Monday, April 10, 2023

நூல் விமர்சனம் - அடிமைப்படுத்தும் குலதெய்வங்கள்

 நூல் விமர்சனம்: முனைவர்.க.சுபாஷிணி



இங்கு ஜெர்மனியில் எனது இல்ல நூலகத்தில் இருக்கும் ஒரு நூல் இது. சிறிய நூல் தான் என்றாலும் இந்த நூலின் தலைப்பும் நூலில் உள்ள ஒவ்வொரு செய்தியும் தமிழ் பண்பாட்டுச் சூழலில் குலதெய்வங்கள் பற்றி நம்மிடையே உள்ள கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து அலச வைக்கின்ற அருமையான நூல்.

தமிழர் தொன்மங்களை மீட்போம் என்றும் தமிழர் பண்பாடு, பாரம்பரியங்களைக் காப்போம் என்றும் அண்மைய காலமாக தமிழ் தேசிய அமைப்புகள் பேசுகின்றன என்று கூறி இவர்கள் காப்பாற்ற முயற்சிப்பதெல்லாம் தமிழர் பண்பாடுகள் அல்ல - முழுக்க முழுக்க ஆரிய பார்ப்பன பண்பாடுகளைத்தான் என்று நூலின் முன்னுரை தொடங்குகிறது.


குலதெய்வங்கள், சிறு தெய்வங்கள் நாட்டார் தெய்வங்கள் ஆகியவை தமிழ் சூழலில் எவ்வாறு இயங்குகின்றன என்பதையும் நிஜத்தில் எவ்வாறு அவை உள்ளன என்பதை கள ஆய்வுகளை நிகழ்த்தி இந்த நூலை சில தோழர்கள்  இணைந்து உருவாக்கி  இருக்கின்றார்கள்.   


கேள்வி பதில்களாக சிறிய சிறிய பத்திகளாக கருத்துகள் நூலில் வழங்கப்பட்டுள்ளன. இது வாசிப்போருக்குக் கூற வரும் கருத்தை எளிதாக உள்வாங்கிக் கொள்ள உதவுகிறது.


முற்போக்கு அமைப்புகளில் தீவிரமாகச் செயல்படும் தோழர்கள் பலர் பல்வேறு செயல்பாடுகளுக்காக சமூகத்தில் போராடினாலும் தங்களுக்கு என வரும்போது தங்கள் குடும்பத்தாருக்கு குழந்தைக்குக் குலதெய்வக் கோவிலில் மொட்டை அடிப்பது, காது குத்துவது, பிள்ளைகளுக்குச் சொந்த ஜாதியில் திருமணம் செய்து வைப்பது என்று தங்கள் சாதி வட்டத்திற்குள் தான் அடங்கிப் போகின்றார்கள் என்ற கசப்பான உண்மையையும் நூல் பேசுகிறது.

குலதெய்வங்கள் நமது முன்னோர்கள் தானே - அந்த வகையில் தமிழ் நிலத்தின் போற்றப்பட வேண்டிய கடவுள்கள் தானே என நினைத்தால், ஒவ்வொரு குலதெய்வத்தையும் ஒரு சாதி சார்ந்துதான்  அடையாளப்படுத்த முடிகிறது. சாதி என்ற அடித்தளத்தில் தான் குலதெய்வங்கள் கோயிலாக நிற்கின்றன என்பதை நூல் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.


இது தெய்வத்தின் குற்றம் இல்லையே, மனிதர்களைத் திருத்தினால் சாதியை அழிக்க முடியாதா? வழிப்பாட்டு முறையை அழிக்கத்தான் வேண்டுமா?  என்று கேட்பவருக்குப் பதிலாக, சாதி என்ற கருதுகோல் அந்த மனநிலையை நினைவுபடுத்தும் நடைமுறைப்படுத்தும் எவையாக இருந்தாலும் அதனை அழிக்காமல் மனிதர்களின் மனநிலை எப்படி மாறும்? ஆகவே சாதியை நினைவுபடுத்தும், நடைமுறைப்படுத்தும், பயிற்றுவிக்கும், பயன்படுத்தும் வழக்குகளை அழிப்பது தான் சாதியை அழிப்பதற்கு அடிப்படை என்கிறது இந்த நூல்.


வணங்கப்படுவது பார்ப்பன தெய்வமோ, தமிழ் தேசியஇன தெய்வமோ, திராவிடர் மரபின தெய்வமோ.. எதுவாக இருந்தாலும் தெய்வங்கள் முழுக்க முழுக்க சாதிக்கு ஒன்றாக பிரிக்கப்பட்டுள்ளன. சாதிக்குள்ளையே பல உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன என்பதைக் கூறி திருப்பூர், திண்டுக்கல் ஆகிய இரண்டு மாவட்டங்களில் விரிவாக நடத்தப்பட்ட கள ஆய்வில் திரட்டப்பட்ட தகவல்களை நூல் பட்டியலிடுகிறது.


பெரும் கோயில்களில் தான் தீண்டாமையும் ஒடுக்கப்பட்டோரையும் அனுமதிக்காத கட்டுப்பாடுகளும் இருக்கின்றது என்று நாம் நம்பிக் கொண்டிருந்தால் நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்வதாக ஆகின்றது. ஏராளமான குலதெய்வ கோவில்களில் ஒரு குறிப்பிட்ட சாதி சமூகத்தவரை தவிர ஒடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்பதை இந்த நூல் கள ஆய்வுகளின் வழி துல்லியமாக பட்டியல் இடுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தாழ்த்தப்பட்டோரை அனுமதிக்காத நாட்டார் கிராம தெய்வங்களின் 39 கோயில்களின் பெயர்களை இந்த நூலில் ஆய்வுக் குழு பட்டியலிட்டு இருக்கிறது.


கள்ளர்கள், சக்கிலியர்கள்,  கொங்கு வேளாளர்கள் என சில குறிப்பிடத்தக்க சமூகங்களில் குலதெய்வங்களைப் பற்றியும் நூல் பேசுகிறது. 

உலகத்தின் எந்த மூலைக்குத் தமிழ் மக்கள் போய் சேர்ந்தாலும் கூட, ஒருவர் என்ன சாதி என்று தெரிந்து கொள்ள உங்கள் குலதெய்வம் எது? உங்கள் ஊர் எது? என்று கேட்டால் போதும் சாதி அடையாளத்தைக் கண்டுபிடித்து விடலாம் என்று கூறும் அளவிற்கு குலதெய்வங்கள் சாதியோடு இரண்டற கலந்து போயிருக்கின்ற நிலையை இந்த நூல் தெளிவாகவே விளக்குகிறது.


காட்டாறு பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் இந்த நூல் சிந்திக்கத் தூண்டும் ஒரு நூல். இந்த நூலை உருவாக்கிய ஆய்வுக்குழுவில் பணியாற்றிய அத்தனை தோழர்களையும் பாராட்டத்தான் வேண்டும்!.

-சுபா 10.4.2023

---------------------------

காட்டாறு வெளியீடு

kaattaaru2014@gmail.com

9786889325








No comments:

Post a Comment