அன்பை வகைப்படுத்தி அதற்கு ஒரு பெயர் கொடுத்து அதற்கு சில நியதிகளைக் கற்பித்து ஒரு வரையறையை உருவாக்கி சமூக சூழலில் அதனை எளிமைப் படுத்திக் கொள்ள பெரும்பாலும் நம் மனம் விரும்புகின்றது. அன்பில் கூட தாயின் அன்பு உயர்வா? தந்தையின் அன்பு உயர்வா? எனக் கேட்பதும் உறவுகளுக்கும் நட்புக்கும் இடையிலான அன்பின் அளவை சோதிப்பதிலும் சமூகம் என்றும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றது. குடும்பங்கள் எனும் போது எந்த எதிர்பார்ப்புமற்ற அன்பு என்பது குடும்ப உறுப்பினர்களுக்குள்ளே என்றும் இருக்கும் என்ற ஒரு நம்பிக்கையையும் சமூகம் ஏற்படுத்தி விட்டது. இந்த நம்பிக்கை பல சூழ்நிலைகளில் ஏமாற்றங்களைத் தரும் போது வாழ்க்கைப் பாடங்களாக அவை அமைந்து நம்மை சிந்திக்க வைக்கின்றன.
அன்பை பரிமாறிக்கொள்ளவும், உணரவும், அனுபவிக்கவும், காரணங்கள் கற்பிக்கக்கூடிய வகையில் அமைந்த ஒரு பந்தம் ஒன்றால் மட்டுமே இயலும் என நம்பிக்கொள்வது பல வேளைகளில் மனித சமூக சிந்தனைகளை அறிந்து கொள்வதற்கும் வகைப்படுத்தலுக்கும் எளிமையாக இருக்கலாம். ஆனால் வகைப்படுத்தக் கூடிய உறவுகளுக்குள் மட்டுமே அமைந்து விடுவதல்ல அன்பு என்பதை வாழ்க்கைப் பாதையில் மனிதர்கள் நாம் நம் அனுபவங்களின் வழியாக பல முறை பல்வேறு வகை பாடங்களை அனுபவக் கல்வியாகக் கற்றுக் கொண்டே வருகின்றோம்.
ஆசிரியர் மாணவர் என்ற அடிப்படையிலான அன்பு என்பதைக் கடந்து அதிலும் மேலான ஒரு பிணைப்பினை உ.வே.சாவிற்கும் பிள்ளையவர்களுக்கும் இடையில் நான் காண்கின்றேன். இது பிள்ளையவர்கள் அவர் தம் மாணாக்கர்கள் மேல் கொண்ட அளவற்ற அன்பின் காரணத்தால் வந்ததா? அல்லது உ.வே.சாவிற்கு பிள்ளையவர்கள் மேல் கொண்ட பிரமிப்பின் அடிப்படையில் எழுந்ததா? என்றெல்லாம் காரண காரியம் கற்பித்து ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பதை விட இவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு ஆழமான அன்பு இருந்தது என்பதும் அதன் ஆழம் எல்லையற்றதாக இருந்தது என்பதும் இது என் சரித்திரம் எனும் இந்த நூலை அதன் ஆழம் அறிந்து வாசிக்கும் வாசகர்களையும் உணரத்தக்கதாக அமைந்திருக்கின்றது என்பதையும் நிச்சயம் நான் குறிப்பிட வேண்டும்.
மிக முக்கியமாக, பிள்ளையவர்களின் இறுதிக்கட்ட நிகழ்வில் இதனை நாம் உணர்ந்தாலும் ஆங்காங்கே உ.வே.சா பிள்ளையவர்கள் மேல் தான் கொண்டிருந்த எல்லையற்ற பாசத்தை எழுத்தில் காட்டி விடுகின்றார். உதாரணமாக அத்தியாயம் முப்பத்து மூன்றைச் சொல்லலாம்.
இந்த அத்தியாயத்தில் உ.வே.சா 17.7.1871ம் ஆண்டில் தனக்கு ஒரு இளைய சகோதரன் பிறந்த நிகழ்வைக் கூறுகின்றார். இச்சமயத்தில் பிறந்த குழந்தையையும் நெடு நாட்களாகப் பிரிந்திருக்கும் தாயையும் மனைவியையும் ஏனைய குடும்பத்தாரையும் பார்க்கச் செல்லும் நிகழ்வினையும் குறிப்பிடுகின்றார். இச்செய்தியைப் பிள்ளையவர்களுக்கு நேரில் சொல்லி உ.வே.சாவை கையோடு சூரியமூலைக்கு அழைத்துச் செல்கின்றார் தந்தையார். சூரியமூலையில் சில நாட்கள் செல்கின்றது. குடும்பத்தாரோடு இருக்கும் காலகட்டத்திலும் அவர் மனம் பிள்ளையவர்களை நினைக்கின்றது. அவரே சொல்கின்றார் இப்படி.
"தமிழ்ப்பாடம் ஒருபுறம் இருக்க, பிள்ளையவர்களைப் பிரிந்திருப்பதில் என் உள்ளத்துக்குள் ஒரு விதமான துன்பம் உண்டாகியிருப்பதை உணர்ந்தேன். தாயார் தகப்பனார் முதலியவர்களோடு சேர்ந்திருப்பதனால் உண்டாகிய சந்தோஷ உணர்ச்சியினூடே அந்தத் துன்ப உணர்ச்சி தலைகாட்டியது. இப்புதிய அனுபவத்தில் எனக்கு ஓர் உண்மை புலப்பட்டது: “ஆண்டவன் என் ஆசிரியர் உள்ளத்திற்கும் என் உள்ளத்திற்கும் மிகவும் நுண்மையான பிணைப்பை அன்பினால் உண்டாக்கிவிட்டான். அப்பிணைப்பு என்னை அறியாமலே என்னைக் கட்டுப்படுத்திவிட்டது! அவர் எனக்காகப் பிரார்த்திக்கிறார். நான் என் தாயார் அருகிலிருந்தும் அவரருகில் இல்லாத குறையை உணர்கிறேன்” என்பதுதான் அது. “இந்த அன்பு நிலைத்திருக்க வேண்டும்” என்று அந்தரங்க சுத்தியோடு நான் பிரார்த்தித்தேன். "
தொடரும்...
No comments:
Post a Comment