Thursday, February 13, 2014

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 65

1875ம் ஆண்டு ஆகஸ்டு தொடங்கி படிப்படியாக  பிள்ளையவர்களை நோய் பலகீனப்படுத்தத் தொடங்கியது. தீபாவளி நேரத்திலும் அவருக்கு மாயூரத்திற்குப் பயணம்.  பின்னர் திருவாவடுதுறை ஆதீனத்திற்கே வந்து சேர்ந்த பின்னர் அங்கும் எவ்வளவோ கவனிப்பு இருந்தும் நோய் குணமாகவில்லை, அதன் கடுமையும் குறையவில்லை. 

1876ம் ஆண்டு ஜனவரி மாதம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் உடல் நிலை மிக நலிவுற்ற நிலையையடைந்தது. அம்மாத இறுதியில் தான் மடத்தில் குருபூஜை நடைபெறும். திருவாவடுதுறை மடத்தின் குருபூஜை என்பது இன்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மாபெரும் திருவிழா. குருபூஜை ஒரு நாள் விழா என்றல்லாமல் தொடர்ச்சியாக பூஜைகள், இசை, வாத்திய, நாட்டிய, நாடக நிகழ்ச்சிகள் என தொடர்ந்து நடைபெறும். திருவாவடுதுறை நகரமே உள்ளூர், வெளியூர் மக்களால் நிறைந்து காணப்படும். இந்த குறிப்புக்களையெல்லாம் முந்தைய பதிவுகளில் நான் வழங்கியிருக்கின்றேன். ஜனவரி மாத இறுதி நாட்கள் திருவாவடுதுறை மடத்தில் அந்த ஆண்டும் அப்படித்தான் குருபூஜை நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. குருபூஜையில் கவனம் இருந்தாலும் ஆதீன கர்த்தர் சுப்பிரமணிய தேசிகருக்கும் பிள்ளைவர்களின் உடல் நிலை மன வேதனையைக் கொடுத்துக் கொண்டிருந்தது.

உடல் நிலை நலிவடைந்த இந்த நிலையில் மாணவர்கள் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்பது என்பது நின்றது. ஆயினும் மாணவர்கள் வந்து கேட்கும் சில சந்தேகங்களுக்கு அவர் தெளிவு கொடுப்பதைத் தொடர்ந்து கொண்டிருந்தார். தனக்கு பிடித்தமான நூல்களை மாணாக்கர்களைக் கொண்டு வாசிக்கச் சொல்லி கேட்டுக் கொண்டிருப்பாராம். தமிழே அவர் உயிர் மூச்சு. அதிலும் அவ்வேளையில் தெய்வீகத் தமிழே அவரது உடலோடு பிணைத்திருந்த அவ்வுயிருக்கு ஆறுதல் தரும் மருந்தாக அமைந்தது. உ.வே.சா இந்த நிகழ்வுகளைப் பதிந்து வைக்கின்றார்.

ஆசிரியர் படுக்கையிற் படுத்துக் கொண்டிருப்பார். அவரருகில் அமர்ந்து சவேரிநாத பிள்ளை கால் கைகளைத் தடவிக் கொடுத்துக் கொண்டே இருப்பார். நான் அருகில் உட்கார்ந்து தேவாரத்தையோ திருவாசகத்தையோ ஆசிரியர் காதில் படும்படி படிப்பேன். வேறு மாணாக்கர்களும் ஆசிரியரைப்
பார்க்க வரும் அன்பர்களும் சுற்றிலும் இருப்பார்கள். எல்லோருடைய கண்களும் ஆழ்ந்த பயத்தை வெளிப்படுத்தும்.

இடைக்கிடையே தேவார திருவாசகத்தில் தனக்கு எழும் சந்தேகத்தை உ.வே.சா கேட்கும் போது அதற்கு விளக்கம் கொடுக்க தடையாக அவர் காரணம் சொல்வதில்லை. அப்படி அவ்வேளையில் அவர் வழங்கிய விளக்கங்களை உ.வே.சாவை பொறுத்தவரை தன் வாழ் நாளில் கிடைத்தற்கறிய விளக்கங்களாக தாம் போற்றுவதாகக் குறிப்பிடுகின்றார். மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் தேவாரத்திலும் திருவாசகத்திலும் நெடுநாட்கள் தன் சிந்தனையைச் செலுத்தியவர். தாம் எழுதிய புராண நூல்களிலெல்லாம் தேவார திருவாசக கதைகளையும் நிகழ்வுகளையும் இணைத்து ஈடுபாட்டுடன் பல திருத்தலங்களுக்கு வரலாற்று காவியங்களைச் செய்தவர். ஆக இந்த உடல் நலிவுற்ற வேளையில் அவர் தரும் சிறு விளக்கம் கூட மாணிக்கப் புதையலாகவே உ.வே.சாவிற்குத் தோன்றியதில் ஆச்சரியமில்லையே.

திருவாசகப் பாடல்கள் வாசிக்கப்படும் போது பிள்ளையவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருக்குமாம். திருவாசகத்தின் செய்யுட்களில் தானும் உருகிக் கரைந்து  விட தவித்த அவரது ஆழ் மனதின் விருப்பம் இந்த உடல் நலிவுற்ற நிலையிலும் தொடர்ந்து கொண்டிருந்தது. இப்படி ஒரு நிகழ்ச்சியை பதிந்து வைக்கிறார் உ.வே.சா. 

திருவாசகத்தில் திருக்கோத்தும்பியென்னும் பகுதியைப் படித்தேன்.

“நோயுற்று மூத்துநா னுந்துகன்றா யிங்கிருந்து
நாயுற்ற செல்வ நயந்தறியா வண்ணமெல்லாம்
தாயுற்று வந்தென்னை யாண்டுகொண்ட தன்கருணைத்
தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ”

என்ற செய்யுளை வாசித்தேன், ‘நுந்து கன்றாய்’ என்பதற்குப் பொருள் விளங்கவில்லை. சந்தேகம் கேட்கும் பொருட்டுத் தலை நிமிர்ந்து ஆசிரியரைப் பார்த்தேன். அவர் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. “நுந்து கன்றாய் என்பதற்கு அர்த்தம் என்ன?” என்று கேட்டேன். அவரால் பேச முடியவில்லை. நாக்குக் குழறியது; தொண்டை அடைத்தது. “வெறுத்துச் செலுத்தப்பட்ட கன்றைப்போல” என்று அந்தக் குழறலோடே சொன்னார். அந்த நிலையில் அவரைப் பார்க்கும்போது எனக்கும் கண்ணீர் பெருகியது. தளர்ச்சியால் பேச முடியாமல் இருந்த ஆசிரியர் அந்தப் பாட்டில் உருகிப்போய் அவசமுற்றிருந்தார்.

“நோயுற்று மூத்துநா னுந்துகன்றா யிங்கிருந்து”

என்ற அடி அவர் உள்ளத்தைப் பிணித்து அன்புணர்ச்சியை எழுப்பிவிட்டது. மாணிக்கவாசகரது அவ்வாக்கு என் ஆசிரியருடைய நிலைக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. நோயுற்று மூத்துநின்ற அவருடைய உள்ளக்கருத்தை அந்தச்செய்யுள் தெரிவித்தமையால் அவர் உருகிப் போனார்.

“தாயுற்று வந்தென்னை யாண்டுகொண்ட தன்கருணைத்
தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ”

என்ற அடிகளில் மாணிக்கவாசகர் சிவபெருமான் தமக்கு அருளிய பெருங்கருணைத் திறத்தைப் பாராட்டுகிறார். அவரை ஆண்டு கொண்ட வண்ணம் தம்மையும் ஆண்டு கொள்வாரோ என்ற ஏக்கமும் ஆசிரியர் உள்ளத்தே எழுந்தது போலும்! அவர் அப்பொழுது இவ்வுலகில் இருந்தாலும்
இந்நினைவுகள் எல்லாம் சேர்ந்து அதனை மறக்கச் செய்துவிட்டன. “இவர் இப்போது நம்மோடு பேசவில்லை. ஆண்டவனோடு பேசுகிறார். இவர் தம் உள்ளமாகிய கோத்தும்பியை மாணிக்கவாசகரைப் போலச் சிவ பெருமான் திருவடி மலரில் ஊதும்படி விட்டிருக்கிறார்” என்ற உண்மையை அப்போது
தெளிவாக நான் அறிந்து கொள்ளவில்லை. சிலநேரம் மௌனம் நிலவியது. அவர் திருவாசகத்தில் ஒன்றி உருகினார்: நான் அவர் நிலைகண்டு உருகினேன். பின்பு மீண்டும் தொடர்ந்து படிக்கலானேன்.

வாழ்வில் மரணம் என்பது நடந்தே ஆகவேண்டியது. உறவுகளையும்,உற்றாரையும், அன்பு செய்தோரையும் பிரியும் துன்பம் போல் வேறு துன்பம் உலகில் இல்லை. இவ்வுலகை விட்டுச் செல்வோரை விட அவரைப் பிரிந்து வாழும் பிற உயிர்களின் மீளா துயரம் பெரிதுதான் என்றாலும் இதனைக் கூட எப்படி அளவிடுவது? காலம் இந்தத் துயரத்தை போக்கும் மாமருந்து என்றாலும் அவ்வப்போது நம்மை பிரிந்தோரின் நினைவு மின்னல் போல நம் மனதில் தோன்றி மறையும் போது நாம் தடுமாறித்தானே போய் விடுகிறோம். அது அச்சமா? தனிமை உணர்வா? இருந்தது இல்லாமல் போய்விட்ட உண்மை தரிசனமா?

ஒருவர் நம்மை விட்டு பிரியும் போது ஏன் இறப்பு ஏற்படுகின்றது என்று புலம்பும் நாம் அதே வேளை நாமும் இந்த இயற்கை நீதிக்கு கட்டுப்பட்டவர்களே என்ற உண்மையையும் உணர வேண்டியவர்களே. என்றோ நடக்கும் நம் மரணம் இன்றே நடக்கலாம் என்பதை உணர்ந்து எத்தருணமும் இறப்பு எனும் ஒன்று நம்மை சந்திக்கலாம் என்று தயார் நிலையில் நம்மை வைத்திருக்க வேண்டியதும் அவசியம் தானோ?

தொடரும்...

சுபா



2014-02-08 9:34 GMT+01:00 Subashini Tremmel <ksubashini@gmail.com>:
பதிவு 64

நோயின் கடுமை மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. தீபாவளிக்கு மாயூரத்திற்குச் சென்றவர் தன் குடும்பத்தாருடனும் ஏனைய சில மாணவர்களுடனும் அங்கேயே தொடர்ந்து சில நாட்கள் தங்கியிருந்தார். அவரோடு சென்றவர்களில் பிள்ளையவர்களுக்கு மிக மிக அணுக்கமான சவேரி நாதப் பிள்ளையவர்களும் ஒருவர். 

No comments:

Post a Comment