Friday, August 9, 2013

Robert Langdon is back..- Doge's Palace! - 8

இன்பெர்னோவை வாசிப்பவர்கள் ஒரு சினிமா படத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது போலவே உணர்வார்கள். அந்த வகையில் கதையின் அமைப்பை அமைத்திருக்கின்றார் ப்ரவுன். டாவின்சி கோட், ஏஞ்சல்ஸ் அண்ட் டீமன் போல இதுவும் சோனி நிறுவனத்தால் திரைப்படமாகக்கூடிய சாத்தியம் விரைவில் நிகழ உள்ளது. ஏனைய இரண்டு படங்களையும் இயக்கிய ரோன் ஹோவர்ட், தனது கதாநாயகனாகிய டோம் கேன்க்ஸை இன்பெர்னோவிற்காக பதிவு செய்திருப்பதாக அண்மையில் செய்தி வாசித்தேன். நல்லதொரு திரைப்படம் இக்கூட்டு முயற்சியில் நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி.

கதையில் இத்தாலியின் ப்ளோரன்ஸிலிருந்து பறந்து வெனிஸிற்குச் சென்று விடுகின்றார்கள் சியன்னாவும் ரோபர்ட்டும். அங்கு அவர்கள் தேடும் சில விஷயங்களினூடேயே தனக்கு வெனிஸ் நகரின் மேல் உள்ள காதலை ப்ரவுன் மறைக்காமல் விவரித்து விடுகின்றார்.

உலகின் ஏனைய பெரிய நகரங்களிலிருந்து தனித்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கும் நகரம் வெனிஸ். இதன் சிறப்புக்களையும் அழகையும் வர்ணிக்கும் பல நூல்கள் வந்து விட்டன. இப்போது மட்டுமின்றி வரலாற்றில் பல ஆயிரம் ஆண்டுகளாக மிக பிஸியான நகரங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருவது வெனிஸ். தற்சமயம் வெனிஸ் நகரம் ஐரொப்பாவின் 6 மிகப் பெரிய வர்த்தக நகரமாகக்கருதப்படுவது. வர்த்தகம் மட்டுமன்றி, கலாச்சர மையமாகவும் சீக்ரட் சொஸைட்டிகளின் முக்கிய சந்திப்பு நகரமாகவும், கிறிஸ்துவ மத மையமாகவும், சுற்றுலா நிமித்தமாகவும் என எப்போதுமே முக்கிய காரணங்களை மையமாக வைத்து பல நிகழ்வுகள் வருடத்தின் ஒவ்வொரு நாளும் இந்த நகரில் நிகழ்வது வழக்கம். இப்போதைய ஜேம்ஸ் பாண்ட் டேனியல் க்ரேய்க்கின் முதல் ஜேம்ஸ் பாண்ட் படமான கேசினோ ரோயல் இறுதிக் காட்சிகள் வெனிஸ் நகரில் படமாக்கப்பட்டமையை பலர் ஞாபகம் வைத்திருக்கலாம்.

வெனிஸில் கதையினூடே சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களைத்  தனது நாவலில் குறிப்பிடுகின்றார் ப்ரவுன். அதில் ஒன்று டோஜஸ் மாளிகை(Doge's Palace). இதனை நான் நேரில் பார்த்ததில்லை. அதனால் இணையத்தில் கிடைக்கும் தகவலை மாத்திரம் பார்த்து புரிந்து கொண்டேன். அந்த தகவல்களை உங்களுக்கும் வழங்குவதில் எனக்கு மகிழ்ச்சியே.



டோஜஸ் மாளிகை


இன்றைக்குக் காட்சியளிக்கும் இந்த மாளிகை 1340-1420ல் கட்டப்பட்டது என்றாலும் இதன் ஆரம்ப நிலை மாளிகை 810ல் ஏற்படுத்தப்பட்டது என்று அறியக்கிடைக்கின்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற அரசனின் மாளிகை இது. வெனெட்டியன் கோத்திக் வகை கட்டிட அமைப்பில் கலை வண்ணம் நிறைந்து காட்சியளிக்கும் வகையில் அமைக்கப்பட்டதொரு கட்டிடம். கொஞ்சம் அராபிய கட்டிடக் கலைகளின் தாக்கமிருப்பதையும் பார்க்கும் போதே உணரலாம்.



கோத்திக் வகை என்றாலே பெரிய அளவிலான வளைவுகளும் பூக்கள் போன்ற அமைப்புடைய சுவர்களும் தங்க நிறத்திலான சுவர் ஒரங்களும் மிகப் பிரமாண்டமான ஓவியங்களும் நிறைந்திருக்கும். இந்த மாளிகையிலேயே 24 காரட் தங்கத்தினாலான் மேல் கூறை சுவர் சித்திரங்கள் நிறைந்திருக்கின்றன. இக்கால மோடர்ன் வகை கட்டிட அமைப்பிற்கு  முற்றிலும் மாறுபட்டதொரு அமைப்பு கோத்திக் கட்டிட அமைப்பு எனலாம்.

இந்த டோஜஸ் மாளிகையில் தான் உலகின் மிகப் பெரிய ஓயில் பயிண்டிங் என வர்ணிக்கப்படும் டிண்டோரெட்டோஸ் எனப் பெயர் கொண்ட ஓவியர் வரைந்த பாரடைஸ் (paradise)  அமைக்கப்பட்டுள்ளது. நான் இணைத்திருக்கின்ற  யூடியூப் காணொளிகளில் ஒன்றில் இதனைக் காணலாம்.


ஓவியம்


மாளிகையின் வாசல் பகுதிகளின் படிகளில் மார்ஸ், நெப்டியூன் ஆகிய இரண்டு கடவுளர்களும் காவலுக்கு நிற்கும் வகையில் அமைத்திருக்கின்றார்கள்.  நிலம், நீர் இரண்டு வகையிலும் ஆளுமை செலுத்தி சக்தி படைத்ததொரு முக்கிய நகரமாக வெனிஸ் திகழ்கின்றது என்பதை இவை குறியீடாகக் காட்டுகின்றன.

உலகில் பார்ப்பதற்குத்தான் எத்தனை சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன என வியுப்புத்தான் மேலிடுகின்றது. நான் கட்டாயம் பார்க்க வேண்டிய கட்டிடங்களின் பட்டியலில் டோஜஸ் மாளிகையின் பெயரை இணைத்து விட்டேன்.

இரண்டு யூடியூப் விழியப் பதிவுகள். இவை இந்த மாளிகையின் எழிலை காட்டுவதில் துணை புரியும்.

http://www.youtube.com/watch?v=lLsGE3_kqsc
http://www.youtube.com/watch?v=Jh7lPFe12ao

நன்றி: http://en.wikipedia.org/wiki/Doge's_Palace,_Venice

No comments:

Post a Comment