Wednesday, August 21, 2013

Robert Langdon is back..- Boboli Garden! - 9

பிட்டி மாளிகையைப் பற்றி கடந்த இழை ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன். இந்த மாளிகையின் பின் புறத்தின் வழியே நடக்கத் தொடங்கினால் பசுமை நிறைந்த பூங்கா ஒன்றிற்கு வந்து விடுவோம். இந்த பூங்கா ப்ளோரன்ஸ் நகரின் பெருமைகளுக்குச் சிகரம் சேர்க்கும் அமைப்புக்களில் ஒன்றாக விளங்கும் போபோலி தோட்டம் (Boboli Gardens).


அம்ஃபிதியேட்டருக்கு முன்னர் அமைந்துள்ள ஒபிலிஸ்க்குடன் காட்சியளிக்கும் போபோலி தோட்டத்தின் முன்பகுதி

ஐரோப்பாவின் எல்லா பெரிய நகரங்களிலும் ஏதாவது ஒரு இடத்தில் எகிப்தின் பண்டைய நாகரிகத்தைக் குறிக்கும் ஒபிலிஸ்க் கட்டாயம் இருக்கும். அது பாரிஸாகட்டும், மட்ரிட்டாகட்டும், பெர்லினாகட்டும் இப்படி பல நகரங்களிலும் ஒரு சிறப்பான இடத்தில் ஒபிலிஸ்க்கை வைத்து அதனைப் பார்த்து மகிழ்வதை ஐரோப்பியக் கலாச்சாரம் விடாமல் தொடர்ந்து வருகின்றது. இத்தாலியில் பல ஊர்களில் ஆங்காங்கே ஒபிலிஸ்க் வடிவங்கள் இருக்கின்றன. இவற்றில் பல எகிப்திலிருந்து கொண்டு வரப்படவில்லை என்ற போதிலும் உள்ளூர் பளிங்கிலேயே செய்யப்பட்ட ஒபிலிஸ்க் வகைகள். போபோலி தோட்டத்தின் ஆரம்பப் பகுதியிலும் ஒரு ஒபிலிஸ்க் அலங்கரிக்கின்றது. ஆனால் இங்கிருப்பதோ ரோம் நகரிலிருந்து மெடிசி குடும்பத்தினரின் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த எகிப்தில் செய்யப்பட்ட ஒபிலிஸ்க் ஆகும். ரெனைஸான்ஸ் மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைந்த மெடிசி குடும்பத்தினரின் கலைப்படைப்பு இந்த போபோலி தோட்டம். அவர்கள் இங்கேயும் ஒபிலிஸ்கை வைத்திருப்பதற்கானக் காரணம் எகிப்திய பண்டைய நாகரிகம் அளித்த சிந்தனைப் பின்புலத்தின் தேடல் தொடர்ச்சி என்பதாகத்தான் நான் காண்கின்றேன்.

பிட்டி மாளிகையின் பின்புறத்து குன்றிலிருந்து கீழிறங்கும் நிலப்பகுதியை வாங்கிய கோசிமோ எல் டி மெடிசியும் துணைவியார் எலியோனாரா டி டொலேடோவும் (Cosimo I de´ Medici, Eleonora di Toledo) இந்தப் பகுதியை மிக விரிவாக்கி இதனை போபோலி தோட்டமாக மிகப் பெரிதாக உருவாக்கினர்.


கிரேக்க கடவுள் நெப்டியூன்

இது வெறும் பூக்கள் நிறைந்த ஒரு பூந்தோட்டம் மட்டும் அன்று. மாறாக இங்குள்ள சிற்பங்களையும் மாடங்களையும், கூடங்களையும் நோக்கினால் இது ஒரு கலைக்கூடம் என்பது புரியும். அதுமட்டுமல்லாமல் இந்தக் கலைச் சிற்பத்தின் ஊடாக மெடிசி குடும்பத்தினரும் இந்தப் பூங்காவை வடிவமைத்து கட்டியமைத்த சிற்பிகளின் மனதின் வெளிப்பாடும் பண்பாட்டு மாற்றத்தைச் செய்து அதில் புரட்சி ஏற்படுத்த வேண்டும் என்னும் அவர்களின் உள்ளக்கிடக்கையும் வெளிப்படும்.

இந்தப் பூங்காவை வடிவமைத்த சிற்பிகளின் பட்டியலில் இடம் பெறுபவர்கள் ரெனைஸான்ஸ் பண்பாட்டு மாற்றத்தின் முக்கிய சிற்பிகளில் சிலரான நிக்கோலா ட்ரிபொலோ, வசாரி, பர்தலொமொ அம்மானாட்டி மற்றும் பெர்னார்டோ புவாண்டலண்டி  போன்றோர் (Niccolo Tribolo, Giorgio Vasari, Bartolomeo Ammannati, Bernardo Buontalenti ).


தோட்டத்தின் ஒரு பகுதி

இன்பெர்னோவின் ஆரம்பத்திலேயே வசாரியின் பெயரிலேயே (அது மறைமுகமாகக் குறிப்பிடப்பட்டாலும் ) தான் நூலின் முதல் பகுதியே தொடங்குகின்றது.வசாரியின் கலைப்படைப்பை பற்றி டான் ப்ரவுன் நூல் முழுக்க விவரித்துக் கொண்டே வருவதை வாசகர்கள் கவனிக்கலாம். அந்த வகையில் மிகச் சிறப்பு மிக்க புகழ்பெற்ற கலைஞரான வசாரியின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட சிறந்த படைப்புக்களில் இந்தப் பூங்காவும் இந்தக் கலைக்கூடமும் அடங்கும் என்பது இந்த போபோலி தோட்டத்தின் சிறப்பை விளக்க பயன்படும்.

போபோலி தோட்டத்தின் அமைப்புப் பணிகள் 1550ல் தொடங்கப்பட்டன. முதல் பகுதியாக ஒரு அம்ஃபிதியேட்டர் (Amphitheatre) அமைக்கப்பட்டது. ஏறக்குறைய 500 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் அதன் எழில் குறையாமல் இன்னமும் மிக நேர்த்தியாக காட்சியளிக்கும் அம்ஃபிதியேட்டர்  இது.

நூலில் ஏறக்குறைய ஆறு பாகங்களில் தொடர்ச்சியாக சியன்னாவும், ரோபர்ட்டும் இந்த போபோலி தோட்டத்திற்குள் கடந்து சென்று தப்பிக்க முயல்வதையும் சான்றுகள் தேடுவதையும் போல ப்ரவுன் கதையை அமைத்திருக்கின்றார். இப்படி கதையைச் சொல்லிக் கொண்டே இந்த தோட்டத்திற்குள் இருக்கும் ரகசிய பாதை, குகை ஆகியன பற்றிய தகவல்களையும் எத்தகைய சந்தர்ப்பத்தில் இந்த ரகசியப் பாதை இன்னமும் பயன்படுத்தப்ப்படுகின்றது, யாரால் பயன்படுத்தப்படுகின்றது என்பதையும் தெளிவாக விளக்கிச் செல்கின்றார்.  நாவல் என்பதைக் கடந்து இந்த நூல் ஒரு தகவல் களஞ்சியம் என்ற் சிறப்பையும் பெறத்தக்க வகையில் அமைந்துள்ள பகுதிகளில் இவையும் அடங்கும்.

இச்சிறப்புக்களில் பலவற்றை அறியாமல் இந்தத் தோட்டத்தில் நடந்து சென்று பார்த்தை நினைக்கும் போது சற்றே மனம் வருத்தமாகத்தான் உள்ளது. மேலும் ஒரு முறை ப்ளோரன்ஸ் செல்ல வாய்ப்பு அமைந்தால் இந்த ரகசியப் பாதை உட்பட அனைத்தையும் இச்சிற்பிகளின் சிந்தனைகளோடு இணைந்து பார்த்து மகிழ விரும்புகின்றேன்.

சுபா

No comments:

Post a Comment