Thursday, September 26, 2024

தஞ்சாவூரில் சமணம் - நூல் அறிமுகம்

 



வட இந்தியாவில் தோன்றியது என்ற வரலாற்று தொடக்கத்தைக் கொண்டிருந்தாலும் இந்தியா முழுமைக்கும் பரவிய சமயமாக சமண சமயம் திகழ்கிறது. தென்னிந்திய பகுதிக்கு வந்து தமிழ்நாட்டில் வழக்கில் இருந்த மிக முக்கியமான ஒரு சமயமாக ஏறக்குறைய  ஈராயிரம் ஆண்டுகளாக சமண சமயம் இதமிழ்நிலத்தில் நிலை பெற்றிருக்கின்றது. செஞ்சி, மதுரை ஆகிய பகுதிகளில் செழித்து வளர்ந்த சமயம் என்று கருதப்படுகின்ற சமணம் தஞ்சையிலும் விரிவடைந்து வளர்ச்சி கண்டு வழக்கில் மக்களால் பேணப்படுகின்ற ஒரு சமயமாக மிக நீண்ட காலம் இருந்தது என்பதற்கு சான்றுகளைத் தருகின்ற நூல்கள் மிக மிகக் குறைவு. அக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது தஞ்சையில் சமணம் என்ற நூல். இந்த நூலை முனைவர் பா ஜம்புலிங்கம், கோ தில்லை கோவிந்தராஜன், மணி.மாறன் ஆகிய மூவரும் இணைந்து எழுதி தமிழ் ஆய்வுலகத்திற்கு வழங்கியிருக்கின்றார்கள். 

முதலில் சமண சமயத்தைப் பற்றிய பொது அறிமுகம் என்று தொடங்கும் இந்த நூல் அடுத்து தஞ்சாவூர் பகுதிகளிலும் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சமண சமயம் எப்படி வளர்ந்தது. நிலை பெற்றருந்தது என்பதை விளக்குகின்றது. அதனை அடுத்து சமணச் சுவடிகள் பற்றிய தகவல்கள் வழங்கப்படுகின்றன. தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் சேகரத்தில் ஆரம்பத்தில் இருந்த சமணச்சுவடிகள், அதன் பின்னர் படிப்படியாக சேகரிக்கப்பட்ட புதிய சமணச்சுவடிகள் ஆகியவை பற்றிய செய்திகளும் இடம்பெறுகின்றன. 

அடுத்ததாக வருகின்ற பகுதி சமண சமயத்தில் கணிதவியல் பற்றிய தகவல்களை வழங்குகின்றது. யோஜனம், வில் போன்ற அளவை பற்றிய தெளிவான அதே சமயம் சுருக்கமாக இங்கே விளக்கம் அளிக்கப்படுகின்றது. 

அதற்கு அடுத்து வருகின்ற பகுதி மிக முக்கியமானது. ”களப்பணியில் ஊர்கள்” என்ற தலைப்பில் இந்தப் பகுதி அமைந்திருக்கின்றது. அதனோடு தொடர்ந்து வருகின்ற ”தஞ்சையில் சமணச் சின்னங்கள்” என்ற பகுதி மிக விரிவாக தஞ்சையைச் சுற்றி உள்ள பகுதிகளில் நூலாசிரியர்களால் அடையாளம் காணப்பட்ட சமண சிற்பங்களைப் பற்றிய விபரங்களை நன்கு விளக்குகின்றன. 

இதனை வாசித்த போது 2022 ஆம் ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினரின் ஓர் அனுபவம் நினைவுக்கு வருகிறது.  நாகப்பட்டினத்தில் இருந்து நாங்கள்  பயணித்துக் கொண்டிருக்கும் போது அங்கு புஷ்பவனத்துக்கு அருகே பஞ்சதிக்குளம் பகுதியில்  குளக்கறை அருகே ஒரு சமண சிற்பம் கிடக்கின்றது என்று இந்த நூலின் ஆசிரியர்கள் ஒருவரான முனைவர் ஜம்புலிங்கம் அவர்கள் குறிப்பிட்டதைத் தொடர்ந்து அங்கு நேரில் சென்று, அங்கு ஒரு வீட்டின் வாசலில் துணி துவைப்பதற்காகப் போடப்பட்டிருந்த மண்ணிற்குள் புதையுண்ட கருங்கல் சிற்பம் ஒன்றைத் தோண்டி எடுத்து வெளிக் கொண்டு வந்தோம். அதனைத் தோண்டி எடுத்து வெளிப்படுத்தி சுத்தம் செய்து பார்த்தபோது அதன் தலைப்பகுதி துண்டிக்கப்பட்டு நீக்கப்பட்ட உடம்பு பகுதி மட்டுமே கொண்ட தீர்த்தங்கரர் சிற்பம் என்பது தெரியவந்தது. 

அப்போது உடனே நாகப்பட்டினம் அருங்காட்சியத்திற்கும், அப்பகுதியின் தாசில்தார் அலுவலகத்திற்கும் தொடர்பு கொண்டு இதனைப் பற்றி தெரிவித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உதவி கூறினோம். அச்சிற்பத்தைத் தூய்மைப்படுத்தி அப்பகுதிக்கு அருகே உள்ள குளக்கரையில் கிடந்த உடைபட்ட தலைப்பகுதியையும் தேடி எடுத்து அவற்றை இணைத்து அப்பகுதி தாசில்தாருக்குத் தெரிவித்தோம். இச்சிலையை நாகப்பட்டினம் அருங்காட்சியத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து தமிழ் மரபு அறக்கட்டளை ஒரு கடிதத்தையும் வழங்கினோம். ஆயினும் அச்சிற்பம் இன்றுவரை தாசில்தார் அலுவலகத்தில் தான் இருக்கின்றது என்ற தகவல் அண்மையில் கிட்டியது. 




குடவாயில் நகருக்கு அருகே அகர ஓகை என்ற இடத்தில் இருக்கின்ற கைலாசநாதர் கோயில் கட்டுமானப்பணியின் போது  பிரகாரத்தைத் தோண்டியபோது அங்கே சுமார் மூன்றரை அடி உயரமுள்ள அருகதேவர் சிற்பம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது என்ற குறிப்பு இந்த நூலில் கிடைக்கின்றது. ஆக, வேறொரு சமய கோயில் நிர்மாணிப்பு நடக்கின்ற போது அப்பகுதியில் ஏற்கனவே இருந்த கோயில் தகர்க்கப்பட்டிருக்கலாம் அல்லது சிதவுக்குள்ளாகியிருக்கலாம்.  பின்னர், அப்பகுதியில் கிடைத்த  சிற்பங்களை மண்ணிற்குள் புதைத்து விட்டு புதிய கோயிலை எழுப்புகின்ற பணி நிகழ்ந்திருக்கலாம் என்ற ஒரு எண்ணத்தையும் இது ஏற்படுத்துகிறது. 

தஞ்சாவூரிலேயே நகரின் மேல் வீதி, வடக்கு வீதி இரண்டும் இணைகின்ற மேற்கு மூலையில் மராட்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் எழுப்பப்பட்ட அனுமார் கோயில் இருக்கின்ற பகுதியில் பின்புறத்தில் 87 சென்டிமீட்டர் உயரம் கொண்ட சமணர் சிற்பம் ஒன்று 1998 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ஆனால் பின்னாளில் 2011 ஆம் ஆண்டு வாக்கில் அங்கு சென்று பார்த்தபோது அந்தச் சமண சிற்பம் காணப்படவில்லை என்றும் நூலாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். ஆக, பொதுவெளியில் வைக்கப்படுகின்ற இத்தகைய சிற்பங்கள் கால ஓட்டத்தில் கவனிப்பாரற்று காணாமல் போகின்ற அவல நிலையும் ஏற்படுகின்றது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. 

ஆக, தஞ்சாவூரில் ஆங்காங்கே கோயிலின்று தனித்து நிற்கும் இதே போன்ற  சிற்பங்கள் பற்றிய செய்திகள் நூலின் இப்பகுதியில் இடம்பெறுகின்றன. 

இந்த நிலை சமண சிற்பங்கள் போலவே பௌத்த சிற்பங்களுக்கும் நிகழ்வதைக் கண்கூடாகக் காண்கின்றோம். சமண, பௌத்த சமயங்கள் தாக்குதலுக்கு உட்பட்டு வீழ்ச்சி அடைந்தபோது உடைக்கப்பட்ட சமண பௌத்த கோயில்களின் எச்சங்கள், அவற்றிலிருந்த சிற்பங்கள் ஆகியவை சிதைக்கப்பட்டதோடு மட்டுமின்றி மண்ணுக்குள் புதைக்கப்பட்ட அவல நிலையும் ஏற்பட்டது. ஆனால் தற்சமயம் பல ஆர்வலர்களின் முயற்சியினால் இத்தகைய சிற்பங்கள் மண்ணுக்குள் இருந்து வெளிவந்து மீண்டு வெளிச்சம் காண்கின்றன. 

இப்படி கிடைக்கின்ற சிற்பங்களை அம்மதங்களைச் சார்ந்தவர்கள் அருகிலேயே ஒரு சிறு கோயிலை அமைத்து அதில் மக்கள் வழிபாடு செய்ய முயற்சியைத் தொடங்க வேண்டும் அல்லது அச்சிற்பங்களை அருகாமையில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் தெரிவித்து அச்சிற்பங்களை உடனே அருகாமையில் உள்ள அருங்காட்சியத்தில் சேர்ப்பித்து அது பற்றிய செய்திகளையும் பொது ஊடகங்களில் பதிந்து விட வேண்டியதும் அவசியமாகும். 

நூல் மேலும் பள்ளிச்சந்தம், வழிபாட்டு முறைகள், விழாக்களும் சடங்குகளும், 24 தீர்த்தங்கரைகளின் விபரம், சமணர்கள் படைத்த நூல்கள் போன்ற செய்திகளைச் சுருக்கமாக வழங்குகின்றது.  நூலில் மேலும் சிறப்பு சேர்க்கும் பகுதியாக கல்வெட்டுக்கள் என்ற ஒரு பகுதியும் இணைக்கப்பட்டிருக்கின்றது. இதில் தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுப்புற சமண சமயம் சார்ந்த கல்வெட்டுகள் பற்றிய விபரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

135 பக்கங்கள் கொண்ட ஒரு நூல். சமண சமயம் பற்றியும், குறிப்பாகத் தஞ்சையில் சமணம் எப்படி தோன்றி வளர்ந்து நிலை பெற்று பின் அதன் புகழ் குன்றினாலும் மீண்டும் மக்கள் செயல்பாடுகளினால் அதன் எழுச்சி ஏற்பட்டு இருக்கின்றது என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த நூல் அமைகின்றது. 

நூலை மறு பதிப்பு செய்யும் போது மேலும் தரமான தாள் மற்றும் அட்டை ஆகியவற்றுடன் இந்நூலைக் கொண்டு வர வேண்டும் என்பதை நூலாசிரியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். 

இன்றைய காலம் மறைந்து போன, அல்லது மறைக்கப்பட்ட, அல்லது தவிர்க்கப்பட்ட வரலாறுகள் மீட்கப்படும்கின்ற காலமாகும். ஆகவே, அத்தகைய சூழலுக்கு ஏற்ற வகையில் ஆய்வுத் தரவுகளோடு இந்த நூல் வெளிவந்திருப்பது சிறப்பு. நூலாசிரியர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களும் நல்வாழ்த்துக்களும்.

-முனைவர் க.சுபாஷிணி

28.9.2024


பதிப்பு : ஏடகம்

விலை : ரூ130/-

No comments:

Post a Comment