Friday, September 20, 2024

S S மதுரை மீனாட்சி



தற்செயலாக பிர்த்தானிய நூலகத்தில் நான் 2022ஆம் ஆண்டு மின்னாக்கம் செய்த பினாங்கிலிருந்து 1887இல் வெளிவந்த பழைய சஞ்சிகைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் S S மதுரை மீனாட்சி என்ற கப்பல் பற்றிய ஒரு செய்தியைப் பார்க்க நேர்ந்தது.
இச்செய்தி சிங்கப்பூருக்குப் பொருட்களை ஏற்றி வந்திருந்த இக்கப்பல் அங்கிருந்து புறப்பட்டு நாகப்பட்டணம், காரைக்கால், பறங்கிப் பேட்டை, புதுச்சேரி, சென்னப்பட்டணம் ஆகிய பகுதிகளுக்குப் பயணிக்கிறது என்பதைக் குறிப்பிடுகிறது.


இக்கப்பலின் உரிமையாளர் தமிழ்நாட்டில் 1858இல் பிறந்த மதுரைப்பிள்ளை அவர்கள். அவர் அன்றைய மெட்ராஸ் பிரசிடென்சியில் பணியாற்றி பின்னர் ரங்கூனுக்குக் குடிபெயர்ந்து அங்கு புகழ்மிக்க வணிகராகத் திகழ்ந்தவர். தனது மகள் மீனாட்சியின் பெயரில் ஒரு வணிகக் கப்பலை நடத்தினார்.
அவர் மகள் மீனாட்சியின் மகள் தான் அன்னை மீனாம்பாள் என அழைக்கப்படும் மீனாம்பாள் சிவராஜ் அவர்கள்.


இவர் பெண் விடுதலைக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் தொண்டாற்றியவர்; மெட்ராஸ் மாநகராட்சி உறுப்பினராகவும் மெட்ராஸ் மாநகராட்சி துணைமேயராகவும், மெட்ராஸ் பல்கலைக்கழக செனட் உறுப்பினராகவும் என ஏராளமான அமைப்புக்களில் தன்னை இணைத்துக் கொண்டு பங்காற்றியவர். அவரது கணவர் ந. சிவராஜ் அவர்களும் அக்காலத்தைய முக்கிய அரசியல் ஆளுமையாகத் திகழ்ந்தவர்.
மதுரைப்பிள்ளை அவர்கள் ஸ்ட்ராங் ஸ்டீல் சுரங்க நிறுவனத்தின் குத்தகைதாரராக இருந்தார். தனது வணிகத்தை விரிவு படுத்தினார். ரங்கூனில் தமிழ்ப்பிள்ளைகளுக்கான பள்ளிக்கூடத்தை உருவாக்கினார். 1885ஆம் ஆண்டு ரங்கூன் நகரக் கௌரவ நீதிபதியாகவும் பதவியேற்றார். பின்னர் அங்கு ரங்கூனில் 1886ஆம் ஆண்டு முதல் மாநகர கமிஷனராகவும் ஆனார்.
ஆக, அவரது கப்பலான S S மதுரை மீனாட்சி அக்காலகட்டத்தில் கிழக்காசிய நாடுகளில் வணிகத்தை மேற்கொண்டிருந்தது என்பதை இந்த 1887ஆம் ஆண்டு சஞ்சிகையிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.
-சுபா
18.9.2024

No comments:

Post a Comment