Sunday, April 16, 2023

நூல் விமர்சனம் - தமிழ் அழகியல்


நூல் விமர்சனம்: முனைவர்.க.சுபாஷிணி

நூலாசிரியர்- இந்திரன்





அழகு - மிக எளிதாக ஒவ்வொரு நாளும் நாம் பயன்படுத்தும் சொல்.  

தமிழ் அழகியல்  நூல்  என்ன கூறுகிறது? 

அழகு என்றால் என்ன, என்ற தேடல் தேடலுக்கான உலக தத்துவவாதிகளான பிளேட்டோ அரிஸ்டாட்டில் கன்பூசியஸ் போன்றோரின் பதில்கள் .. Aesthetics என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் அழகியல் துறையைத் தமிழ் சூழல் வளர்த்தெடுக்கவில்லை என்ற ஆதங்கத்தை முன்னிறுத்தி இந்த நூலில் வருகின்ற ஒவ்வொரு கட்டுரைகளும் அமைந்திருக்கின்றன.


ஒரு வெள்ளை தாள் தான்.  ஆனால் அதில் ஒரு கோட்டினைப் போட்டு, அந்த காகிதத்தின் உள்ளே இருக்கும் வெளியை அக்கோடுகளால் பிரித்து அவற்றை வரையறுத்து வெளிக்காட்டும்போது வெள்ளைத் தாளில் ஒரு வடிவம் தென்படுகிறது.  கோடு கலையின் ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பு. தன்னைச் சுற்றியுள்ள பொருள்களைப் புரிந்து கொள்வதற்காக மனிதன் கண்டெடுத்த ஒரு மிகப்பெரிய கருவி தான் கோடு என்கிறார் நூலாசிரியர். தமிழ்நாட்டு ஓவியர்களின் தொழில் நேர்த்திக்கு அவர்களது கோடுகளைப் பற்றிய ஆழ்ந்த புரிதல் தான் காரணம் என்றும் குறிப்பிடுகிறார். 


இங்கு ஐரோப்பாவில் நான் ஏராளமான தேவாலயங்கள், வழிபாட்டு கட்டிடங்கள், அரச கட்டிடங்கள், அருங்காட்சியக கட்டிடங்கள் போன்றவற்றைப் பார்த்து அவற்றை உன்னிப்பாக கவனித்து ரசிப்பதுண்டு. பலருக்கும் பல்வேறு விஷயங்கள் ஆழமாகப் பிடிப்பதைப் போல எனக்கு தனிப்பட்ட வகையில்  கட்டிடங்களைப் பார்த்து ரசிப்பது மனதிற்கு ஆழமான மகிழ்வையும் நிறைவையும் தருகின்ற ஒன்றாகவே நீண்ட காலமாக இருப்பதை நான் உணர்ந்து வந்திருக்கிறேன். கட்டிடங்கள் எனும் போது ஐரோப்பா மட்டுமல்ல, உலகின் எல்லாப் பகுதிகளிலும் நான் சென்று பார்த்த கட்டிட அமைப்புகள் எனக்கு மனிதரின் படைப்புத்திறனைப் பார்த்து வியக்க வைக்கின்றன. அந்த வியப்பு ஆழ்ந்த மன மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது. ஐரோப்பாவை எடுத்துக் கொண்டால் கோத்திக், பாரோக்  என இரு வகையாக பண்டைய கலை வடிவத்தைப் பிரிக்கின்றார்கள்.  ரெனைசான்ஸ் காலத்து கலை படைப்புகள் புதிய வெளிச்சத்தை ஐரோப்பாவெங்கும் பாய்ச்சியது.


தஞ்சை பெரிய கோயில், சிலப்பதிகாரம், பிக்காசோவின் குவர்னிகா, வீர சந்தானம், சாம் அடைக்கலசாமி போன்றோரின் ஈழப்படுகொலை பற்றிய ஓவியங்கள் போன்றவை - இவை கலை படைப்புகள் மட்டுமல்ல; அவை வரலாற்று சாட்சியங்கள் என்கிறார் நூலாசிரியர் இந்திரன்.


நூலில் வழங்கப்பட்டுள்ள கட்டுரைகள் ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.


முதல் பகுதி கலை, அழகியல், கோடு, வண்ணம், வெளி, கலை அடையாளம், குறியீடு, கலைப்பார்வை ஆகியவற்றை நமக்கு அறிமுகப்படுத்துகிறது.


நூலின் இரண்டாம் பகுதி நமக்கென்று ஒரு அழகியல் தேவை என்பதை விவரிக்கும் வகையில் சில வினாக்களை எழுப்பி ஓவியக் கலையின் அக மரபுகளை விளக்குகின்றது. இப்பகுதியில் வருகின்ற திணைக் கோட்பாடு பற்றிய நூலாசிரியரின் கட்டுரை மிகச் சிறப்பான ஒரு படைப்பு என்பது எனது கருத்து. ஐந்திணையின் 14 வகை பிரிவுகளை இக்கால சூழலில் உலகம் முழுவதும் பரவி இருக்கும் தமிழர்களை மனதில் கொண்டு தேவைக்கேற்ப தமிழ் அழகியலை விரிவாக்கம் செய்து காண வேண்டும் என்று கூறும் நூலாசிரியர் இந்திரனின் கருத்து மிக முக்கியமான ஒன்று.


அதனை அடுத்து வரும் மூன்றாம் பகுதியில் பல்வேறு சிற்பங்கள் கலை படைப்புகள் பற்றிய விளக்கங்களாக இப்பகுதி அமைகின்றது. எடுத்துக்காட்டாக, மாமல்லபுரத்து கொற்றவையின் போர், திருப்பருத்திக்குன்ற ஓவியம், கைலாசநாதர் கோயில், திருவள்ளுவர் சிலை, நிழலாகத் தேய்ந்து போகும் தோற்பாவை கூத்து பற்றி ஆசிரியர் விளக்கம் ஆகியவை நன்று. அதில் இறுதிக் கட்டுரையாக வருகின்ற தோற்பாவை கூத்து பற்றிய அவரது கருத்துக்கள் குறிப்பாக இக்காலகட்டத்தில் குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமான சூப்பர் மேன் போன்ற வடிவங்களை கூட தோற்பாவை வடிவங்களாக அமைத்து அரசு தோற்பாவை கலை மடிந்து காணாமல் போகாமல் பள்ளிக்கூடங்களிலும் கல்விக்கூடங்களிலும் அதற்கு உயிர் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கின்றது. அரசு, அதிலும் குறிப்பாக பள்ளிக்கல்வித்துறை இதனை சாத்தியப்படுத்தினால் தோற்பாவை கூத்து தமிழ் மக்களின் சிந்தனைகளில் மீண்டும் புத்துயிர் பெறும்.


இதனை அடுத்து வரும் நான்காம் பகுதி தமிழ் ஓவியர்கள், கலை படைப்பாளர்கள் பற்றி பேசுகின்ற ஒரு பகுதியாக அமைகிறது. தமிழ்நாட்டில் நன்கு அறிமுகமான சந்துரு, வீர சந்தானம், முத்துசாமி, ஆதிமூலம் இன்னும் சில  படைப்பாளர்கள் பற்றிய கருத்துக்கள் நல்ல விளக்கங்களாக அமைகின்றன. இப்பகுதியில் இறுதியாக வருகின்ற நூலாசிரியர் இந்திரனின் பெண் உருவத்தை தான் கோட்டோவியமாக வரைய மேற்கொண்ட முயற்சிகள் பற்றி விவரிக்கும் கட்டுரை மிகச் சிறப்பு. இக்கோட்டோவியங்களில் அவர் கூறும் வடிவங்களைத் தேடி எடுப்பதே ஒரு பெரிய சவால் தான்.  ஆயினும் அவரது நூற்றுக்கும் மேற்பட்ட பெண் சித்திர கோட்டோவியங்களில் இக்கால பெண்களின் வடிவமாக இருந்தாலும், அவர் மனதில் பதிந்த தமிழ் பண்பாட்டு கூறுகளை மீறி அவை வெளிவரவில்லை என்ற வெளிப்படையான அவரது கருத்து சிறப்பு. இதில் வழங்கப்பட்டுள்ள நூலாசிரியர் இந்திரனின்  கோட்டோவியங்கள் மிக அருமை. 

நூலின் இறுதிப் பகுதியாக அமைவது நவீன கலைகளில் மக்கள் பண்பாடு தொடங்கி புலியாட்டம், சிவ நடனம்,  மக்களின் மனக்குகை ஓவியங்கள், தமிழகத்தில் செப்பு வடிவங்கள் என்று ஆய்வு செய்கிறது. இறுதிக் கட்டுரையாக அமைவது முதலில் கோலம் போட்ட தமிழச்சி யார் என்ற தேடல். கிராமத்து தெருக்களில் வாசல்களில் நீர் தெளித்து சாணி உருண்டையில் பளிச்சென்று ஒரு பூசணிப்பூ வைத்து அதன் கீழ் கோலம் போட்டு கோடுகளால் சாலைகளை மட்டும் அல்லாது மனிதர்களின் மனங்களையும் அழகு செய்யும் கிராமத்துப் பெண்கள் நமது மனதில் காட்சியாய் விரிகின்றார்கள் நூலாசிரியரின் எழுத்துக்களின் வடிவில்.


இன்று தமிழ்ச்சூழல் போலித்தனம் மிகுந்த, இயற்கை வாழ்வியலிருந்து மிக  தூரம் போய்விட்ட ஒன்றாகிவிட்டது.   பிறரை  போலி கவுரவத்திற்காகவும் வீண் புகழுக்காவும் திருப்திப்படுத்துவதற்காகத் தமிழ் மக்களின் சிந்தனை போட்டி போட்டுக் கொண்டு அலைக்கழிந்து கொண்டிருக்கின்றது. இன்றைய பொருள் சார்ந்த சிந்தனையிலிருந்து தங்களை தாமே விடுவித்துக் கொண்டு தன் கண்களுக்கு முன்னே இயற்கையாய் பண்பாட்டின் விழுமியமாய், கலைகளின் வெளிப்பாடாய், கட்டிடக்கலையாய்,  கலைப் படைப்புகளாய், தத்துவ சிந்தனைகளாய் விரிந்து இருக்கின்ற தமிழ் அழகியலைப் புரிந்து கொள்ள இந்த நூல் தமிழ் உலகிற்கு ஓர் அழகிய கருவி.


புதிய பார்வையாக சிந்தனையை வழங்குகின்ற இந்த நூல் மிக விரிவாக தமிழ்நாட்டின் தமிழ் உயர்கல்வித் துறையில் தமிழ் இலக்கியம் மட்டுமல்லாது தமிழ் கலைகள், தத்துவத் துறைகளிலும் ஆராயப்பட வேண்டும்.


நூல்களில் ஆங்காங்கே எழுத்து பிழைகள் இருக்கின்றன. நூலாசிரியரும் பதிப்பாளரும் இந்தச் சிறிய குறையைக் களைந்து அடுத்த பதிப்பில் மேம்படுத்தப்பட்ட வகையில் இந்நூலைக் கொண்டு வர வேண்டும்.


தமிழ் அழகியலுக்குப் புத்துணர்ச்சி கொடுக்கும் நூலாசிரியர் இந்திரன் ராஜேந்திரன் அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.


முனைவர்.க.சுபாஷிணி

16.4.2023


----

ஆசிரியர்: இந்திரன் (இந்திரன் ராஜேந்திரன்)

பதிப்பு: டிஸ்கவரி புக்பேலஸ்

விலை: 230ரூ


Monday, April 10, 2023

நூல் விமர்சனம் - அடிமைப்படுத்தும் குலதெய்வங்கள்

 நூல் விமர்சனம்: முனைவர்.க.சுபாஷிணி



இங்கு ஜெர்மனியில் எனது இல்ல நூலகத்தில் இருக்கும் ஒரு நூல் இது. சிறிய நூல் தான் என்றாலும் இந்த நூலின் தலைப்பும் நூலில் உள்ள ஒவ்வொரு செய்தியும் தமிழ் பண்பாட்டுச் சூழலில் குலதெய்வங்கள் பற்றி நம்மிடையே உள்ள கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து அலச வைக்கின்ற அருமையான நூல்.

தமிழர் தொன்மங்களை மீட்போம் என்றும் தமிழர் பண்பாடு, பாரம்பரியங்களைக் காப்போம் என்றும் அண்மைய காலமாக தமிழ் தேசிய அமைப்புகள் பேசுகின்றன என்று கூறி இவர்கள் காப்பாற்ற முயற்சிப்பதெல்லாம் தமிழர் பண்பாடுகள் அல்ல - முழுக்க முழுக்க ஆரிய பார்ப்பன பண்பாடுகளைத்தான் என்று நூலின் முன்னுரை தொடங்குகிறது.


குலதெய்வங்கள், சிறு தெய்வங்கள் நாட்டார் தெய்வங்கள் ஆகியவை தமிழ் சூழலில் எவ்வாறு இயங்குகின்றன என்பதையும் நிஜத்தில் எவ்வாறு அவை உள்ளன என்பதை கள ஆய்வுகளை நிகழ்த்தி இந்த நூலை சில தோழர்கள்  இணைந்து உருவாக்கி  இருக்கின்றார்கள்.   


கேள்வி பதில்களாக சிறிய சிறிய பத்திகளாக கருத்துகள் நூலில் வழங்கப்பட்டுள்ளன. இது வாசிப்போருக்குக் கூற வரும் கருத்தை எளிதாக உள்வாங்கிக் கொள்ள உதவுகிறது.


முற்போக்கு அமைப்புகளில் தீவிரமாகச் செயல்படும் தோழர்கள் பலர் பல்வேறு செயல்பாடுகளுக்காக சமூகத்தில் போராடினாலும் தங்களுக்கு என வரும்போது தங்கள் குடும்பத்தாருக்கு குழந்தைக்குக் குலதெய்வக் கோவிலில் மொட்டை அடிப்பது, காது குத்துவது, பிள்ளைகளுக்குச் சொந்த ஜாதியில் திருமணம் செய்து வைப்பது என்று தங்கள் சாதி வட்டத்திற்குள் தான் அடங்கிப் போகின்றார்கள் என்ற கசப்பான உண்மையையும் நூல் பேசுகிறது.

குலதெய்வங்கள் நமது முன்னோர்கள் தானே - அந்த வகையில் தமிழ் நிலத்தின் போற்றப்பட வேண்டிய கடவுள்கள் தானே என நினைத்தால், ஒவ்வொரு குலதெய்வத்தையும் ஒரு சாதி சார்ந்துதான்  அடையாளப்படுத்த முடிகிறது. சாதி என்ற அடித்தளத்தில் தான் குலதெய்வங்கள் கோயிலாக நிற்கின்றன என்பதை நூல் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.


இது தெய்வத்தின் குற்றம் இல்லையே, மனிதர்களைத் திருத்தினால் சாதியை அழிக்க முடியாதா? வழிப்பாட்டு முறையை அழிக்கத்தான் வேண்டுமா?  என்று கேட்பவருக்குப் பதிலாக, சாதி என்ற கருதுகோல் அந்த மனநிலையை நினைவுபடுத்தும் நடைமுறைப்படுத்தும் எவையாக இருந்தாலும் அதனை அழிக்காமல் மனிதர்களின் மனநிலை எப்படி மாறும்? ஆகவே சாதியை நினைவுபடுத்தும், நடைமுறைப்படுத்தும், பயிற்றுவிக்கும், பயன்படுத்தும் வழக்குகளை அழிப்பது தான் சாதியை அழிப்பதற்கு அடிப்படை என்கிறது இந்த நூல்.


வணங்கப்படுவது பார்ப்பன தெய்வமோ, தமிழ் தேசியஇன தெய்வமோ, திராவிடர் மரபின தெய்வமோ.. எதுவாக இருந்தாலும் தெய்வங்கள் முழுக்க முழுக்க சாதிக்கு ஒன்றாக பிரிக்கப்பட்டுள்ளன. சாதிக்குள்ளையே பல உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன என்பதைக் கூறி திருப்பூர், திண்டுக்கல் ஆகிய இரண்டு மாவட்டங்களில் விரிவாக நடத்தப்பட்ட கள ஆய்வில் திரட்டப்பட்ட தகவல்களை நூல் பட்டியலிடுகிறது.


பெரும் கோயில்களில் தான் தீண்டாமையும் ஒடுக்கப்பட்டோரையும் அனுமதிக்காத கட்டுப்பாடுகளும் இருக்கின்றது என்று நாம் நம்பிக் கொண்டிருந்தால் நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்வதாக ஆகின்றது. ஏராளமான குலதெய்வ கோவில்களில் ஒரு குறிப்பிட்ட சாதி சமூகத்தவரை தவிர ஒடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்பதை இந்த நூல் கள ஆய்வுகளின் வழி துல்லியமாக பட்டியல் இடுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தாழ்த்தப்பட்டோரை அனுமதிக்காத நாட்டார் கிராம தெய்வங்களின் 39 கோயில்களின் பெயர்களை இந்த நூலில் ஆய்வுக் குழு பட்டியலிட்டு இருக்கிறது.


கள்ளர்கள், சக்கிலியர்கள்,  கொங்கு வேளாளர்கள் என சில குறிப்பிடத்தக்க சமூகங்களில் குலதெய்வங்களைப் பற்றியும் நூல் பேசுகிறது. 

உலகத்தின் எந்த மூலைக்குத் தமிழ் மக்கள் போய் சேர்ந்தாலும் கூட, ஒருவர் என்ன சாதி என்று தெரிந்து கொள்ள உங்கள் குலதெய்வம் எது? உங்கள் ஊர் எது? என்று கேட்டால் போதும் சாதி அடையாளத்தைக் கண்டுபிடித்து விடலாம் என்று கூறும் அளவிற்கு குலதெய்வங்கள் சாதியோடு இரண்டற கலந்து போயிருக்கின்ற நிலையை இந்த நூல் தெளிவாகவே விளக்குகிறது.


காட்டாறு பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் இந்த நூல் சிந்திக்கத் தூண்டும் ஒரு நூல். இந்த நூலை உருவாக்கிய ஆய்வுக்குழுவில் பணியாற்றிய அத்தனை தோழர்களையும் பாராட்டத்தான் வேண்டும்!.

-சுபா 10.4.2023

---------------------------

காட்டாறு வெளியீடு

kaattaaru2014@gmail.com

9786889325








Saturday, February 18, 2023

 மரபணு ஆய்வுகள் வியக்க வைக்கின்றன.




1907ஆம் ஆண்டில் நார்வேயின் தென்மேற்குப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித உடலின் எச்சத்தை இன்றைய தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவகப்படுத்தியுள்ளார் நோர்வே நாட்டின் ஸ்டாவாங்கர் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தின் ஆய்வாளர் டாக்டர்.சோன் டெக்ஸ்டர் டென்ஹம். இந்த உடல் 8300 ஆண்டுகள் பழமையானது; இறக்கும் போது நன்கு வளர்ச்சி அடைந்த 15 வயது இளைஞனின் உடல் இது என்கிறது அவரது ஆய்வு. மரபணு ஆய்வுகள் இந்த இளைஞனுக்கு ப்ரவுன் நிற கண்களும் கருப்பு முடியும், மாநிறமான தோல் அமைப்பும் இருப்பதை உறுதி செய்கின்றன.
அதுமட்டுமல்ல. அழகிய வடிவமைப்புடன் அமைக்கப்பட்ட கழுத்து பேண்டன், மீன் பிடிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட கல் கருவிகள் ஆகியவையும் இந்த உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் கிடைத்தன.
https://www.livescience.com/stunning-reconstruction-reveals-lonely-boy-with-deformed-skull-who-died-in-cave-in-norway-8300-years-ago

-சுபா
18.2.2023

Friday, May 27, 2022

பாக்கிஸ்தான் ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதியில் கிமு 2ஆம் நூற்றாண்டு பௌத்தப் பள்ளி கண்டுபிடிப்பு



வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பண்டைய பௌத்த மதச் சான்றுகள் கிடைப்பதைப் பற்றிய செய்திகள் வரலாற்று ஆய்வுகளின் வழியும் தொல்லியல் கள ஆய்வுகளின் வழியும் கிடைக்கின்றன. இதைப்போல இன்றைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நிலப்பகுதிகளிலும் இன்றும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பல்வேறு வரலாற்றுத் தேடல்கள், அகழ்வாய்வுப் பணிகளில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெற்ற கண்டுபிடிப்புகள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.



பாகிஸ்தான் நாட்டின் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியில் தொல்லியல் களப்பணியாளர்கள் ஏறக்குறைய ஈராயிரம் ஆண்டு பழமையான பௌத்தப்பள்ளிகளைக் கண்டு பிடித்திருக்கின்றார்கள். இந்த பௌத்தப் பள்ளி பாகிஸ்தான் நாட்டில் உள்ள பௌத்தப் பள்ளி வளாகங்களில் பழமையான ஒன்றாகக் கருதப்படுகின்றது.

பாரிக்கோட் என்ற நகரில் ஏறக்குறைய கிமு 2ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பௌத்த சமய அமைப்பாக இதனைக் கருதலாம் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். இந்தக் கட்டிட பகுதி இதன் அருகிலேயே கிமு 3ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பௌத்த விகாரைக்கு அருகிலேயே அமைந்திருக்கின்றது.

பாகிஸ்தான் மட்டுமன்றி உலக அளவில் பழமையான பௌத்தப் பள்ளிகளில் ஒன்றாக இது அறியப்படுகின்றது. கிபி 2 ஆம் நூற்றாண்டு எனக் கருதப்பட்டாலும் கூட இதன் காலம் கி மு 3, அதாவது மௌரியப் பேரரசர் காலம் எனக் கருதக்கூடிய வகையில் கரிம சோதனை ஆய்வு முடிவுகள் வெளிவந்திருக்கின்றன. இந்தப் புதிய கண்டுபிடிப்பானது பண்டைய காந்தாரப் பகுதியில் பண்டைய பௌத்த சமய செயல்பாடுகள் பற்றிய சான்றுகளை வழங்குவதாகவும் அக்காலகட்டத்தில் இப்பகுதி முக்கியத்துவம் பெற்ற ஒரு நகரமாக விளங்கி இருக்கலாம் என்ற கருத்தையும் வெளிப்படுத்துகிறது.

ஆசிய அளவில் இத்தாலியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தொல்லியல் கள ஆய்வில் ஈடுபடுவது 1955 வாக்கில் தொடங்கியது. அச்சமயத்தில் தொல்லியல் கள ஆய்வுக்கு தலைமை ஏற்றவர் ஆய்வாளர் கீசோப் தூச்சி( Giuseppe Tucci) ஆவார். தற்சமயம் இத்தாலிய தொல்லியல் பணிக் குழுவின் தலைவராக Ca'Foscari University of Venice பல்கலைக் கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் லூக்கா மரியா ஒலிவியர் (Luca Maria Oliviero) பணியாற்றுகின்றார். இவர் தலைமையிலான குழு 2020 ஆம் ஆண்டு தொடக்கம் பாகிஸ்தான் ஸ்வாட் பகுதியில் தொடர்ந்து தொல்லியல் ஆய்வுகளை நிகழ்த்தி வருகின்றது.

இந்தக் கள ஆய்வு நடைபெறும் பாரிகோட் (Barikot) என்ற நகரம் கிரேக்க மற்றும் லத்தீன் மொழியில் Bazira or Vajrasthana என குறிப்பிடப்படுகின்றது. இது மாவீரன் அலெக்சாந்தர் காலத்தில் அவனது படைகளால் கைப்பற்றப்பட்ட நிலப்பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கு நிகழ்த்தப்பட்ட கள ஆய்வுகளும் அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் இந்த நகரம் மாவீரன் அலெக்சாண்டர் போரிட்டு வந்த காலமான ஏறக்குறைய கிமு 327 காலகட்டத்தில் மக்கள் வாழ்ந்த ஒரு நகரமாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போதைய காலகட்டத்தில் இந்த பாரிக்கோட் நகர பள்ளத்தாக்கு பகுதியில் நிகழ்ந்த விவசாய செயல்பாடுகளை முன்னிறுத்தி தானியங்கள் விற்பனை மற்றும் தானியங்கள் சேகரித்து வைக்கும் பகுதியாகவும் இருந்தது என்று அறியப்படுகிறது. இப்பகுதியில் வேளாண்மை சிறப்புற்று இருந்தது. வருடத்திற்கு இரண்டு முறை அறுவடை நிகழ்ந்ததும் அதாவது வசந்த காலத்தில் ஒரு முறையும் கோடை காலத்தின் இறுதியில் ஒரு முறையும் அறுவடை நிகழ்வதையும் கள ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. மாவீரன் அலெக்சாண்டர் இந்தியாவிற்குத் தனது படைகளைக் கொண்டு செல்வதற்கு முன் தங்கியிருந்த ஒரு பகுதியாகவும் இந்த நகரம் அமைகிறது.
ரோமானிய வரலாற்று அறிஞர் Quintus Curtius Rufus பாரிக்கோடு நகரம் வளமான பொருளாதார உயர்வு பெற்ற ஒரு நகராக இருந்தது என்று தனது நூலான Histories of Alexander the Great என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.
2020 ஒரு தொடக்கம் இங்கு நிகழ்த்தப்பட்டு கொண்டிருக்கும் தொல்லியல் கள ஆய்வுகளில் இங்கு பிரமிக்க வைக்கும் வகையிலான கிமு 3ஆம் நூற்றாண்டு அல்லது கிமு 2ஆம் நூற்றாண்டு காலத்து பௌத்த சமய சின்னங்கள் பல கிடைத்துள்ளன. பௌத்த விகாரை அதனை ஒட்டிய வகையில் அமைந்த பௌத்த பள்ளி, வட்ட வடிவில் அமைந்த சிறிய ஸ்தூபி, மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள் சின்னங்கள், ஆபரணங்கள் ஆகியவை அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டன.
கிபி முதலாம் நூற்றாண்டை சார்ந்த கரோஷ்டி எழுத்து பொறிப்பு கொண்ட கல்வெட்டுக்களும் இங்கே கிடைத்துள்ளன.
இப்பகுதிகளில் கள ஆய்வுகள் நடைபெறுவதற்கு முன்பே தொல்லியல் சான்றுகளைச் சட்டத்திற்கு விரோதமாக திருடி விற்கும் செயல்பாடுகள் நடந்துள்ளன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நிகழ்கின்ற அரசியல், மற்றும் சமயப் போராட்டங்கள் காரணமாகவும் அங்கு நடைபெறுகின்ற வன்முறை செயல்பாடுகளின் காரணமாகவும் பல வரலாற்று சின்னங்கள் சேதம் அடைந்துள்ளன என்பதையும் கருத வேண்டியுள்ளது. அத்தகைய இடர்பாடுகளுக்கு இடையே இப்போது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்ற அகழாய்வுப் பணிகள் புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர்ந்துள்ளன‌. காந்தாரா கலைப் பண்பாடு இப்பகுதியில் செழித்து வளர்ந்த ஒரு பண்பாடு என்பதும் இப்பகுதியின் சிறப்பாகும்.
-சுபா

Wednesday, April 6, 2022

என் குரலில் ஒரு பாடல்

 


கஜானனயுதம் கணேஸ்வரம்


பாடல்: கஜானனயுதம் கணேஸ்வரம்

இராகம்: சக்கரவாகம்; தாளம்: ஆதி

இயற்றியவர்: முத்துசுவாமி தீட்சிதர்

பாடியவர்: டாக்டர்.சுபாஷினி கனகசுந்தரம்

__________


பல்லவி:

கஜானனயுதம் கணேஸ்வரம்

பஜாமி ஸததம் சுரேஸ்வரம்


அனுபல்லவி:

அஜேந்திர பூஜித விக்னேஸ்வரம்

கணாதி சந்நுதபத பத்மகரம்


சமஷ்டி சரணம்:

குஞ்ஜர பஞ்ஜன சதுரதரகரம்

குருகுஹாக்ரஜம் பிரணவாகரம்


யானை முகத்தோனை கணேசனைத் துதிக்கிறேன்.

சுரர் களால் தொ ழப்படும் 

எப்போதும் அவனப் பாடுகிறேன்.

பிறப்பற்ற இந்திர னால் வணங்கப்படும் விக்னேஸ்வரனே

கணங்களால் (தொண்டர் படை மாதிரி 😊)  வணங்கப்படும் பாதங்களையும், தாமரைக் கரங்களையும் உடையவனே!!

யானை முகத்தையும்

நான்கு பு ஜங்களையும்

குரு வின் மந்திரத்தை முன்னெ டுத்து, ஓம் கார வடிவில் இருப்பவனே!!!


மொழி பெயர்ப்பு திரு.சபாரத்தினம்

Thursday, March 31, 2022

பெண் பூப்பின் புனித வழிபாடு


நூல்  அணிந்துரை 

உலகளாவிய வகையில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுகளில் இதுவரை நமக்குக் கிடைத்துள்ள மிகப்பழமையான தெய்வ வடிவங்களாக அமைபவை தாய்தெய்வங்களாகும்.  அச்ச உணர்வும், பாதுகாப்பு வேண்டும் என்ற ஆழ்மனதின் வேட்கையும் ஒன்றிணையும் போது பண்டைய மனிதர்கள், இயற்கையையும்,  குழந்தையை ஈன்றெடுக்கும் பெண் உடலையும் தாய்த்தெய்வமாக வடித்து அவற்றை வணங்கினர். ஹோலெஃபெல்ஸ் வீனஸ், வீனஸ் ஆஃப் வில்லண்டோர் ஆகியவை இவற்றிற்குச் சான்றுகளாகின்றன.  ஆயினும் காலப்போக்கில் ஆணாதிக்கச் சிந்தனை என்பது எழும் போது அது தாக்கி எதிர்கொண்ட ஒன்றாக வழிபாட்டு அமைப்பில் இடம்பெற்றிருந்த பெண்தெய்வங்களின் நிலை  அமைந்து போனது.

மக்களின் மனதில் உயர்ந்த நிலையில் வைத்துப் பூசிக்கப்படும் பெண் தெய்வங்களை எதிர்கொள்வதற்கு ஆணாதிக்க சமயவாதிகளுக்கு கிடைத்த ஒரு கருவியே புராணங்கள் எனலாம். கட்டுக் கதைகளால் உருவாக்கப்படுகின்ற புராணங்களைச் சமயவாதிகள் தங்கள் இலக்கை அடைய எளிதாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்பதை வரலாறு வெளிப்படுத்துகின்றது.  வலிமை மிக்க பெண்தெய்வங்களுக்கு வழங்கப்பட்டு வந்த  முக்கியத்துவத்துவத்தைக் குறைக்க புதிய புதிய புராணக்கதைகளை ஆணாதிக்கச் சிந்தனை கொண்ட சமயவாதிகள் உருவாக்கினர்.   மக்களின் சிந்தனையில் ஆண்தெய்வங்களின் பராக்கிரமங்களும் மேலாண்மையும் பதியத் தொடங்கிய பின்னர், பெண் தெய்வங்களின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு   நீட்சியடையும் நிலையில் அவை மக்கள் மனதில் நிற்க முடியாமல் காலப்போக்கில் மறைந்து போய்விடுகின்றன. மூத்த தேவி அல்லது ஜேஷ்டாதேவி என்ற பெண் தெய்வத்தை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.   இப்பண்பாட்டு மாற்றம் என்பது ஒரே நாளில் நிகழ்ந்ததா என்றால் இல்லை என்பதே நமக்கு விடையாகின்றது.   பெண் தெய்வங்களின் மதிப்பை இறக்கவேண்டும் என்ற திட்டத்தின்  அடிப்படையில் புராணக்கதைகளை மையக் கருவியாகக் கொண்டு இது நிகழ்த்தப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதோடு, இவை பெண் உடலைத் தாழ்த்தும் போக்கையும் பெண் பலகீனமானவள் என்ற கருத்தைப் புகுத்த பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்வதையும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. 

ஆணாதிக்கச் சிந்தனையாகிய, பெண்ணை தரம் தாழ்த்துவது, பெண் உடலை பாவப்பொருளாகவும் தீட்டுப் பொருளாகவும் தாழ்த்துவது, பெண் பலகீனமானவள் என்ற கருத்தை வலித்து திணிப்பது போன்ற கருத்தாக்கங்களை ஆண் மட்டுமன்றி பெண்ணும் உள்வாங்கிக் கொண்டு ஆணாதிக்கச் சிந்தனையை வெளிப்படுத்துகின்ற சூழலை உருவாக்கி ஆணாதிக்கச் சமூகம் வெற்றி கண்டுள்ளது.   இது பல்வேறு சமூகச் சிக்கல்களுக்குக் காரணமாகவும் அமைகின்றது என்பதை நாம் ஒதுக்கித் தவிர்த்து விட்டுப் போக முடியாது.  இத்தகையச் சூழலில் இந்த நூல் பல்வேறு முக்கியச் செய்திகளை உள்ளடக்கி வெளிவருகின்றது.   

அதிகார குணம் கொண்ட பெண்தெய்வங்களை ஆணாதிக்கச் சிந்தனை எவ்வகையில் தாக்கி எதிர்கொள்கின்றது என்பதை முதல் கட்டுரை விவரிக்கின்றது.  அப்பெண்தெய்வத்தின் பண்புகளைத் தாழ்த்தி ஆண்தெய்வங்கள் அவர்களை எதிர்கொண்டு தாக்கி நல்வழி படுத்துவதை புராணக்கதைகளின் வழியாக மக்கள் சிந்தனையில் கொண்டு சேர்த்த தகவல்களை இக்கட்டுரை கூறுகிறது.  காளி, லிலித் என்ற இரண்டு பெண் தெய்வங்களை இதற்கு நூலாசிரியர் மையக்கருத்தாக வைத்து தன்  ஆய்வுப் பார்வையைச் செலுத்தியிருக்கின்றார்.  

இரண்டாவது கட்டுரை பெண் பருவமடைதல், பூப்புக்குருதி, தாந்திரீக, மருத்துவ கருத்தாக்கங்கள்  என்பதோடு பூப்புக்குருதியோடு தொடர்புடைய சமய நம்பிக்கைகளை ஆய்வுக்குட்படுத்துகிறது. நூலாசிரியர் விரிவாக பல்வேறு சமய நம்பிக்கைகளையும், அவற்றோடு இணைந்து வருகின்ற சடங்குகளையும் இப்பகுதியில் விவரிக்கின்றார். புராணக்கதைகள் பூப்புக்குருதியை கையாளும் வகையும்  மூடநம்பிக்கைகளைச் சமயசடங்குகளாக அவை ஒன்றிணைத்திருக்கும் நிலையையும் ஆழமாக இப்பகுதி விளக்குகின்றது. 

குழந்தை வெளிவருகின்ற பெண் உறுப்பின் வடிவம்,  தாந்திரீக முறைகள்  மட்டுமன்றி உலகளாவிய நிலையில் பண்டைய வழிபாட்டுக் குறியீடுகளில் மிக முக்கியத்துவம் பெறும் ஒரு குறியீடாகக் கருதப்பட்டது. அதனை விளக்கும் வகையில் இந்த நூலின் 3வது கட்டுரை அமைகின்றது.  பெண் உறுப்பை உருவகப்படுத்தும் குறியீடுகள், லிங்கமும் ஆவுடையாரும் இணைந்த வகையான அமைப்பு, அதன் வரலாறு,   பல்வேறு இனக்குழுக்களில் பெண் உறுப்பு தொடர்பான புராணக் கதைகள் ஆகியவை இக்கட்டுரையில் வழங்கப்பட்டுள்ளன. இது  பெண் உறுப்பை மனித இனம் அச்சத்தோடும் வியப்போடும்  காண்கின்ற மனப்போக்கை வெளிப்படுத்துகின்றது. இவற்றோடு குமரி வழிபாடு, இளம் பெண்கள் அதிலும் குறிப்பாக பெண் உறுப்பை   தெய்வமாகப் பூசித்து வழிபடும் மரபுகள் பற்றியும் இக்கட்டுரை அலசுகிறது.

நூலின் இறுதிக் கட்டுரை வட இந்திய கருக்காத்தம்மன் என்ற தெய்வத்தைப் பற்றி விவரிக்கிறது. பார்வதி, தேவயானை போன்ற தெய்வங்களுடனான ஒப்பீடுகள், குழந்தைப் பேற்றிற்காகச் செய்யப்படும் பூசைகள் என்பது பற்றி இந்த இறுதிக் கட்டுரை விவரிக்கின்றது.

பொதுவாகவே வெளிப்படையாகப் பேசத்தயங்கும், ஆனால் பண்பாட்டுச் சூழலில் பெரும்பாலும் மறைமுகமாகவும் சில வேளைகளில்  நேரடியாகவும் நிகழ்த்தப்படுகின்ற பல்வேறு சடங்குகளை இந்த நூல் பண்பாட்டு மானுடவியல் பார்வையில் அலசுகிறது. வெவ்வேறு பண்பாடுகளில் பெண் உடல், குறிப்பாக பெண் உறுப்பு, பாலியல் கூறுகள் என்பவற்றை நூல் ஆராய்கின்றது என்பதோடு பெண்ணைச் சிறுமைப்படுத்தவும் பெண்ணின் ஆளுமையைக் குறைக்கவும் ஆணாதிக்கத்தை மேலெழச் செய்யவும் புராணக் கதைகள் முக்கியக் கருவிகளாகச் செயல்பட்டன என்பதை இந்நூல் வெளிச்சப் படுத்துகின்றது. நூலாசிரியர் முனைவர் ராஜேஸ்வரி அவர்களின் இந்த சிறந்த ஆய்விற்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மானுடவியல் பார்வையில் மேலும் பல நூல்களை ஆசிரியர் படைக்க வேண்டும்.

நல்வாழ்த்துகள்.
முனைவர்.க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
30.1.2022