Wednesday, August 7, 2013

Robert Langdon is back..- Palazzo Pitti (பிட்டி மாளிகை)

இடையில் சில நாட்கள் இந்த இழையை மறந்திருந்தேன். இன்று மாலை அலுவலகப் பணி முடித்து மட்ரிட் சாலையில் சற்றே நடைப்பயணம் சென்று கொண்டிருக்கும் போது பிரமாண்டமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கும் அரச மாளிகையைப் பார்த்தபோது அதன் ஒரு பக்கச் சுவர் பகுதி ப்ளோரன்ஸ் நகரின் பிட்டி மாளிகையை நினைவுறுத்தியதில் இன்று இந்தப் பதிவு.

டான் ப்ரவுன் குறிப்பிடும் இன்பெர்னோவில் விவரிக்கப்படுகின்ற குறிப்பிடத்தக்க கட்டிடங்களில் பிட்டி மாளிகையும் (Pitti Palace) அடங்கும்.  மிக விரிவாக குறிப்பிட வில்லையென்றாலும் இந்த மாளிகை, அதனை அடுத்து வரும் பொண்டொ வெச்சியோ பாலம் ஆகியவை தொடர்ச்சியாக வரும் வகையில் நாவலை ப்ரவுன் அமைத்திருக்கின்றார்.

இத்தாலி ப்ளோரன்ஸ் நகரத்தின் ஆர்னோ நதிக்கரையை ஒட்டி அமைந்திருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த மாளிகை வரலாற்றில் முக்கியத்துவம் பெறும் ஒன்றே.



ரெனைஸான்ஸ் பண்பாட்டு மாற்றத்துக்கு முக்கியமாகத் திகழும் மெடிசி குடும்பத்தினரின் மாளிகையாகவும் இது சில நூற்றாண்டுகள் இருந்தது.  18ம் நூற்றாண்டில் நெப்போலியனின் மிக முக்கிய படைத்தளங்களில் ஒன்றாக இது பாவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கத்து என்பதோடு அதன் பின்னர் ஒன்றினைக்கப்பட்ட புதிய இத்தாலியின் அதிகாரப்பூர்வ அரச மாளிகையாகவும்  இருந்தமை இந்த மாளிகையின் சிறப்பைக் குறிப்பிடும்.

இத்தகைய பெருமை வாய்ந்த இம்மாளிகை 1458ம் ஆண்டில் லூக்கா பிட்டி என்னும் வணிகரால்  கட்டப்பட்டது. இதனை வடிவமைத்தவர் புகழ்பெற்ற கட்டிடச் சிற்பி பிலிப்போ ப்ரூனலிச்சி.  1549ம் ஆண்டில் பிட்டி குடும்பத்தாரிடமிருந்து இந்த மாளிகையை ப்ஃளோரன்ஸ் நகர அரசியார் எலியுனோரா டி டொலேடொ  வாங்கிய பின்னர் இது மெடிசி குடும்ப சொத்துக்களில் ஒன்றாகியது.



ரெனைஸான்ஸ் பண்பாட்டு கலை உலகிl முக்கியப் பங்கு வகித்த மெடிசி குடும்பத்தார் இந்த மாளிகையில் உலகப் புகழ்பெற்ற பல கலை ஓவியங்களை சேகரித்துள்ளனர். இவை இன்று இம்மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த  மாளிகையில் உள்ள அறைகளில் 140 அறைகளில் மட்டுமே  அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது. 12 பெரிய அறைகள் மெடிசி குடும்பத்தாரின் பொருட்களை கொண்டுள்ளன. ஏனைய பல அறைகள் வெவ்வேறு வகை பயன்பாடுகளால் பொது மக்கள் பார்வைக்கு திபாறக்கப்படுவதில்லை.  இத்தாலியின் ப்ஃளோரன்ஸ் நகர் வருபவர்கள் தவிர்க்காமல் பார்க்க வேண்டிய கட்டிடங்களிலில் இந்த பிட்டி மாளிகையும் ஒன்று.

நாவலில் சியன்னாவும் ரோபர்ட்டும் தப்பித்துச் செல்லும் போது இந்த மாளிகையைக் கடந்து செல்வதாகக் குறிப்புக்களைத் தருகின்றார் ப்ரவுன். சுவாரசியமான பகுதிகள் இவை!

சுபா

No comments:

Post a Comment