Sunday, April 16, 2023

நூல் விமர்சனம் - தமிழ் அழகியல்


நூல் விமர்சனம்: முனைவர்.க.சுபாஷிணி

நூலாசிரியர்- இந்திரன்





அழகு - மிக எளிதாக ஒவ்வொரு நாளும் நாம் பயன்படுத்தும் சொல்.  

தமிழ் அழகியல்  நூல்  என்ன கூறுகிறது? 

அழகு என்றால் என்ன, என்ற தேடல் தேடலுக்கான உலக தத்துவவாதிகளான பிளேட்டோ அரிஸ்டாட்டில் கன்பூசியஸ் போன்றோரின் பதில்கள் .. Aesthetics என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் அழகியல் துறையைத் தமிழ் சூழல் வளர்த்தெடுக்கவில்லை என்ற ஆதங்கத்தை முன்னிறுத்தி இந்த நூலில் வருகின்ற ஒவ்வொரு கட்டுரைகளும் அமைந்திருக்கின்றன.


ஒரு வெள்ளை தாள் தான்.  ஆனால் அதில் ஒரு கோட்டினைப் போட்டு, அந்த காகிதத்தின் உள்ளே இருக்கும் வெளியை அக்கோடுகளால் பிரித்து அவற்றை வரையறுத்து வெளிக்காட்டும்போது வெள்ளைத் தாளில் ஒரு வடிவம் தென்படுகிறது.  கோடு கலையின் ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பு. தன்னைச் சுற்றியுள்ள பொருள்களைப் புரிந்து கொள்வதற்காக மனிதன் கண்டெடுத்த ஒரு மிகப்பெரிய கருவி தான் கோடு என்கிறார் நூலாசிரியர். தமிழ்நாட்டு ஓவியர்களின் தொழில் நேர்த்திக்கு அவர்களது கோடுகளைப் பற்றிய ஆழ்ந்த புரிதல் தான் காரணம் என்றும் குறிப்பிடுகிறார். 


இங்கு ஐரோப்பாவில் நான் ஏராளமான தேவாலயங்கள், வழிபாட்டு கட்டிடங்கள், அரச கட்டிடங்கள், அருங்காட்சியக கட்டிடங்கள் போன்றவற்றைப் பார்த்து அவற்றை உன்னிப்பாக கவனித்து ரசிப்பதுண்டு. பலருக்கும் பல்வேறு விஷயங்கள் ஆழமாகப் பிடிப்பதைப் போல எனக்கு தனிப்பட்ட வகையில்  கட்டிடங்களைப் பார்த்து ரசிப்பது மனதிற்கு ஆழமான மகிழ்வையும் நிறைவையும் தருகின்ற ஒன்றாகவே நீண்ட காலமாக இருப்பதை நான் உணர்ந்து வந்திருக்கிறேன். கட்டிடங்கள் எனும் போது ஐரோப்பா மட்டுமல்ல, உலகின் எல்லாப் பகுதிகளிலும் நான் சென்று பார்த்த கட்டிட அமைப்புகள் எனக்கு மனிதரின் படைப்புத்திறனைப் பார்த்து வியக்க வைக்கின்றன. அந்த வியப்பு ஆழ்ந்த மன மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது. ஐரோப்பாவை எடுத்துக் கொண்டால் கோத்திக், பாரோக்  என இரு வகையாக பண்டைய கலை வடிவத்தைப் பிரிக்கின்றார்கள்.  ரெனைசான்ஸ் காலத்து கலை படைப்புகள் புதிய வெளிச்சத்தை ஐரோப்பாவெங்கும் பாய்ச்சியது.


தஞ்சை பெரிய கோயில், சிலப்பதிகாரம், பிக்காசோவின் குவர்னிகா, வீர சந்தானம், சாம் அடைக்கலசாமி போன்றோரின் ஈழப்படுகொலை பற்றிய ஓவியங்கள் போன்றவை - இவை கலை படைப்புகள் மட்டுமல்ல; அவை வரலாற்று சாட்சியங்கள் என்கிறார் நூலாசிரியர் இந்திரன்.


நூலில் வழங்கப்பட்டுள்ள கட்டுரைகள் ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.


முதல் பகுதி கலை, அழகியல், கோடு, வண்ணம், வெளி, கலை அடையாளம், குறியீடு, கலைப்பார்வை ஆகியவற்றை நமக்கு அறிமுகப்படுத்துகிறது.


நூலின் இரண்டாம் பகுதி நமக்கென்று ஒரு அழகியல் தேவை என்பதை விவரிக்கும் வகையில் சில வினாக்களை எழுப்பி ஓவியக் கலையின் அக மரபுகளை விளக்குகின்றது. இப்பகுதியில் வருகின்ற திணைக் கோட்பாடு பற்றிய நூலாசிரியரின் கட்டுரை மிகச் சிறப்பான ஒரு படைப்பு என்பது எனது கருத்து. ஐந்திணையின் 14 வகை பிரிவுகளை இக்கால சூழலில் உலகம் முழுவதும் பரவி இருக்கும் தமிழர்களை மனதில் கொண்டு தேவைக்கேற்ப தமிழ் அழகியலை விரிவாக்கம் செய்து காண வேண்டும் என்று கூறும் நூலாசிரியர் இந்திரனின் கருத்து மிக முக்கியமான ஒன்று.


அதனை அடுத்து வரும் மூன்றாம் பகுதியில் பல்வேறு சிற்பங்கள் கலை படைப்புகள் பற்றிய விளக்கங்களாக இப்பகுதி அமைகின்றது. எடுத்துக்காட்டாக, மாமல்லபுரத்து கொற்றவையின் போர், திருப்பருத்திக்குன்ற ஓவியம், கைலாசநாதர் கோயில், திருவள்ளுவர் சிலை, நிழலாகத் தேய்ந்து போகும் தோற்பாவை கூத்து பற்றி ஆசிரியர் விளக்கம் ஆகியவை நன்று. அதில் இறுதிக் கட்டுரையாக வருகின்ற தோற்பாவை கூத்து பற்றிய அவரது கருத்துக்கள் குறிப்பாக இக்காலகட்டத்தில் குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமான சூப்பர் மேன் போன்ற வடிவங்களை கூட தோற்பாவை வடிவங்களாக அமைத்து அரசு தோற்பாவை கலை மடிந்து காணாமல் போகாமல் பள்ளிக்கூடங்களிலும் கல்விக்கூடங்களிலும் அதற்கு உயிர் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கின்றது. அரசு, அதிலும் குறிப்பாக பள்ளிக்கல்வித்துறை இதனை சாத்தியப்படுத்தினால் தோற்பாவை கூத்து தமிழ் மக்களின் சிந்தனைகளில் மீண்டும் புத்துயிர் பெறும்.


இதனை அடுத்து வரும் நான்காம் பகுதி தமிழ் ஓவியர்கள், கலை படைப்பாளர்கள் பற்றி பேசுகின்ற ஒரு பகுதியாக அமைகிறது. தமிழ்நாட்டில் நன்கு அறிமுகமான சந்துரு, வீர சந்தானம், முத்துசாமி, ஆதிமூலம் இன்னும் சில  படைப்பாளர்கள் பற்றிய கருத்துக்கள் நல்ல விளக்கங்களாக அமைகின்றன. இப்பகுதியில் இறுதியாக வருகின்ற நூலாசிரியர் இந்திரனின் பெண் உருவத்தை தான் கோட்டோவியமாக வரைய மேற்கொண்ட முயற்சிகள் பற்றி விவரிக்கும் கட்டுரை மிகச் சிறப்பு. இக்கோட்டோவியங்களில் அவர் கூறும் வடிவங்களைத் தேடி எடுப்பதே ஒரு பெரிய சவால் தான்.  ஆயினும் அவரது நூற்றுக்கும் மேற்பட்ட பெண் சித்திர கோட்டோவியங்களில் இக்கால பெண்களின் வடிவமாக இருந்தாலும், அவர் மனதில் பதிந்த தமிழ் பண்பாட்டு கூறுகளை மீறி அவை வெளிவரவில்லை என்ற வெளிப்படையான அவரது கருத்து சிறப்பு. இதில் வழங்கப்பட்டுள்ள நூலாசிரியர் இந்திரனின்  கோட்டோவியங்கள் மிக அருமை. 

நூலின் இறுதிப் பகுதியாக அமைவது நவீன கலைகளில் மக்கள் பண்பாடு தொடங்கி புலியாட்டம், சிவ நடனம்,  மக்களின் மனக்குகை ஓவியங்கள், தமிழகத்தில் செப்பு வடிவங்கள் என்று ஆய்வு செய்கிறது. இறுதிக் கட்டுரையாக அமைவது முதலில் கோலம் போட்ட தமிழச்சி யார் என்ற தேடல். கிராமத்து தெருக்களில் வாசல்களில் நீர் தெளித்து சாணி உருண்டையில் பளிச்சென்று ஒரு பூசணிப்பூ வைத்து அதன் கீழ் கோலம் போட்டு கோடுகளால் சாலைகளை மட்டும் அல்லாது மனிதர்களின் மனங்களையும் அழகு செய்யும் கிராமத்துப் பெண்கள் நமது மனதில் காட்சியாய் விரிகின்றார்கள் நூலாசிரியரின் எழுத்துக்களின் வடிவில்.


இன்று தமிழ்ச்சூழல் போலித்தனம் மிகுந்த, இயற்கை வாழ்வியலிருந்து மிக  தூரம் போய்விட்ட ஒன்றாகிவிட்டது.   பிறரை  போலி கவுரவத்திற்காகவும் வீண் புகழுக்காவும் திருப்திப்படுத்துவதற்காகத் தமிழ் மக்களின் சிந்தனை போட்டி போட்டுக் கொண்டு அலைக்கழிந்து கொண்டிருக்கின்றது. இன்றைய பொருள் சார்ந்த சிந்தனையிலிருந்து தங்களை தாமே விடுவித்துக் கொண்டு தன் கண்களுக்கு முன்னே இயற்கையாய் பண்பாட்டின் விழுமியமாய், கலைகளின் வெளிப்பாடாய், கட்டிடக்கலையாய்,  கலைப் படைப்புகளாய், தத்துவ சிந்தனைகளாய் விரிந்து இருக்கின்ற தமிழ் அழகியலைப் புரிந்து கொள்ள இந்த நூல் தமிழ் உலகிற்கு ஓர் அழகிய கருவி.


புதிய பார்வையாக சிந்தனையை வழங்குகின்ற இந்த நூல் மிக விரிவாக தமிழ்நாட்டின் தமிழ் உயர்கல்வித் துறையில் தமிழ் இலக்கியம் மட்டுமல்லாது தமிழ் கலைகள், தத்துவத் துறைகளிலும் ஆராயப்பட வேண்டும்.


நூல்களில் ஆங்காங்கே எழுத்து பிழைகள் இருக்கின்றன. நூலாசிரியரும் பதிப்பாளரும் இந்தச் சிறிய குறையைக் களைந்து அடுத்த பதிப்பில் மேம்படுத்தப்பட்ட வகையில் இந்நூலைக் கொண்டு வர வேண்டும்.


தமிழ் அழகியலுக்குப் புத்துணர்ச்சி கொடுக்கும் நூலாசிரியர் இந்திரன் ராஜேந்திரன் அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.


முனைவர்.க.சுபாஷிணி

16.4.2023


----

ஆசிரியர்: இந்திரன் (இந்திரன் ராஜேந்திரன்)

பதிப்பு: டிஸ்கவரி புக்பேலஸ்

விலை: 230ரூ


1 comment:

  1. நூல் விமர்சனம் அருமை. அறிமுகத்துக்கு நன்றி!
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete