வந்து தீபாவளி நாளில் சேர்ந்திருக்க வரும்படி கூறி மாயூரத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றார். அப்போது பிள்ளையவர்கள் தனியாகச் செல்லவில்லை. ஏனைய சில மாணாக்கர்களையும் உடன் அழைத்துக் கொண்டே சென்றிருக்கின்றார். அச்சமயத்தில் உ.வே.சா. திருவாவடுதுறையிலேயே தனது சிற்றப்பா இல்லத்திலேயே இருந்து தீபாவளி கொண்டாடியிருக்கின்றார்.  

தீபாவளி நேரத்தில் மடத்தின் சார்பாக அனைவருக்கும் புதிய ஆடைகளை ஆதீனகர்த்தர் பரிசாக வழங்கியிருக்கின்றார். மாயூரத்திற்குச் சென்ற பிள்ளையவர்களுக்கும் அவரோடு துணையாகச் சென்ற மாணவர்களுக்கும் ஆதீனகர்த்தர் புதிய ஆடைகளை வாங்கச் செய்து அனுப்பி வைத்திருக்கின்றார். ஆனால் ஏதோ காரணமாக தவறுதலாக உ.வே.சாவுக்கு மடத்திலிருந்து புதிய வேஷ்டியும் வஸ்திரமும் கிடைக்கவிலை. இந்தச் செய்தி எப்படியோ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்குச் சென்று சேர்ந்திருக்கின்றது. 

தீபாவளி முடிந்து சில நாட்களில் பிள்ளையவர்களை மீண்டும் மடத்திற்கு அழைத்து வரும்படி நினைத்து உ.வே.சாவை அழைத்துச் சொல்லியிருக்கின்றார் ஆதீனகர்த்தர். ஆசிரியரைப் பார்க்கத் தான் இந்த மாணவருக்கு மிகுந்த மகிழ்ச்சியாயிற்றே. உடனே மாயூரம் புறப்பட்டு விட்டார் உ.வே.சா. அங்கு சென்று சேர்ந்ததும் பிள்ளையவர்கள் இவரைப் பார்த்து கேட்ட கேள்வியும் அந்த சம்பாஷணையும் சுவையானது. உ.வே.சா. அதனை இப்படி பதிந்திருக்கின்றார். 

நான் போய்ப் பிள்ளையவர்களைக் கண்டதும், அவர் முதலில் என்னை, “தீபாவளிக்கு உமக்கு மடத்திலிருந்து வேஷ்டி கிடைக்க வில்லையாமே?” என்று கேட்டார். அந்த விஷயத்தை அவர் எப்படியோ தெரிந்து கொண்டிருந்தார். அதனால் எனக்கு விசேஷ வருத்தம் ஒன்றும் இராவிட்டாலும் அவருக்கு மாத்திரம் அது பற்றிய உறுத்தல் மனத்தில் இருந்தே வந்தது. “மடத்தில் படிக்கும் பிள்ளைகள் எல்லோருக்கும் வஸ்திரம் வழங்கும்போது உம்மை மட்டும் மறப்பதற்கு நியாயம் இல்லையே! உம்மிடம் ஸந்நிதானத்திற்கு எவ்வளவோ பிரியம் இருக்கிறதே. கவனிக்க வேண்டாமா?” என்று அவர் சொன்னார்.

“பெருங் கூட்டத்தில் மறந்து போயிருக்கலாம்; அல்லது கொடுத்ததாக எண்ணி இருக்கலாம். இதற்கு வேறு விதமான காரணம் இராது” என்று நான் சமாதானம் சொன்னேன்.

அப்படிச் சொன்னதோடு நின்று விடவில்லை. தன் மாணவரின் மனக்குறையை தன் மனக்குறையாக பாவிப்பவர் அல்லவா? பிள்ளையவர்கள் உடனே என்ன செய்தார் என்பதையும் உ.வே.சா. பதிந்து வைக்கின்றார்.

ஆசிரியர் அதோடு நிற்கவில்லை. அருகில் இருந்த ஒருவரை அழைத்து அவர் கையில் பணத்தை அளித்துக் கடைக்குச் சென்று ஒரு புதிய பத்தாறு வஸ்திரம் வாங்கிவரச் செய்து தாமே அதற்கு மஞ்சள் தடவி என் கையிலே கொடுத்து, “இதைக் கட்டிக் கொள்ளும்” என்று அன்புடன் கூறினார். நான் அவ்வாறே அதைத்தரித்துக் கொண்டேன். தீபாவளி எனக்கு இரண்டு தடவை ஏற்பட்டது. திருவாவடுதுறையில் எல்லாரோடும் ஸ்நானம் செய்து யாவருக்கும் பொதுவான தீபாவளியைக் கொண்டாடினேன். அன்று மாயூரத்தில் ஆசிரியர் முன்னிலையில் அவர் அன்புப் பார்வையில் மூழ்கி அவர்தம் அருமைக்கையால் அளித்த வஸ்திரத்தைத் தரித்து ஒரு தீபாவளியைக் கொண்டாடினேன். அன்று எனக்கிருந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.

என்னை ஒருமுறை பார்த்துவிட்டு, “இப்போது எவ்வளவு நன்றாக இருக்கிறது!” என்று சொல்லி ஒரு பெருமூச்சு விட்டார். அப்போது நெடுநாளாக இருந்த குறை ஒன்று நீங்கப் பெற்றவரைப் போலவே அவர் தோன்றினார்.

இப்படி பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் உ.வே.சா வாழ்க்கையில் பிள்ளைவர்களோடு இணைந்திருந்த காலகட்டத்தில் நிகழ்ந்திருக்கின்றது. இதனை வாசிக்கும் போது நமது மனமும் இவர்களின் அன்பில் கறைகின்றது என்பது உண்மை!

தொடரும்....

சுபா

No comments:

Post a Comment