Wednesday, February 19, 2014

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 66

ஜனவரி 31ம் திகதி. 

திருவாவடுதுறை ஆதின குருபூஜையில் கலந்து கொள்ள உள்ளூரிலிருந்தும் அயலூரிலிருந்தும் வந்திருந்த தமிழறிஞர்கள், தனவந்தர்கள், திருவாவடுதுறை மடத்திற்கு அணுக்கமானோர் என பலர் வந்து திருவாவடுதுறையில் கூடிவிட்டனர். அன்று நடைபெற வேண்டிய நிகழ்வுகள் குருபூஜைக்கான
 ​த்​
 தயாரிப்பு பூஜைகள் என நடந்துகொண்டிருந்தன. அன்று இரவு ஸ்ரீ கோமுத்தீசுவர கடவுள் நகர் வலம் வந்தருளினார். இரவு சுவாமி தரிசனத்திற்குச் சென்ற உ.வே.சாவைப் பார்த்த ஆதீனகர்த்தர் சுப்பிரமணிய தேசிகர், பிள்ளையவர்களின் உடல் நிலையை விசாரிக்கின்றார். பூஜைகளுக்கிடையிலேயும் அவர் மனதில் பிள்ளையவர்களின் ஆரோக்கியம் குறைந்த உடல் நிலை கவலையைக் கொடுத்துக் கொண்டிருந்தது. நலிவடைந்திருந்த பிள்ளையவர்களின் தேக ஆரோக்கிய நிலை அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பதை கண்ணீருடன் சொல்லி விட்டு அழுகின்றார் உ.வே.சா. அன்றைய நாளில் பிள்ளையவர்களின் உடல் நிலை மிக மோசமான நிலையையடைந்து விட்டது. பிறர் பேசினால் புரிந்து கொள்ளும் சக்தி இருந்தாலும் அவரால் அன்று பேச முடிய வில்லை. தாமும் சவேரிநாதரும் அவருக்குப் பால் மட்டும் அருந்தக் கொடுத்து வருவதை விளக்கும் போது தேசிகரும் கலங்கி விடுகின்றார். அருகிலேயே இருந்து முழுமையாக பிள்ளையவர்களை
 ​க்​
 கவனித்துக் கொள்ளுமாறு சொல்லி உ.வே.சாவை  அனுப்பி வைக்கின்றார்.

நடக்கவேண்டியவை அனைத்தும் நடந்து தா
​னே
 ஆக வேண்டும். 
​மனிதர்கள் நினைத்தால் மாற்றக் கூடியவை என்ற வரையரைக்குள் அடங்கும் பல விஷயங்கள் இருந்தாலும் இறப்பு என்பதை கட்டுப்படுத்தும் சக்தி நமக்கு சிறிதும் இல்லையே. 

மறு நாள் பெப்ரவரி 1ம் திகதி
​,​
 திருவாவடுதுறை குருபூஜை தினத்தன்று 
அதிகாலை வேளையில் ​
மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இந்தப் பூவலகை விட்டு மறைந்தார்கள். 

இதனை உ.வே.சா 
விவரிப்ப
தைப் போல என்னால் விவரிக்க இயலாது. அவர் 
 உணர்ந்த
 காட்சியை, மனதில் பதிந்து வைத்த விஷயங்களை அவர் சொற்களினால் 
​அறிவதே
 இப்பதிவுக்கு நான் செய்யும் சிறப்பாகக் கருதுகிறேன். சிவலோகம் திறந்தது எனும் 63ம் அத்தியாயத்திலிருந்து இப்பகுதி!

“இந்த நிலையிலாவது பிள்ளையவர்கள் ஜீவித்திருக்கிறார்களென்றால் ஆதீனத்திற்கு மிகவும் கௌரவமாக இருக்கும். ஸ்ரீ கோமுத்தீசர் திருவருள் என்ன செய்கின்றதோ!” என்று வருந்தி விட்டு, “போய்க் கவனித்துக் கொள்ளும்” என்று விடை கொடுத்தனுப்பினார். நான் பிள்ளையவர்களிடம் சென்றேன்.

மறைவு

அடிக்கடி ஆசிரியருக்கு ஞாபகம் தவறியது. நள்ளிரவுக்குமேல் நெடு நேரம் பிரக்ஞை இழந்திருந்தார். பிறகு விழித்துப் பார்த்து ஏதோ சொல்ல வாயெடுத்தார். அக்குறிப்பு, திருவாசகமென்று சொன்னதாகப் புலப்படுத்தியது. நான் திருவாசகத்தை எடுத்து அடைக்கலப்பத்தை வாசித்து வந்தேன். சிவபெருமான் திருவடியில் அடைக்கலம் புகுவதற்கு என் ஆசிரியர் தகுதியுடையவரே. அவர் கண்ணை  மூடிக்கொண்டே இருந்தார். திருவாசகச் செய்யுள் அவர் காதின் வழியே உள்ளத்துள் புகுந்து இன்பத்தை விளைவித்திருக்க வேண்டும். அந்த இன்பம் அவர் முகத்தில் ஒரு மலர்ச்சியை உண்டாக்கியது.

அவர் நெற்றியில் விபூதியை நிறைய ஒருவர் இட்டனர். சவேரிநாத பிள்ளை அவரைத் தமது மார்பில் சார்த்திக் கொண்டார். அடைக்கலப்பத்தை வாசித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று அவரது தேகத்தில் உள்ளங்கால் முதல் உச்சி வரையில் ஒரு துடிப்பு உண்டாயிற்று. மூடியிருந்த கண்களில்
 ​ 
வலக்கண் திறந்தது. அவ்வளவுதான். சிவலோகத்தில் அதே சமயத்தில் அந்த நல்லுயிர் புகுவதற்கு வாயிலும் திறந்ததுபோலும்! 

அவர் மூச்சு நின்றபோதுதான் அவருடைய தமிழ் உணர்ச்சி நின்றது. 

திருவாசகம் என் கையிலிருந்து நழுவியது. கண்ணிலிருந்து நீரருவி புறப்பட்டது.

அங்கிருந்தவர்களில் சிலர் அரற்றினார்கள். சிலர் துக்கம் தாங்கமாட்டாமல் வாயைப் பொத்திக்கொண்டனர். நான் ஒன்றும் தோன்றாமல் என் ஆசிரியரின் புனித உடலையும், அமைதி தவழ்ந்த முகத்தையும், எனக்கு ஆதரவோடு பாடம் சொல்லிய திருவாயையும், அன்புப் பார்வையில் என்னைத் தழுவிய கண்களையும் பார்த்துப் பார்த்து விம்மினேன். “இப்போது நிகழ்ந்த நிகழ்ச்சி பொய்யாக இருக்கக் கூடாதா? பிள்ளையவர்கள் மீண்டும் வாய் திறந்து பேசக்கூடாதா!” என்ற எண்ணத்தோடு பார்க்கையில் அவர் கண்கள் இமைப்பது போலவே தோற்றும்; வாய் அசைவதுபோலத் தெரியும்; மூச்சு விடுவது போலக் கண்ணில் படும். அடுத்த நிமிஷமே எல்லாம் வெறும் தோற்றமாகிவிடும்; பிரமையினால் விளையும் காட்சிகளாக முடியும்.

ஆசிரியருடைய குமாரரும் மனைவியாரும் அங்கே இருந்தனர். வேறு பல அன்பர்களும் கூடியிருந்தனர். ஆசிரியர் மறைந்த செய்தி உடனே எங்கும் பரவி விட்டது. சுப்பிரமணிய தேசிகர் விஷயத்தை அறிந்து வருந்தினார். அவருக்கு ஒரு காரியமும் ஓடவில்லை.

விடிந்தது; இருண்டிருந்த எங்கள் மனத்திற்கு விடிவு இல்லை. 

பலர் வந்து வந்து ஆசிரியர் திருமேனியைப் பார்த்துப் பார்த்துப் புலம்பிவிட்டுச் சென்றனர். ஆதீன ஞானாசிரியர் சமாதியுற்ற திருநாட் கொண்டாட்டத்திற் கலந்து கொண்டு இன்பம் அனுபவிக்க வந்தவர்களிற் பலர் ஆதீனத் தமிழாசிரியர் மறைந்த செய்தி கேட்டுத் துன்பக் கடலில் ஆழ்ந்தனர்.

சுப்பிரமணிய தேசிகர் மேலே நடக்க வேண்டிய காரியங்களுக்குரிய ஏற்பாடுகளைச் செவ்வனே செய்யலானார். பல ஊர்களிலிருந்து அபிஷேகஸ்தர்கள் வந்தனர்.

அந்நல்லுடலை ருத்திரபூமிக்கு எடுத்துச் சென்ற போது நான் கண்ட காட்சியும் கேட்ட வார்த்தைகளும் இன்று நினைத்தாலும் உள்ளத்தைக் கலக்குகின்றன. எல்லோரும் வாய்விட்டுக் கதறி விட்டார்கள். அவரது புலமைத் திறத்தைச் சொல்லி வருந்து வாரும், அவரது கவித்துவத்தைப் பாராட்டி
 ​ 
உருகுவாரும், மாணாக்கர்கள் பால் அவர் வைத்திருந்த அன்பை எடுத்துரைத்துத் துயருறுவாரும், அவர் குண விசேஷங்களை விரித்துப் புலம்புவாருமாக எங்கே பார்த்தாலும் ஜனங்கள் நிரம்பிவிட்டனர்.

அபிஷேகஸ்தர்கள் அப்போது திருவாசகம் சொல்லிக்கொண்டு போனார்கள். அதைக் கேட்ட என் தந்தையார், “இனிமேல் திருவாசகத்துக்கு உரை சொல்பவர்கள் இவர்களைப்போல் யார் பிறக்கப் போகிறார்கள்?” என்று சொல்லி வருந்தினார். ஆசிரியர் தம் கடைசி நாட்களில் கடைசி நிமிஷம்
வரையில் திருவாசகத்தில் ஒன்றியிருந்ததை அறிந்தவனாதலின் அவ்வார்த்தைகளைக் கேட்ட போது என் உள்ளமும் உயிரும் நடுங்கின.

பல பேருடைய அறிவுக்கும், கண்ணுக்கும், காதுக்கும் இன்பந் தந்து வாழ்ந்திருந்த ஆசிரியர் திருவுடலம் அக்கினிபகவானால் அங்கீகரிக்கப் பெற்றது. சிதம்பரம் பிள்ளை தம் தந்தையாரது உத்தரக்கிரியைகளைச் செய்தார். எல்லாம் முடியப் பன்னிரண்டு மணி வரையில் ஆயிற்று. பின்பு யாவரும் நீராடித் திரும்பினர். நானும் என் ஆசிரியரை அப்பால் பாராத நிலையிலே விட்டுவிட்டு ஸ்நானம் செய்து வந்தேன்.

ஊர் முழுவதும் ஒளி இழந்திருந்தது.

என் சரித்திரம் நூலை லாபல்மா தீவில் விடுமுறைக்குச் சென்ற போது நான் வாசித்தேன். இந்தப் பகுதியை வாசித்து முடித்த போது என் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து நூலின் பக்கங்களை நனைத்தது. அவர்கள் துக்கத்தை நானும் உடனிருந்து  உணர்ந்தேன். அதே துக்கத்தை இன்று மீண்டும் இப்பதிவை எழுதும் போதும் உணர்கிறேன். என் உறவில் ஒன்றினை இழந்த ஒரு உணர்வு தோன்றுகிறது. 

நூலை வாசிக்கும் போது கூட இத்தகைய உணர்வுகளைக் கொண்டு வர முடியும் என் சாதித்துக் காட்டியவர் உ.வே.சா.
122 அத்தியாயங்களைக் கொண்டது என் சரித்திரம் நூல். அதில் ஏறக்குறைய 40 அத்தியாயங்களாக அமைபவை உ.வே.சா முழுமையாக பிள்ளையவர்களுடன் தான் வாழ்ந்த காலகட்டத்தின் நிகழ்வுகளைக் குறிப்பவை. அவர் மறைவுக்குப் பின் தன் வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளை குறிப்பிடும் போதும் ஏனைய அத்தியாயங்களிலும் ஆங்காங்கே பிள்ளையவர்களும் உலா வருகின்றார்கள்.
 ​
 

தன் சரித்திரத்தில் முழுமையாக தன் ஞானாசிரியரையரையும் பிணைத்துக் கொண்டார் உ.வே.சா என்றே சொல்லத் தோன்றுகிறது. ​

தொடரும்.

1 comment:

  1. என்றும் நினைவைவிட்டு நீங்காத நிகழ்ச்சி,சுபா நன்றி. பிள்ளையவர்களின் திருவாசக உரை அல்லது பெரிய புராண விளக்கவுரை நூல் பதிவுகள் ஏதாவது கிடைக்கிறதா? சபா. அருணாசலம்

    ReplyDelete