பதிவு 64
நோயின் கடுமை மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. தீபாவளிக்கு மாயூரத்திற்குச் சென்றவர் தன் குடும்பத்தாருடனும் ஏனைய சில மாணவர்களுடனும் அங்கேயே தொடர்ந்து சில நாட்கள் தங்கியிருந்தார். அவரோடு சென்றவர்களில் பிள்ளையவர்களுக்கு மிக மிக அணுக்கமான சவேரி நாதப் பிள்ளையவர்களும் ஒருவர்.
பிள்ளையவர்களை நீங்காது அவரது இறுதி காலம் வரை துணையிருந்து அவருக்குத் தேவையான அனைத்து பணிவிடைகளையும் தொடர்ந்து செய்து கொண்டு மாணாக்கர்களுக்கும் பாடம் போதித்து வந்தவர் இவர். சவேரிநாதப் பிள்ளை இயற்றிய செய்யுட்கள் சிலவும் பிரபந்தத் திரட்டு நூலில் சிறப்புப் பாயிரங்களாக ஆங்காங்கே இருப்பதை இந்த நூல்களை வாசித்தவர்கள் பார்த்திருக்கலாம். அடிப்படையில் மதத்தால் கிருஸ்துவரான சவேரிநாதர், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் இணைந்த பிறகு அவரது அன்பிற்குப் பாத்திரமானவர். மீனாட்சி சுந்தரம் பிள்ளை செல்லும் இடங்களெல்லாம் அவரை நீங்காது துணையாக சென்றவர் இவர். பல வேளைகளில் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்குப் பதிலாக மாணவர்களுக்குப் பாடம் சொல்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார் சவேரி நாதப் பிள்ளை என்பதை என் சரித்திரம் நூலில் ஆங்காங்கே உள்ள குறிப்புக்கள் சிலவற்றிலிருந்து அறிகிறோம். உதாரணமாக உ.வே.சா பிள்ளையவர்களிடம் பாடங் கேட்க இணையும் போது நைடதம் பாடத்தை சவேரி நாதப் பிள்ளையே நடத்துகின்றார். அது மட்டுமல்லாமல் பிள்ளையவர்களுக்குச் சுவடி நூலில் செய்யுட்களை எழுதும் பணியையும் இவர் செய்திருக்கின்றார் என்ற விஷயத்தை ஆங்காங்கே என் சரித்திரத்தில் உள்ள குறிப்புக்களில் காண முடிகின்றது. உ.வே.சாவுக்கு சில வேளைகளில் பிரச்சனை வந்த சமயத்தில் சவேரி நாதப் பிள்ளையின் அணுக்கம் மிகுந்த ஆறுதலைத் தந்திருக்கின்றது என்ற குறிப்பையும் காண்கின்றோம். உதாரணமாக ஆறுமுகத்தா பிள்ளையுடன் பட்டீச்சுரத்தில் தங்கியிருந்த வேளையில் நடந்த நிகழ்வுகள் இங்கு நினைவு கூறத் தக்கன.
அன்பும் நற்குணமும் தமிழ்க்கல்வியில் தீராத ஆர்வமும் கொண்ட சவேரிநாதப் பிள்ளை, உ.வே.சா போன்ற மாணவர்களைப் பெற்றதில் மீனாட்சி சுந்தரம் பிள்ளயவர்களுக்கு நிறைந்த சந்தோஷம் இருந்தது என்பதில் மறுப்பதற்கு யாதுமில்லை. இந்த மாணவர்கள் சூழலும், அவர்களின் அணுக்கமான செயல்பாடுகளும் அவரது நோயிலும் புத்துணர்ச்சி கொடுத்து வந்தது என்பதை உணர முடிகின்றது.
பிள்ளையவர்களைத் திருவாவடுதுறை மடத்திற்கு திரும்ப அழைத்து வரும் கட்டளையைப் பெற்றுக் கொண்டு மாயூரம் சென்ற உ.வே.சா அங்கே ஆசிரியரின் அன்பிற்கிணங்க சில நாட்கள் தங்கியிருந்தார்.பின்னர் நவம்பர் மாதத்தில் (1875) ஆசிரியருடனும் பிற மாணவர்களுடன் புறப்பட்டு ஆதீனத்திற்கே வந்து சேர்ந்தார்.
திருமடத்திற்குத் திரும்பிய பின்னர் பிள்ளையவர்களின் உடல் நிலையில் மாற்றம் ஏற்படவில்லை. ஆதீனகர்த்தரின் அன்பும், தம்பிரான்களின் அரவணைப்பும், வந்து பார்த்துச் செல்வோரின் இனிய சொற்களும் மனதிற்கு சந்தோஷத்தைக் கொடுப்பதாக இருந்தாலும் இந்த அன்பும் உபசரிப்பும் அவரது உடல் நோயைத் தீர்க்கவில்லை.
அந்த வேளையில் நடந்த ஒரு விஷயத்தை உ.வே.சா பதிகின்றார். உ.வே.சா அப்போது தனது சிற்றப்பா வீட்டில் தங்கியிருந்தவாறு மடத்தில் பாடம் கேட்டு வந்தார். தன் சிற்றன்னை தயார் செய்யும் உணவு பதார்த்தங்களை தான் சாப்பிடுவதோடு ஆசிரியருக்கும் அவ்வப்போது கொண்டு வருவாரம். அப்படி இருந்த பழக்கத்தில் ஆசிரியருக்கு என்னென்ன உணவு பதார்த்தங்கள் பிடிக்கும் என்பதை அவர் நன்கு அறிந்திருக்கின்றார். ஆக இக்கால கட்டத்தில் தன் சிற்றனையிடம் கூறி ஆசிரியருக்காக பதர்த்தங்களைச் செய்யச் சொல்லி எடுத்து வந்து கொடுத்து ஆசிரியர் உண்டு மகிழ்வதைப் பார்த்து ஆனந்தித்திருக்கின்றார்.
நாளுக்கு நாள் நோயின் கடுமை அதிகரிக்கவே பிள்ளையவர்கள் மறைவு நெருங்கி விட்டதோ என்ற சஞ்சலம் மடத்திலுள்ளோருக்கும் ஏனையோருக்கும் ஏற்படத் தொடங்கி விட்டது. இந்த நிலையை விவரித்து உ.வே.சா அவர் தந்தையாருக்கு ஒரு கடிதம் எழுதுகின்றார். அதனைப் பார்த்ததும் வேங்கட சுப்பையர் தன் மனைவியுடன் உடனே புறப்பட்டு திருவாவடுதுறை வந்து விடுகின்றார். அங்கே தன் சகோதரர் இல்லத்திலேயே தங்கியிருந்து பிள்ளையவர்களை பார்க்க வருகின்றார் என்பதனையும் காண்கின்றோம்.
ஆதீனத்திலும், உ.வே.சா பிள்ளையவர்களின் அன்பிற்குப் பாத்திரமானவர் என்ற காரணத்தினால் உ.வே.சா வின் குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளை மடத்தின் நிர்வாகத்தினரும் செய்திருக்கின்றனர்.
இக்கால சூழலை உ.வே.சா தன் சரிதத்தில் இப்படிக் குறிப்பிடுகின்றார்.
சுப்பிரமணிய தேசிகர் அடிக்கடி ஆசிரியருக்கு வேண்டிய சௌகரியங்களை அமைக்கும்படி சொல்லி வந்தார். வைத்தியர்கள் செய்த பரிகாரம் தேசிகர் முதலியோருடைய அன்பை வெளிப்படுத்தியதே யன்றி நோயைப் போக்குவதற்கு உபயோகப் படவில்லை. காலபலம் கை கூடவில்லை. குமாரசாமித் தம்பிரான் அவர் செய்யும் பூஜையைத் தாமே செய்து பிரசாதம் அளித்து வந்தார்.
ஆசிரியரது உடல் தளர்ந்தாலும் அவருடைய குணச் சிறப்பு வேறுபடவில்லை. அத்தளர்ச்சியில் அவரது அறிவும் அன்பும் மரியாதையும் பெருந்தன்மையும் சிறப்பாகப் புலப்பட்டன.
தொடரும்...
சுபா

No comments:
Post a Comment