ஓலைச் சுவடிகளிலிருந்து அச்சுப்பதிப்பாக்கம் செய்வது என்பது ஒன்றிலிருந்து ஒன்றினைப் பார்த்து அப்படியே அச்சுப் பதிப்பாகக் கொண்டு வரக்கூடிய எளிமையான காரியம் அல்ல. அச்சுப் பதிப்புக்கு வரும் போது ஒரு சுவடி நூல் பிரதியை மாத்திரம் வைத்துக் கொண்டு அதன் அடிப்படையில் ஒரு நூலை பதிப்பிப்பது என்பது அந்நூலை முழுமையான ஒரு நூலாகக் கொண்டு வர உதவாது.
அச்சு நூல்களின் எளிமையும் அச்சு இயந்திரங்களின் கணிசமான பயன்பாடும் பரவத்தொடங்கியதுமான 19ம் நூற்றாண்டில் தமிழகத்தில் பல தமிழறிஞர்கள் சுவடி வடிவிலிருந்த நூற்களை அச்சுப் பதிப்புக்களாகக் கொண்டு வர முயற்சித்து வெற்றி கண்டனர். இவர்களில் பலரது அயராத உழைப்பினை மறந்த சமூகமாக நமது சமூகம் இன்றைக்கு மாறிவிட்டது. தமிழக சினிமாத்துறையினரின் எல்லா வாழ்க்கை குறிப்புக்களையும் அன்றாடம் கடமையாகக் கொண்டு அலசி ஆராயும் நமது சமூகத்தில் நமது பண்டைய இலக்கியங்களையும் இலக்கணங்களையும் செய்யுட்களையும் காப்பியங்களையும் அச்சு வடிவுக்குக் கொண்டு வந்த தமிழறிஞர்களை அறியாத, அறிந்து கொள்ள ஆர்வம் காட்டாத சமூகமாக நமது சமூகம் இருப்பது தெளிவு. குறிப்பாக மாணவர்கள் சூழலில் இத்தகைய விஷயங்களை அவர்கள் அறிந்திருக்க வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதும் இதில் எள்ளலவும் அக்கறையின்மையினையே காண்கின்றோமே என்பதுவும் ஒரு வகையில் ஏமாற்றத்தைக் கொடுப்பதாக அமைகின்றது.
அச்சு வடிவத்தில் நூல் பதிப்பு முறை எனும் போது பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை மிகக் கட்டுப்பாடான கடுமையான நெறிமுறைகளை தமது அச்சுப் பதிப்பாக்க முயற்சிகளில் மேற்கொண்டிருந்தார் என்பதை டாக்டர்.ராதா செல்லப்பனின் ஆய்வு நெறியும் வையாபுரியும் என்ற நூலிலும் பு.ஜார்ஞ் அவர்களின் பேராசிரியர் ச.வையாபுரியின் பதிப்புப்பணி என்ற நூலிலும் காண்கின்றோம். ராவ்பகதூர் சி.வை தாமோதரம் பிள்ளை, உ.வே.சா., ஆறுமக நாவலர் போன்றோர் ஒன்றுக்குப் பலவாக ஒரே நூலின் ஏட்டுப் பிரதிகளை வாசித்து அதனில் சரியானவற்றை மட்டுமே தேர்ந்தெடுத்து பதிப்பித்து வந்தனர். இப்படி பல தமிழறிஞர்கள் உழைத்து நமக்களித்த தமிழ்ச்செல்வங்களே இன்றைக்கு நமக்கு கிடைத்திருக்கின்றன.
அச்சுப் பதிப்புக்கு வரும் வேளையில் பிழை நிறைந்த அல்லது செய்யுட்கள் விட்டுப்போன, அல்லது இடைச்சேர்கைகள் நிறைந்த ஓலைசுவடிகளைப் பிழைகளுடன் அச்சுப் பதிப்புக்குக் கொண்டு வந்த நிலையையும் காண்கின்றோம். ஒரு நூல் அச்சு வடிவத்திற்கு வந்து விட்டதென்றால் அத்துடன் அப்பணி நிறைவடைந்தது என்று எடுத்துக் கொள்ளவும் முடியாத நிலை இதனால் ஏற்படுகின்றது. தொடர்ந்து நூலை ஆய்வது, கால ஆய்வு செய்வது, பாடலின் பொருள் பொருந்தும் வகையுள்ளமையை நிர்ணயிப்பது போன்றவை தொடர்ந்த முயற்சிகளாக நடைபெற வேண்டியதும் இதனால் அவசியமாகின்றது.
என் சரித்திரம் நூலில் ஒரு சம்பவத்தை உ.வே.சா குறிப்பிடுகின்றார். அக்காலகட்டத்தில் அச்சுப்பதிப்பாக வெளிவந்திருந்த பெரிய புராணத்தை பாடம் கேட்கும் போது அவருக்கு ஒரு அனுபவம் இப்படி அமைகின்றது.
" என் ஆசிரியரும் சலிப்பின்றிப் பாடம் சொல்லி வந்தார். நாங்கள் அக்காலத்திற் கிடைத்த அச்சுப் புஸ்தகத்தை வைத்துப் படித்து வந்தோம். கண்ணப்ப நாயனார் செயலைக் கண்டு சிவகோசரியார் வருத்தமுற்றதாகச் சொல்லும் சந்தர்ப்பம் வந்தது. நாங்கள் மேலே படித்தோம். உடனே பிள்ளையவர்கள், “இங்கே சில செய்யுட்கள் இருக்க வேண்டும். சிவபெருமான் கண்ணப்ப நாயனாரது அன்பின் பெருமையைச் சிவகோசரியாருக்கு வெளியிடுவதாக அமைந்துள்ள பகுதியில் சில அருமையான செய்யுட்களைப் பதிப்பிக்காமல் விட்டு விட்டார்கள்” என்று சொல்லித் தம் பெட்டியில் இருந்த பெரியபுராண ஏட்டுப் பிரதியை என்னை எடுத்து வரச்செய்து அதனைப் பிரித்துப் பார்த்தார். அவர் கூறியபடியே அங்கே ஐந்து செய்யுட்கள் காணப்பட்டன. அவற்றைப் படிக்கச் செய்து பொருள் கூறினார். நாங்கள் யாவரும் அந்த உயிருள்ள புஸ்தகசாலையின் ஞாபகசக்தியை அறிந்து வியந்தோம்."
ஆசிரியரின் ஞாபகசக்தியை வியந்து போற்றும் உ.வே.சாவைக் காணும் அதே வேளையில் இவ்வகையில் விடுபட்டுப் போன செய்யுட்கள் கொண்ட வகையில் அச்சு நூற்கள் வெளிவந்தமை பற்றிய தகவல்களும் இவ்வகைக் குறிப்புக்களினால் அறிந்து கொள்ள முடிகின்றது.
தொடரும்...
சுபா
No comments:
Post a Comment