என்னதான் பயிற்சி செய்து ஒன்றுக்குப் பலமுறை என சொல்லிப் பார்த்து பழக்கி வைத்துச் சென்றாலும் சில நேரங்களில் தயக்கம் அச்சம் பயம் எல்லாம் கலந்து வந்து நாம் செய்ய வந்த காரியத்தை சரி வரச் செய்யாமல் ஆக்கி விட்டு விடும். மாணவர் பருவத்தில் இப்படி ஏறக்குறைய நாம் எல்லோருமே இவ்வகை அனுபவத்தைப் பெற்றிருப்போம்.
என் ஆரம்பப்பள்ளிக் காலங்களில் இப்படி சில சுவையான சம்பவங்கள் எனக்கும் நடந்ததுண்டு. கட்டுரை பேச்சுப் போட்டிக்கு மனனம் செய்து வைத்துக் கொண்டு போய் பேச சென்றால் மேடையில் நிற்கும் போதே கை கால்கள் நடுக்கம் எடுத்து பேச வந்த சொற்கள் வாயிலிருந்து வெளிவராமல் நம்மை நமக்கே பயமுறுத்திக் கொண்டிருக்கும். மேடையின் கீழ் அமர்ந்து நம்மையே பார்த்துக் கொண்டிருப்பவர்களைப் பார்க்கும் போது ஏதோ நமக்கு தண்டனை கொடுக்கக் காத்திருப்பவர்கள் போல ஒரு தோற்றம் மனதில் எழும். பயத்தில் உடம்பெல்லாம் சில்லென்று ஆகி சொற்கள் சரியாக வாயிலிருந்து வெளிவராமல் மனனம் செய்து வைத்ததில் சிலவற்றைச்சொல்லி சிலவற்றை மென்று முழுங்கி விட்டு, சிலவற்றை முதலில் வரவேண்டியதை கீழேயும் இடையில் வரவேண்டியதை முதலிலும் எனச் சொல்லி உளறி வைத்துக் கொண்டு நின்ற அனுபவமும் ஏற்பட்டதுண்டு.
அத்தைகைய தருணங்களில் ஏற்பட்ட நடுக்கம் இப்போது சுவையான அனுபவமாக மனதில் படுகின்றது. தினம் தினம் கற்கும் இவ்வாழ்க்கையில் இப்படி ஒவ்வொரு சின்னச் சின்ன அனுபவங்கள் அனைத்தும் சேர்ந்து தான் நம் மனதை திடப்படுத்தி உறுதியை வளர்த்து நம்மை வளர்க்கின்றன என்பதை காலப்போக்கில் தானே உணர முடிகின்றது!
முதல் முறை சரியாகச் செய்ய முடியவில்லையென்றாலோ, அல்லது முதல் முறை தோல்வி ஏற்பட்டாலோ அது வாழ்க்கையின் முடிவாகி விடாது. பல தோல்விகளைச் சந்தித்தாலும் பல விஷயங்களில் தப்பும் தவறுமாக செய்து முடித்தாலும் அவை அனைத்துமே வாழ்க்கை எனும் பாதையில் நாம் கடந்து வர வேண்டியவையே என்பதில் மனதில் நம்பிக்கை இருக்க வேண்டும். ஒரு முறை தோல்வியை சந்தித்து விட்டாலே குழந்தைகளைத் தீட்டித் தீர்ப்பதும், அதனை ஒரு பெரிய அவமானமாகக் கருதி குழந்தைகள் மனதில் ஏதோ குற்றம் செய்தவர் போன்ற மனப்பான்மையை வளர்ப்பதும் பெற்றோர்கள் பலர் செய்யும் தவறான ஒரு வழிமுறை. தங்கள் சுய பெருமைக்கு முக்கியத்துவம் கொடுத்து அது நிறைவேறாத போது அந்த ஏமாற்றத்தை தங்கள் குழந்தைகள் மேல் காட்டுவதால் குழந்தைகள் பல வகையில் உளவியல் பிரச்சனைகளுக்கு உள்ளாகவும் நேர்கின்றது. இது அவர்களைப் பிற்காலத்தில் மனதில் உள்ளதைத் தெளிவுற சொல்லவும் தயக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றது.
என் சரித்திரம் படிக்கும் போது ஓரிரு இடங்களில் உ.வே.சா தான் இப்படி பெரியோர் முன் நடுங்கி நின்ற நிலையை தயங்காமல் விவரிக்கின்றார். இயல்பாக அவர் விளக்கும் தனது அனுபவங்கள் இந்த நூலை வாசிக்கின்ற மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை தரக்கூடியதாக நிச்சயமாக அமையும்.
முதன் முதலில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களைப் பார்க்கும் வேளையில் அவருக்கு செய்யுள் சொல்லும் போது தான் எப்படி நாகுளறி தடுமாறினார் என்று குறிப்பிடுகின்றார். அதே போல திருவாவடுதுறை சன்னிதானத்தை முதன் முதல் சந்திக்கும் வேளையில் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததையும் பதிகின்றார். இதில் என்ன முக்கியத்துவம் இருக்கின்றது என சிலருக்குத் தோன்றலாம். ஆனால் முதன் முதல் நடுக்கம் ஏற்படுத்தினாலும் படிப்படியாக தன்னை தயார்படுத்திக் கொண்டு தமிழ்க்கல்வியில் உயர்ந்து வளர்ந்த உ.வே.சா கூட இத்தகைய படிகளைத் தாண்டித்தான் வந்திருக்கின்றார் என்னும் ஒரு விஷயம் இளையோர் மனதில் இத்தகைய சம்பவங்களை வாசிக்கும் போது நிச்சயமாக தன்னம்பிக்கையை வளர்க்கக் கூடியவையே!
உ.வே.சாவின் குறிப்பில் அத்தியாயம் 36லிருந்து ஒரு பகுதி இதனை விளக்குவதாக அமைந்திருக்கின்றது. அதனைப் பார்ப்போம்.
"“நீர் படித்த நூலிலிருந்து ஏதாவதொரு பாடல் சொல்லும்” என்று தேசிகர் கட்டளையிட்டார்.
...
குரல் ஏழவில்லை; உடம்பு நடுங்கியது; வேர்வை உண்டாயிற்று. ஆனாலும் நான் சோர்வடையவில்லை, மெல்லத் திருவாவடுதுறை யமக அந்தாதி (துறைசையந்தாதி)யிலிருந்து, ‘அரச வசனத்தை’ என்ற செய்யுளைச் சொன்னேன். கட்டளைக் கலித்துறை யாதலால் நான் பைரவி ராகத்தில் அதைச் சொல்லி நிறுத்தினேன்.
“பொருள் சொல்ல வருமா?” என்று தேசிகர் கேட்டார்.
“சொல்வார்” என்று என் ஆசிரியர் விடையளித்தார். அந்த விடை தேசிகர் வினாவுக்கு விடையாக வந்ததன்று; நான் பொருள் சொல்லவேண்டுமென்று தாம் விரும்புவதையே அந்த விடையால் அவர் புலப்படுத்தினார். நான் அக்குறிப்பை உணர்ந்தேன்.
அர்த்தம் சொல்லி வரும்போது என் நாக்குச் சிறிது தழுதழுத்தது. “பயப்பட வேண்டாம்; தைரியமாகச் சொல்லும்” என்று பிள்ளையவர்கள் எனக்கு ஊக்கமளித்தார். நான் சிறிது சிறிதாக அச்சத்தை உதறிவிட்டு எனக்கு இயல்பான முறையில் சொல்லத் தொடங்கினேன். துறைசையந்தாதியில் மேலும் சில செய்யுட்கள் சொன்னேன்.
“இன்னும் பாடல்கள் தெரிந்தால் சொல்லும்” என்று தேசிகர் கட்டளையிட்டார்.
அப்போது நான் நல்ல தைரியத்தைப் பெற்றேன். நடுக்கம் நீங்கியது ".
முதலில் சுப்பிரமணிய தேசிகரைப் பார்க்கும் போதே அவரது வசீகரமான தோற்றத்தைக் கண்டு வியக்கின்றார் உ.வே.சா. அவரது தூய்மையும் தவக்கோலமும், கவலை என்பதையே அறியாத ஒரு செல்வரது முகத்தோற்றப்பொலிவும், அவரது காவி உடையும், ஜபமாலை ஆபரணங்களும் அவரை உ.வே.சாவின் கண்களுக்கு துறவிகளுள் அரசராக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இது கூட அவரது தயக்கத்திற்கும் பயத்திற்கும் காரணமாக அமைந்தது எனலாம். ஆனாலும் ஆசிரியரின் துணையுடன், மனதில் தான் ஏற்படுத்திக் கொண்ட தைரியமும் கைகொடுக்க அங்கிருந்தோர் முன்னிலையில் செய்யுட்களை இசையுடன் சொல்லி நற்பெயரையும் பெற்றுக் கொண்டார் உ.வே.சா.
தொடரும்...
சுபா
No comments:
Post a Comment