தமிழ் மரபு அறக்கட்டளை தலபுராணங்களை மின்பதிப்பாக்குதல் என்ற ஒரு திட்டத்தை 2005ம் ஆண்டு ஆரம்பித்தோம். 30க்கும் குறையாத தல புராணங்களை இத்திட்டத்தின் வழியாக மின்பதிப்பாக்கம் செய்து முடிக்க முடிந்தது. தமிழக வரலாறு தமிழ் மரபு சார்ந்த தகவல்கள் மின்னாக்கம் என ஆர்வம் காட்டி வரும் நான் தமிழகத்தின் சிறப்புகளிலேயே அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுவது ஆலயங்களையும் அது தாங்கி நிற்கும் வரலாற்றுப் படிமங்களையும் என்று உறுதியாகக் கூறுவேன்.
ஒரு ஆலயத்தைத் தெரிந்து கொள்ள முயற்சிக்கும் போது நமது கருத்துக்கு விருந்தாக பற்பல விஷயங்கள் கிடைக்கும் பெரும் வாய்ப்பு அமைகின்றது.
ஆலயத்தின் அமைப்பு, அதனைக் கட்டிய அரசன் அல்லது ஒரு சமூகத்தில் உயர்மதிப்பு பெற்ற ஒருவர் பற்றிய வரலாற்றுச் செய்திகளை அறிய இது ஒரு வாய்ப்பாகின்றது. ஒரு அரசன் அதனைக் கட்டியிருக்கும் பட்ஷத்தில் அந்த அரசன் அரசாண்ட கால கட்டம், அந்த ஆலயத்தில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்கள், அக்கல்வெட்டுக்கள் அமைந்துள்ள லிபி, கல்வெட்டுக்கள் குறிக்கும் வரலாற்று நிகழ்வுகள், வரலாற்று நிகழ்வில் பெயர் குறிப்பிடப்படும் பெயர்கள், அவர்களுக்கிடையிலான உறவுகள், அந்த அரசனின் ஆர்வம், வெற்றிச் சிறப்புக்கள் எனப் பல விஷயங்களை அறிந்து கொள்ள நமக்கு வாய்ப்பமைகின்றது.
ஆலயத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சிற்பங்களிலிருந்து அச்சிற்பங்கள் காட்டி நிற்கும் பொருள், அக்காலக் கதைகள், சிற்ப அமைப்பு, சிற்ப அமைப்பின் சிறப்பு என்பன போன்ற விஷயங்களை அறிந்து கொள்ள முடியும்.
ஆலயங்கள் என்பன வழிபாட்டுத் தலங்கள் மட்டுமன்று. அவற்றின் தேவை விரிந்த பரப்பைக் கொண்டிருப்பதை ஆலயத்தின் பண்புகளை நோக்கும் ஒருவர் உணர்ந்து கொள்ள முடியும். ஆலயங்களைப் பக்திக்கு மட்டுமே என நினைத்து மதிப்பிடுபவர்கள் அதன் முழு பரிணாமத்தை உணராதவர்கள் என்பதே என் கருத்து.
ஒவ்வொரு ஆலயமும் ஒரு வாழும் ஆவணம்; வரலாற்றுச் சின்னம்; சிற்பக் கலைக்கூடம் என்பதோடு ஒர் சமூகத்தின் வேர்களைப் பிரபலித்துக் கொண்டு நிற்கும் வரலாற்றுச் சான்று என்பதையும் பல வேளைகளில் பார்க்கத் தவறி விடுகின்றோம்.
சில ஆலயங்கள் தமிழகத்தில் பொது வழக்கில் இல்லாத சில விஷயங்களையும் பதிந்து வைத்த ஆவணங்களாகத் திகழ்கின்றன. சில கோயில்கள் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு உரிமையானதாக இருந்து பின்னர் வேறொரு சமயத்து வழிபடு ஸ்தலமாக உருவாகிய நிலையையும் கூடக் காண்கின்றோம்.
கோயில்கள் பள்ளிக்கூடங்களாக, கலைக்கூடங்களாக, சமூக விஷயங்களைக் கலந்து பேசும் அமைப்புக்களாக, சிற்பக் கூடங்களாக இருந்த நிலையையும் காண்கின்றோம்.
மொழி, சமயம், வரலாற்று விஷயங்கள், இறைவனின் பல்வேறு வகை வடிவங்கள் அவ்வடிவங்களுக்கான புராணக் கதைகள் என்ற வகையிலே ஒரு வாழும் உயிருள்ள ஆவணமாக ஒரு கோயில் திகழ்கின்றது என்பதை அக்கோயிலை இரு கண்களைத் திறந்து, கருத்தில் கவனம் வைத்துப் பார்க்கும் போது புரிந்து கொள்ள முடியும்.
ஆனால் ஆலயத்தைப் பார்க்கும் நம் பார்வை இப்படி அமைகின்றதா என்றால் இல்லை என்பதே பதிலாக அமையும். நம் வாழ்க்கைத் தேவைகளுக்குப் பிரார்த்தனை செய்து இறைவனை வேண்டிச் செல்லவும், பயத்தின் அடிப்படையில் சில விஷயங்களுக்குத் தீர்வு காண சடங்குகளை மேற்கொள்ளவும், திருமணம், குடும்ப விழாக்கள் என்ற வகையில் சில விஷயங்களை நிகழ்த்திக் கொள்ளும் இடமாக கோயில் பொது மக்கள் சிந்தனையில் குறுகிய இடத்தை மட்டுமே வகிக்கின்றது. இத்தகைய ஒரு நிலையால் கோயிலின் முழுமையான சிறப்புக்கள் மறக்கப்பட்டு ஒரு சிறு பகுதி மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டுள்ள நிலையைக் காண்கின்றோம். இதற்கு ஒரு மிக முக்கியக் காரணமாக அமைவது பொது மக்கள் மத்தியில் தல புராணங்களைத் தெரிந்து கொள்ள ஆர்வம் இல்லாமையும் ஆலயச் சிறப்புக்கள் பற்றிய ப்ரக்ஞை இல்லாமையுமே என நான் கருதுகின்றேன். இந்த நிலையைப் போக்க வேண்டியது சமூக அமைப்புக்களின் ஒரு கடமை என்றும் கருதுகின்றேன்.
என் சரித்திரம் நூலை வாசிக்கையிலே மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் கோயில்களின் தலபுராணங்கள், வரலாற்றுச் செய்திகள் பற்றிய பரந்த அறிவை உ.வே.சா குறிப்பிடுவதைக் காண்கின்றோம். மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கே ஒரு கோயிலைக் கண்டாலும் அக்கோயிலின் ஸ்தல புராணத்தைத் தம்மோடு வரும் மாணக்கர்களுக்குச் சொல்வாராம். இந்தச் செய்தியை அத்தியாயம் 40ல் ஓரிடத்தில் உ.வே.சா குறிப்பிடுகின்றார்.
" பிள்ளையவர்கள் எந்த இடத்திற்குப் போனாலும் அந்த இடத்தைப்பற்றிய சரித்திரச் செய்திகளையும் ஸ்தலமானால் அதன் சம்பந்தமான புராண வரலாறுகளையும் உடனிருப்பவர்களுக்குச் சொல்லுவது வழக்கம். ஸ்தல வரலாறுகளைத் தெரிந்துகொண்டு சமயம் நேர்ந்தபோது தாம் இயற்றும் நூல்களில் அமைத்துக் கொள்ளும் இயல்புடைய அவர் தமிழ் நாட்டு ஸ்தலங்களைப் பற்றிய பல விஷயங்களைத் தெரிந்திருந்தார்."
மீண்டும் தல புராணம் அறிந்து ஆலயம் செல்லும் ஒரு சமூகமாக நாம் மாற வேண்டும். அது மிக முக்கியம். நம் உறவினர் ஒருவரை நாடிச் செல்வதாக இருந்தாலும், அவர் யார்? அவர் என்ன செய்கின்றார்? எதற்காக அவரை நாடிச் செல்கின்றோம் ? எத்தனை நாள் அங்கிருக்கின்றார் ? என்று தெரிந்து கொண்டு செல்கின்ற நாம் நூற்றாண்டுகளாக நிலைத்து நின்று சமூகத்தின் தேவைகளுக்குத் துணையிருப்பதோடு ஒரு சமூகத்தின் வாழ்க்கையில் முக்கிய அங்கத்தை வகித்து நிற்கும் ஆலயங்களைப் பார்க்கச் செல்ல அதன் அருமை பெருமை அறிந்து செல்வது தானே சிறப்பு.
ஆனால் நாம் விரும்பினாலும் கூட தலபுராணங்களை அறிந்து கொள்வதும் வாசிப்பிற்குக் கிடைப்பதும் சிரமம் என்ற நிலை தான் கண்கூடு. அப்படியே தலபுராணம் கிடைத்தாலும் அது அதிசயங்களையும் கதைகளையும் முன் வைத்து அமைக்கபப்ட்டதாகத்தான் உள்ளதே தவிர வரலாற்று விஷயங்களை, ஆலய கட்டுமான விவரங்களை, ஊரின் வரலாற்றை, கல்வெட்டின் சிறப்புக்களை விளக்குவனவாக இல்லை என்பது நாம் மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டிய பெறுங் குறை!
தொடரும்...
அன்புடன்
சுபா
No comments:
Post a Comment