Friday, August 2, 2013

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 55

ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே கண்டிப்பும் கட்டளையும் பய உணர்வும் தான் இருக்க வேண்டுமா ? என்ற கேள்விக்கு மாற்றாக தாய்மை அன்பின் வழி அமைந்த உறவாகவும் இது அமைய முடியும் என்பதற்குச் சான்றாகி நிற்கும் ஆவணம் உ.வே.சா வின் என் சரித்திரம். ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்கும் மாணவர் உ.வே.சாவிற்கும் இடையிலான அன்பினை இத்தொடரின்  சில பகுதிகளில் முன்னர் குறிப்பிட்டிருக்கின்றேன். அதன் தொடர்ச்சியாக வருகின்ற ஒரு நிகழ்வே இன்றைய பதிவின் மையமாக அமைகின்றது.

திருப்பெருந்துறைப் புராணத்தைப் பிள்ளையவர்கள் எழுதத் தொடங்கிய பின்னர் திருவாவடுதுறை மடத்தில் மாணாக்கர்களுக்கும் தம்பிரான்களுக்கும் பெரிய புராணத்தைப் பாடம் சொல்ல ஆரம்பித்திருந்தார். பாடங்கள் தடங்கலின்றி நடந்து கொண்டிருந்த வேளையில் கண்ணப்ப நாயனார் புராணம் தொடங்கப்பட்ட வேளையில் உ.வே.சாவிற்கு உடல் நலம் குன்றியது. அம்மை நோய் கண்டு அது விரைவாக உடல் முழுதும் பரவி மிகச்சங்கடமான உடல் நிலைக்கு உள்ளாகியிருந்தார் உ.வே.சா. தான் தங்கியிருந்த சத்திரத்திலேயே இருந்து வந்த உ.வே.சாவை அடிக்கடி பார்க்க வந்து சென்று கொண்டிருந்தார் பிள்ளையவர்கள். மாணவரின் துயர் ஆசிரியரையும்  தாக்க பாடம் நடைபெறுவது மிகச் சிரமமாக ஆகிவிடவே இந்த நிலையை உணர்ந்த தேசிகர் பாடத்தை தற்காலிகமாக நிறுத்தும் படி கட்டளையிடவேண்டியது அவசியமாகியது.

மனம் சஞ்சலமில்லாமல், வேதனையில்லாமல் இருந்தால் கல்வியில் தெளிவு காணமுடியும். படிக்கும் பாடம் மனதில் ஆழப் பதிய உடல் நலம், மன நலம் இரண்டுமே மிக அவசியம் அல்லவா!

உடல் வேதனை உ.வே.சாவை வாட்ட, தனது கடன் சுமையயும் விட மாணாக்கரின் உடல் நலக்குறைவு ஆசிரியரை வாட்ட, பெரிய புராணப் பாடம் மடத்தில் தற்காலிகமாக நின்று போனது.

தனது பாட்டனாரின் ஊராகிய சூரியமூலைக்குச் சென்று பெற்றோரின் கவனிப்பில் சிறிது காலம் இருந்து வர விரும்பினார் உ.வே.சா. இதனை அறிந்த தேசிகர் அவரை ஒரு பல்லக்கில் ஏற்றி சூரியமூலைக்குக் கொண்டு செல்லும் படி மடத்தில் கட்டளையிட்டார்.  ஆசிரியரும் ஏனையோரும் விடையனுப்ப பல்லக்கில் சாய்ந்தபடி சூரியமூலைக்குப் புறப்படும் போது ஆசிரியர் கூறியதை தனது 80வது அகவையிலும் நினைவில் வைத்திருந்து என் சரித்திரத்தில் இப்படிக் குறிப்பிடுகின்றார் உ.வே.சா.

“சாமிநாதையர், போய் வருகிறீரா?” என்ற பேச முடியாமல் வார்த்தைகளை ஒவ்வொன்றாகத் தழுதழுத்தபடியே பொங்கி வரும் துயரத்தில் நனைத்துக் கூறினார் ஆசிரியர்.

எனக்குப் பேச வாய் வரவில்லை. குழறினேன்; அழுதேன்; காலை எட்டு மணிக்குப் பல்லக்கில் நான் சூரிய மூலையை நோக்கிப் பிரயாணப்பட்டேன். பிள்ளையவர்கள் என்னுடன் ஹரிஹரபுத்திர பிள்ளை என்ற மாணாக்கரை வழித்துணையாகச் சென்று வரும்படி அனுப்பினார். சூரிய மூலைக்குத் திருவாவடுதுறையிலிருந்து போக அப்போது வசதியான சாலையில்லை. வயல்களின் கரைவழியே போக வேண்டும். எனக்கும் பிள்ளையவர்களுக்கும் இடையிலே உள்ள தூரம் அதிகமாயிற்று. என் உள்ளத்தில், “இந்தத் தூரம் இப்படியே விரிந்து சென்று விடுமோ?” என்ற எண்ணம் சிறிது தோன்றியது; அப்போது என் வயிறு பகீரென்றது."

இதனை வாசிக்கும் போதே அந்த நிகழ்விற்கே என்னை அழைத்துச் சென்று விடுகின்றார் உ.வே.சா. நானும் அக்கதாபாத்திரங்களில் ஒன்றாகி அவர்கள் உணர்வுகளோடு கலந்து நிற்கும் போது இந்த உணர்வின், அது தரும் பயத்தின் ஆழத்தை புரிந்து கொள்ளும் நிலையில் என் மனதிலும் அந்த வேதனை உணர்வு தாக்கவே செய்கிறது.

துன்பத்திற்கு மேல் துன்பம் வரும் என்பார்களே. அது சில வேளைகளில் உண்மையாகிப் போவதுண்டு. ஒரு பிரச்சனையிலிருந்து மீள வேண்டும் என நினைத்து ஒரு வடிகால் தேடிச் செல்கின்ற போது அங்கே வேறோர் பிரச்சனை தாண்டவமாடிக் கொண்டிருக்கும். அதே நிலைதான் உ.வே.சாவிற்கு.

சூரியமூலைக்குச் சென்று பார்த்தால் அங்கே அவருக்கு அதிர்ச்சி தரும் ஒரு செய்தி நிகழ்ந்து  அவரை வேதனையின் அளவைக் கூட்ட காத்துக் கொண்டிருக்கின்றது. அம்மை நோய் கண்டிருக்கும் இவரை வீட்டிற்குக் கொண்டு செல்லாமல் தோப்பிலேயெ வைத்து அங்கேயே பார்த்துக் கொள்ளச் செய்யலாம் என உறவினர் நினைக்கின்றனர்.  அப்போது தனது வீட்டிற்குப் பலர் வந்திருப்பதை அறிகின்றார் உ.வே.சா. இவரது அம்மா வழிப் பாட்டனார், இவருக்குச் சிவதீட்ஷை செய்வித்து சிவநாமத்தைக் கற்றுக் கொடுத்த அப்பெரியவர் சிவபதம் அடைந்த செய்தி கிடைக்கின்றது.

"எனக்கு இன்னது செய்வதென்று தெரியவில்லை. அங்கே அவ்வளவு பேர்கள் கூடியிருந்ததற்குக் காரணம் இன்னதென்று தெரிந்த போது நான் இடி விழுந்தவன் போலானேன். நான் அங்கே சென்ற தினத்திற்கு முதல் நாள் என் அருமை மாதாமகரும், சிவ பக்தியை எனக்கு இளமையிலேயே புகட்டியவரும் ஆன கிருஷ்ண சாஸ்திரிகள் சிவசாயுஜ்ய பதவியை அடைந்தனர். அவருடைய இனிய வார்த்தைகளையும் சிவபூஜா விசேஷத்தையும் வேறு எங்கே காண்போமென்று இரங்கினேன்."

சடங்குகள் சம்பிரதாயங்கள் என்ற பெயரில் சில வேளைகளில் சூழ்நிலை அறியாது உயிர்களின் வேதனை அறியாது எழுதா  சட்டதிட்டங்கள் தாண்டவமாடிக்கொண்டிருக்கும் நிலை ஏற்படுவதுண்டு. அங்கும் அதே நிலை.

"இந்நிலையில் தோப்பிலே நான் பல்லக்கிற் கிடந்தபடியே வருந்துகையில் சஞ்சயனத்தை நடத்தி விட்டு என் அம்மானாகிய சிவராமையருடன் என் தந்தையாரும் பிறரும் வந்தனர். என்னை வீட்டுக்குள் செல்ல அனுமதிக்காமல் இருந்தவர்களைக் கண்டு அம்மான் கோபித்துக் கொண்டார். “நம்முடைய குழந்தை; அவன் கஷ்டப்படும்போது அவனுக்கு உதவாக வீடு வேறு எதற்கு?
நன்றாய்ப்பிச்சைக்காரன் மாதிரி தோப்பில் நிறுத்தி வைத்தீர்கள்? உங்கள் மனம் கல்லோ!” என்று சொல்லிப் பக்கத்தில் ஒருவரும் குடியில்லாமல் தனியேயிருந்த அவருடைய வேறொரு வீட்டைத் திறந்து விரைவில் என்னை அங்கே கொணர்ந்து வைக்கச் செய்தார்."

வீடு வந்து சேர்ந்த விஷயத்தை ஆசிரியரிடம் தெரிவிக்கும் படி தன்னுடன் வந்தவர்களுக்குச் சொல்லியனுப்பி சூரியமூலையிலேயே அடுத்த சில மாதங்கள் தங்கி விட்டார் உ.வே.சா. அவ்வாண்டு மார்கழி மாதம் முழுமையும் நோயால் துன்பப்பட்டு தைமாதத்தில் உடல் நலம் பெற ஆரம்பித்தது. அவரது இந்த நிலையில் அவ்வப்போது திருவாவடுதுறையிலிருந்து  சிலர் வந்து இவரது நலன் விசாரித்துச் சென்ற விஷயத்தையும் குறிப்பிடுகின்றார்.

தொடரும்..

சுபா

No comments:

Post a Comment