Tuesday, February 4, 2014

குடியரசில் பெரியார் உடன்....! - 6

அரசியல் என்பது சமூக நலனைக் காப்பதற்காக என்ற நோக்கத்தை அடிப்படையில் கொண்டிருப்பது. ஆனால் இன்று அரசியல் என்னும் சொல்லே அது தமிழாகட்டும், ஆங்கிலமாகட்டும் வேறு எந்த மொழியாகட்டும்.. அதன் பொருள் சிதைந்து எதிர்மறையான விளக்கத்திற்கு வழி வகுப்பதாக அமைந்து விட்டது. அரசியலின் வழி பொதுச் சேவை செய்ய முடியுமா ? என்றால் ஏன் முடியாது என்ற கேள்வியும் எழுகின்றது. அதே வேளை அரசியல் என்பது ஒரு தனி மனிதர் தன் கொள்கை நிலைப்பாட்டினை உறுதியுடன் கொண்டிருக்கும் பட்ஷத்தில் எந்த அளவிற்குக் கொண்ட கொள்கை மாறாமல், சுய நலம் சேராமல் மக்கள் நலனே பிரதானம் என்ற வகையில் செயலாற்ற முடியும் என்ற கேள்வியை முன் வைக்கின்றது. 

நேற்று இரவு ஒரு ஆங்கிலப்படம் The Whistleblower (ஜெர்மன் மொழி பெயர்ப்புடன்) பார்க்க நேர்ந்தது.  Kathryn Bolkovac என்ற பெண் எழுத்தாளர்  எழுதிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம். அதில் முக்கியமாக ஒரு UNO  நிறுவனத்தின் ஒரு பகுதி நிறுவனம் ஒன்றின் பொருளாதார உதவியுடன் அமெரிக்காவிலிருந்து போர்முடிந்த போஸ்னியா-ஹெர்ஸகோவினியாவிற்குப் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வரும் ஒரு பெண் போலிஸ் அதிகாரி சந்திக்கும் விஷயங்களை விளக்குவது.

போர் முடிந்த சூழலில் பெண்களை நாட்டு எல்லைகளில் கொண்டு விற்பதும், கடுமையான பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்துவதும் என்று நிகழ்வதை இப்பெண் அதிகாரி கண்டுபிடிப்பதும் அதனை அவர் தடுக்க எடுக்கும் முயற்சிகளையும் காட்டுவதாக இப்படம். இதில் அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால் அமைதி காக்க வந்த போலீஸ் அதிகாரிகளே இக்காரியத்தை செய்வது. இதனைத் தட்டிக் கேட்க பாடுபடும் இப்பெண் போலீஸ் அதிகாரியை பதவியை விட்டு நீக்குகின்றனர். ஆனால் அவர் தப்பித்து பிபிஸிக்கு ஆவணங்களைத் திருடிக்கொண்டு சென்று அதனை வெளிப்படுத்தி விடுகின்றார். இதனால் அமைதி காக்க வந்த போலீஸ், அதன் பின்னனியில் இயங்கிய அரசியல் கூட்டத்தினரின் கொடுமையான செயல்கள் என பல விஷயங்கள் உலகுக்கு அம்பலமாகின்றன. 1999 வாக்கில் நடந்த உண்மைச் சம்பவத்தை தழுவிய கதை இது.

இதனைப் பார்த்த போது சமூகக் கொடுமைகளின் எல்லையற்ற தன்மை, அதிலும் பாதுகாப்பு தரவேண்டிய அரசியல்வாதிகளும் காவல் துறையினரும் அமைதிகாக்க வரும் அதிகாரிகளுமே செய்யும் கொடுமைகள் மனதை உறைய வைத்தன. 

இப்படிப் பல உண்மைச் சம்பவங்கள்.. உலகின் பல மூலைகளில் நிகழ்ந்து கொண்டிருப்பதை அறியாதவர்கள் இல்லை நாம்.

அரசியல் & சமூக சேவை  - இதனை இணைத்துப் பார்க்க முடியுமா...என்ற வகையில் திரு.ஈ.வே.ராவின் சிந்தனைப் பதிவதாக ஒரு குடியரசு தலையங்கம். அதில் ஈ.வே.ரா இப்படிச் சொல்கின்றார்.....

சமூகத் தொண்டிற்கும் அரசியல் தொண்டிற்கும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் வைத்துக் கொள்வது சமூகத் தொண்டிற்குப் பெருத்த கேடு சூழ்வதேயாகும்.

அரசியல் தொண்டு என்பதாக ஒரு தொண்டே இல்லை என்பதும், அது அவ்வளவும் புரட்டு என்பதுவுமே நமது அபிப்ராயம். அப்படி ஒன்று இருப்பதாக யாராவது வாதத்தில் வெல்லலாமானாலும் அது கண்டிப்பாய் இது சமயம் நமது நாட்டிற்குத் தேவையில்லாதது என்றே சொல்லுவோம்.

நம்மைப் பொருத்தவரை அரசியலின் பெயரால் கூடுமானவரை உழைத்தாகிவிட்டது. கண்டது ஒன்றும் இல்லை. அயோக்கியர்களை உற்பத்தி செய்து அவர்கள் மூலம் பாமர மக்களை வஞ்சிக்கச் செய்ததே அல்லாமல் வேறில்லை. அதைவிட்டுத் தொலைத்து சமூகத் தொண்டையே பிரமாதமாய்க் கருதி அதற்கென உழைத்தாலும் அடிக்கடி சறுக்கி, அரசியல் சேற்றில் விழ வேண்டியதாக நேரிட்டு  விடுகிறது. இது சவகாச தோஷமே அல்லாமல் வேறல்ல.

இனி அடியோடு அரசியலை உதறித்தள்ளி வைத்து விட்டு மக்களுக்கும் அதிலிருக்கும் மூட நம்பிக்கையை ஒழிப்பதை ஒரு திட்டமாக சமூகத் தொண்டில் சேர்த்து, எல்லா மக்களையும் சமூகத் தொண்டையே பிரதானமாய்க் கருதும்படி செய்வதை முக்கிய தொண்டாக வைத்துக் கொள்வதே நலமெனத் தோன்றுகிறது.
..

தாடி, நெருப்பு பற்றி எரிகிற போது அதில் சுருட்டு பற்றவைக்க நெருப்பு கேள்பதுபோல். நமது மக்களின்  நிலை தாழ்ந்து கிடப்பதையும், சிறுமைப் படுவதையும், அயோக்கியர்களால் கொடுமைப் படுத்துவதையும் பற்றி கொஞ்சமும் கவலை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதோடு மற்றவர்கள் யாராவது கவலை எடுத்துக் கொண்டாலும்  அதையும் கெடுத்து அதன் பலனையும் தங்கள் சுயனலத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளப் பார்க்கிற மக்களை வைத்துக் கொண்டு என்னதான் செய்யமுடியும் என்பது நமக்குத் தோன்றவில்லை.

ஆகையால் உண்மைத் தொண்டர்கள் இது விஷயத்தில் போதிய கவலை எடுத்து, யோசித்து இது சமயம் ஒரு முடிவுக்கு வரவேண்டியது அவசியம் என்பதை  இப்போதே தெரியப்படுத்திக் கொள்ளுகிறோம். இதில் சேர வருகிறவர்கள் கூடுமான வரை கஷ்டம் அனுபவிக்க நேர்ந்தால் அனுபவிக்கவும், தியாகம் செய்யவும், தன்னலத்தை அடியோடு மறுக்கவும் தயாராயிருக்க வேண்டும் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு யோசிக்க வேண்டும் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்ளுகிறோம்.

குடி அரசு - தலையங்கம் - 31.07.1927

சுபா

No comments:

Post a Comment