Thursday, March 31, 2022

பெண் பூப்பின் புனித வழிபாடு


நூல்  அணிந்துரை 

உலகளாவிய வகையில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுகளில் இதுவரை நமக்குக் கிடைத்துள்ள மிகப்பழமையான தெய்வ வடிவங்களாக அமைபவை தாய்தெய்வங்களாகும்.  அச்ச உணர்வும், பாதுகாப்பு வேண்டும் என்ற ஆழ்மனதின் வேட்கையும் ஒன்றிணையும் போது பண்டைய மனிதர்கள், இயற்கையையும்,  குழந்தையை ஈன்றெடுக்கும் பெண் உடலையும் தாய்த்தெய்வமாக வடித்து அவற்றை வணங்கினர். ஹோலெஃபெல்ஸ் வீனஸ், வீனஸ் ஆஃப் வில்லண்டோர் ஆகியவை இவற்றிற்குச் சான்றுகளாகின்றன.  ஆயினும் காலப்போக்கில் ஆணாதிக்கச் சிந்தனை என்பது எழும் போது அது தாக்கி எதிர்கொண்ட ஒன்றாக வழிபாட்டு அமைப்பில் இடம்பெற்றிருந்த பெண்தெய்வங்களின் நிலை  அமைந்து போனது.

மக்களின் மனதில் உயர்ந்த நிலையில் வைத்துப் பூசிக்கப்படும் பெண் தெய்வங்களை எதிர்கொள்வதற்கு ஆணாதிக்க சமயவாதிகளுக்கு கிடைத்த ஒரு கருவியே புராணங்கள் எனலாம். கட்டுக் கதைகளால் உருவாக்கப்படுகின்ற புராணங்களைச் சமயவாதிகள் தங்கள் இலக்கை அடைய எளிதாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்பதை வரலாறு வெளிப்படுத்துகின்றது.  வலிமை மிக்க பெண்தெய்வங்களுக்கு வழங்கப்பட்டு வந்த  முக்கியத்துவத்துவத்தைக் குறைக்க புதிய புதிய புராணக்கதைகளை ஆணாதிக்கச் சிந்தனை கொண்ட சமயவாதிகள் உருவாக்கினர்.   மக்களின் சிந்தனையில் ஆண்தெய்வங்களின் பராக்கிரமங்களும் மேலாண்மையும் பதியத் தொடங்கிய பின்னர், பெண் தெய்வங்களின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு   நீட்சியடையும் நிலையில் அவை மக்கள் மனதில் நிற்க முடியாமல் காலப்போக்கில் மறைந்து போய்விடுகின்றன. மூத்த தேவி அல்லது ஜேஷ்டாதேவி என்ற பெண் தெய்வத்தை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.   இப்பண்பாட்டு மாற்றம் என்பது ஒரே நாளில் நிகழ்ந்ததா என்றால் இல்லை என்பதே நமக்கு விடையாகின்றது.   பெண் தெய்வங்களின் மதிப்பை இறக்கவேண்டும் என்ற திட்டத்தின்  அடிப்படையில் புராணக்கதைகளை மையக் கருவியாகக் கொண்டு இது நிகழ்த்தப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதோடு, இவை பெண் உடலைத் தாழ்த்தும் போக்கையும் பெண் பலகீனமானவள் என்ற கருத்தைப் புகுத்த பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்வதையும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. 

ஆணாதிக்கச் சிந்தனையாகிய, பெண்ணை தரம் தாழ்த்துவது, பெண் உடலை பாவப்பொருளாகவும் தீட்டுப் பொருளாகவும் தாழ்த்துவது, பெண் பலகீனமானவள் என்ற கருத்தை வலித்து திணிப்பது போன்ற கருத்தாக்கங்களை ஆண் மட்டுமன்றி பெண்ணும் உள்வாங்கிக் கொண்டு ஆணாதிக்கச் சிந்தனையை வெளிப்படுத்துகின்ற சூழலை உருவாக்கி ஆணாதிக்கச் சமூகம் வெற்றி கண்டுள்ளது.   இது பல்வேறு சமூகச் சிக்கல்களுக்குக் காரணமாகவும் அமைகின்றது என்பதை நாம் ஒதுக்கித் தவிர்த்து விட்டுப் போக முடியாது.  இத்தகையச் சூழலில் இந்த நூல் பல்வேறு முக்கியச் செய்திகளை உள்ளடக்கி வெளிவருகின்றது.   

அதிகார குணம் கொண்ட பெண்தெய்வங்களை ஆணாதிக்கச் சிந்தனை எவ்வகையில் தாக்கி எதிர்கொள்கின்றது என்பதை முதல் கட்டுரை விவரிக்கின்றது.  அப்பெண்தெய்வத்தின் பண்புகளைத் தாழ்த்தி ஆண்தெய்வங்கள் அவர்களை எதிர்கொண்டு தாக்கி நல்வழி படுத்துவதை புராணக்கதைகளின் வழியாக மக்கள் சிந்தனையில் கொண்டு சேர்த்த தகவல்களை இக்கட்டுரை கூறுகிறது.  காளி, லிலித் என்ற இரண்டு பெண் தெய்வங்களை இதற்கு நூலாசிரியர் மையக்கருத்தாக வைத்து தன்  ஆய்வுப் பார்வையைச் செலுத்தியிருக்கின்றார்.  

இரண்டாவது கட்டுரை பெண் பருவமடைதல், பூப்புக்குருதி, தாந்திரீக, மருத்துவ கருத்தாக்கங்கள்  என்பதோடு பூப்புக்குருதியோடு தொடர்புடைய சமய நம்பிக்கைகளை ஆய்வுக்குட்படுத்துகிறது. நூலாசிரியர் விரிவாக பல்வேறு சமய நம்பிக்கைகளையும், அவற்றோடு இணைந்து வருகின்ற சடங்குகளையும் இப்பகுதியில் விவரிக்கின்றார். புராணக்கதைகள் பூப்புக்குருதியை கையாளும் வகையும்  மூடநம்பிக்கைகளைச் சமயசடங்குகளாக அவை ஒன்றிணைத்திருக்கும் நிலையையும் ஆழமாக இப்பகுதி விளக்குகின்றது. 

குழந்தை வெளிவருகின்ற பெண் உறுப்பின் வடிவம்,  தாந்திரீக முறைகள்  மட்டுமன்றி உலகளாவிய நிலையில் பண்டைய வழிபாட்டுக் குறியீடுகளில் மிக முக்கியத்துவம் பெறும் ஒரு குறியீடாகக் கருதப்பட்டது. அதனை விளக்கும் வகையில் இந்த நூலின் 3வது கட்டுரை அமைகின்றது.  பெண் உறுப்பை உருவகப்படுத்தும் குறியீடுகள், லிங்கமும் ஆவுடையாரும் இணைந்த வகையான அமைப்பு, அதன் வரலாறு,   பல்வேறு இனக்குழுக்களில் பெண் உறுப்பு தொடர்பான புராணக் கதைகள் ஆகியவை இக்கட்டுரையில் வழங்கப்பட்டுள்ளன. இது  பெண் உறுப்பை மனித இனம் அச்சத்தோடும் வியப்போடும்  காண்கின்ற மனப்போக்கை வெளிப்படுத்துகின்றது. இவற்றோடு குமரி வழிபாடு, இளம் பெண்கள் அதிலும் குறிப்பாக பெண் உறுப்பை   தெய்வமாகப் பூசித்து வழிபடும் மரபுகள் பற்றியும் இக்கட்டுரை அலசுகிறது.

நூலின் இறுதிக் கட்டுரை வட இந்திய கருக்காத்தம்மன் என்ற தெய்வத்தைப் பற்றி விவரிக்கிறது. பார்வதி, தேவயானை போன்ற தெய்வங்களுடனான ஒப்பீடுகள், குழந்தைப் பேற்றிற்காகச் செய்யப்படும் பூசைகள் என்பது பற்றி இந்த இறுதிக் கட்டுரை விவரிக்கின்றது.

பொதுவாகவே வெளிப்படையாகப் பேசத்தயங்கும், ஆனால் பண்பாட்டுச் சூழலில் பெரும்பாலும் மறைமுகமாகவும் சில வேளைகளில்  நேரடியாகவும் நிகழ்த்தப்படுகின்ற பல்வேறு சடங்குகளை இந்த நூல் பண்பாட்டு மானுடவியல் பார்வையில் அலசுகிறது. வெவ்வேறு பண்பாடுகளில் பெண் உடல், குறிப்பாக பெண் உறுப்பு, பாலியல் கூறுகள் என்பவற்றை நூல் ஆராய்கின்றது என்பதோடு பெண்ணைச் சிறுமைப்படுத்தவும் பெண்ணின் ஆளுமையைக் குறைக்கவும் ஆணாதிக்கத்தை மேலெழச் செய்யவும் புராணக் கதைகள் முக்கியக் கருவிகளாகச் செயல்பட்டன என்பதை இந்நூல் வெளிச்சப் படுத்துகின்றது. நூலாசிரியர் முனைவர் ராஜேஸ்வரி அவர்களின் இந்த சிறந்த ஆய்விற்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மானுடவியல் பார்வையில் மேலும் பல நூல்களை ஆசிரியர் படைக்க வேண்டும்.

நல்வாழ்த்துகள்.
முனைவர்.க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
30.1.2022

No comments:

Post a Comment