Tuesday, February 11, 2014

குடியரசில் பெரியார் உடன்....! - 7

கணவன் இறந்த பின் மனைவிக்கே மாத பென்ஷன் தொகை செல்லும் என்பது இன்று சட்டப்படி நடைமுறையில் இருக்கும் வழக்கம். ஆனால் இன்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்னால் இது சாத்தியமாகாத ஒன்றாக இருந்தது என்பதை இன்றைய தலைமுறையினர் அறியும் போது ஆச்சரியப்படுவர். 

இன்றைய நிலையில் பெண்களும் உத்தியோகம் பார்க்கும் நிலமை வளர்ந்து விட்ட சூழலில் அவர்களின் உழைப்பினால் அவர்கள் ஏற்படுத்தி வைக்கும் ஓய்வூதிய பங்குத் தொகை பிற்காலத்தில் வயது முதிர்ந்த காலத்தில் அவர்கள் தங்கள் வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள உதவுகின்றது. இந்த மாதாந்திர ஓய்வூதியத் தொகை தொடர்ந்து அவர்கள் தங்கள் மருத்துவச் செல்விற்கும் வாழ்க்கை தேவைகளுக்கும் குடும்பத்தாரை எதிர்பார்த்து நிற்கும் நிலையை தவிர்த்து பல உளவியல் சங்கடங்களிலிருந்தும் இவர்களைக் காப்பாற்றுகின்றது.

ஆண்கள் உத்தியோகம் பார்த்து பணமீட்டும் நிலையில், வீட்டிலிருந்து குடும்ப கடமைகளைப் பராமரிப்பதும், குழந்தைகளைப் பேணி வளர்த்து அவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதும், குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதும், உறவினர்களின் விஷேஷங்களில் பங்கெடுத்துக் கொண்டு உறவைப் பேணி வளர்ப்பதும் குடும்பத்தலைவியரின் கடமையாகி விடுகின்றது.

குடும்பத்தலைவியாக இருந்து செய்யும் கடமைகளுக்கு விதி முறை அமைத்து சம்பளம் கொடுக்க வேண்டுமா..? அன்பினால் உண்டாகும் ஒரு விஷயமல்லவா இது என்றால் அதை மறுக்கமுடியாது தான். மனிதர் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் விலை பேச முடியுமா? ஆனால் பொதுவாக பார்க்கும் நிலையில் வீட்டிலிருந்து வீட்டுக் கடமைகளை செய்து வரும் ஒரு பெண் பொருளாதார அடிப்படையில் சம்பாதிக்கும் கணவனை அண்டி வாழும் போது அக்கணவனின், அவனது குடும்பத்தாரின் நிலையைப் பொறுத்து அவளது பொருளாதாரத் தேவைகளைப் பூரித்து செய்து கொள்ளும் நிலையில் வைக்கப்படுகின்றாள். இது நிதர்சனம். தனது தேவை தன் பெற்றோர் தேவை என்பது கணவன், அவன் குடும்பத்தார் தேவைகளுக்கு அடித்த படி நிலையிலே தான் என்ற அமைப்பு வந்து விடுகிறது.

அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு ஆணோ  பெண்ணோ, தனக்கு கொடுக்கப்படும் கடமைகளைச் சரியாக அதன் தேவை உணர்ந்து 8 மணி நேரத்திற்குச் செய்வது என்பது உத்தியோக நிலை. வீட்டுக் கடமை என்பது இந்த வரையறைக்கு அப்பாற்பட்டது. 8 மணி நேர கணக்கு என்பதில்லை. அலுவலகத்திலோ 8 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தால் ஓவர் டைம் ஊதியம் கிடைக்கும். ஆனால் இல்லத்திலோ இப்படி ஒரு குறிப்பிட்ட வரை முறை என்பது கிடையாது. எப்போதும் ஏதாகினும் தேவை ஏற்படும் சாத்தியம் எழுவதும் அதற்கு தன்னை தயார் நிலையில் வைத்திருப்பதும்  நிரந்தரமாக நிகழக்கூடியவையே. ஆனால் பெரும்பாலான சமூகங்களில் வீட்டிலிருந்து குடும்பத்தை கவனிக்கும் பெண்களை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. பொது இடங்களில் 'உங்கள் மனவி என்ன செய்கின்றார்'  என யாராவது கேட்டால்.. 'அவங்க சும்மா வீட்டில தான் இருக்காங்க' என்று சொல்லும் கணவர்களும் இருக்கின்றனர். விழிப்புணர்வு அடைந்து  வரும் சமூகத்தில் தற்காலம் ஆங்கிலத்தில் இல்லத்தரசிகளை  home maker என்ற சொல் கொண்டு அழைப்பது வழக்கமாகியுள்ளது. இந்தச் சொல் ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும் ஒரு சொல்லே.

ஜெர்மனியில் வீட்டிலிருந்து குடும்பத்தலைவியாக இருக்கும் ஒரு பெண்ணிற்கு கணவனின் சம்பாத்தியத்தில் 50% பங்குண்டு என்பது சட்டமாக உள்ளது. குடும்பத் தலைவியாக குழந்தை வளர்ப்பு, குடும்ப தேவைகளைப் பேணுதல் ஆகிய கடமைகளைச் செய்யும் பெண்களின் இந்த காலகட்டங்கள் ஒரு தொழில் என்ற நிலையிலேயே மதிக்கப்படுகின்றது. அதே போல மனைவி வேலை பார்ப்பவராக இருந்து கணவர் குடும்பத்தையும் குழந்தையயும் கவனிப்பவராக இருந்தாலும் இதே நிலைதான். மனைவியின் சம்பாத்தியத்தில் 50% இந்த வீட்டுப் பொறுப்புக்களைக் கவனிக்கும் கணவனுக்குக் கிடைக்கும். எனது அலுலவக நண்பர்கள் சூழலிலும் குழந்தைப் பேற்றுக்குப் பிறகு இப்படி மாற்றி மாற்றி அலுவலகத்தில் வேலையிலிருந்து ஒரு வருட கால இடைவெளி எடுத்துக் கொண்ட சக தொழிலாளர்களில் இருவரை நான் அறிவேன். 

இக்கால நிலையைப் பற்றி அலசுகிறோம். இன்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகச் சூழலில் திருமணம் செய்து கொண்டு கணவன் வீட்டிற்கு வரும் பெண்ணின் நிலை எப்படி இருந்தது என் அறிந்து கொள்ளும் போது பெண்களின் அக்கால நிலையை ஓரளவு ஊகித்துப் பார்க்க நமக்கு அது உதவலாம் எனக் கருதுகிறேன். குடியரசு நாளிதளில் புரட்சி கட்டுரை என்ற பகுதியில் வந்த திரு.ஈ.வே.ரா வின்  பரோடா பெண்கள் முன்னேற்றம் புதிய சட்ட விபரம் என்ற கட்டுரையிலிருந்து சில விஷயங்களை ஊகிக்க முடிகின்றது. 

பரோடா சமஸ்தானம் இந்துப் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இந்து சமுதாயச் சட்டத்தை பின்வருமாறு திருத்தி புதிய சட்டம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். .. ஒரு இந்துக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்து போனால் அவருடைய விதவை அந்தக் குடும்பத்தில் ஒரு பங்காளி ஆகிவிடுகிறாள். விதவைகளின் முந்தின நிலமையில் இந்தச் சட்டம் ஓர் பெரிய மாறுதலை உண்டு பண்ணி விட்டிருக்கிறதென்று சொல்லலாம். முந்தியெல்லாம் ஒரு விதவைக்கு அவள் புருஷன் குடும்பத்திலே சோறும், உடையும் தான் கிடைக்கும். வேறு எவ்வித உரிமையும் கிடையாது. இந்தச் சட்டப்படி ஒரு விதவையானவள் தன் புருஷன் குடும்பத்தின் மற்ற நபர்களைப் போல் ஒரு சம பங்காளி ஆகிவிடுகிறாள். சொத்தில் தனக்குள்ள பாகத்தைப் பிரித்துக் கொடுக்கும்படி கேட்பதற்குக் கூட இந்தச் சட்டத்தினால் உரிமை ஏற்பட்டிருக்கின்றது.

..பழைய சட்டப்படி என்றால் மகனுக்கும், பேரனுக்கும் பேரன் மகனுக்கும் தான் கிடைக்கும். இந்த வாரிசுகள் இல்லாமலிருந்தால் மட்டுமே விதவைக்கு கிடைக்கும். இப்போது இந்தப் புதிய சட்டத்தினால் மகன், பேரன் முதலியவர்களைப் போலவே விதவையான பெண்ணும் சமபாகம் கிடைக்க உரிமை ஏற்படுத்தப் பட்டிருக்கின்றது. 

திருமணமாகி ஒரு பெண் கணவன் வீடு சென்று விட்டால் அங்கு அவளுக்கு எத்தகைய சிரமம் இருந்தாலும் தகப்பன் குடும்பத்திலிருந்து உதவி கோர உரிமை இல்லாமலிருந்தது என்றும் இதனால் திருமணமாகிச் சென்ற பல பெண்கள் சிரமம் அனுபவித்தனர் என்றும் இக்கட்டுரை சொல்கிறது. இந்தப் புதிய சட்டம் இந்த நிலையையும் மாற்றுவதாக ஈ.வே.ரா குறிப்பிடுகிறார்.அதாவது,

எப்படியெனில் புருஷன் இறந்தபின் ஒரு பெண் தன் தகப்பன் வீட்டிலேயே வசித்து வருவாளானால், அவளுடைய மாமனார் வீட்டில் அவளுக்கு சம்ரட்சனை செலவு கொடுக்க வழியில்லாமல் இருக்கும் போதும் தகப்பனுக்கு அவளை வைத்துக் காப்பாற்ற சக்தி இருக்கும் போதும் தகப்பன் குடும்பத்தாரே அவளுடைய ஜீவனத்துக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று இந்தப் புதிய சட்டம் கூறுகிறது.
...

இந்தப் புதிய சட்டத்தினால் பரோடா நாட்டுப் பெண்களுக்கு அதிக உரிமைகளும் பாதுகாப்புகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இவ்விதமே பிரிட்டிஷ் இந்தியாவிலும், மற்ற சமஸ்தானங்களிலும், இந்து சட்டம் திருத்தப்படுமாயின் பெண்கள் முன்னேற்றத்துக்குப் பெரிதும் அனுகூலமாயிருக்கும்.

புரட்சி - கட்டுரை - 04.02.1934

திரு.ஈ.வே.ராவின் இந்தக் கட்டுரை வெளிவந்த தேதியை கவனிக்கும் போது 1930களில் கூட பெண்களின் பொருளாதார நிலை என்பது கணவன், கணவன் குடும்பத்தார் ஆகியோரது வாழ்க்கையைச் சார்ந்ததாகவே இருந்ததாகக் காண்கிறேன். தன் கணவனை இழந்த நிலையில் தன் பெற்றோர் குடும்பத்தாரும் வைத்து ஆதரிக்க முடியாத நிலை ஏற்படும் போது அப்பெண்ணின் நிலை மிகுந்த கவலைக்கிடமான சூழலிலேயே இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.இந்த நிலை படிப்படியாக பல்வேறு முயற்சிகளின் வழியாகத்தான் மாற்றமடைந்திருக்க வேண்டும். பலரது இடைவிடா உழைப்பும் பெண்கள் நலனில் அக்கறை கொண்டோர் பலரின் முயற்சிகளுமே இன்றைய நிலையில் தமிழகப் பெண்கள் அனுபவிக்கும் மாற்றமடைந்த சூழலை ஏற்படுத்தியிருக்கின்றது. 

சுபா 

No comments:

Post a Comment